ஒரு உண்மைக் கதையைப் படியுங்கள். அதைத் தொடர்ந்து இட்லி கடைக்கு வருவோம்.
கிராமத்திலிருந்து சென்னை வந்த ஒருவர், அமெரிக்கா செல்கிறார். அங்கு ஒரு ஹோட்டலைத் திறக்கிறார். அவரின் வாழ்க்கையில் அவரின் அம்மாவின் சமையல் குறிப்புகள் பற்றிய பல செய்திகளை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மூலம் பகிர்கிறார். இந்தியாவுக்கு வந்தால் அவரின் வீட்டுக்குச் செல்கிறார். அங்கு அவரும், அவரின் அம்மாவும் சமையல் செய்கிறார்கள்.
அவர் பல தோல்விகளைச் சந்திக்கிறார். சவால்களை எதிர் கொள்கிறார். எல்லாவற்றிலும் வெற்றி கண்டு அமெரிக்கா மட்டுமல்ல, தற்போது திருப்பதியில் கூட ஒரு ஹோட்டல் துவங்க வேலை நடந்து கொண்டிருக்கிறது. அவர் யார் தெரியுமா?
மைலாப்பூர் எக்ஸ்பிரஸ் ஹோட்டலின் உரிமையாளர் ஜெய்.
அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கிறது அவரின் உணவுகள். ஏன் திரும்ப இந்தியாவில் அதுவும் திருப்பதியில் ஹோட்டல் ஆரம்பிக்கிறார்? அவருக்குத் தெரிந்திருக்கிறது அமெரிக்கா பற்றி. திட்டமிடல்.
ஒரு மாபெரும் ஹோட்டல் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கி வெற்றிக் கொடி நாட்டி இருக்கிறார்.
இவ்வளவுக்கும் அவர் ஒரு பிராமண வகுப்பில் பிறந்தவர். அவரின் குடிப் பெருமையை ஒவ்வொரு அசைவிலும் வெளிப்படுத்துகிறார். அவர் விற்பனை செய்யும் உணவுகளில் அவைகள் வெளிப்படுகின்றன. அவரிடம் வேலை செய்யும் பணியாளர்களிலிருந்து எல்லாவற்றிலும் அதைப் பயன்படுத்துகிறார்.
அவர் மிகச் சரியான வகையில் தன்னையும், தன் குடிப் பெருமையையும், தன்னைச் சார்ந்த நபர்களின் வாழ்க்கையிலும் முன்னேற்றத்தைக் கொண்டு வருகிறார். அதை எல்லோரும் வெறுக்கா வண்ணம் சாத்தியப்படுத்துகிறார்.
உணவு என்கிற போது சமூகநீதி உண்டு. உணவின் பெயர்களில் சாதி இருந்தாலும், அதன் சுவைக்கு முன்னால், அதன் வியாபாரத்துக்கு முன்னால் எதுவும் எடுபடாது.
ஆனால் கல்வியில் அது இல்லை.
அமெரிக்க கல்லூரி ஒன்றின் ஆய்வறிக்கையில் - பார்ப்பனர்கள் ஒரு பள்ளியின் பாடத்திட்டத்திலிருந்த தலித் என்கிற வார்த்தை இந்திய வரலாற்றில் இல்லை எனக் குறிப்பிட்டு, அதை நீக்க வேண்டுமென்று முடிவெடுத்திருக்கிறார்கள். அதை குழுவில் சமர்ப்பித்த போது, பார்ப்பனர்களின் சதியால் பொய்யான தகவல் தரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அந்த பாடத்திட்டத்தினை நிராகரித்திருக்கிறார்கள் அந்தப் பள்ளியினர்.
மேலே இருக்கும் இணைப்பில் இருப்பதைப் படித்துக் கொள்ளுங்கள். அந்தளவுக்கு பிராமணர்கள் தலித் என்கிற வார்த்தையின் மீது வன்மம் கொண்டுள்ளனர் என அந்த நிகழ்வு காட்டுகிறது. இணைப்பை கிளிக் செய்து படித்துப் பாருங்கள்.
இதோ மற்றுமொரு ஆதாரம். எந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்து என்ற ஒற்றை வார்த்தையின் பின்னால் மறைந்து கொண்டு நடக்கும் சதிகளைப் படித்துப் பாருங்கள்.
https://csrr.rutgers.edu/wp-content/uploads/2025/05/hindutva-in-america.pdf
அமெரிக்காவில் தலித்துகளும் உள்ளனர். அவர்கள் ஜெய் நடத்தும் மைலாப்பூர் எக்ஸ்பிரஸுக்குச் சென்றால் அவர்களை யாரும் தடுப்பது இல்லை.
ஒரு தாய் தன் மகனை தொழிலதிபராக மாற்றியது தான் இந்தக் கதை.
இனி இட்லி கடைக்கு வருவோம்.
தனுஷ் பற்றி எல்லோருக்கும் அக்குவேறு ஆணிவேராகத் தெரிந்திருக்கும். அசுரன் படத்தையும் பார்த்திருப்பீர்கள்.
இந்த இட்லிகடை திரைப்படம் அவரின் கற்பனையில் உருவான படமாம். இயக்கமும் அவரே.
என்ன கதை ?
ஒரு கிராமத்தில் சாலையோரமாய் இருக்கும் உணவகத்தினை தனுஷின் அப்பா ராஜ்கிரண் நடத்தி வருகிறார். சிறுவனாக இருந்த பொழுது முதற்கொண்டு அவருடன் உணவகத்துக்கு வரும் தனுஷ் வளர்கிறான். உணவு தயாரிப்பு பற்றிப் படிக்கிறான். ராஜ்கிரண் அவனை இங்கேயே இருந்து, இந்த உணவகத்தை நடத்தி வா என்கிறார். அவன் மறுத்து விடுகிறான். சென்னை செல்கிறான், பின்னர் அமெரிக்கா செல்கிறான்.
அமெரிக்காவில் கொடிகட்டிப் பறக்கும் ஒரு உணவகத்தின் உரிமையாளர் மகளை விரும்புகிறான். திருமணம் நிச்சயமாகிறது. அப்பாவை திருமணத்துக்கு அழைக்கிறான். அவர் முடியாது என்கிறார். திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். அடுத்த நாளில் ராஜ்கிரண் இறக்கிறார்.
இறுதிச்சடங்கிற்காக இந்தியா வருகிறான். பின்னர் பல்வேறு எதிர்ப்புகளுக்குப் பின்னால் அப்பா விட்டுச் சென்ற இட்லிக் கடையை நடத்துகிறான். வில்லன் அமெரிக்க காதலியின் அண்ணன். லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது.
அவனுடன் படித்த பெண்ணைத் திருமணம் செய்கிறான். எதிர்த்த அமெரிக்க மச்சானை அகிம்சா படி சமாளித்து அவனை இந்த இட்லிக் கடையில் மாவாட்ட வைக்கிறான்.
இந்தப் படத்தின் கிளைமேக்ஸ் என்ன தெரியுமா?
ஊரில் பேசிக் கொல்(?)கிறார்கள் இப்படி.
“அப்பன் பெயரை மகன் காப்பாற்றி விட்டான்”
சுபம்.
இந்தப் படத்தைப் பார்த்த மாத்திரத்தில் புட் பிளாக்கர் குஞ்சாமணிகளுக்கு குஷி வந்திருக்கும். ஆட்டுக்கல்லில் ஆட்டும் மாவு இட்லி, அம்மிக்கல்லில் அரைத்து வைக்கும் சாம்பாரின் சுவைக்கு இந்த உலகில் ஈடு இல்லை. அந்தப் பாரம்பரியத்தை விட்டு விடலாமா? இதற்கு முன்னால் காசு, பணமெல்லாம் தூசு. சாதி,சனத்தை விட்டு விட்டு வெளி நாட்டுக்கு ஏன் போய் பணம் சம்பாதிக்க வேண்டும்.
இந்த இட்லியைச் சாப்பிட்டுச் செல்லும் மக்கள் பாராட்டும் வார்த்தைகளை விட உயர்ந்த ஒன்று இந்த உலகில் உள்ளதா?
அனைவரும் இதற்குத்தானே பிறந்தோம்.
இதை விட ராக்கெட் விடுவது, டெக்னாலஜியில் வளர்வது, கோடிகளில் சம்பாதிப்பது எல்லாம் ஒன்றுமே இல்லை. இந்தப் படம் அதைத்தான் சொல்கிறது. பாரம்பரியத்தினைக் காப்பாற்ற வேண்டுமாம்.
யாதும் ஊரே யாவரும் கேளீர் (உறவினர்) என்றுச் சொன்னார் கலியன் பூங்குன்றனார்.
இல்லையில்லை என் ஊரே எனக்குப் போதும் என்கிறது இட்லிகடை.
மண் சுவர், ஓலைக்கூரை வேய்ந்த சிறு கடை, மரப்பெஞ்சுகள் இரண்டு, அடுப்பு, அம்மிக்கல், ஆட்டுக்கல் - பாரம்பரியம்.
1800 களில் இந்தியாவை ஆண்டு வந்த ஆங்கிலேயனுக்கு, இந்தியாவில் இருந்த சாதி கொடுமைகள் பெருத்த அவமானத்தை தந்தது.
- பிராமண குலத்துக்குத்தான் கல்வி - எல்லோருக்கும் அன்று இல்லை.
- அக்ரஹாரத்துக்குள் தலித்துகள் வரவே கூடாது.
- தலித்துக்கு என சேர் என்ற பெயரில் ஊரை விட்டு ஒதுக்கிய இடத்தில் வீடுகள்.
- தலித்துக்கு என சொத்துக்கள் கிடையாது.
- பரம்பரையான கூலிகள் அவர்கள்.
- குளத்தில் குளிக்க அனுமதி இல்லை.
- தெருவில் நடக்க அனுமதி இல்லை.
- கோவிலுக்குள் கடவுளைக் கும்பிட அனுமதி இல்லை.
- முலையின் சைசுக்கு வரி கட்ட வேண்டும்.
- கிணற்றில் தண்ணீர் எடுக்க அனுமதி இல்லை.
- மேல் துணி போட அனுமதி இல்லை.
- காலில் செருப்பு அணிய அனுமதி இல்லை.
- நீதிமன்றத்தில் நீதிபதியிடமிருந்து 16 அடி தள்ளி நிற்க வேண்டும்.
தென் தமிழகத்தில் பரவி இருந்த மனித வன் கொடுமைகள் இவை.
பெரியார் தென் தமிழகத்தினை திராவிடக்குடும்பம் எனக் குறிப்பிட்டு மேலே குறிப்பிட்டுள்ள கொடுமைகள் செய்தோரை எதிர்த்தார்.
படிப்பறிவில்லாதவர்களைப் படிக்க சொன்னார், கோவிலுக்குள் அழைத்துச் சென்றார். பெரியார், அண்ணா, கலைஞர் என இன்றும் தொடர்கிறது சாதிய வன் கொடுமைகள். இதோ தமிழ் நாட்டிலிருக்கும் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குள் பிராமணரைத் தவிர வேறு எவரும் கருவறைக்குள் சென்று கடவுளை வழிபட முடியாது. இப்படியான சூழல் இருக்கும் போது, இந்த இட்லி கடை.
பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டம், ராஜாஜியின் குலக்கல்வி திட்டம் ஆகியவை பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் திட்டங்கள் அல்லவா? இன்றைக்கும் தமிழ் நாட்டு மாணவர்களின் கல்விக்கான தொகையை தராமல் தடுத்துக் கொண்டிருக்கிறது பிஜேபி அரசு.
இட்லி கடை என்ன சொல்ல வருகிறது?
- வண்ணான் மகன் வண்ணான்
- தோட்டி மகன் தோட்டி
- ஆசாரி மகன் ஆசாரி
- தோட்டக்காரன் மகன் தோட்டக்காரன்
- சாதியும் சனமும் தேவை (எதற்கு இட்லி தின்பதற்கு)
- அமெரிக்கா தேவையில்லை, பணம் தேவையில்லை. படிப்புத் தேவையில்லை. இப்படி எதுவும் தேவையில்லை.
- அப்பன் பெயரைக் காப்பாற்ற வேண்டும். குலப் பெருமையை விட்டு விடக்கூடாது.
அந்த ஊரில் ராஜ்கிரண் மட்டும்தானே உணவகம் வைத்திருந்தார். அவரின் ஆசையை அவரின் மகன் நிறைவேற்றுவது எப்படி தவறாகும் என்று கேட்பீர்கள். அது தனிப்பட்ட ஒருவரின் ஆசை. அந்த ஆசையை மகன் நிறைவேற்றி இருக்கிறான், அதுதானே படம். அதை இப்படி விமர்சிக்க வேண்டுமா எனவும் கேட்பீர்கள்.
சினிமாக்காரர்களை முதலமைச்சராக துடித்துக் கொண்டிருக்கும் மாநிலம் தமிழ்நாடு. பக்கத்து மாநிலத்தில் ஒரு சினிமாக்காரர் துணை முதலமைச்சராக ஆக்கிய பெருமை தென் இந்தியாவுக்கு உண்டு. படித்தவர்களையும், படிக்காதவர்களையும் சேர்த்து மூளை மழுங்கச் செய்யும் தந்திர வித்தை கொண்டது சினிமா.
இப்போது சொல்லுங்கள். நான் விமர்சிப்பது சரிதானே?
சமூக நீதிக்காக இன்றைக்கும் இணையத்தில் கம்பு சுத்திக் கொண்டிருக்கும் என்னைப் போன்றோருக்கு இந்தப்படம் மாபெரும் எரிச்சலைத் தந்தது.
ஒரு பிராமணர் தன்னையும், தன்னைச் சார்ந்தவர்களை அமெரிக்கா வரை கொண்டு சென்று, அவர்களின் வாழ்வியலை உயர்த்துகிறார்.
ஆனால் இவரோ அதெல்லாம் தேவையில்லை என தன் வாழ் நாளை சமூகநீதிக்காக வாழ்ந்தவர்களை அசிங்கப்படுத்தி, தானும், தன்னைச் சேர்ந்தவர்களும் வாழ்க்கையில் எல்லா நிலையிலும் முன்னேற்றமடைவது தவறு எனப் படமெடுத்துக் கொண்டிருக்கிறார். சாதி சனம் முக்கியம் என்று பேசுகிறார்.
இதற்கு என்ன காரணமாக இருக்கும்? வேறென்ன பணம் வந்தால் பத்தும் பறந்து போகும்.
கொஞ்சமாவது மனித சமூகத்தின் மேன்மைக்காக சிந்திக்க வேண்டும். ஆனால் அதற்கான தகுதி இருப்பவர்களிடம் இதைக் கேட்கலாம். இல்லாதவர்களிடம் கேட்டு என்ன பலன்?
சமூக நீதிக்கான போராட்டத்தைச் சீர்குலைக்கும் நயவஞ்சகமான படம் இது.
இது கோடாலிப்படம்.
தீட்டிய மரத்தில் கூர் பார்க்கும் அவலம்.
இது படமல்ல, அசிங்கம்.
வளமுடன் வாழ்க.
04.10.2025
ஒரு குசும்பு விமர்சனம் : இட்லி கடைத் திரைப்படத்தில் ராஜ்கிரண் ஆட்டுக்கல்லில் இட்லிக்கு மாவு அரைப்பார். அதில் தான் சுவை அதிகமாம். ஒரு விஷயத்தை தனுஷ் மறந்து போனார். தனுஷ்க்கு ஆட்டுக்கல்லே தேவையில்லை. நித்யா மேனனே போதுமே? பின்னர் எதற்காக இன்னொரு ஆட்டுக்கல்? இந்த இடத்தில் இயக்குனர் தனுஷ் கொஞ்சம் ரசனை மறந்து விட்டார் என்பது அடியேனின் பார்வை.