குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 5, 2016

ஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

எங்க ஊர் பக்கம் இப்படித்தான் சொல்வார்கள். உழுவும் ஏர் இதற்கு இன்னொரு பெயர் கலப்பை. கொழு என்றொரு வஸ்து இருக்கும். அது கலப்பை மரத்தின் நுனியில் இரண்டு போல்டு போட்டு இணைத்திருப்பார்கள். மொத்தமாக நான்கு மரத்துண்டுகள் தான். நுகத்தடி தணி. 


இதோ இப்படித்தான் இருக்கும் ஏர் கலப்பை. நுகத்தடியில் மாடுகளைக் கட்டி கைப்பிடியை அழுத்திட மாடுகள் முன்னே செல்ல, கொழு மண்ணைக் கீறி இரண்டு பக்கமும் மண்ணைத் தள்ளும். வடம் பிடித்தல் என்றுச் சொல்வார்கள். அதாவது மாடு திருப்புவதற்கு வசதியாக நீண்ட அகலமான செவ்வக வடிவத்தில் முதலில் ஏரோட்டி பின்னர் நான்கு ஐந்து வரிசைகள் உழுத பிறகு அடுத்த இணைச் செவ்வகத்தினை உருவாக்கி உழுவார்கள். வெற்று வயலில் உழுவது இப்படித்தான். சேறடிக்கும் போது வேறு மாதிரி உழுவார்கள்.

குறுவைச் சாகுபடி வருவதற்கு முன்பே போஸ் ஆசாரியைக் கூட்டி வருவான். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு குடி ஆசாரிகள் என தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு பொங்கலின் போது அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் புத்தம் புதிய அகப்பையைத் தான் பயன்படுத்துவோம். எங்கள் குடும்பத்திற்கு நெடுவாசல் கருப்பன் ஆசாரி தான் வருவார். புதுக் கொழு வாங்கி வந்து இணைப்பார்கள். இரண்டு ஏர் கலப்பை இருக்கும். ஏதாவது உடைந்து விட்டால் அடுத்த ஏர் கலப்பையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?


பெரிய வண்டிமாடு ஜோடி ஒன்று, கட்டை மாடுகள் ஜோடி ஒன்று என இரண்டு ஜோடிகள் இருக்கும். மாட்டு வண்டியில் சக்கரத்தில் பழைய ஆயிலுடன் காட்டன் துணியை ஊற வைத்து சக்கரத்துக்குள் நுழைத்து, வண்டிச் சக்கரங்கள் எளிதாக சுழல ஏற்பாடு செய்வான் போஸ். 

இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கும். உழவு செய்வதற்கு முன்பு வீட்டில் சேரும் குப்பையை வண்டியில் கொண்டு போய் வயலில் கொட்டி நிரவி விட வேண்டும். அதன் பிறகு உழவு செய்ய வேண்டும். இரண்டு முறை உழவு செய்வார்கள். பின்னர் சேற்று உழவு செய்வார்கள். 

நாற்றங்கால் உழவுக்கு கிட்டப்பிடித்து உழ வேண்டும். ஊற வைத்து முளை கட்டின நெல்மணிகளை நாற்றங்காலில் பாவ வேண்டும். அது முளைத்து பயிராகி நிற்கும் போது, அதைப் பிடுங்கி வயல்களில் நடவு செய்ய வேண்டும். பிறகு களை எடுக்க வேண்டும். உரமிட வேண்டும். பூச்சிகள் வராதவாறு மருந்து அடிக்க வேண்டும். வயலில் தண்ணீர் காயக்காய தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கதிர் விளைந்து நிற்கும் போது அறுவடை செய்து நெல்மணிகளை நீக்கி சுத்தம் செய்து கோணியில் இட்டு வீடு வந்து சேர்க்க வேண்டும். தக தகவென தங்கமென மின்னும் நெல்மணிகளை பத்தாயத்துக்குள் சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரித்த நெல்மணிகள் அடுத்த விவசாயம் செய்வதற்கு முன்பு வியாபாரிகளிடம் விலை பேசி விற்போம். கிட்டத்தட்ட முன்னூறு மூட்டைகள் விற்பனை செய்வோம். அது தவிர சாப்பாட்டுக்கு தனியாக இருக்கும். வீட்டில் இருந்த இரண்டு பத்தாயங்கள் (பாக்ஸ் வடிவ மரப்பட்டி - நூறு மூட்டைகள் நெல் மணிகள் சேகரிக்கலாம்).

சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கலப்பை இற்றுப் போய் கிடந்தது. கொழுவில் மாட்டி இருந்த போல்டுகள் துருப்பிடித்திருந்தன. பத்தாயங்கள் காணவில்லை. மரம் உழுத்துப் போய் விட்டதாம். நெல் அவிக்கும் வெங்கல அண்டா மட்டும் இருந்தது. அதைத் தூக்கவே நான்கு ஆட்கள் வேண்டும். அவ்வளவு கனமான அண்டா அது.

ஏர் கலப்பையோடு நடந்து நடந்து உடம்பு உரமாகி இருந்த உழவர்கள் எல்லாம் இப்போது சர்க்கரை வியாதியில் சிக்குண்டு இருக்கின்றார்கள். விடிகாலை நான்கு மணிக்கு உழ ஆரம்பித்து மதியம்  ஒரு மணிக்குள் உழவை முடித்து ஆற்றில் குளித்து வீடு வரும் உழவனை இனிக் கண்ணால் காண முடியுமா? காவிரி வறண்டு போனது. உழவு செய்ய தண்ணீரைத் தர மாட்டேன் என்கிறார்கள். மாறிப்போன மனிதர்களும் மாறவே மாறாத அரசியலும் இருக்கையில் என்ன ஆகப்போகின்றது?

அடுத்த தலைமுறைக்காக இந்தப் பதிவு எழுதுகிறேன் மன வலியுடன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.