தேர்தல் கமிஷனின் தேவையில்லாத வேலையான வாக்காளர் அடையாள அட்டை புதிப்பிப்பின் போது, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, கேஸ் கனெக்ஷன் கார்டு, பாஸ்போர்ட் கொடுத்து பதிவு செய்த பின்னால், நேற்று மீண்டும் அழைத்து 2005ல் இருக்கும் ஆவணங்கள் வேண்டுமென கேட்கிறார்கள். நோட்டீஸ் வந்திருக்கிறது என்கிறார்கள்.
வாக்காளர் அடையாள அட்டையை உறுதிப்படுத்த அல்லது தக்கவைக்க 20 ஆண்டுகால முகவரிச் சான்றுக்கான தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை கடுமையான கவலைகளை எழுப்புகிறது.
இந்தியா போன்ற ஒரு நாட்டில், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் வாடகை வீடுகளில் வசிக்கின்றனர். அவர்கள் வேலை, கல்வி மற்றும் வாழ்வாதாரத்திற்காக இடம்பெயர்கின்றனர். மேலும் நிரந்தர சொத்து அவரகளால் சேர்த்து வைத்திருக்க முடியாது. குத்தகைதாரர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், நகர்ப்புற ஏழைகள் மற்றும் பல நடுத்தர வர்க்க குடிமக்கள் கூட இரண்டு தசாப்தங்களாக தொடர்ச்சியான முகவரி ஆவணங்களை எவ்வாறு தயாரிக்க முடியும்? வாடகைதாரர்களாக இருப்பவர்களுக்கு நிரந்தர முகவரி எப்படி இருக்க முடியும்? பல வீடுகளுக்கு செல்பவர்களுக்கு நிரந்தரமான முகவரியோ அல்லது சான்றோ இருக்க இயலுமா?
வாக்களிக்கும் உரிமை என்பது ஒரு அரசியலமைப்பு உரிமை.
ஆவணங்கள் சரிபார்ப்பு செயல்முறைகள் ஜனநாயகத்தை வலுப்படுத்த வேண்டும் - உண்மையான குடிமக்களை உரிமையை இழக்கச் செய்யும் கருவிகளாக மாறக்கூடாது.
நிர்வாக அமைப்புகள் அடிப்படை எதார்த்தங்களை கவனிக்க வேண்டும். ஆனால் தற்போதைய தேர்தல் கமிஷனின் நடைமுறைகள் மக்கள் உண்மையில் எவ்வாறு வாழ்கிறார்கள் என்பதைப் புறக்கணிக்கிறது.
விளிம்புநிலை சமூகங்களை பாதிக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்துக்கே போராட்டமாக இருக்கும் போது, இத்தகைய ஆவண ஆய்வுச் சரிபார்ப்புகள் அவர்களை ஜன நாயகத்திலிருந்து விரட்டி அடிக்கும்
தேர்தல் கமிஷன் ஜன நாயகத்தைக் கொன்று புதைக்க ஆர்வமாக இருப்பது போலத் தெரிகிறது. தேர்தல் சீர்திருத்தங்கள் மக்களை மையமாகக் கொண்டவை, உள்ளடக்கியவை மற்றும் அரசியலமைப்பு ரீதியாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். இத்தகைய தடைகளால் அல்ல, பங்கேற்பால் ஜனநாயகம் பலப்படுத்தப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் தன்னிச்சையாக இருக்கின்றன. அது யாருக்கும் பதில் தருவதில்லை. சர்வாதிகாரமாக ஜனநாயகத்தைப் பாதிக்கும் செயலை தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் தேர்வு எப்போது அரசியல் சார்பு நிலையாக்கபப்ட்டதோ அன்றிலிருந்து தேர்தல் நியாயமாக நடக்கவில்லை என்பது பலரின் கருத்துகள். பல அரசியல் கட்சித்தலைவர்கள் என்ன சொன்னாலும் எதையும் கேட்க முடியாது என்கிறார் தலைமைத் தேர்தல் ஆணையர்.
தேர்தல் ஆணையரின் இந்த ஜன நாயகப் படுகொலைக்கான பதிலை அவரும், அவரின் அரசியல் சார்பு ஆட்களும் தந்தே தீர வேண்டும் என்பது அறம்.
ஜனநாயகத்தைப் படுகொலை செய்ய ஒரு அமைப்பு - அதுவும் மக்கள் வரிப்பணத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு, மக்களின் உரிமையைக் கொன்றொழிக்கும் அமைப்பாக மாறி விட்டது. கோர்ட்டும், பிற அரசியல் கட்சிகளும், பத்திரிக்கைகளும் கள்ள மவுனமாய் இருக்கின்றன. ஆளும் கட்சியை நிரந்தரமாக ஆட்சியில் வைக்க சதி நடக்கிறது என பல்வேறு எதிர்கட்சிகளின் தலைவர்கள் பேசுகிறார்கள்.
ஆனால் எதையும் நாங்கள் கேட்கப்போவதில்லை என்கிறார் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
இவரின் தேர்வு சந்தேகத்துக்கு உட்பட்டது. இவர் அரசியல் சார்புடையவர் என்கிறார்கள் பல கட்சித் தலைவர்கள்.
யார் இதைக் கேட்பது?