குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, November 22, 2024

அரசு மருத்துவர்களின் அதிகாரத் திமிர்

சென்னை அரசு மருத்துவமனை மருத்துவர் பாலாஜியை, ஒரு இளைஞன் கத்தியால் குத்தி விட்டான். 

அம்மாவுக்குப் புற்று நோய்.

தனியார் மருத்துவமனைகளில் செலவாகும் என்பதால் கிண்டியின் அரசு மருத்துவமனை.

விக்னேஷ் அம்மாவுக்கு நோய் சரியாக மருத்துவர் வைத்தியம் செய்திருக்கிறார். 

விக்னேஷின் அம்மா பிரேமாவின் பேட்டியின் படி இந்த மருத்துவர் கண்டபடி திட்டுவார் போல. புற்று நோயின் இரண்டாவது ஸ்டேஜில் சிகிச்சைக்குச் சென்றவர் ஐந்தாவது ஸ்டேஜுக்கு முன்னேறி இருக்கிறார். மருத்துவர் பாலாஜியின் சிகிச்சை மகத்துவம் என்கிறார் பேட்டியில்.

பதினெட்டு நாட்கள். படாத பாடு பட்டிருப்பார்கள் அம்மாவும், பையனும்.

சகட்டு மேனிக்கு திட்டுவாராம் மருத்துவர்.

இளம் ரத்தம். கீறி விட்டான்.

பரபரப்பு.

மருத்துவர் உலகம் பொங்கி பொங்கல் வைக்க கிளம்பினார்கள்.

மேற்கு வங்கம் போல இங்கும் ஒரு படையல் போட்டு விடலாமென ஒவ்வொரு அரசியல்வியாதியும் மருத்துவரை குசலம் விசாரிக்க கிளம்பி, போராட்டம் வரைக்கும் சென்றார்கள்.

இளைஞன் விக்னேஸ் மக்களில் ஒருவன். மருத்துவருக்குப் பொங்கிய அரசியல்வியாதிகள் விக்னேசுக்காகப் பொங்கவில்லை.

ஏனெனில் மருத்துவர்கள் மட்டுமே ஓட்டுப் போட்டு - இவர்கள் பதவிக்கு வந்து இருக்கிறார்கள்.

அவன் குற்றவாளி. 

குற்றத்தைத் தூண்டியவருக்கு அரசுப் பாதுகாப்பு.

மக்களின் ஒருவனான விக்னேசுக்கு மக்களாகிய நாம் தானே ஆதரவு தர வேண்டும். 

நாம் கொடுக்கும் வரிப்பணத்தில் சம்பளம் வாங்கும் மருத்துவருக்கு நோயாளிக்குச் சிகிச்சை கொடுப்பது பணி. நோயால் பீடிக்கப்பட்டவர்களிடம் ஆதரவாக பேச வேண்டியது  கடமை. 

திட்டினால் கேட்டுக் கொண்டிருப்பார்கள் பலரும் என்னைப் போல. இங்கே சற்றே கோபம் வந்து விட்டது. 


கரூரில் ஆர்த்தோ மருத்துவரிடம் மாற்றுத்திறனாளி இரயில்வே கன்செஷன் சர்ட்டிபிகேட்டில் கையொப்பம் வாங்கச் சென்றிருந்தேன்.

சுமார் இரண்டு மணி காத்துக் கிடந்த பிறகு, வாசல் திறந்தது.

அரசு காசுக்குக் கேடு!

எங்கே போகிறாய்? 

எதுக்குப் போகிறாய்?

அரசாங்கத்தைச் சொல்லனும்!

தண்டச் செலவு?

60 சதவீதம்னு போட்டுத் தாரேன்!

சரி, சரி, எவ்ளோ காசு வெச்சிருக்கேய்?

இம்புட்டுத்தானா? இன்னும் வேண்டும்!

சரி, சரி, இந்தா...!

போட்டோவில் கையெழுத்துப் போட்டு விட்டு, கீழேயும் கையொப்பம் இட்டு சீல் வைத்தார்.

இலவச அர்ச்சனைகளுடன் சர்ட்டிபிகேட் கைக்கு வந்தது. 

200 ரூபாய் கைமாறியது. அவருக்குச் சற்றே ஆசுவாசம். அரசு பணம் செலவாயிடக்கூடாது என்பதில் மருத்துவருக்கு அவ்வளவு கரிசனம்.

கரூர் ரயில்வே ஸ்டேஷனில் டிக்கெட் புக் செய்யும் போது, ரவுண்ட் சீல் இல்லைன்னா டிக்கெட் கொடுக்க முடியாது.

மறு நாள் இரவு.

மீண்டும் இரண்டு மணி நேரம் வாசல் திறக்கக் காத்திருப்பு.

வேண்டா வெறுப்பாய் ரவுண்ட் சீல். 

மருத்துவருக்கு அரசு தரும் வசதியை தன்னைத் தவிர பிறர் அனுபவித்து விடக்கூடாது என்பதில் அவ்வளவு ஆனந்தம். பொண்டாட்டி வீட்டுச் சீதனம் பாருங்க. அவருக்குத் தெரியும், சீல் வைக்க வேண்டுமென. ஆனாலும் அலைய விடுவதில் ஒரு ஆனந்தம்.

20 வருடத்திற்கு முன்பு நடந்தது. இன்னும் நினைவிலாடுகிறது.

இளைஞன் விக்னேசுக்கு சும்மாச்சுக்கும் கோபம் வந்திருக்காது. அது சட்டப்படி தவறு. திட்டியிருக்கலாம். ஆனால் குத்தியிருக்கிறான். 

சட்டம் இனி அவன் வாழ்க்கையில் வெளையாடும்.

விதி வந்தவனுக்கு சட்டம் சனி பகவான். 

கடமையே கண்ணாக ஆற்றும் சட்டம். 

அரசியல்வாதிகள் என்போர் யாருக்காக என புரிந்து கொள்ள வேண்டும். ஏழைகளுக்கு ஒன்று எனில் எவரும் வர மாட்டார்கள். 

ஏழைக்கு ஏது நீதி?

22.11.2024

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.