குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அலோபதி. Show all posts
Showing posts with label அலோபதி. Show all posts

Monday, November 7, 2016

குருவியா பனம்பழமா புரியவில்லை

நான்கைந்து நாட்களுக்கு முன்பு திடீரென்று கிர்ரென்று வந்தது. இடது பக்கமாக தள்ளியது. என்னடா இது சோதனை? என்று நினைத்துக் கொண்டு பிரஷர், சுகர் டெஸ்ட் எடுத்தால் எல்லாம் சரியாக இருந்தது. பித்தம் அதிகமாகி இருக்கும் என நினைத்தேன். தீபாவளி பலகாரம் எதையும் சாப்பிடவில்லை. 

எண்ணெய் பலகாரங்களை சுத்தமாக நிறுத்தி விட்டேன். பால், டீ, காஃபி எதுவும் இல்லை. மட்டன், சிக்கன், மீன் இப்படி எந்த உயிரினத்தையும் கொன்று தின்பதையும் நிறுத்தி விட்டேன். முட்டை என்றாலே வாந்தி வருகிறது. 

இரண்டு கோப்பை காய்கறிகள், உப்புக் குறைவான சாப்பாடு, வடித்த சோறு, வேக வைத்த காய்கறிகள், பழங்கள், கீரைகள், பருப்புகள் என்று சைவ விலங்கு போல உணவினை எடுத்து வருகிறேன். பின் ஏன் இந்த தலை சுற்றல் வந்தது? காரணம் புரியாமல் எரிச்சலும் பதட்டமும் உண்டானது. பித்தம் தான் காரணம் என்று என் நண்பர் சொன்னார். தீபாவளிப் பலகாரங்கள் சாப்பிட்டிருப்பாய். மசாலா அயிட்டங்களை வெளுத்திருப்பாய். ஆகையால் இது பித்தமாகத்தான் இருக்கும் என்று சொல்லி மருத்துவரைப்பார் என்றார். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. நான் என்ன சாப்பிட்டேன் என்று எனக்கல்லவா தெரியும்? 

மருத்துவ நண்பரை அழைத்து பேசினேன். அவர் ஒரு மாதமாக நடந்த விஷயங்களை ஒன்றைக்கூட மறைக்காமல் சொல்ல வேண்டும் என்ற கட்டளையுடன் ஆரம்பித்தார். கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நீர் கோர்த்துக் கொண்டு கனகனவென வந்தது. முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து சரி செய்தேன். ஆனால் சளி உடம்பை விட்டு போகவில்லை. தொண்டையிலும் மூக்கிலுமாக அவ்வப்போது வெளி வந்து கொண்டிருந்தது. 

மருத்துவர் உடனடியாக காரணத்தைப் புரிந்து கொண்டு சளி காதுக்கருகில் இருக்கும் நரம்பினைப் பாதித்திருக்கும். அதனால் இந்த தலைசுற்றல் வந்திருக்கும் என்றும், பித்தமாக இருக்க அடியேன் நண்பர் வீட்டிலிருந்து வந்த நாட்டு முருங்கைக்காயை உண்டதால் இருக்கும் என்றும் சொன்னார். மருந்து கொடுத்தனுப்பினார். 

மூன்று நாட்களாக படாதபாடுபட்டேன். படிக்க முடியவில்லை. எழுத முடியவில்லை. யாரிடமும் சரியாகக் கூட பேச முடியவில்லை. டாக்டர் கொடுத்த மருந்தினை உட்கொள்ள கொஞ்சம் கொஞ்சமாக சரியானது. இதோ இன்றைக்கு எந்த தலைசுற்றலும் இன்றி கணிணியில் அமர்ந்து விட்டேன். முழுவதும் குணம் தெரியவில்லை. ஆனால் குணமாகி விடும் என்ற நம்பிக்கை.

அலோபதி மருத்துவரிடம் சென்றால் உணவு மற்றும் இன்ன பிற பழக்க வழக்கங்களை விசாரித்து மருந்து கொடுப்பார். சித்த மருத்துவரிடம் சென்றால் கர்மா, பாவம், புண்ணியங்கள் அதன் வரவுகள் செலவுகள் பற்றியெல்லாம் சொல்லி மருந்து கொடுப்பார். எதைத்தான் நம்புவதோ தெரியவில்லை. ஒவ்வொருவர் உடம்பும் ஒவ்வொரு விதம். நோயும் அந்தந்த உடம்புக்கு தகுந்தவாறு தான் சரியாகும். ஆனால் எவரும் இதைப் புரிந்து கொள்வதில்லை. இணையத்தில் கொட்டிக் கிடக்கும் வைத்தியங்களைச் செய்ய ஆரம்பித்தால் சின்னாபின்னமாகி விடும். இணையவெளி மருத்துவக் குறிப்புகள் நோயை அடையாளம் காணவும், அதைக் குணப்படுத்தும் வழிகளைத் தெரிந்து கொள்ளவும் தான் உதவும். முழுக் குணமடைய தகுந்த வைத்தியத்தைச் செய்து ஆக வேண்டும்.

நேற்று திடீரென்று தூதுவளைக் கீரை கிடைத்தது. ரசம் வைத்துக் கொடுத்தார் மனையாள். சாதத்தோடு கொஞ்சமும், தனியாக கொஞ்சமுமாகச் சாப்பிட்டேன். இன்றைக்குப் பரவாயில்லை போல இருக்கிறது. மாத்திரையாலா தூதுவளை ரசத்தாலா என்று பெரிய குழப்பமாகி விட்டது. குருவி உட்கார பனம்பழம் விழுந்ததா? இல்லை பனம்பழம் விழும் போது குருவி உட்கார்ந்ததா என்று தான் தெரியவில்லை.