குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கார்த்திகை தீப விழ. Show all posts
Showing posts with label கார்த்திகை தீப விழ. Show all posts

Wednesday, December 3, 2025

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதியில் கார்த்திகை தீப விழா 2025

சுமார் பதினாறு ஆண்டுகளுக்கு முன்னால், கோவை ரத்னபுரியிலிருந்த ஒருவர் - உன் குரு உனக்காக காத்திருக்கிறார் என்றார். 

”அவர் யாருங்க?” என்றேன்.

”நீங்களே உங்கள் குருவைத் தேடிக் கண்டுபிடிங்க” என்றார்.

விடாமுயற்சி எனது வழக்கம். விழுந்தால் உடனே எழுந்து அடுத்த வேலையைப் பார்க்கச் செல்வது வழக்கம் என்பதால் - தனியாக கிளம்பினேன்.

காட்டுக்குள் இருக்கிறார் அவர் என சொல்லி இருந்தார். கோதையை வீட்டில் இருக்கச் சொல்லி விட்டு, தனிப் பயணம்.

என்றைக்குமே தனிப்பயணம் தானே ஒவ்வொருவருக்கும்?

சேருமிடமும் தெரியாது. வழியும் தெரியாது. ஆனாலும் பயணித்தேன். 

அவரின் பெயர் மட்டுமே தெரியும். மற்ற எதையும் அவர் சொல்லவில்லை. 

பலர் சென்ற வழியில் நடப்பது எளிது. ஆனால் அந்த வழி தெரிந்திருந்தால் தானே?  

முள்ளங்காடு செக் போஸ்ட் அருகில் இருந்தவரிடம் சுவாமி பெயரைச் சொல்லிக் கேட்டேன். அப்படியெல்லாம் இங்கு யாருமில்லை என்றார் அவர்.

எனக்கென தனி வழி. யார் சொல்வதையும் கேட்டதே இல்லை. எனக்குப் பிடித்திருந்தால், என்னைப் பொறுத்தவரை சரியாக இருந்தால் கேட்பதுண்டு.

ஆகவே தெற்கு நோக்கி சென்றேன். புளியங்காட்டு மரங்களிடையே ஒரு சிறு கட்டிடம் கண்டேன்.

அங்கே என் குரு ஜோதி சுவாமி. என்னிடம் சொல்லிய பெயர் வெள்ளிங்கிரி சுவாமி. ஆனால் எனக்கோ ஜோதி சுவாமி குரு.

ஏன்? புரிந்தவர்களுக்கு நல்லது. புரியாதவர்களுக்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகும்.

அன்றிலிருந்து இந்த நொடி வரை - விடாது, விலகாது - எனக்கு எல்லாமும் அவரே.

ஒவ்வொரு நொடியும் செதுக்கப்பட்டேன் அனுபவங்களால். ஒவ்வொரு நொடியும் ஒவ்வொன்றை விட்டு விலகினேன். அவைகள் என்னைப் பிடித்திருந்தது.

விடுதலை பெறுதல் வெற்றிக்கு வழி. வெற்றி என்றால் நிம்மதியான வாழ்க்கை.  இன்பம் துன்பம் இரண்டுக்குமான வித்தியாசங்கள் இல்லாததை அறிந்தேன். 

இழப்புகள், துன்பங்கள், துயரங்கள் - வாழ்க்கைச் சாலையில் மைல் கற்கள் போல சென்றன. பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இத்தனைக்கும் யார் காரணம்?

ஜோதி சுவாமி சொல்வார் - ஒவ்வொரு அசைவுகளும் நிர்ணயிக்கப்பட்டவை என.

இதைப் படித்ததும் உங்களுக்குள் நிறைய கேள்விகள் எழும். விரைவில் நம் குரு நாதரின் பெயரில் ஒரு இணையப்பத்திரிக்கை வெளியாக இருக்கிறது.

அதில் காரணங்களை ஆராய்வோம். தெளிவோம். 


இன்றைக்கு குரு நாதரின் ஜீவசமாதியில் கார்த்திகை தீபமேற்றும் விழா நடக்கிறது.

நேற்று நடு இரவு நல்ல மழை. இரவில் வானம் கொட்டியது.  சோவென்ற சத்தம். பூமி குளிர்ந்து கிடக்கிறது. வெளியூர்களிலிருந்து பக்தர்கள் வந்து கொண்டிருக்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பக்தர்களே செய்து கொள்கிறார்கள். 

நம் குரு நாதரிடம் பக்தி கொண்ட பக்தர்கள் ஒவ்வொருவரும் எனக்கு குரு. அவர்களின் நெஞ்சங்களில் குருவானவர் நிறைந்திருக்கிறார். ஓடி ஓடி வேலை செய்கிறார்கள். சக பக்தர்களுக்கு சேவை செய்திட கடுமையாக பணியாற்றுகிறார்கள். அவர்கள் எல்லோருமே எனக்கு குரு நாதரை போலவே தெரிகிறார்கள். அவர்களுக்கு நன்மையும், மேன்மையும் கிடைத்திடுவதை நம் குருநாதர் பார்த்துக் கொள்வார்.

இன்று மாலையில் பக்தர்களால் நம் குருவின் ஜீவசமாதியில் தீபமேற்றி வழிபாடு நடக்க இருக்கிறது. அனைவரும் கலந்து கொள்க.

இன்று நம் குரு நாதரின் ஜீவசமாதியில் ஒரு அற்புதம் நிகழவிருக்கிறது.

அது என்ன?  விதியை தலைகீழாக மாற்றும் நிகழ்வு அது. உற்றுக் கவனியுங்கள். என்னவென்று உங்களுக்கே புரியும்.


தெளிவு குருவின் திருமேனி காண்டல்

தெளிவு குருவின் திரு நாமம் செப்பல்

தெளிவு குருவின் திருவார்த்தை கேட்டல்

தெளிவு குருவுரு சிந்தித்தல் தானே.

திருமந்திரம் - பாடல் எண் : 139


வளமுடன் வாழ்க...!