குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label திருக்குறள். Show all posts
Showing posts with label திருக்குறள். Show all posts

Tuesday, November 26, 2024

மழையை வெறுக்கும் சென்னை மக்கள்

மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய ஓர் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் என்பனவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத் தண்ணீர் இடம் பெற்றுள்ளது.

மழையின் வாயிலாகவும், ஆறுகளில் இருந்தும், நிலத்தினுள் இருந்தும் மனித சமூகம் நீரைப் பெற்று வருகிறது. இயற்கையாக ஓடும் காட்டோடைகளில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் மட்டுமே மனித சமூகம் தண்ணீரைப் பெற்று வந்தது. நீரைத் தேக்கிவைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து வெளிக் கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்தபோதுதான் மனிதசமூகம் வளர்ச்சி பெற்றது. இம்முயற்சியில் ஏற்பட்ட வெற்றியே சமூகத்திற்கு முன்னேற்றத்தை வழங்கியது. நாகரிகம், பண்பாடு என்பனவற்றை வளர்த்தெடுத்தது. உலகின் தொன்மையான நாகரிகங்கள் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே இருந்துள்ளன. 

பரிபாடலில் வையை ஆறும், சிலப்பதிகாரத்தில் காவிரி ஆறும் அழகுற இடம்பெற்றுள்ளன. 

‘கான்யாறு’ ‘விரிபுனல்’ என்று ஆறுகளுக்குப் பெயரிட்டனர். 

தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. 

இத்தகைய நீர்நிலைகள், குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர். 

கிணறு வெட்டுதல் தொடர்பான நூல் ‘கூவநூல்’ எனப்பட்டது. இந்நூல் படித்து பயிற்சி பெற்றோரை ‘கூவநூலோர்’எனப்பட்டனர். 

வேளாண்மைப் பெருக்கத்திற்கு, காடுகளை அழிப்பதும் குளங்களை வெட்டுவதும் அவசியமென பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.


நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவன் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே  (புறநானூறு 28 - 30) 

எனப் புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். 

நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும் இப்பாடலின் அர்த்தம்.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு 

எனத் திருக்குறளில் திருவள்ளுவரும் நீரின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்பியிருக்கிறார்.


பொய்யா எழிலி பெய்விட நோக்கி

முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்

சிறு நுண் ணெறும்பின் - (புறநானூறு 173)

என பாடலில் எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள் என மழை வரும் காலத்தைப் புறச்சூழலை வைத்து கணித்திருக்கிறார்கள்.


துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல,

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (அகநானூறு 252)

கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கும் நடு இரவினிலே கூட தூங்காமல், பெரிய குளம் ஒன்று உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதன் காவலன் போல, என்னை அன்னை பாதுகாத்து வருகிறாள்’ என தலைவி தனது இக்கட்டான நிலை குறித்து தோழி மூலம் தலைவனிடம் சொல்லுகிறாள் என அக நானூற்றுப் பாடலில் நக்கண்ணையார் என்ற புலவர் பாடியிருக்கிறார்.

இவ்வாறு அக வாழ்விலும், புறவாழ்விலும் கூட பண்டைய தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் மழை நீரானது பூமிக்கு உயிர் நீராகும். நீரின்றி ஒரு நாள் கூட மனிதனாலோ அல்லது பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் வாழவே முடியாது. எந்த ஒரு மனிதனும் மழையை வெறுக்கமாட்டான்.

மழை பெய்தால் தெருவில் ஓடி, நிறைந்து, வழிந்து செல்லும். சென்னையில் இருக்கும் குளங்களை எல்லாம் தூர்த்தும், நீர் வழிப் பாதைகளை எல்லாம் வழிமறித்து வீடு வாசல் கட்டி வைத்துக் கொள்கிறார்கள். அரசு அவர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டம், கலவரங்கள் செய்ய வேண்டியது. பெரும் பணக்காரர்களின் அதீத ஆசைக்குப் பலியாகி ஏரிகளை வீடுகளாக்கிக் கொண்டு வாழ்வதும் இவர்களே.

மழையே பெய்யக் கூடாது. அப்படியே பெய்தால் வீட்டுக்குள் வரவே கூடாது. தெருவில் நீர் செல்லவே கூடாது என்றெல்லாம் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகளைக் கொட்ட வேண்டியது. நீர் வழிப் பாதைகளை அடைத்து விட வேண்டியது. மழை பெய்தால் அடைக்கத்தான் செய்யும்.  அய்யோ அரசு அப்படி செய்கிறது, கவனிக்கவே இல்லை எனக் கூப்பாடு போட வேண்டியது. 

சென்னை வாழ் மக்கள் மழைக்காலங்களில் போடும் மீம்ஸுகளும், மழையினைக் காரணம் காட்டி அரசையும், அரசு ஊழியர்களையும் கேவலமாகப் பேசுவதும், மழையை வெறுப்பதும் போன்ற செயலை எவரும் செய்ய மாட்டார்கள். ஆனால் சென்னையில் அதைச் செய்கிறார்கள். அரசியல்வியாதி பலதும் சொல்வான். கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போகிறது எனத் தெரியவில்லை. சோஷியல் மீடியா கூலிப்படையினரின் ஆட்டம் எழுத்தால் எழுத முடியவில்லை. வக்கிரம், ஆபாசம், தனி மனித தாக்குதல், உறவுத்தாக்குதல் என ஆட்டம் எல்லை மீறிப் போகிறது. இதற்கெல்லாம் ஒரு வழி வரத்தான் போகிறது. அப்போது பொய்களும், இணையக் கூலிப்படைகளின் ஆட்டமும் அடக்கப்படும்.

மழை என்பது கொடை. அதை வரவேற்று, அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து மழையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவலமான பிறவிகளுடன் சேர்ந்து கொண்டு - மக்களும் மழையை வெறுத்தால் - நாளை நீரின்றி சென்னை அழிந்து போகும்.

மழையைக் கொண்டாடுங்கள். மழையை வரவேற்று மகிழுங்கள். நீர் வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 

26.11.2024

Friday, August 6, 2021

ரெண்டு இட்லி

மனிதனின் முதல் உணவு தாய்ப்பால். அதன் காரணமாகத்தான் தாயின் மீதான அன்பு பிள்ளைகளுக்கு அதிகம். இறுதிவரை தாயை நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.

உணவு உணர்வுகளோடு ஒன்றியவை.  மனிதன் உணவால் உருவானவன். உணவின் தன்மைக்கு ஏற்ப அவனின் வாழ்க்கை இருக்கும். நலமோ, நோயோ எல்லாவற்றுக்கும் காரணம் உணவு.

திருக்குறள் ஒன்று

மிகினும் குறையினும் நோய்செய்யும் நூலோர்

வளி முதலா எண்ணிய மூன்று

அதிக உணவும், குறைவான உணவும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்றில் பாதிப்பினை உண்டாக்கி நோயாக மாறி விடும் என்கிறார் திருவள்ளுவர்.

உணவின்றி இவ்வுலகில் எவ்வுயிரும் இல்லை. ஆனால் மனிதனின் தற்போதைய நிலையோ பரிதாபம். என்றைக்கு உணவுப் பொருள் வணிகத்துறைக்குள் உட்புகுந்ததோ அன்றிலிருந்து நாம் எதைச் சாப்பிட வேண்டுமென்பதை செய்தி மீடியாக்களும், சினிமா டிவி பிரபலங்கள் என்றுச் சொல்லக்கூடிய ஃபிராடுகளும் முடிவு செய்கிறார்கள்.

சினிமாக்காரன் சினிமாவில் மட்டும் நடிக்கவில்லை. நம் வாழ்க்கையின் எல்லாவற்றிலும் ஆதிக்கம் செலுத்தி, நம்மை அவனின் பணத்தாசைக்குப் பலியாக்கி விடுகின்றான்கள். 

வெளி நாட்டு சொகுசுக்காருக்கு வரி விலக்குக் கேட்ட ஒரு குள்ள நரி ஹீரோ, கூல்டிரிங்க்ஸ் குடிக்கச் சொன்னான். பின்னர் அவனே கூல் டிரிங்க்ஸ் கம்பெனிக்கு எதிராய் படமும் நடித்தான். படம் கோடிக்கணக்கில் பிசினஸ் ஆச்சு. கோடி ரூபாய்க்கு கார் வாங்கி குஷியாய்ச் செல்கிறான். கூல்டிரிங்க்ஸ் குடித்தவர்களோ உடலைக் கெடுத்துக் கொண்டார்கள்.

ஸ்டைல் என்ற பெயரில் பெரிய புற்று நோய்க் கூட்டத்தையே உண்டாக்கினான் ஒரு கிழட்டு நரி ஹீரோ. வயதானாலும் மகள் வயதே கொண்ட சின்னஞ்சிறுப் பெண்களுடன் ஹீரோ வேஷம் கட்டுவான். அப்பெண்களின் காலை விரித்து காட்டுவான். 

இவனையெல்லாம் தலைவன் என்று அழைக்கும் முட்டாள் பயல்கள் கூட்டம் உண்டு. அதைப் படம் பிடித்துப் போட்டுக் காட்டும் மீடியா விபச்சாரக் கூட்டமும் ஒன்று இங்கே, நாங்கள் ஜனநாயகத்தின் நான்காவது தூண் என்றுச் சொல்லித் திரிகிறது. நாங்களெல்லாம் யோக்கியன்கள் என்று தர்மம் பேசுவான்கள். கேட்பதற்குக் கேணப்பயல்கள் இங்கு அனேகம் என்கிற போது வாயிலேயே வடையும் சுட்டு, ஊட்டியும் விடுகிறான்கள். ஒருத்தன் இன்னும் வாயில் வடைச் சுட்டுக் கொண்டே இருக்கிறான் இங்கே.

சோப்பிலிருந்து, உண்ணும் உணவிலிருந்து, பாத்ரூம் ஆசிட் வரையிலும் சினிமாக்காரன்கள் கூவிக் கூவி டிவியில் விற்றுக் கொண்டிருக்கின்றான்கள். நாமும் அவன்கள் சொல்வதைக் கேட்டு நாசமாய்ப் போய்க் கொண்டிருக்கிறோம்.

உணவு உண்பதைக் கூட சினிமாக்காரன் சொல்லித்தான் கேட்கும் அவல நிலையில் மனிதனின் ஆறாம் அறிவு உயர்ந்துள்ளது. நாகரீகமாம்.

* * *

 


இனி இட்லிக்கு வந்து விடுவோம்.

திருப்பூரின் மிகப் பெரிய நிறுவன இயக்குனரின் சகோதரர். வால்மார்ட்டின் பிசினஸ் பார்ட்னர். உலகெல்லாம் சுற்றிய பிசினஸ்மேன். உலகிற்கே அச்சுறுத்தலாய் (பீகாஸஸ் உளவு சாப்ட்வேரைச் சொன்னேன்) இருக்கும் இஸ்ரேல் ஜூயிகளுடன் பிசினஸ் செய்கிறவர். அரசியலில் செல்வாக்கு மிக்கவர். எனது இனிய நண்பர்.

என் வீட்டுக்கு வரும் போது பசி நேரமானால் இருவரும் சாப்பிடுவதுண்டு. ஒரு நாள் டிபன் சாப்பிடும் போது இரண்டு இட்லி போதுமென்றார். வற்புறுத்தினாலும் கேட்கவில்லை, வேண்டாமென்று மறுத்து விட்டார்.

* * *

ஒரு கதை சொல்லப் போகின்றேன்.

அந்த அம்மாவுக்கு ஆறு குழந்தைகள். கணவர் குமாஸ்தா. குறைவான வருமானம். சொந்த வீடு. 

வீட்டின் பின்னால் முருங்கை மரம், வாழை மரங்கள், கீரைகள், தக்காளிச் செடிகள், காய்கறிச் செடிகள் வளர்ப்பார். ஒவ்வொரு நாளும் தோட்டத்தில் கிடைக்கும் பொருளை வைத்து குழம்பு அத்துடன் ரசமும். 

முருங்கைக் கீரை, பூ, காய் சீசனுக்கு ஏற்றவாறு கிடைப்பவைகள் தான் குழம்பாகவோ, கூட்டாகவோ, பொறியலாகவோ செய்வார். கடைப் பக்கம் எட்டிக் கூடப் பார்ப்பதில்லை.

வாழை மரத்தில் கிடைக்கும் அத்தனையும் உணவாக சமைத்து விடுவார். 

அந்த வீட்டில் என்றைக்கும் ரசம் இருந்து கொண்டே இருக்கும். அத்துடன் மோரும் கூட.

ரசம் எப்போதுமே குறையாது. ரசம் குறையக் குறைய சுடு நீர் மற்றும் உப்புச் சேர்த்து விட்டால் மீண்டும் ரசம்.

மோர் சாட்டின் துணி போல அவ்வளவு வெண்மை. உணவில் தூய்மை. அம்மாவின் கைங்கரியத்தில். உபயம் தண்ணீர். கொசுறாக தோட்டத்தில் இருக்கும் கருவேப்பிலை, கொத்தமல்லி தாளிப்பு.

ஆறு குழந்தைகளுக்கு மூன்று நேரம் உணவு. பிற ஐந்து குழந்தைகளின் கனவைச் சிதைத்து முதல் குழந்தையின் கல்விப் படிப்புச் செலவு என கட்டுக் கோப்பாக  தன் குடும்பத்தை நடத்தினார் அந்த அம்மா.

முதல் பையனும் பெரியவனாகி படித்து வேலை கிடைத்து திருமணமும் ஆனது. கணக்குப் போடத் தெரிந்த அண்ணன், இதுகளுக்குச் சம்பாதித்துப் போட்டால் நடுத்தெருவென, வட்டிக் கணக்குப் பார்க்க தெரியாத அம்மாவுடன் வாய்ச்சண்டை போட்டுக் கொண்டு, தனிக்குடித்தனம் சென்றான்.

திடீரென அந்த அம்மாவுக்கு நோய் வந்து விட்டது. வைத்தியம் பார்த்தனர். கடைசிப் பையன் சிறு குழந்தை. அம்மாவின் அரவணைப்பும் அன்பும் கிடைக்கவில்லை. 

முதல் பண வசதி படைத்த அண்ணன் வீட்டுக்குச் சென்றான். அண்ணன் வீட்டின் சமையலறையின் அருகில் பத்து பேர் அமரும் உணவு மேஜை. 

காலையில் எட்டு மணிக்கு அண்ணன் அலுவலகம் செல்வார். இவனுக்கோ அரசுப் பள்ளிக்கூடம்.

இருவரும் சாப்பிட உட்காருவார்கள்.

கடைசித் தம்பி தட்டில் இரண்டு இட்லி மட்டுமே. அதை அண்ணனும் பார்த்துக் கொண்டுதான் சாப்பிடுவார். அவரின் வாய் உணவுக்கு மட்டுமே திறக்கும்.

எப்போதும் தோசையானாலும் இரண்டு. சப்பாத்தி என்றாலும் இரண்டு மட்டுமே.

அண்ணி தன் கடைசிக் கொழுந்தனிடம் எப்போதும் சொல்வது ”இது போதும்”

* * *

பல ஆயிரம் கோடிகளுக்கு அதிபதியான அவரின் அண்ணாவோ கொரானா காலத்தில் செத்துப்  போனார். சுடுகாட்டுக்கு  செல்ல பத்து பேர் கூட இல்லை. கொரானா கட்டுப்பாடு. விதி.

”அண்ணி படுக்கையில் கிடக்கிறார். எழுந்து நடக்க கூட முடியவில்லை. பாவமாக இருக்கிறது” என்றார் நண்பர்.

”பரிதாபப்படுகின்றீர்கள் நீங்கள், தர்மமும் அறமும் மிச்சம் மீதி வைக்காமல் திருப்பிக் கொடுக்கும் இயல்பு கொண்டவை” என்றேன் அவரிடம்.

 * * *

நேற்று ஹோட்டலில் காலை உணவுக்காக பேரரிடம் “இரண்டு இட்லி” என்றேன்.

”போதுமா சார்” என்றான்.

நண்பரின் முகம் தெரியா அண்ணி நினைவிலாடினார்.

* * *