குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மாரிமுத்து திரையரங்கம். Show all posts
Showing posts with label மாரிமுத்து திரையரங்கம். Show all posts

Sunday, November 6, 2016

மாரிமுத்து திரையரங்க நினைவலைகள்

பிறந்து வளர்ந்த ஊர் ஆவணம். ஆனால் என் தகப்பனார் ஊர் நெடுவாசல். உறவினர் பிரச்சினைகளால் அடியேனால் மாமா வீட்டில் தான் பிறந்து வளர முடிந்தது. ஆவணத்தில் முக்கியமான இரண்டு தெருக்கள் இருக்கின்றன. ஒன்று வடக்குத் தெரு, மற்றொன்று தெற்குத் தெரு. இந்த தெருக்கள் பகுதியில் தான் பெரும்பான்மையான தேவர் இன மக்கள் வாழ்கின்றார்கள். மேலத்தெருவில் முஸ்லிம் மக்கள் அதிகம். ஊரின் கிழக்கே வயல்களும் மேற்கே தோட்டங்களும் உள்ளன. ஊரின் மேற்கே கைகாட்டியின் அருகில் உள்ள அரசு முந்திரித் தோப்பு இருந்தது. இப்போது இருக்கிறதா எனத் தெரியவில்லை.

ஊரின் வடக்கே மாரிமுத்து திரையரங்கம் ஒன்று இருந்தது. எனது பள்ளித் தோழன் மாரிமுத்துவின் உறவினர் அவர்கள் தான் உரிமையாளர். தெற்கு வடக்கு நீளமான கொட்டகை. இடது பக்கம் பஜ்ஜிக்கடை. வலது பக்கம் டிக்கெட் கவுண்டர். இடது பக்கமாய் பெண்களுக்கான டிக்கெட் கவுண்டர் இருக்கும். சைக்கிள் ஸ்டாண்டு வெளியில் உள்ள கொட்டகைக்குள் இருக்கும். கைகாட்டியில் ஸ்டார் தியேட்டர் இருந்தது. ஆனால் அதன் சத்தம் சகிக்காது. மாரிமுத்து தியேட்டரில் சவுண்ட் வெகு துல்லியம். கைகாட்டியில் தங்கம் தியேட்டர் என்று நினைக்கிறேன். அது ஒரு நாள் லாரியில் வைக்கோல் ஏற்றிச் சென்ற போது கரண்டுக் கம்பியில் உரசி தீப்பற்றியதும், லாரி டிரைவர் நேராக அந்த தங்கம் தியேட்டருக்குள் கொண்டு போய் நிறுத்தி விட்டு ஓடி விட்டான். தங்கம் தியேட்டர் முற்றிலுமாக எரிந்து சாம்பலானது. நல்லவேளை மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. கொஞ்ச நாள் கரியும் கட்டையுமாக தொங்கிக் கொண்டிருந்தது. அதன் பிறகு சிமெண்ட் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் கைகாட்டி ஸ்டார் தியேட்டர்.





( நன்றி படங்கள் உதவி : கடல் பயணங்கள் சுரேஷ்குமார்)

மாரிமுத்து தியேட்டருக்குள் மூன்று இருக்கை பகுதிகள் இருந்தன. திரையின் முன்பு மண் கொட்டியிருக்கும். அடுத்து பெஞ்ச், அதை அடுத்து மரச்சேர்கள் போடப்பட்டிருக்கும். அடியேன் அம்மாவுடன் எம்.ஜி.ஆர் படம் பார்க்க சிறு வயதில் செல்வதுண்டு. சண்டைக்காட்சிகள் என்றால் எதிரில் அமர்ந்திருக்கும் பெண்களின் முதுகில் நானும் எம்.ஜி.ஆராகி குத்துக்கள் விடுவேன் என்று அம்மா அடிக்கடி சொல்வார்கள். சிவாஜி படம் பார்க்கப் போவார்கள். அழுக்காட்சி என்றால் எனக்கு அலர்ஜி. இதெல்லாம் அம்மா  சொல்லித்தான் தெரியும். நினைவில் இல்லை. அம்மாவுக்கு எந்த நடிகரின் படம் பிடிக்கும் என்று இதுவரையிலும் கேட்டதில்லை. 

வயலில் வேலை செய்பவர்களும், உழைப்பாளிகளும், சம்சாரிகளும் சற்றே ஆசுவாசப்படும் இடமாக மாரிமுத்து திரையரங்கம் இருந்தது. மண்ணில் துண்டை விரித்து தலையணை போலச் செய்து திரையின் முன்பாகப் படுத்துக் கொண்டே பலரும் திரைப்படத்தைப் பார்ப்பதை பார்த்திருக்கிறேன். நல்ல படமாக இருக்க வேண்டும். குடும்பத்தோடு செல்ல வேண்டும். அப்போதுதான் திரைப்படம் பார்க்க முடியும். தனியாக செல்ல வாய்ப்பே இல்லை. மாரிமுத்து திரையரங்கில் உள்ள டிஃபன் கடையின் முறுக்கு, இட்லி ரொம்பப் பிரபலம். சுவை அள்ளும். இரண்டு மாதங்களுக்கு ஒரு தடவை அந்த பாக்கியம் கிட்டும். ஒரு திரைப்படம் சுமாராக ஒரு மாதமாவது ஓடும். இரண்டு காட்சிகளுக்கும் ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள்.

தீபாவளி சமயத்தில் மதியம் போல ஜில்மா படம் போடுவார்கள். ஊரில் இருக்கும் உறவினர்கள் ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரியாதவாறு ரகசியமாகச் சென்று வருவார்கள். பொங்கல் நாளில் கூட்டம் அள்ளும். தினமும் ஐந்தே முக்கால் மணிக்கு பாடல்கள் ஒலிக்க ஆரம்பிக்கும். தியேட்டர்காரர்களும் திரையிடப்படும் படங்களின் பாடல்களை ஸ்பீக்கரில் பாட விடுவார்கள். மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தியேட்டர் நோக்கி விரைவார்கள். மாரிமுத்து திரையரங்கை தொட்டு தூண்டிக்காரன் கோவில், சிவன் கோவில், துர்க்கை அம்மன் கோவில், பெரியகுளம் இருக்கும். மழைக்காலங்களில் தவளையின் சத்தமும், குளிரும் வாட்டும். விழா நாட்களில் நான்கு காட்சிகள் நடைபெறும். சுற்றிலும் படுதாவை இழுத்து விட்டுக் கொண்டு படம் பார்ப்பதுண்டு. பள்ளிக்கூடத்தில் ஏதாவது சிறுவர் படங்கள் வந்தால் அழைத்துச் செல்வார்கள். அப்போது தான் மேட்னி ஷோ பார்க்க முடியும்.

எனக்குத் திருமணமான புதிதில் தியேட்டர் வேலை செய்து கொண்டிருந்தது. அதை விலைக்கு வாங்கி நடத்தலாம் என்ற முயற்சி கூட செய்தேன். ஆனால் முடியவில்லை. டிஃபன் கடை வைத்திருந்த ஒரு நபர் செய்த உட்சதியால் அது நடைபெறாமல் போயிற்று. திருமணம் முடிந்த கையோடு தியேட்டரை வாங்கி ஊரிலேயே தொழில் செய்து பிழைத்துக் கொள்ளலாம் என்று நினைப்பில் பல்வேறு கட்ட முயற்சிகளைச் செய்தேன். நடக்கவில்லை. ஆளாகி விட்டான் என்றால் சகித்துக் கொள்ளமுடியாது அல்லவா? ஆகவே என்னென்ன சதிகள் செய்ய வேண்டுமோ அத்தனையும் செய்தார்கள் அப்போது. நான் திருமணம் செய்து கொண்டதே என்னை அறிந்தப் பலருக்கு இதயத்தில் ஊசியைச் செருகியது போல இருந்தது என்று என் நண்பன் ஒருவன் அடிக்கடிச் சொல்லிக் கொண்டிருப்பான். இப்போது அது கயிறு திரிக்கும் இடமாக மாறி விட்டது. ஊருக்குச் சென்றிருந்த போது அந்த தியேட்டரில் படம் பார்த்த நினைவுகள் மேகமாய் கவிழ்ந்து கொண்டன.

மண்ணைக் குவித்து அதன் மீது சிம்மாசனமாய் உட்கார்ந்து திரைப்படம் பார்ப்பது என்பது அன்றைய காலத்தில் எனக்கு எந்தளவு மகிழ்ச்சியைத் தந்தது என்று சொல்ல முடியவில்லை. அந்தச் சந்தோஷமும், மகிழ்ச்சியும் இன்றைக்கு எந்த தியேட்டரில் படம் பார்த்தாலும் கிடைக்கவில்லை. காலம் மனிதனின் சந்தோஷங்களை கொஞ்சம் கொஞ்சமாக தனக்குள் இழுத்துக் கொண்டு விடுகிறது. 

இனி மாரிமுத்து திரையரங்கத்தை காண முடியாது. அதன் நினைவுகள் மட்டும் என்னுடன் கூடவே பயணிக்கின்றன. இனி அது உங்களுடன் கூட பயணிக்கும் என நினைக்கிறேன். நீங்களும் ஏதோ ஒரு திரையரங்கத்தில் என்னைப் போலவே படம் பார்த்திருப்பீர்கள். அந்த நினைவுகளை விட சுகமானது இனி நமக்கு வாய்க்கப்போவதில்லை.

குறிப்பு: டெண்ட் கொட்டகை சினிமா பற்றி கடல்பயணங்களில் சுரேஷ் குமார் எழுதி இருக்கிறார். அவரின் பதிவில் இருந்து சில படங்களை இங்கு லிங்க் கொடுத்திருக்கிறேன். அவரின் பதிவைப் படித்துப் பாருங்கள். நிச்சயம் நீங்கள் சிறுபிள்ளையாகவே மாறி விடுவீர்கள்.