பிஜேபியினர் ஆட்சியிலிருந்த போது தான் பொக்ரானில் அமெரிக்க கழுகின் பார்வைக்குச் சிக்காமல் அணுகுண்டு வெடிப்புச் சோதனை நடத்தினார்கள். நாடு முழுவதும் தங்க நாற்கரச் சாலைகளை போட்டனர். சாலைகள் எல்லாம் பட்டொளி வீசின. அதே போல மீண்டும் இந்தியாவில் பெரும் அணுகுண்டினை வெடித்திருக்கிறது பிஜேபி அரசாங்கம். இதற்கு என ஒரு தைரியம் வேண்டும். மிகச் சரியான அறிவிப்புதான் இது.
பலரும் பலவிதமான கருத்துக்களைச் சொல்கின்றனர். கருப்புப்பணம் ஒழியாது என்கிறார்கள். அதையெல்லாம் யோசிக்காமலா அரசாங்கத்தினர் இப்படி ஒரு அறிவிப்பினை வெளியிடுவார்கள்? ஒருவர் 10 கோடி ரூபாய் வைத்திருந்தால் வெறும் இருபத்தைந்து இலட்சம் செலவில் 10 கோடியை வெள்ளையாக மாற்றி விடலாம் என்று சொல்கின்றார்கள். பத்தாயிரம் ரூபாய் கொண்டு செல்கின்றார்கள் என்றாலே கொலை செய்கிறார்கள். கையிலிருந்து வெளியில் செல்லும் பணம் திரும்பவும் வருமா? அதுவும் கருப்புப் பணம்? என்றால் எவராவது மீண்டும் கொடுப்பார்களா? சாத்தியமே இல்லாதது.
500 பேரைத் திரட்டுவது அவர்கள் கையில் பணத்தைக் கொடுப்பது பின்னர் வாங்குவது எல்லாம் நடக்கும் காரியமா? பெரிய பணக்காரர்கள் வெளி நாட்டுக்கு பணத்தைக் கொண்டு சென்று விட்டார்கள் என்றால் திரும்பவும் இந்தியாவிற்கு அப்பணம் வெள்ளையாகத்தானே கொண்டு வரப்படும்? அவர்களுக்கு வேறு வழியே இல்லை.
அதுமட்டுமல்ல இனி வங்கியில் வாரம் இரு முறை 10000 ரூபாய் எடுக்கலாம். ஆக மாதம் 80,000 ரூபாய் எடுக்கலாம் என்று அறிவித்திருக்கின்றார்கள். இந்த அறிவிப்பின் காரணமாக அனைத்து பரிவர்த்தனைகளும் கார்டுகள் மூலம் நடக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பணமாக எந்த பரிவர்த்தனையும் நடக்கக்கூடிய சாத்தியங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து விட்டால் பெரும்பான்மையான கணக்கில் காட்டப்படாத பணம் வெளியில் வந்து விடும் என்று அரசு நினைக்கிறது. சரியான நினைப்புதான் என்று தோன்றுகிறது.
சமீபத்தில் வொயிட் பிளாக் டிரான்சாக்சனுக்கு டிரஸ்டுகளைப் பயன்படுத்தலாம் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். அதற்கு ஒரு ஆப்பினை செருகி விட்டார்கள். என்ன காரணத்திற்காக டிரஸ்டிலிருந்து பணம் வெளியில் கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற கேள்வியுடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது என்கிறார்கள். இனி டிரஸ்டுகள் ஒழுக்கமாக கணக்குகளைக் காட்டியே ஆக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. தகவல் அறியும் உரிமைச்சட்டம் மூலமாக பெரும்பான்மையான டிரஸ்ட் பரிவர்த்தனைகள் பொது வெளியில் வெளியான சம்பவங்களை நாம் கண்டிருக்கின்றோம்.
உடனடியாக கள்ள நோட்டுக்களை பிரிண்ட் செய்வார்கள் என்கிறார்கள். இதையெல்லாம் தடுக்கவே முடியாது. நடக்கத்தான் செய்யும். உடனடியாக எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்பதெல்லாம் நடக்காத விஷயம். மெல்ல மெல்ல மக்களை கட்டாயப்படுத்திட வேண்டிய வேலையை அரசாங்கம் செய்கிறது. பாரட்டத்தான் வேண்டும். அரசியல்வாதிகளும், ஊழல் பேர்வழிகளுக்கும் தான் பெரும் பிரச்சினை. இனி அக்கவுண்டில் பணம் கட்டினால் 200000 லட்சத்துக்கும் மேல் 200 சதவீதம் பெனால்டி போடுகின்றார்கள்.
ஒன்று பெனால்டி கட்டி, வரவு வந்தது எப்படி என்று கணக்குக் காட்ட வேண்டும். இல்லையென்றால் பணத்தை எரிக்க வேண்டும் அல்லது புதைக்க வேண்டும். இதைத்தவிர வேறு எதுவும் வழியே இல்லை. தங்கமாக மாற்றி விடலாம் என்றாலும் இனி அதற்கும் வழி இல்லை. தங்கம் ஒரு நாள் பணமாக மாற வேண்டும். அப்போது பிரச்சினை வரும்.
பணம் இருக்கின்றவர் பையன் டாக்டராகின்றான். இனி அதற்கு வழி இல்லாமல் போகும் என்று நம்பலாம். கோடிகளில் கணக்குக் காட்டாமல் வைத்திருப்பவன் தானே காசைக் கொடுத்து எல்லாவற்றையும் விலைக்கு வாங்கினான். இனி என்ன செய்வார்கள்?
இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு எத்தனையோ மக்கள் தங்கள் இன்னுயிரையே இழந்தார்கள். அதைப் போல இன்றைக்கு சாதாரண மக்கள்களுக்கு உண்டாகும் பிரச்சினைகளை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும். இந்தச் சாதாரண மக்களின் பணம் தான் அது. யாரோ ஒருவரிடம் கொட்டிக் கிடக்கிறது. இனி அது வெளியில் வந்தே ஆக வேண்டிய கட்டாயம். வந்தே தீர வேண்டும்.
தர்மம் நின்று கொல்லும். கொன்றே விடும்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.