குரு வாழ்க ! குருவே துணை !!

Wednesday, November 2, 2016

வார்த்தைகளின் வீரியம்

வெளி நாட்டில் படித்த தன் மகன் திரும்ப வந்ததும் தன் மருத்துவமனையை அவனிடம் ஒப்படைத்து விட்டு ஓய்வெடுக்க வேண்டுமென்று நினைத்தார் மருத்துவர். மகன் வந்ததும் அவனிடம் அனைத்தையும் ஒப்படைத்து விட்டு வீட்டில் அமைதியாக இருந்தார் மருத்துவர். ஒரு சில நாட்கள் கழிந்தன. 

மகன் தன் தந்தையிடம் வந்து, ‘அப்பா, நீங்கள் எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்து  கடந்த வாரம் வரை ஒரு பெண்ணுக்கு தொடர்ந்து வைத்தியம் பார்த்து வந்தீர்கள் அல்லவா? அந்தப் பெண்ணின் நோயை நான் மூன்றே நாட்களில் சரி செய்து விட்டேன்’ என்றான். அப்பாவை விட தனக்குத் திறமை அதிகம் என்ற பெருமையில் அவன் தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான்.

மருத்துவர் அவனை நோக்கி நகைத்தார்.

‘மகனே, அந்தப் பெண்ணின் நோயை நான் ஒரே நாளில் சரி செய்து இருப்பேன். ஆனால் செய்யவில்லை. நீ வெளி நாட்டில் படித்தது, இந்த எனது வீடு, கார், நாம் வாழும் வாழ்க்கை எல்லாம் அந்தப் பெண்ணின் பணம்’ என்றார்.

மகனுக்கு விஷயம் விளங்கியது.

‘அப்பா, அந்தப் பெண்ணை வரச் சொல்லி ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும், ரிப்போர்ட்டில் ஒரு பிரச்சினை என்றுச் சொல்லி விடுகிறேன். இரண்டு நாட்கள் கழித்து வரச் சொன்னால் அந்தப் பயத்திலேயே அந்தப் பெண்மணி நடுங்கி விடுவாள்’ என்றான்.

மருத்துவர் தன் மகனை அருகில் அழைத்துச் சொன்னார், ’மருத்துவ தர்மத்தைப் புரிந்து கொண்டாய்’ என்று.

உலக மெடிக்கல் கவுன்சிலுக்கு இந்திய மெடிக்கல் கவுன்சிலில் ஊழல் செய்ததாய் கைது செய்யப்பட்டு வழக்கு நடந்து கொண்டிருக்கும் கேத்தன் சேதாய் தலைவராக்கப்பட்டிருப்பதை நினைத்த போது எங்கோ படித்த கதை நினைவுக்கு வந்து விட்டது.

மருத்துவர் அந்தப் பெண்மணியின் வசதியைப் பயன்படுத்திக் கொண்டார். அதனால் அவர் தன்னை வளப்படுத்திக் கொண்டார். அவர் மகனோ அவருக்கும் ஒரு படி மேல். நோயாளியிடம் மருத்துவர் சொல்வது ஒவ்வொன்றும் சத்தியமாக நம்பப்படும். யாரிடம் எந்த வார்த்தையைச் சொல்ல வேண்டும் என்று விவரம் தெரிந்த மருத்துவர்கள் சொல்வார்கள்.

நன்றாக இருக்கும் ஒருவரைப் பார்த்து, ’என்ன ஆள் இப்படி ஆகி விட்டீரே, சுகரா? பிரஷர் இருக்குமோ? என்று சும்மா கேட்டு வையுங்கள்’. அவனுக்குத் தூக்கம் வருமா? நிம்மதியாகத்தான் இருப்பானா? 

ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒவ்வொரு சக்தி இருக்கிறது என்பதை நீங்கள் நம்ப வேண்டும். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.