2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ம் தேதி - காலை நேரம் - கோவை இரயில்வே ஸ்டேஷன் அருகில் இருக்கும் ராயல் தியேட்டருக்கு ஒரு வேலை நிமித்தமாகச் சென்றிருந்தேன். அங்கு தான் திரு.ரத்னவேல் அய்யாவை முதன் முதலில் பார்த்தேன்.
(திரு.ரத்னவேல் அய்யா)
கீழே இருக்கும் வீடியோவைப் பாருங்கள்.
அடியேன் பிறந்தது ஆவணம் கிராமத்தில் என்பதால் எனக்குத் தெரிந்த தியேட்டர்கள் - வீட்டுக்கு வடக்குப் பக்கமாக - மாலையில் ஒலிபெருக்கியில் பாட்டுப் போட்டால், கேட்கும் தூரத்தில் இருந்த மாரிமுத்து திரையரங்கம் (ஆவணம்) இது ஒரு டூரிங்க் டாக்கீஸ்.
வீட்டிலிருந்து ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் தெற்குப் பக்கமாக ஆவணம் கைகாட்டியில் இருந்த ஸ்டார் தியேட்டர்.
அடுத்தாக மேற்குப் பக்கமாக வடகாடு தங்கம் தியேட்டர், கிழக்குப் பக்கமாக திருச்சிற்றம்பலத்தில் ஒரு தியேட்டர். பெயர் மறந்து விட்டது.
பெரிய தியேட்டர் என்றால் கீரமங்கலத்தில் இருந்தது. அடுத்துப் பேராவூரணி, பட்டுக்கோட்டை, தஞ்சாவூர் சாந்தி தியேட்டர்.
இப்படி ஊரைச் சுற்றிலுமிருந்த தியேட்டர்களில் தீபாவளி, பொங்கல் போன்ற நாட்களில் படம் பார்த்தது உண்டு. நண்பன் ஜஹாங்கீர் ஆலத்தின் வீட்டில் வீடியோ டெக் வந்து விட்டதால் - டிவியில் படம் பார்த்துக் கொள்வதுடன் தியேட்டரில் படம் பார்ப்பது ஓய்ந்தது.
ஒர் இரவில் இரண்டாம் ஆட்டம் பார்க்க நானும், ஜஹாங்கீரும் கைகாட்டி ஸ்டார் தியேட்டருக்குச் சென்றோம். நான் மாடியில் உட்கார்ந்து கேப்டன் பிரபாகாரன் படம் பார்த்துக் கொண்டிருந்தேன். கொஞ்ச நேரத்தில் அவனைக் காணோம். படம் முடிவதற்குள் வந்து விட்டான். அவனின் ஒரு சில நண்பர்கள் அவனுக்கு பல முட்டுச் சந்து வழிகளைக் காட்டி, அப்பாதையில் சென்று - ஒருவழியாக மேலே போய் விட்டான்.
தியேட்டர்களுடனான எனது வாழ்க்கை இப்படித்தான் இருந்தது.
நமது தமிழ்நாட்டின் தலையெழுத்து தியேட்டர்களின் மூலமாக துவங்கப்பட்டது என்ற அறிவெல்லாம் எனக்கு அந்த வயதில் கிடையாது.
அனுபவமும், கொஞ்சூண்டு அறிவும் வந்த பின்னால் தான் தெரிந்தது - தியேட்டர்கள் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கால் பாகத்தை விழுங்கிக் கொண்டிருப்பது. அதுதான் தலைவர்களைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல் களமாக இருக்கிறது என்பதும்.
எம்.ஏ.குருசாமி நாடார், சின்னதாயம்மாள் ஆகியோரால் 1946 ஆம் ஆண்டுகளில் ஆரம்பிக்கப்பட்டது இந்த ராயல் தியேட்டர். ஆரம்பத்தில் இது நாடகம் நடத்தும் தியேட்டராக இருந்தது என அய்யா என்னிடம் சொன்னார். தியேட்டரின் கீழே ஒரு பகுதியாம் அது. மேலே தியேட்டர் எனச் சொன்னார். என்னால் மூடிகிடந்த தியேட்டருக்குள் செல்ல முடியவில்லை. ரித்திக் நந்தா உள்ளே சென்று பார்த்து விட்டு வந்தான். இடிபாடுகளுடன் குடோனாக இருந்தது அந்த தியேட்டர். அய்யா அவர்கள் வெற்றி விழா கொண்டாடப்பட்ட பல படங்களில் ஷீல்டுகளை ரித்திக்கை எடுத்து வரச் சொல்லி காட்டினார். பெரிய பிரமிப்பாக இருந்தது. எந்தக் காலத்திலோ மக்களால் கொண்டாடப்பட்ட நடிகர்கள் கலந்து கொண்டு வழங்கப்பட்ட ஷீல்டுகள் அவை. அவைகளை நான் தொட்டுப் பார்ப்பேன் என நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை.
அய்யாவின் அப்பா ராயல் தியேட்டர் மட்டும் ஆரம்பிக்கவில்லை, அத்துடன் ராயல் ஹிந்து ரெஸ்டாரெண்ட் ஒன்றினையும் ஆரம்பித்திருக்கிறார்கள். தற்போது ஆர்.எச்.ஆர் ஹோட்டல். ரத்னவேல் மற்றும் மாணிக்கவேல் ஆகிய இரு சகோதரர்களால் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது ராயல் தியேட்டர்.
காலத்தின் பாதையில் எது என்னவாகும் என்பதெல்லாம் எவராலும் கணிக்க முடியாது. அய்யாவுடன் பேசிக் கொண்டிருந்த போது பல சினிமா பிரபலங்களைப் பற்றி சொன்னார். ஒவ்வொரு செய்தியும் ஆச்சரியப்படுத்தியது. அவரின் தகப்பனார் சினிமா பிரபலங்களுடன் கொண்ட நட்பு பெரிது. சிறிய வயதில் குருசாமி நாடார் காலமாகி விட, இவரின் தாய் தொடர்ந்து தியேட்டரை நடத்தி வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அய்யா அவர்கள் நிர்வாகத்திற்குள் வந்து விட்டார்.
இடையில் ஒரு சொருகலாக உங்களுக்கு ஒரு செய்தி : அது என்னவென்றால் செண்ட்ரல் தியேட்டர் இருக்கிறதே கோவையில். தெரியும் தானே உங்களுக்கு? அந்த தியேட்டரை எனது நண்பரொருவருக்காக விலை பேச சென்ற போது மறைந்து போன தம்பு நாயக்கரைப் பார்த்தேன். அவர் கொடுத்த ஆவணங்களில் சரோஜா தேவியும், தம்பு நாயக்கரின் தாத்தாவும் சேர்ந்துதான் இந்த தியேட்டரை உருவாக்கினார்கள் என்ற விபரம் தெரிந்தது.
நடிகை சரோஜா தேவியின் புண்ணியத்தில் கோவை மக்கள் செண்ட்ரல் தியேட்டரில் படமும், தியேட்டருடன் இருந்த அன்னபூர்ணா கேண்டினில் வடை, காப்பியும் ரசித்து, ருசித்து புளகாங்கிதம் அடைந்திருக்கிறார்கள். இந்த அன்னபூர்ணா கேண்டீனுக்கு பால் சப்ளை செய்தவர் கவுண்டர் மச்சான்.
அம்மா இறந்து ஒரு மாதம் ஆகியிருந்தது. அந்த நேரத்தில் தான் அவரைச் சந்தித்தேன். அய்யாவின் மகனார் குருசாமி எனக்கு நல்ல நண்பர். மிகச் சிறந்த மனிதர் அய்யாவைப் போல. தியேட்டரின் முன்பு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். சிறிது நேரத்தில் காஃபி வந்தது. குருசாமி அவர்கள் இதுவரையிலும் பாதுகாப்பாக வைத்திருக்கும் செவர்லே காரின் முன்பு நின்று போட்டோ எடுத்துக் கொண்டேன்.
பின்னர் நானும், மகனும் அவருடன் காஸ்மோபொலிட்டன் கிளப்புக்கு மதிய உணவுக்காக சென்றோம். மாடியில் இருக்கும் ரெஸ்டாரெண்டில் அமர்ந்து கொண்டு பல கதைகளைப் பேசினோம். மகன் ரித்திக் நந்தாவுக்கு புதுப் புது உணவுகளை தருவித்து சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தார். அவனுக்குத் தாத்தா இல்லாத குறையை அவர் அன்று நிவர்த்தி செய்தார். அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன். முதன் முதலில் பார்த்த ஒருவர் மீது அவர் கொண்ட தூய அன்பினை எப்படி விவரிப்பது? தூய்மையான உள்ளமுடையவரே அவ்வாறு இருக்க இயலும்.
மகளுக்கு உடல் நிலை சரியில்லை என்று பேசிக் கொண்டிருந்தேன். அவர் ட்ரீடெமெண்ட் எடுக்கும் மருத்துவரிடம் அழைத்துச் செல்லச் சொல்லி இருந்தார். மனையாளும், மகளும் மருத்துவரிடம் சென்று விட்டு, வீடு திரும்பிய வரை ஃபாலோ அப் செய்து கொண்டிருந்தார் என மனைவி சொல்லிக் கொண்டிருந்தார்.
பெரிய மனதுள்ளவர்களும், நல் இயல்பு உள்ளவர்களையும் இக்காலத்தில் பார்ப்பது அரிது. அவருக்கு முன்னால் நானெல்லாம் ஒன்றுமே இல்லை. இன்று கோவையில் ஆர்.எச்.ஆர் கொடிகட்டிப் பறக்கிறது. அவருக்கு எப்படியாவது ராயல் தியேட்டரை மீண்டும் நடத்தி விட மாட்டோமா என்ற ஆவல் இருந்தது. ஆனால் குடும்பத்தின் சூழலும், அவரின் உடல் நிலையும் அதற்கு ஒத்து வரவில்லை.
திரைப்பட விநியோகத்தில் அவர் சந்தித்த பல பிரச்சினைகள் என்னிடம் பகிர்ந்து கொண்டார். படம் எடுக்கலாம் என்ற ஆசையே போய் விட்டது. சினிமா என்பது பெரிய கடல், அதற்குள் என்னவெல்லாம் இருக்கும் எனத் தெரியவே தெரியாது. படகில் பயணிக்கலாம், தூண்டிலும் போடலாம். ஆனால் என்ன கிடைக்கும், எப்போது கிடைக்கும் என்பதெல்லாம் விதியின் கையிலே.
சினிமாவில் வெற்றி பெற்றவர்களை விட தோல்வி அடைந்து வாழ்க்கையை இழந்தவர்கள் கோடானு கோடி பேர். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் வீடு ஏலத்துக்கு வந்த கொடுமையெல்லாம் நாம் பார்த்தோம்.
எனக்கு அவ்வப்போது தரமத்தின் மீதும், அறத்தின் மீது நம்பிக்கையற்றுப் போகும். ஆனால் இதைப் போன்ற சம்பவங்கள் எனக்கு, “ நானும் இருக்கிறேன்” என்று காட்டிக் கொண்டிருக்கும். சிவாஜி கணேசன் வீடு ஏலம் என்பதற்குப் பின்னால் ஒரு தத்துவ ஆய்வு இருக்கிறது. வாய்ப்புக் கிடைக்கும் போது எழுதுகிறேன்.
அய்யாவை மீண்டும் சந்திக்கும் நேரம் அமைந்தது. மீட்டிங்க் முடிந்து நானும் அவரும், மகள் மகனுடன் சிங்கா நல்லூர் ஆர்.எச்.ஆர் ஹோட்டலுக்குச் சாப்பிட அழைத்துச் சென்றார். மகள் நிவேதிதாவுக்கும், மகன் ரித்திக் நந்தாவுக்கும் வழக்கம் போல வித விதமான உணவுகளைக் கொண்டு வரச் செய்து சாப்பிடச் சொல்லிக் கொண்டிருந்தார். இருவரையும் தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றார். வீட்டினைச் சுற்றிக் காட்டி விட்டு, கையில் பல தின்பண்டங்களுடன் இருவரையும் அனுப்பி வைத்தார்.
அவரைச் சந்திக்கும் போதெல்லாம் எனக்கு மனம் அமைதியில் ஆழ்ந்து விடும். எதிர் எண்ணங்களோ அல்லது ஒரு மாதிரியான மன நிலையோ வராது. ஒரு தகப்பனார் அருகில் இருப்பது போன்று இருக்கும். எனக்கு என் தகப்பனாரின் அருகாமையும், அன்பும் கிடைக்கவே இல்லை. அதை அவரிடம் நான் கண்டேன்.
என்ன ஒரு பிரியம்? என்ன ஒரு பரிவு? என் மீதும், குழந்தைகள் மீதும்.
அவரின் அன்பு திக்குமுக்காட வைக்கும். என்னைப் பொறுத்தவரை அவர் மனித உருவில் கடவுளாக இருந்தார்.
அவரை இழந்தது என் வாழ்க்கையின் பெரும் இழப்பாகக் கருதுகிறேன். அவர் நிறைமனிதர், இறை மனிதர்.
அவரை என் வாழ்வில் சந்தித்த அந்த நாட்களும், அவருடனான நினைவுகளும் எனக்கு கிடைத்த வரமாகக் கருதுகிறேன்.
இனிய நண்பர் குருசாமி அவர்களுக்கும், அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அவர் என் நெஞ்சுக்குள் கல்வெட்டு போல பதிந்து இருக்கிறார். அவரின் நினைவாக கருடன் படத்தை எனது டிபி போட்டோவாக வைத்திருக்கிறேன். அவர் என்னிடம் கருடன் பற்றிய பல ரகசியங்களைச் சொல்லி இருக்கிறார்.