குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, November 4, 2016

யாருக்கும் தகுதியில்லை

தம் காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தார் பாகவதர். வழியில் ஒரு சிற்றூர். அதைக் கடந்து வரும்போது ரயில்வே கேட் ஒன்று குறுக்கிடவே பாகவதரின் கார் நின்றது.

யாரோ ஒரு கட்டை வண்டிக்காரன்; அருகிலிருந்த காட்டிலிருந்து விறகு வெட்டி எடுத்துக் கொண்டு அந்த வழியே வந்து கொண்டிருந்தான்.

“ஆஹா, என்ன பேரானந்தம்!”

பாகவதரின் பாட்டுத்தான். ஆனால் பாடியவர் பாகவதர் அல்ல; கட்டை வண்டிக்காரன்.

காருக்கு வெளியே தலையை நீட்டி அவனைப் பார்த்தார் பாகவதர். அவ்வளவுதான்.; “சாமி, நீங்களா?” என்று வாயெல்லாம் பல்லாகச் சொல்லிக் கொண்டே அவன் வண்டியை நிறுத்தி விட்டுக் கீழே இறங்கினான்.”எத்தனையோ நாளா என் சாமியைப் பார்க்கணும்னு நான் நெனச்சிக்கிட்டு இருந்தேன்? - இன்னிக்குப் பார்த்துட்டேன் சாமி, என் கண் குளிரப் பார்த்துட்டேன் - இருங்க - சாமி! இன்னிக்கு என் கையாலே ஒரு சோடாவாச்சும் வாங்கிக் சாப்பிடாமே நீங்க இங்கேயிருந்து போகக்கூடாது - ஆமாம்!” என்று படுகறாராகச் சொல்லிக் கொண்டே அவன் அங்குமிங்கும் ஓடினான். எங்கிருந்தோ ஒரு கோலிச் சோடாவை வாங்கிக் கொண்டு அவசரம் அவசரமாக வந்து அவரிடம் நீட்டினான்.

“அவரு இந்தச் சோடாவையெல்லாம் குடிக்கமாட்டாரு ஐயா!” என்றார் டிரைவர்.

“இங்கே சோடாவா பெரிது, அதைக் கொடுக்கும் அன்புக் கையல்லவா பெரிது!” என்று சொல்லிக் கொண்டே பாகவதர் காரை விட்டுக் கீழே இறங்கி, வண்டிக்காரன் கொடுத்த சோடாவை இரு கைகளாலும் வாங்கி, ‘மடக், மடக்’ கென்று குடித்தார்.

பரம திருப்தி வண்டிக்காரனுக்கு; ‘ஆஹா, என்ன பேரானந்தம்!” என்று அவன் மறுபடியும் பாடவே ஆரம்பித்து விட்டான்.

அதற்குள் ‘கூகுக்’ என்று கூவிக் கொண்டு ரயில் வந்து விடவே, டிரைவர் காரைக் கிளப்ப முயன்றார். என்ன ஆச்சரியம்! பாகவதரைத் தம் பெட்டியிலிருந்தபடி எப்படியோ பார்த்து விட்ட ‘கார்டு’ சிவப்புக்கொடி காட்டி ரயிலை நிறுத்தி விட்டு, “ஆஹா. என்ன பேரானந்தம்!” என்றார்.

அதைக் கேட்ட பாகவதரின் கண்களில் உணர்ச்சிப் பெருக்கால் நீரே துளிர்த்து விட்டது. ”நீங்களெல்லாம் என்னிடம் இத்தனை அன்புகாட்ட உங்களுக்கு நான் என்ன செய்து விட்டேன்? என்ன செய்யப்போகிறேன்?” என்று கரம் குவித்தார்.

”ஒன்றும் செய்ய வேண்டாம், நீங்கள் ஆனந்தமாகப் பாடிக்கொண்டே இருங்கள்; நாங்கள் ஆனந்தமாகக் கேட்டுக் கொண்டே இருக்கிறோம்!” என்ற ’கார்டு’ பச்சைக்கொடி காட்டி ரயிலை அங்கிருந்து நகர்த்தினார்.

விந்தன் எழுதிய எம்.கே.தியாகராஜ பாகவதரின் வாழ்க்கை புத்தகத்திலிருந்து ஒரு சிறு துளி மேலே உள்ளது. இப்படியான ஒரு அன்பினை பெற்ற இறவா நடிகர் அல்லவா எம்.கே.டி அவர்கள்?


அசோக்குமார் படத்தில் எம்.கே.டி பாகவதரால் பாடப்பட்ட அருமையான பாடல் இது. இதில் இரண்டு வரியைத் தொடர்ந்தாற் போல இன்றைக்கு சினிமாவில் பாடுபவர்களால் பாடமுடியுமா? இந்தக் குரல் நம் மனதுக்குள் புகுந்து வரும் போது உண்டாகும் உணர்ச்சியினை வார்த்தைகளால் எழுதி விட முடியுமா? அமைதியாக அமர்ந்து இப்பாடலைக் கேளுங்கள். அது உங்களுக்குள் நிகழ்த்தும் வர்ண ஜாலங்களைப் புரிந்து கொள்வீர்கள்.

உலகில் நல்லவனாய் வாழ்வதை விட வேறு என்ன சந்தோஷம் மனிதனுக்கு இருக்கப்போகின்றது?

இதோ பாடல் வரிகள்:

பூமியில் மானிட ஜென்மம டைந்துமோர்
புண்ணியம் இன்றிவி லங்குகள்போல்
காமமும் கோபமும் உள்ளநி ரம்பவீண்
காலமும் செல்லம டிந்திடப்போம்

உத்தம மானிட ராய்பெரும் புண்ணிய
நல்வினை யால்உல கில்பிறந்தோம்
சத்திய ஞானத யாநிதி யாகிய
புத்தரைப் போற்றுதல் நம்கடனே

உண்மையும் ஆருயிர் அன்பும கிம்சையும்
இல்லையெ னில்நர ஜென்மமிதே
மண்மீதி லோர்சுமை யேபொதி தாங்கிய
பாழ்மர மேவெறும் பாமரமே

பாடல் ஆசிரியர்: பாபநாசம் சிவன்
பாடகர்: எம்.கே. தியாகராஜ பாகவதர்
திரைப்படம்: அசோக்குமார்


நவம்பர் ஒன்றாம் தேதி மக்களால் நேசிக்கப்பட்ட தியாகராஜ பாகவதரின் நினைவு நாள்.

தமிழகத்தில் நடிகர்களுக்கு என்று ஒரு சங்கம் இருக்கிறது. குழாயடிச் சண்டை கூட நடந்தது. அதையும் டிவிக்காரர்கள் பரபரப்பாக்கினார்கள். அந்தக் கூத்தையெல்லாம் நாம் பார்த்துக் கொண்டிருந்தோம். கூத்து முடிந்து நடிகர்கள் தலைமைப் பொறுப்புக்கும் வந்து விட்டார்கள். ஆனால் வந்ததும் பிரச்சினை ஆரம்பித்து விட்டது.

பழைய நடிகர்களைக் கவுரவிக்கிறோம் என்றெல்லாம் அட்ராசிட்டி செய்தவர்கள் தியாகராஜ பாகவதருக்கு நினைவு அஞ்சலியைக் கூட நடத்தவில்லை. தமிழக மக்களின் மனத்தில் தங்க நாற்காலியில் அமர்ந்து தமிழ் சினிமா உலகையே அசைத்து விட்டுச் சென்ற மாபெரும் கலைஞனுக்கு மரியாதை செலுத்தக் கூட மறந்து விட்டார்கள்.

ஆனால் பாகவதருக்கு அவரின் ரசிகர் செலுத்திய உண்மையான அஞ்சலியை விடவா இவர்கள் செய்து விடப்போகின்றார்கள்? 72 வயதான் பழைய புத்தகக்கடை வைத்து நடத்தி வரும் ஸ்ரீரங்கம் நடராஜன் அவர்கள் தன் ஆதர்ச நாயகனுக்கு திருச்சியில் அமைந்துள்ள சமாதியின் அருகில் அமர்ந்து, தியாகராஜ பாகவதர்  பாடிய பாடல்களைப் பாடியபடியே அஞ்சலி செலுத்தினார் என்று தினமலர் செய்தி வெளியிட்டிருந்தது. பாகவதரின் உறவினர்கள் நினைவு நாள் கொண்டாடுவது வேறு. ஆனால் ஒரு ரசிகன் தன்னால் ரசிக்கப்பட்ட நாயகனின் நினைவினால் சமாதியின் அருகில் நின்று பாடலைப் பாடியபடி அஞ்சலி செலுத்துவது என்பது சாமானியமானதா?

எத்தனையோ ஹீரோக்கள் வந்து சென்றார்களே இப்படி ஒரு அஞ்சலி நிகழ்ச்சியைப் பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோமா? இல்லையே ஏனென்றால் வெகு கவனமாக தன் தந்தையர்களால் தயாரிக்கப்பட்ட ஹீரோக்களும், உறவுகளால் பீடிக்கப்பட்டு மூடப்பட்டு கிடக்கும் தமிழ் சினிமா உலகில் இருப்போர் பாகவதருக்கு அஞ்சலி செலுத்தக்கூட தகுதியில்லாமல் போனார்கள் என்பது தான் நெஞ்சில் அறையும் உண்மை.

கொடுத்த வாக்கைக் காப்பாற்றும் எம் தமிழ் மூதாதையர்கள் வாழ்ந்த நாட்களில் வாழ்ந்து அவர்களின் மனதில் இன்றைக்கும் இறவாது வாழ்ந்து வரும் எம்.கே.டி அவர்களுக்கு ஏதோ என்னாலியன்ற ஒரு சிறிய அஞ்சலி.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.