குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label குழந்தைகள். Show all posts
Showing posts with label குழந்தைகள். Show all posts

Sunday, August 8, 2010

அம்முவும் புஜ்ஜுவும்





அம்முவும், புஜ்ஜுவும் தோழிகள். புஜ்ஜு அம்முவின் பக்கத்து வீட்டுக்கார பெண் குழந்தை. வெகு சூட்டிகையான பெண். அம்முவின் அருமை பெருமைகளை எழுத ஆரம்பித்தால் அது ஒரு அம்முபாரதம் ஆகி விடும்.

அம்மு ஒரு தாதா. புஜ்ஜு ஒரு தாதா. இரண்டு தாதாக்களும் ஒன்று சேர்ந்தால் என்ன நடக்கும். வீடே அதகளப்படும். ஞாயிறுகளில் அவர்கள் அடிக்கும் லூட்டிக்கும், கலாட்டாவுக்கும் இறுதிப் பரிசு இவர்கள் அம்மாக்களின் மொத்துகள். அதைத் தொடர்ந்து பஞ்சாயத்து என்று இரவு வரை நீண்டு கொண்டே இருக்கும் இவர்களின் ராஜ்ஜியம்.




Thursday, November 26, 2009

காட்டுமிராண்டிகளின் கூட்டம்




ஜூவியில் வெளியான கட்டுரையைப் படித்ததும் ஆண்களின் உருவில் நடமாடும் அயோக்கியர்களை எண்ணி மனம் பேதலித்தே விட்டது.

அந்தக் கட்டுரை கீழே ( நன்றி ஜூவி)



வாய்பேச முடியாத வெகுளிப் பெண் ஒருவரை, எந்த அயோக்கியனோ தொடர்ந்து சீரழித்து கர்ப்பிணியாக்க... கேட்பாரின்றித் தொடர்ந்த இந்த கொடுமையின் விளைவால் இதுவரை நான்கு குழந்தை களைப் பெற்றெடுத்திருக்கிறாள், அந்த பரிதாபப் பெண்! எழுத்தாளர் ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' ('நான் கடவுள்' படத்தின் ஒரிஜினல்!) நாவலில்வருவதுபோல், ஒவ்வொரு குழந்தையும் பிறக்கப் பிறக்க இவரிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்லப்பட்டது! அந்த நாவல்போல, குழந்தைகள் பிச்சை எடுக்கப் பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் இங்கு ஒரே ஆறுதல்!

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப் பூண்டி யில் இருந்து பட்டுக்கோட்டை பிரதான சாலையில் இருக்கிறது பாண்டிசத்திரம். அங்கிருந்து கிழக்கில் இரண்டு கிலோமீட்டர்

தூரம் சென்றால், செம்பியமங்கலம் கிராமம்... இங்குதான் தற்போது நான்காவது குழந்தை யைப் பெற்றிருக்கிறார் சித்ரா என்ற அந்த பேச இயலாத பெண். நாம் அங்கு சென்று விஷயத்தை விசாரித்ததுமே, விஜயா என்பவரின் வீட்டைக் காட்டினார்கள் கிராமத்தினர்.

அவர் வீட்டுக்குப் போனோம். அந்த வீட்டில் ஒரு ஓரமாக சாக்கு விரித்து அதில் சித்ராவை படுக்க வைத் திருந்தனர். கந்தல் துணியாக தாய் சித்ரா சுருண்டிருக்க, ரோஜா குவியலாக ஆண் குழந்தை ஒன்று தாயருகில் கண்மூடித் துயில் கொண்டிருந்தது!

அடைக்கலம் கொடுத்திருக்கும் விஜயாவிடம் பேசினோம். ''இந்தப் பொண்ணு ஊரு நெடும்பலம். அங்கே ஒத்த தெருன்னும் சொல்வாங்க. உண்மையான முகவரி தெரியாது. எங்க ஊரு வீடுகளுக்கு முன்னாடி வந்து நின்னு சோறு கேக்கும். இரக்கப்பட்டு சோறு தண்ணி குடுப்போம். அப்பப்ப இது கர்ப்பம் ஆயிடும். யாரு காரணம்னு கேட்டா, 'அண்ணன், மாமா'ன்னு பொதுவா ஏதேதோ சொல்லும்.

இதுக்கு முந்தி இப்படி இதுக்கு போன இடத்துல ரோடு, வாசல்னு மூணு குழந்தை பிறந்திருக்கு. அப்பல்லாம் பக்கத்துல இருக்கவங்க, அந்தக் குழந்தையைக் குளிப்பாட்டி கொஞ்ச நாள் அவங்க வீட்லலேயே வெச்சிருந்துட்டு, யாராவது குழந்தை இல்லாதவங்க கேட்டா தூக்கிட்டுப் போகச் சொல்லிடுவாங்க. இப்படித்தான் அந்த மூணு குழந்தைகளையும் தோப்புத்துறை, பஞ்சநதிக்குளம், தம்பிக்கோட்டைனு மூணு ஊர்ல இருந்து வந்த குழந்தை இல்லாதவங்க தூக்கிட்டுப் போயிட்டாங்க.

கடந்த பதினேழாம் தேதி ராத்திரி, வயித்தை சாய்ச்சுக்கிட்டு எங்க வீட்டு முன்னாடி வந்துசோத்துக்கு நின்னுச்சு. நானும் சோறு குடுத்தேன். அத சாப்பிட்டுட்டு கொஞ்ச தூரம் போன வுடனே அலறல் சத்தம். பதறியடிச்சு ஓடி வந்து பார்த்தா... வெளியிலயே பிரசவம்! உடனே தாயையும் குழந்தையையும் வீட்டுக்குள் கொண்டுவந்து குளிப்பாட்டி, அவசரத்துக்கு ஒரு துணிய போட்டு மூடி வெச்சிருந்தோம். அப்புறம் காலையில கைப்புள்ளைங்க இருக்குற வீட்டுல போய் சட்டை வாங்கியாந்து, அந்த பச்சைக் குழந்தைக்குப் போட்டு விட்டோம். அந்தப் பொண்ணுக்குத் தேவையான பத்திய சாப்பாடு தயார் பண்ணிக் கொடுத்தோம். இந்த தெருவுல எல்லோருமே வந்து இவங் களைப் பார்த்துக்குறாங்க..!'' என்றார்.

ராஜாத்தி என்பவர் நம்மிடம், ''தெனமும் சாப்பாடு கேட்டு எங்கூருக்கு வர்ற சித்ரா, இடையில சிலநாள் வரமாட்டா. அந்த மாதிரி சமயங்களில்தான் யாரோ பாவிங்க இவளை எங்கேயாச்சும் கொண்டுபோய் வச்சிருந்து தப்பா நடக்கறாங்க போலிருக்கு. கேக்கவும் பாக்கவும் ஆளு இல்ல. அவளுக்கு பேச வேற வராதுங் கறதை எல்லாம் பயன்படுத்திதான் அந்த மிருகங்கள் அவளை இந்த நெலைமைக்கு ஆளாக்கி இருக் கணும். நீங்களாவது இந்தக் குழந்தைக்கு அப்பா யாருன்னு கண்டுபிடிச்சு, ஒண்ணா சேர்த்து வைங்க. அப்படி இல்லைன்னா இந்தப் பொண்ணையாச்சும் ஒரு பாதுகாப்பான இடத்துல தங்க வையுங்க!'' என்றார்.

நாம் வந்திருக்கும் தகவல் அறிந்த செம்பியமங்கலம் கிராம மக்கள் அங்கு கூடியதோடு இதே கோரிக் கையைத்தான் நம்முன் வைத்தனர்.

இதற்கிடையில், அருகிலிருக்கும் எடையூரை சேர்ந்த மாதவன் - தவமணி தம்பதி, 'பிறந்திருக்கும் இந்தக் குழந்தையை நாங்கள் வளர்க்கிறோம்...' என்று கேட்டு, அங்கு வந்து சேர்ந்தனர். நம்மிடம் அவர்கள், ''எங்களுக்குக் கல்யாணமாகி 10 வருஷத்துக்கும் மேல ஆயிருச்சி. குழந்தை இல்ல. எங்ககிட்ட இந்தக் குழந்தையைக் குடுத்தா, எங்க புள்ளையாவே வளர்ப்போம்...'' என்றனர் ஊர்க்காரர்களிடம்.

நாம் சித்ராவிடம் அவருடைய குழந்தை யைக் காட்டி,''இதுக்கு அப்பா யாரு?'' என்றோம். ''அண்ணன், மாமாட்டு அண்ணன்...'' என்ற வார்த்தையை மட்டும் திரும்பத் திரும்பச் சொன்னார். ''வா, வந்து காட்டுவியா?'' என்று அழைத்தோம். உடனே அவர், தன் தலைமுடியைப் பிடித்துத் தன்னையே அடித்துக் காண்பித்து, ''அய்... அய்க்ம்...'' (அடிக்கும்?) என்றார். குழந்தையை பக்குவமாகத் தூக்கக்கூட சித்ராவுக்குத் தெரியவில்லை. தவமணிதான் குழந்தையைத் தூக்கித் தாயிடம் கொடுத்துப் பால் கொடுக்க வைத்தார்.

நாம் அன்று மாலை 6 மணிக்கு அங்கிருந்தபடியே திருவாரூர் மாவட்ட கலெக்டர் எம்.சந்திரசேகரனை தொடர்புகொண்டு இந்த அநியாயத்தைத் தவிப்போடு சொன்னோம். பதறிப்போன அவர், ''முதலில் தாயையும் குழந்தையையும் ஹாஸ்பிட்டலில் சேர்த்து விடுவோம். பிறகு மற்றதைப் பார்க்கலாம். நாளை காலை அதிகாரிகளை அங்கு வரச்சொல்கிறேன்!'' என்றார் நிஜமான அக்கறையோடு.

மறுநாள் காலை நாம் மறுபடி அங்கு சென்றோம். திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரம், செம்பியமங்கலத்தில் காத்திருந்து, 108-க்கு போன் செய்து ஆம்புலன்ஸை வரவழைத்தார். சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்ற, குழந்தையைத் தத்தெடுக்க வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதி, ''நாங்களும் வந்திருந்து பார்த்துக் கொள்கிறோம்...'' எனக் குழந்தையை கையிலேந்திக் கொண்டனர். இதற்குள் கலெக்டர் சந்திரசேகரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பேசிவிட... நாமும் திருவாரூர் சென்றோம். கூடவே திருத்துறைப்பூண்டி தாசில்தார் சிதம்பரமும் வந்தார்.

மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள், தாயையும் சேயையும் பரிசோதித்துவிட்டு அங்கேயே ஒரு வார்டில் அனுமதித்தனர். நாம் மீண்டும் கலெக்டரிடம் தொடர்பு கொண்டோம். ''மருத்துவர்கள் சொல்லும்வரை சித்ரா அங்கேயே இருக்கட்டும். பிறகு அந்தப் பெண்ணை காட்டூர் அருகிலிருக்கும் இல்லத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டேன். அங்கு அவரை சேர்த்துவிட்டு, அதன் பிறகு குழந்தையைத் தத்துக்கொடுப்பது தொடர்பாக நடவடிக்கை எடுக்கிறேன். அதோடு, அந்தப் பெண்ணைக் கேட்டு, அந்த குழந்தைக்கு அப்பா யார் எனக் கண்டுபிடித்து சட்டப்படியான நடவடிக்கையும் எடுக்கிறேன்....'' என நம்மிடம் உறுதியளித்தார்.

கலெக்டர் சந்திரசேகரனுக்கும், தாசில்தார் சிதம்பரத்துக்கும், தத்து எடுக்கத் தயாராக வந்திருந்த மாதவன் - தவமணி தம்பதிக்கும், யாரோ ஒரு பெண்ணை அநாதை என நினைக்காமல் தன் வீட்டுப் பெண்போல் பராமரித்து வைத்திருந்த விஜயாவுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த செம்பியமங்கலம் கிராம மக்களுக்கும் நமது சார்பில் நன்றியைத் தெரிவித்தோம்.

'ஏழாம் உலகம் என்பது வேதாளங்களுக்குச் சொந்தம்' என்று தன் நாவலில் சொல்லியிருப்பார் ஜெயமோகன். ஆதரவில்லாத ஒரு பெண்ணிடம் தன் காமவெறியைத் தீர்த்துக் கொள்ளும் அந்த கோழை வேதாளம் என்றைக்குச் சிக்கினாலும் சரி... சட்டம் மிகக் கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டு திரும்பினோம்!


என்ன செய்தாலும் திருந்தாத ஜென்மம் மானிடர் ஜென்மம்.

Thursday, March 26, 2009

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல் நீ நடப்பது நாட்டியமே

என் மகள் நிவேதிதாவிற்காக இந்தப் பாடலும் படங்களும். பாடல் வரிகளும், படமும் கீழே. வாழ்க்கையின் அர்த்தம் குழந்தைகள். அந்தக் குழந்தைகளின் சுட்டிச் செயல்கள் வெப்பப் பாலையில் தகிக்கும் வெயிலில் கிடைக்கும் நிழல் போன்ற சுகத்தை தர வல்லவை. அனுபவித்துப் பார்த்தவர்களுக்கு மட்டுமே தெரியக்கூடிய உண்மை. காதலுக்கும் மேலான ஒன்று என்றால் அது குழந்தைகள்.










பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

பூங்காற்றிலே சிறு பூங்கொடி போல்
நீ நடப்பது நாட்டியமே
மூங்கிலிலே வரும் சங்கீதம் போல
நீ சிரிப்பது காவியமே
அன்புக்கு நூறு ஆசைக்கு நூறு
முத்துகள் சூட்டி நான் காணுவேன்
வா மகளே என்னைப் பார் மகளே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே

அம்மாவென்று வரும் கன்றுக்குட்டி
அது தாய்மையைக் கொண்டாடுது
குக்கூவென்று வரும் சின்னக்குயில்
தன் குழந்தைக்கு சோறூட்டுது
நெஞ்சோடு பாசம் வந்தாடும் போது
கண்ணோடு நேசம் ஆறாகுமே
நீயின்றி என்றும் நானில்லையே
என் உயிரின் ஒளி நீயே
பூப்போலே உன் புன்னைகையில்
பொன் உலகினைக் கண்டேனம்மா
என் கண்ணே கண்ணின் மணியே
என் உயிரே உயிரின் ஒளி நீயே



நன்றி : பாடலை எழுதியவர், இசையமைத்தவர், இயக்கியவர் மற்றும் தயாரிப்பாளர்

Wednesday, March 18, 2009

எந்தக் காது கேக்காது !

மாலை நேரம். மனைவி கிரைண்டரில் மாவு அரைத்துக் கொண்டிருந்தாள். அடியேன் கணிணியில் பிசியாக இருந்தேன். டோரா மற்றும் புஜ்ஜியின் பயணங்களைப் பார்த்துக் கொண்டிருந்தார் அம்மு தனது அண்ணாவுடன்.

அம்மு எனது ரோஜாப்பூ மகள். அவள் நடந்தால் சாரல், சிரித்தால் தென்றல் என்று அவள் என்ன செய்தாலும் இன்பம் இன்பம் தான். குழந்தைகள் தான் வாழ்க்கையினை அர்த்தப் படுத்துகிறார்கள் என்பதினை அடிக்கடி அம்மு உணர்த்துவாள். அம்முவின் சில கேள்விகள் நினைக்க நினைக்க சந்தோஷம் தருபவை.

சென்னையிலிருந்து அம்முவின் சித்தி அழைத்திருந்தார்கள். அம்மு என்ன செய்கிறார் என்று கேட்டிருப்பார் போல. கிரைண்டரில் அரைத்துக் கொண்டிருந்த உளுந்த மாவினை சிறு கிண்ணியில் எடுத்து சாப்பிட்டுக் கொண்டிக்கிறார் என்று அம்முவின் அம்மா சொல்லி இருக்கிறார். மாவு சாப்பிட்டால் காது கேட்காதாம் என்று சித்தி சொல்கிறார் ஆகையால் சாப்பிடாதே என்று அம்முவிடம் சொல்லியிருக்கிறார் மனைவி.

அதற்கு அம்முவின் கேள்வி” எந்தக் காது கேக்காது. இந்தக் காதா அந்தக் காதா ?”. இதற்கு என்னவென்று பதில் சொல்வதென்று திகைத்து பின்னர் இரண்டு காதுகளும் கேட்காதாம் அம்மு என்று சொல்லி இருக்கிறார்.

Sunday, March 8, 2009

கோயம்பேட்டில் அனாதைச் சிறுவர்களுடன் - 1

லாரிக்குள் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். லாரி டிரைவர் குசும்பு பிடித்தவன். எதிரே வரும் கார்களை இடிப்பது போல லாரியைச் செலுத்தினான். “வேல்முருகா எதிரே வரும் காருக்கு நன்றாகத்தான் வழி விடேன்” என்ற போது, “சார், நாம பெரிய வண்டியில் இருக்கிறோம் அவன் தான் பயந்து ஒதுங்கிப் போகனும்” என்றான். ”அடப்பாவி பயலே, நீ செய்யுறது சரியில்லை“ என்று கோபமாகக் முறைக்க வேறு வழி இன்றி எதிரே கார்கள் வந்தால் நன்கு ஒதுங்கி வழி விட்டான்.

விடிகாலை நான்கு மணிக்கு கரூரிலிருந்து கிளம்பி சென்னைக் கோயம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது லாரி. பின்னால் மூடிய லாரிக்குள் பத்து அனாதைச் சிறுவர்களும், மூன்று சக்கர சைக்கிளும், பதினைந்து பேருக்கு இரண்டு மாதம் தாங்கும் அளவுக்கு சமையல் பொருட்களும் இருந்தன. காலைச் சாப்பாடு புளிச்சாதம், தயிர்சாதம். மதியம் ஹோட்டலில் சாப்பிட்டோம். வழியில் நுங்கு, டீ, வடை, பஜ்ஜி என்று சிறுவர்களுடன் சாப்பிட்டேன். பத்து சிறுவர்களும் மாறி மாறி லாரியின் முன்புறம் வந்து என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள். சென்னையைப் பார்ப்பது என்பது அவர்கள் வாழ்வில் நடக்கப் போகிற அற்புத சம்பவம். அதற்கு காரணமான கம்ப்யூட்டர் வாத்தியாராகிய என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டார்கள். அதன் பலன் என்னவென்றால் அவர்கள் சாப்பிடுகிறார்களோ என்னவோ, என்னை அவர்கள் கவனித்த விதம் பற்றி வார்த்தைகளில் வடிக்க இயலாது.

இவ்விடத்தில் சற்று நிற்க :

அனாதைச் சிறுவர்கள் என்று எழுதிய போது மனதுக்குள் வந்து சென்ற வரிகளும், கவிதையும் கீழே.

”என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி. ” எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நகுலனின் பத்துக் கவிதைகள் கட்டுரையில் இருந்து.

இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் - நகுலனின் கவிதை




சரி விஷயத்துக்கு வருகிறேன். இனி...

சரியாக நான்கு மணிக்கு கோயம்பேட்டின் பின்புறமிருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தை அடைந்தோம். பொறுப்புச் சாமி ஓடிவந்து வரவேற்றார். பிரதர் ஒருவரும் வந்து வரவேற்றார். சுற்றி வர முற்செடிகள். ஒத்தையடிப்பாதை. நீண்ட கூரைக் கொட்டகைகள் இரண்டு. அதில் ஒன்றில் தங்கும் அறைகள் மூன்று இருந்தன. மற்றொன்றில் பூஜை அறை, சமையல் கிடங்கு மற்றும் சமையல் அறையுடன் கூடிய சாப்பாட்டுக் கூடம். தண்ணீர் கிடையாது. சைக்கிளில் சென்று பிடித்து வரவேண்டும். கரண்ட் இல்லை. வேறொரு இடத்தில் ஆஸ்ரமத்தின் பள்ளி கட்டிட வேலைக்கு போட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து சமையல், பாத்ரூம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். பாம்பு, பூரான், திருடர்கள் மற்றும் இன்னபிற தொல்லைகள் அதிகம். கொசுக்கள் ஈக்கள் போல மொய்க்கும். இரவில் சுவர்க்கோழிகள் சத்தம் காதைக் பிளக்கும். இரவில் மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சம். இனிமேல் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை.

பத்துக்கு பதினைந்து அடியில், அறையோடு கூடிய பாத்ரூம், ஏர்கூலர், பேன், விடிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வில்வ இலை ஜூஸ்( எனக்கும் பெரிய சாமிக்கும் மட்டும்), காலையில் டீ அல்லது காஃபி, ஏழு மணிக்கு டிஃபன், சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பாடு, மாலை நான்கு மணிக்கு காஃபியுடன் சிற்றுண்டி, இரவு ஏழு மணிக்கு டிஃபன், இரவில் பழ ஜூஸ் அல்லது சுண்டக் காய்ச்சிய பால், கல்லூரிக்கு சென்று வர காண்டசா கிளாசிக் கார் என்று வாழ்ந்தவன் மேற்படி சொன்ன இடத்தில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?

Tuesday, November 18, 2008

நடமாடும் தெய்வங்கள்

இன்று காலையில் வீட்டுக்கு வெளியே ஜீப் சத்தம் கேட்டது.

” என்னம்மா சத்தம் ? “
“ மூன்று மாத பிள்ளையை கொன்று போட்டிருக்கிறார்களாம்” என்றார் மனைவி.
“ என்ன ? “
“ ஆமாங்க.. யாருன்னு தெரியலை. போலீஸ் வந்திருக்காங்க” என்றார் மனைவி

பொக்கை வாய்ச் சிரிப்பும், பிஞ்சு விரல்களும், பால் வழியும் வாயோடு சிரிக்கும் குழந்தையையா கொன்று இருக்கிறார்கள்.
பிஞ்சுப் பாதங்களால் நெஞ்சில் உதைத்தால் பிறவிப்பயன் நிறைவேறுமே. நடமாடும் இயற்கையின் அற்புதமல்லவா குழந்தை. இறைவனின் படைப்பில் உயிரோடு மானிடருக்கு கிடைக்கும் சொர்க்கமல்லவா குழந்தை. வீட்டுக்கு வரும் நடமாடும் கடவுள்தானே குழந்தைகள்.....

நெஞ்சம் கனத்து, கண்ணீரில் நனைந்தது கண்கள்.

பிள்ளை இல்லா அன்னை ஒருத்தியின் குரலில் வெளிப்படும் வேதனையினைக் கவனியுங்கள்.

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று
காய்க்காத மரத்தடியில் தேனாறு பாயுதடா
கனிந்த விட்ட சின்ன மரம் கண்ணீரில் வாடுதடா
கண்ணீரில் வாடுதடா....

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

பெற்றெடுக்க மனமிருந்தும் பிள்ளைக்கனி இல்லை
பெற்றெடுத்த மரக்கிளைக்கு மற்ற சுகம் இல்லை
சுற்றமென்னும் பறவையெல்லாம் குடியிருக்கும் வீட்டில்
தொட்டில் கட்டி தாலாட்டும் பேரு மட்டும் இல்லை
பேரு மட்டும் இல்லை

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

வேண்டுமென்று கேட்பவருக்கு இல்லை இல்லை என்பார்
வெறுப்பவருக்கும் மறுப்பவருக்கும் அள்ளி அள்ளித் தருவார்
ஆண்டவனார் திருவுள்ளத்தை யாரறிந்தார் கண்ணே
யார் வயிற்றில் யார் பிறப்பார் யார் அறிவார் கண்ணே
யார் அறிவார் கண்ணே

பூவாகி காயாகி கனிந்த மரம் ஒன்று
பூவாமல் காய்க்காமல் கிடந்த மரம் ஒன்று

* * * * *

எப்படியடா உங்களுக்கு இப்படியெல்லாம் செய்ய முடிகிறது. பாவிகளா... பாவிகளா....