குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label தேர்தல் கமிஷன். Show all posts
Showing posts with label தேர்தல் கமிஷன். Show all posts

Friday, January 2, 2026

தேர்தல் கமிஷனால் ஜனநாயகத்திற்கு கடுமையான அச்சுறுத்தல்

தேர்தல் கமிஷனின் தேவையில்லாத வேலையான வாக்காளர் அடையாள அட்டை புதிப்பிப்பின் போது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கேஸ் கனெக்‌ஷன் கார்டு, பாஸ்போர்ட் கொடுத்து பதிவு செய்த பின்னால், நேற்று மீண்டும் அழைத்து 2005ல் இருக்கும் ஆவணங்கள் வேண்டுமென கேட்கிறார்கள். நோட்டீஸ் வந்திருக்கிறது என்கிறார்கள்.

வாக்காளர் அடையாள அட்டையை உறுதிப்படுத்த அல்லது தக்கவைக்க 20 ஆண்டுகால முகவரிச் சான்றுக்கான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை கடுமையான கவலைகளை எழுப்புகிறது.  

இந்தியா போன்ற ஒரு நாட்டில், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் வேலை, கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்கின்றனர். மேலும் நிரந்தர சொத்து அவரகளால் சேர்த்து வைத்திருக்க முடியாது.  குத்தகைதாரர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் பல நடுத்தர வர்க்க குடிமக்கள் கூட இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியான முகவரி ஆவணங்களை எவ்வாறு தயாரிக்க முடியும்? வாடகைதாரர்களாக இருப்பவர்களுக்கு நிரந்தர முகவரி எப்படி இருக்க முடியும்? பல வீடுகளுக்கு செல்பவர்களுக்கு நிரந்தரமான முகவரியோ அல்லது சான்றோ இருக்க இயலுமா?

வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு அரசியலமைப்பு உரிமை.

ஆவணங்கள் சரிபார்ப்பு செயல்முறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் - உண்மையான குடிமக்களை உரிமையை இழக்கச் செய்யும் கருவிகளாக மாறக்கூடாது.

நிர்வாக அமைப்புகள் அடிப்படை எதார்த்தங்களை கவனிக்க வேண்டும். ஆனால் தற்போதைய தேர்தல் கமிஷனின் நடைமுறைகள் மக்கள் உண்மையில் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைப் புறக்கணிக்கிறது.

விளிம்புநிலை சமூகங்களை பாதிக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்துக்கே போராட்டமாக இருக்கும் போது, இத்தகைய ஆவண ஆய்வுச் சரிபார்ப்புகள் அவர்களை ஜன நாயகத்திலிருந்து விரட்டி அடிக்கும்

தேர்தல் கமிஷன் ஜன நாயகத்தைக் கொன்று புதைக்க ஆர்வமாக இருப்பது போலத் தெரிகிறது.  தேர்தல் சீர்திருத்தங்கள் மக்களை மையமாகக் கொண்டவை, உள்ளடக்கியவை மற்றும் அரசியலமைப்பு ரீதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய தடைகளால் அல்ல, பங்கேற்பால் ஜனநாயகம் பலப்படுத்தப்படுகிறது.

தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தன்னிச்சையாக இருக்கின்றன. அது யாருக்கும் பதில் தருவதில்லை. சர்வாதிகாரமாக ஜனநாயகத்தைப் பாதிக்கும் செயலை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு எப்போது அரசியல் சார்பு நிலையாக்கபப்ட்டதோ அன்றிலிருந்து தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்பது பலரின் கருத்துகள். பல அரசியல் கட்சித்தலைவர்கள் என்ன சொன்னாலும் எதையும் கேட்க முடியாது என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர். 

தேர்தல் ஆணையரின் இந்த ஜன நாயகப் படுகொலைக்கான பதிலை அவரும், அவரின் அரசியல் சார்பு ஆட்களும் தந்தே தீர வேண்டும் என்பது அறம்.

ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய ஒரு அமைப்பு - அதுவும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, மக்களின் உரிமையைக் கொன்றொழிக்கும் அமைப்பாக மாறி விட்டது.  கோர்ட்டும், பிற அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும் கள்ள மவுனமாய் இருக்கின்றன. ஆளும் கட்சியை நிரந்தரமாக ஆட்சியில் வைக்க சதி நடக்கிறது என பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள்.

ஆனால் எதையும் நாங்கள் கேட்கப்போவதில்லை என்கிறார் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.

இவரின் தேர்வு சந்தேகத்துக்கு உட்பட்டது. இவர் அரசியல் சார்புடையவர் என்கிறார்கள் பல கட்சித் தலைவர்கள். 

யார் இதைக் கேட்பது? 


Wednesday, March 10, 2021

தேர்தல் கமிஷனின் ஜனநாயக தேசதுரோக 2021 தேர்தல் - ஜிமோடி வெர்ஷன்

தேர்தல் வந்து விட்டது. தேர்தல் கமிஷன் நாடகம் நடத்துகிறது. எல்லோருக்கும் தெரியும் ஓட்டுக்குப் பணம் கொடுக்கப்படுகிறது என. பெரும்பாலானோர் பணம் வாங்குவதும் தெரியும் தேர்தல் கமிஷனுக்கு. ஆனாலும் தேர்தல் நடத்தப்படுகிறது.

பணம் கொடுக்கப்பட்டது என்று தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இருப்பினும் மீண்டும் தேர்தல் நடத்தப்பட்டு பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சட்டம் என்ன செய்து கிழித்தது?

இங்கு யாருக்கும் வெட்கமில்லை. 

இந்திய அரசிலமைப்புச் சட்டம் கேலிக்குட்படுத்தப்படுவதை எல்லோரும் வேடிக்கைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொண்டிருக்கிறோம்.

என்ன செய்ய முடியும் நம்மால்? வேடிக்கை...வேடிக்கை. வேடிக்கை பார்ப்பதை தவிர?

காவல்துறை காவல் காக்கிறது. பணம் யாரும் எடுத்துப் போக கூடாது என. ஆளும்கட்சி ஆட்களை காவல்துறை என்ன செய்து விட முடியும்?

தேர்தல் கமிஷனின் மற்றுமோர் தேசதுரோகம் (ஆம் தேச துரோகம் என்றுதான் சொல்கிறேன்) தமிழகத்தில் நடத்தப்படும் 2021 தேர்தல்.

எப்படி என்று பார்க்கலாமா?


மேலே இருக்கும் தேர்தல் கமிஷன் அறிவிப்பினைப் பாருங்கள். தேர்தலில் போட்டியிட விண்ணப்பிக்கும் தேதி 19.03.2021. விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட அனுமதிக்கும் நாள் 22.03.2021ம் தேதி. 

விண்ணப்பம் ஏற்கப்படுகிறதா இல்லையா என்பது 22ம் தேதிதான் தெரியும். அதாவது போட்டியிடுகிறோமா இல்லையா என்பதைத் தெரிந்து கொள்ள தேர்தலுக்கு 14 நாட்களுக்கு முன்புதான் தெரிய வரும்.

இந்த பதினான்கு நாட்களுக்குள் சுயேச்சையாக ஒருத்தர் போட்டியிடுகிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள், அவர் எப்படி தொகுதி முழுக்கவும் பிரச்சாரம் செய்ய முடியும்?

பெரிய கட்சிகளுக்கு சின்னம் பேசும். கட்சி ஆட்கள் கார்களில் சுற்றி வந்து விடுவார்கள். அவர்களுக்கான கட்டமைப்பு இருக்கிறது. எளிதில் போஸ்டர் ஒட்டுவதிலிருந்து எல்லா பிரச்சாரத்தையும் செய்து விடுவார்கள். 

ஆனால் ஒரு சுயேச்சையினால் அது முடியுமா? பதினைந்து தெருக்கள் பிரச்சாரம் செய்யவே பத்து நாட்கள் ஆகி விடும். இதர பகுதிகளுக்கு எங்கனம் செல்ல இயலும்? இது கொடுமை அல்லவா? வாய்ப்பு கொடுக்காமல் ஏன் இத்தனை குறுகிய காலத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும்? என்ன அவசரம் வந்து விட்டது? ஓட்டு எண்ணுவதற்கு ஏன் 30 நாட்கள்?

இதுதான் தேர்தல் கமிஷன் செய்திருக்கும் ஜன நாயக தேசத்துரோகம். தனியொருவனுக்கு உணவில்லை என்றால் ஜகமே அழிக்கப்பட வேண்டும் என்றான் ஒருவன். 

வெட்கமாயில்லையா தேர்தல் கமிஷனுக்கு?

தனியொருவன் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்கவும், சிறிய கட்சிகளை அழித்திடவும் ஆளும் பாஜகவினரால் மிக மிகத் தந்திரமாக மோசடி செய்யப்பட்டு இந்திய ஜனநாயகம் அழிக்கப்படுகிறது. 

அதை தேர்தல் கமிஷன் கொஞ்சம் கூட யோசிக்காமல், ஏற்றுக்கொண்டு சுதந்திரத்தும், இந்திய இறையாண்மைக்கும், ஜன நாயகத்திற்கும், இந்திய மக்களுக்கும் துரோகத்தினையும் அக்கிரமத்தினையும் செய்துள்ளது.

இதைப் பற்றி எவரும் இங்கு பேசியதாக தெரியவில்லை. வெட்கமில்லாதவர்கள், அறமற்றவர்கள், தீங்கிழைப்பவர்களால் இதைப் பற்றி யோசிக்க கூட முடியாது.

ஆனால் இவர்கள் தான் ஆன்மீகம் பேசுகிறார்கள். மதம் பேசுகிறார்கள். தர்மம் அறம் பற்றி மேடைகளில் கத்துகிறார்கள்.

இங்கு இப்போது இருக்கும் அரசியல்வாதிகள் அனைவரின் அதர்மங்களை நாம் அறிவோம். ஆனாலும் யாரோ ஒருவருக்கு ஓட்டுப் போடுவோம். இவ்வுலகிற்கு தீங்கு செய்வதில் மனிதர்களுக்கு நிகர் எவருமுண்டா என்று யோசித்துப் பாருங்கள்.

எங்கே சென்றது நல் எண்ணங்கள்? எங்கே போனது அறம்? எங்கே போனது தர்மம்? ஏன் எல்லோரும் ஓடி ஒளிந்து கொண்டீர்கள்? ஒளிந்து கொண்டால் உங்கள் வாழ்க்கை சுகமாகி விடுமா?

வாழும் நாட்களில் நாம் வாழும் பூமிக்கும், சமுதாயத்துக்கும் நன்மை செய்யக்கூடாதா? கொஞ்சம் கூட அறச்சிந்தனை அற்றவர்களாக மாறிப் போனீர்களே ஏன்? யோசித்துப் பாருங்கள்.

துன்பம், துயரம், கஷ்டம் என்று கதறிக் கொண்டிருப்பவர்கள் அனைவரும் அதர்மங்களை மனம் கூசாமல் செய்பவர்களுக்கு கொடி பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

உனக்கு வரும் நல்லது கெட்டது எல்லாமே உன்னால் தான் என்பதை நீ அறியும் போது வாழ்வின் கடைசி நிலையில் இருப்பாய் என்பார்கள். 

இதோ தமிழ் நாட்டில் ஓட்டே போடாத ஒருவர் முதலமைச்சர் ஆனார். வேடிக்கை பார்த்தோம். ஐந்து லட்சம் கோடி கடன் வைத்தார் வேடிக்கை பார்த்தோம். மாணவர்களுக்கு மருத்துவ கல்வியை எட்டாமல் ஆக்கினார். வேடிக்கை பார்த்தோம். மின்சாரத்துறையில் பல ஆயிரம் கோடி ஊழல் என்கிறது சிஏஜி. வேடிக்கை பார்த்தோம். சாலைகளில் ஊழல், பாலங்களில் ஊழல், ஒரு கிலோ மீட்டர் தூரம் சாலை பராமரிப்பு மூன்று கோடி என ஊழல். முட்டையில் ஊழல், ரெவின்யூ துறையில் தொட்டதற்கெல்லாம் ஊழல். எல்லாவற்றையும் வேடிக்கைதான் பார்க்கிறோம். இனியும் என்ன ஆகப்போகிறது? மீண்டும் வேடிக்கை பார்ப்போம்.

இந்த 2021 தேர்தல் தேசத்துரோக தேர்தல் என்றுதான் அழைக்கப்பட வேண்டும். தேர்தல் கமிஷன் யாரோ ஒரு கட்சிக்கு அடிபணிந்து இந்திய மக்களுக்கு தேசத்துரோகம் செய்திருக்கிறது என்பது உண்மை.

குறிப்பு : கடந்த தேர்தலில் அடியேன் சுயேச்சை ஒருவருக்கு ஓட்டுப் போட்டேன். அந்த ஓட்டு பதிவாகவே இல்லை. விவிபாட் ஒப்புகை சீட்டு கூட பரிசீலிக்கப்படாது என்கிற போது ஓட்டுப் போடுவதால் என்ன பயன் என்று தெரியவில்லை. ஓட்டு மெஷின் நம்பிக்கையற்றவை.

மேலும் ஒரு உபகுறிப்பு: ஜோதிடம் என்பது மோசடி பொய் என்பதற்கான ஆதாரத்துடன் அடுத்த கட்டுரை வரும். அதிரப்போகின்றீர்கள்.