குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label புறநானூறு. Show all posts
Showing posts with label புறநானூறு. Show all posts

Tuesday, November 26, 2024

மழையை வெறுக்கும் சென்னை மக்கள்

மனித குலத்திற்கு இயற்கை வழங்கிய ஓர் அடிப்படையான பொருள் தண்ணீர். பயிர்வளம், இயற்கைவளம், விலங்குவளம் என்பனவற்றைச் செழிக்கச் செய்வதுடன் மனிதனின் அன்றாடத் தேவையில் தவிர்க்க இயலாத ஒன்றாகத் தண்ணீர் இடம் பெற்றுள்ளது.

மழையின் வாயிலாகவும், ஆறுகளில் இருந்தும், நிலத்தினுள் இருந்தும் மனித சமூகம் நீரைப் பெற்று வருகிறது. இயற்கையாக ஓடும் காட்டோடைகளில் இருந்தும், ஆறுகளில் இருந்தும் மட்டுமே மனித சமூகம் தண்ணீரைப் பெற்று வந்தது. நீரைத் தேக்கிவைக்கவும், திசை திருப்பவும், பூமியின் உள்ளே இருந்து வெளிக் கொணரவும் படிப்படியாகக் கற்றறிந்தபோதுதான் மனிதசமூகம் வளர்ச்சி பெற்றது. இம்முயற்சியில் ஏற்பட்ட வெற்றியே சமூகத்திற்கு முன்னேற்றத்தை வழங்கியது. நாகரிகம், பண்பாடு என்பனவற்றை வளர்த்தெடுத்தது. உலகின் தொன்மையான நாகரிகங்கள் ஆற்றங்கரை நாகரிகங்களாகவே இருந்துள்ளன. 

பரிபாடலில் வையை ஆறும், சிலப்பதிகாரத்தில் காவிரி ஆறும் அழகுற இடம்பெற்றுள்ளன. 

‘கான்யாறு’ ‘விரிபுனல்’ என்று ஆறுகளுக்குப் பெயரிட்டனர். 

தன்போக்கில் ஓடிக்கொண்டிருக்கும் நீரைத் தேக்கி வைக்கும் முறை தமிழக வரலாற்றில் பழமையான ஒன்று. 

இத்தகைய நீர்நிலைகள், குளம், இலஞ்சி, பொய்கை, ஏரி, வாவி, கூவல், குழி எனப் பல்வேறு பெயர்களில் பண்டைத் தமிழர்கள் அழைத்துள்ளனர். 

கிணறு வெட்டுதல் தொடர்பான நூல் ‘கூவநூல்’ எனப்பட்டது. இந்நூல் படித்து பயிற்சி பெற்றோரை ‘கூவநூலோர்’எனப்பட்டனர். 

வேளாண்மைப் பெருக்கத்திற்கு, காடுகளை அழிப்பதும் குளங்களை வெட்டுவதும் அவசியமென பண்டைத் தமிழர்கள் அறிந்திருந்தனர்.


நிலன் நெளிமருங்கின் நீர்நிலை பெருகத்

தட்டோரம்ம இவன் தட்டோரே

தள்ளாதோர் இவண் தள்ளாதோரே  (புறநானூறு 28 - 30) 

எனப் புலவர் புலவியனார், பாண்டியன் நெடுஞ்செழியனைப் பாடியுள்ளார். 

நிலம் எங்கெங்கு பள்ளமாக இருக்கிறதோ அங்கெல்லாம் நீர் நிலைகள் அமையும்படி கரை அமைத்த மன்னர்களே இவ்வுலகில் என்றென்றும் அழியாப் புகழ்பெற்று விளங்குவர் என்பதாகும் இப்பாடலின் அர்த்தம்.


நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு 

எனத் திருக்குறளில் திருவள்ளுவரும் நீரின் முக்கியத்துவத்தை எடுத்து இயம்பியிருக்கிறார்.


பொய்யா எழிலி பெய்விட நோக்கி

முட்டைக் கொண்டு வற்புலஞ் சேரும்

சிறு நுண் ணெறும்பின் - (புறநானூறு 173)

என பாடலில் எறும்புகள் தம் முட்டைகளை எடுத்துக்கொண்டு சற்று மேட்டு நிலத்துக்குச் சென்றால் மழை பெய்யவுள்ளதாக பொருள் என மழை வரும் காலத்தைப் புறச்சூழலை வைத்து கணித்திருக்கிறார்கள்.


துய்அவிழ் பனிமலர் உதிர வீசித்

தொழின்மழை பொழிந்த பானாட் கங்குல்

எறிதரைத் திவலை தூஉம் சிறுகோட்டுப்

பெருங்குளம் காவலன் போல,

அருங்கடி அன்னையும் துயில் மறந்தனளே (அகநானூறு 252)

கடுமையான மழை பொழிந்து கொண்டிருக்கும் நடு இரவினிலே கூட தூங்காமல், பெரிய குளம் ஒன்று உடைபடாமல் பாதுகாத்துக் கொண்டிருக்கும் அதன் காவலன் போல, என்னை அன்னை பாதுகாத்து வருகிறாள்’ என தலைவி தனது இக்கட்டான நிலை குறித்து தோழி மூலம் தலைவனிடம் சொல்லுகிறாள் என அக நானூற்றுப் பாடலில் நக்கண்ணையார் என்ற புலவர் பாடியிருக்கிறார்.

இவ்வாறு அக வாழ்விலும், புறவாழ்விலும் கூட பண்டைய தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் மழை நீரானது பூமிக்கு உயிர் நீராகும். நீரின்றி ஒரு நாள் கூட மனிதனாலோ அல்லது பூமியில் இருக்கும் எந்த உயிரினமும் வாழவே முடியாது. எந்த ஒரு மனிதனும் மழையை வெறுக்கமாட்டான்.

மழை பெய்தால் தெருவில் ஓடி, நிறைந்து, வழிந்து செல்லும். சென்னையில் இருக்கும் குளங்களை எல்லாம் தூர்த்தும், நீர் வழிப் பாதைகளை எல்லாம் வழிமறித்து வீடு வாசல் கட்டி வைத்துக் கொள்கிறார்கள். அரசு அவர்களை வெளியேற்ற முயன்றால் போராட்டம், கலவரங்கள் செய்ய வேண்டியது. பெரும் பணக்காரர்களின் அதீத ஆசைக்குப் பலியாகி ஏரிகளை வீடுகளாக்கிக் கொண்டு வாழ்வதும் இவர்களே.

மழையே பெய்யக் கூடாது. அப்படியே பெய்தால் வீட்டுக்குள் வரவே கூடாது. தெருவில் நீர் செல்லவே கூடாது என்றெல்லாம் வீடியோ போட்டுக் கொண்டிருக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் குப்பைகளைக் கொட்ட வேண்டியது. நீர் வழிப் பாதைகளை அடைத்து விட வேண்டியது. மழை பெய்தால் அடைக்கத்தான் செய்யும்.  அய்யோ அரசு அப்படி செய்கிறது, கவனிக்கவே இல்லை எனக் கூப்பாடு போட வேண்டியது. 

சென்னை வாழ் மக்கள் மழைக்காலங்களில் போடும் மீம்ஸுகளும், மழையினைக் காரணம் காட்டி அரசையும், அரசு ஊழியர்களையும் கேவலமாகப் பேசுவதும், மழையை வெறுப்பதும் போன்ற செயலை எவரும் செய்ய மாட்டார்கள். ஆனால் சென்னையில் அதைச் செய்கிறார்கள். அரசியல்வியாதி பலதும் சொல்வான். கேட்பவர்களுக்கு புத்தி எங்கே போகிறது எனத் தெரியவில்லை. சோஷியல் மீடியா கூலிப்படையினரின் ஆட்டம் எழுத்தால் எழுத முடியவில்லை. வக்கிரம், ஆபாசம், தனி மனித தாக்குதல், உறவுத்தாக்குதல் என ஆட்டம் எல்லை மீறிப் போகிறது. இதற்கெல்லாம் ஒரு வழி வரத்தான் போகிறது. அப்போது பொய்களும், இணையக் கூலிப்படைகளின் ஆட்டமும் அடக்கப்படும்.

மழை என்பது கொடை. அதை வரவேற்று, அதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அதை விடுத்து மழையை அரசியல் ஆயுதமாகப் பயன்படுத்தும் கேவலமான பிறவிகளுடன் சேர்ந்து கொண்டு - மக்களும் மழையை வெறுத்தால் - நாளை நீரின்றி சென்னை அழிந்து போகும்.

மழையைக் கொண்டாடுங்கள். மழையை வரவேற்று மகிழுங்கள். நீர் வழிகளைச் சுத்தமாக வைத்துக் கொள்ளுங்கள். 

26.11.2024