லாரிக்குள் டிரைவருக்கு அருகில் அமர்ந்திருந்தேன். லாரி டிரைவர் குசும்பு பிடித்தவன். எதிரே வரும் கார்களை இடிப்பது போல லாரியைச் செலுத்தினான். “வேல்முருகா எதிரே வரும் காருக்கு நன்றாகத்தான் வழி விடேன்” என்ற போது, “சார், நாம பெரிய வண்டியில் இருக்கிறோம் அவன் தான் பயந்து ஒதுங்கிப் போகனும்” என்றான். ”அடப்பாவி பயலே, நீ செய்யுறது சரியில்லை“ என்று கோபமாகக் முறைக்க வேறு வழி இன்றி எதிரே கார்கள் வந்தால் நன்கு ஒதுங்கி வழி விட்டான்.
விடிகாலை நான்கு மணிக்கு கரூரிலிருந்து கிளம்பி சென்னைக் கோயம்பேட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது லாரி. பின்னால் மூடிய லாரிக்குள் பத்து அனாதைச் சிறுவர்களும், மூன்று சக்கர சைக்கிளும், பதினைந்து பேருக்கு இரண்டு மாதம் தாங்கும் அளவுக்கு சமையல் பொருட்களும் இருந்தன. காலைச் சாப்பாடு புளிச்சாதம், தயிர்சாதம். மதியம் ஹோட்டலில் சாப்பிட்டோம். வழியில் நுங்கு, டீ, வடை, பஜ்ஜி என்று சிறுவர்களுடன் சாப்பிட்டேன். பத்து சிறுவர்களும் மாறி மாறி லாரியின் முன்புறம் வந்து என்னுடன் ஒட்டிக் கொள்வார்கள். சென்னையைப் பார்ப்பது என்பது அவர்கள் வாழ்வில் நடக்கப் போகிற அற்புத சம்பவம். அதற்கு காரணமான கம்ப்யூட்டர் வாத்தியாராகிய என்மீது கொள்ளைப் பிரியம் கொண்டார்கள். அதன் பலன் என்னவென்றால் அவர்கள் சாப்பிடுகிறார்களோ என்னவோ, என்னை அவர்கள் கவனித்த விதம் பற்றி வார்த்தைகளில் வடிக்க இயலாது.
இவ்விடத்தில் சற்று நிற்க :
அனாதைச் சிறுவர்கள் என்று எழுதிய போது மனதுக்குள் வந்து சென்ற வரிகளும், கவிதையும் கீழே.
”என்னுடைய அம்மா ஒரு நாள் ராத்திரி என்னை கூப்பிட்டு சுவர்ல விளக்கோட நிழல் ஊர்ந்து போறதே அது சுவத்தில ஏன் படியுறதேயில்லைனு கேட்டா. எனக்கு அப்போ விபரம் புரியாத வயசு. பதில் சொல்ல தெரியலை. அவளாகவே நாமளும் அப்படிதான் என்று சொன்னாள். எனக்கு பயமா இருந்துச்சி. ” எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் நகுலனின் பத்துக் கவிதைகள் கட்டுரையில் இருந்து.
இருப்பதற்கென்று
வருகிறோம்
இல்லாமல்
போகிறோம் - நகுலனின் கவிதை
சரி விஷயத்துக்கு வருகிறேன். இனி...
சரியாக நான்கு மணிக்கு கோயம்பேட்டின் பின்புறமிருக்கும் ராமகிருஷ்ண தபோவனத்தை அடைந்தோம். பொறுப்புச் சாமி ஓடிவந்து வரவேற்றார். பிரதர் ஒருவரும் வந்து வரவேற்றார். சுற்றி வர முற்செடிகள். ஒத்தையடிப்பாதை. நீண்ட கூரைக் கொட்டகைகள் இரண்டு. அதில் ஒன்றில் தங்கும் அறைகள் மூன்று இருந்தன. மற்றொன்றில் பூஜை அறை, சமையல் கிடங்கு மற்றும் சமையல் அறையுடன் கூடிய சாப்பாட்டுக் கூடம். தண்ணீர் கிடையாது. சைக்கிளில் சென்று பிடித்து வரவேண்டும். கரண்ட் இல்லை. வேறொரு இடத்தில் ஆஸ்ரமத்தின் பள்ளி கட்டிட வேலைக்கு போட்டிருந்த ஆழ்துளைக் கிணற்றிலிருந்து தண்ணீர் பிடித்து சமையல், பாத்ரூம் எல்லாவற்றுக்கும் பயன்படுத்த வேண்டும். பாம்பு, பூரான், திருடர்கள் மற்றும் இன்னபிற தொல்லைகள் அதிகம். கொசுக்கள் ஈக்கள் போல மொய்க்கும். இரவில் சுவர்க்கோழிகள் சத்தம் காதைக் பிளக்கும். இரவில் மண்ணெண்னெய் விளக்கு வெளிச்சம். இனிமேல் இரண்டு மாதங்கள் இங்கு இருக்க வேண்டிய முக்கியமான சூழ்நிலை.
பத்துக்கு பதினைந்து அடியில், அறையோடு கூடிய பாத்ரூம், ஏர்கூலர், பேன், விடிகாலையில் நெல்லிக்காய் ஜூஸ் அல்லது வில்வ இலை ஜூஸ்( எனக்கும் பெரிய சாமிக்கும் மட்டும்), காலையில் டீ அல்லது காஃபி, ஏழு மணிக்கு டிஃபன், சரியாக பனிரெண்டு மணிக்கு சாப்பாடு, மாலை நான்கு மணிக்கு காஃபியுடன் சிற்றுண்டி, இரவு ஏழு மணிக்கு டிஃபன், இரவில் பழ ஜூஸ் அல்லது சுண்டக் காய்ச்சிய பால், கல்லூரிக்கு சென்று வர காண்டசா கிளாசிக் கார் என்று வாழ்ந்தவன் மேற்படி சொன்ன இடத்தில் சென்று தங்க வேண்டிய கட்டாயம் ஏன் ஏற்பட்டது?
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.