குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 30, 2008

கள்ளும் நானும்.....

இந்தக் கள் இருக்கே.... அதன் சுவையும் போதையும் ஒரு அலாதியான விஷயம்.

சின்ன வயதில் எங்க வீட்டு வேலைக்காரர் அம்மாவிடம் என்னை தோப்புக்கு அழைத்துச் செல்ல அனுமதி கேட்டு கிடைத்த பின்பு, மாட்டு வண்டியில் பயணம் செய்தோம். தோப்பில் 20 தென்னை மரங்களும், 30 பலா மரங்களும் இடையிடையே கொய்யா மரங்களும் இருக்கும். வடக்குப் பக்கமாக ஒரு அகன்ற கேணி ஒன்றும் உண்டு. அதில் மாடுகளைக் கட்டி ஏற்றம் இறைக்க ஆரம்பித்தார் ஜெயராஜ். பெரிய அகன்ற பாத்திரம் போல ஒரு தொட்டியினை கிணற்றுக்குள் இறக்கி தண்ணீரை நிறைத்து அதை மேலே இழுத்து அடிப்புறம் பிளாஸ்டிக் டியூப்பினை கயிற்றால் இழுத்தால் தண்ணீர் வாய்க்காலில் கொட்டி அப்படியே சென்று நிலக்கடலை பயிறுக்குள் பாயும். பார்க்க பார்க்க பரவசமாய் இருக்கும். வாய்க்காலின் மேல் உட்கார்ந்து கொண்டு அந்த தண்ணியில் கையை வைத்தால் சிலீரென்று இருக்கும். அப்படி ஒரு சந்தோஷமாக இருக்கும்.

அப்போது தென்னையில் கள் இறக்க ஆள் ஒருத்தர் வந்தார். ஜெயராஜ் ஓடிப்போய் ஒரு மரத்துக் கள்ளினை வாங்கி வந்து,
” இதைக் குடிடா “ என்று சொல்ல நான் மறுத்தேன்.
”அம்மா அடிக்கும் “
” உடம்புக்கு நல்லதுடா தங்கம். கொஞ்சமா குடி “
“ வேணாம் ஜெயராசு... ”
“ அம்மாட்டே நான் சொல்லுறேன். நீ குடிச்சுப்பாரு “
தயக்கத்துடன் கள்ளை வாங்கி வாயருகில் கொண்டு செல்ல புளிச்ச வாடை அடிக்க, முகத்தை சுளித்தேன்.
“ ஒன்னும் பண்ணாது. குடி ... “ என்று மீண்டும் சொல்ல

கண்ணை மூடிக்கொண்டு அரை லிட்டர் அளவுக்கு குடித்து வைத்தேன். கள்ளைக் குடித்ததும் முன்பே வாங்கி வைத்திருந்த இட்லியும், காரச் சட்டினி, தேங்காய் சட்னியையும் கொண்டு வந்து பிரித்து வைத்தார். காரச் சட்டினியுடன் இட்லி தேவாமிர்தமாக இருக்க, சுவைத்து ரசித்து சாப்பிட்டேன்.

பச்சை வாழை இலையில் சிவப்பாய் காரச்சட்டினி, வெள்ளை கலரில் இட்லி மஞ்சள் கலரில் சாம்பார் என்று அந்தக் கலர் காம்பினேஷனே பார்க்க நவீன ஓவியம் போல இருக்கும்.

பலா மரத்தடியில் வைக்கோலை போட்டு துண்டு விரித்து வைத்து இருந்தார். அதில் சென்று படுத்தேன். ஆரம்பித்தது சோதனை...

போதை.. தலை சுற்ற என்ன செய்கிறேன் என்றே தெரியவில்லை. பக்கத்து தோட்டத்தில் இருந்த தக்காளிச் செடியில் பழுத்து இருந்த தக்காளிப் பழங்களை பறித்தும், வெண்டை, கத்தரிக்காய்களை பிடிங்கி எறிந்தும் ரகளை பண்ணியிருக்கிறேன். ஏதோ செய்து ஜெயராசு என்னை படுக்க வைத்தார் போலும். தூங்கிவிட்டேன்.

மாலையில் அம்மாவிடம் பக்கத்து தோட்டக்காரர் விஷயத்தை போட்டு உடைக்க, அம்மாவின் தம்பியான மாமாவின் பிரம்படி ஒன்று கிடைத்தது. தாத்தாதான் தடுத்தார் மேலும் பிரம்படி கிடைக்காமல். ஜெயராசுக்கு திட்டு விழுந்தது.

ஆனால் அந்தக் கள்ளு சுவையாகத்தான் இருந்தது.....