நீதிபதி சங்கருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. இந்தக் கொரானா செய்த வேலையால் அவரின் இமயமலைப்பயணம் சீரழிந்து போனது பற்றி அவருக்குள் புழுங்கினார்.
சரியாக 22.03.2020 இந்தியா முழுக்க 144 தடை விதித்தது மத்திய அரசு. வேறு வழியே இல்லாமல் இமயமலை ஆன்மீக பயணம் கேன்சல் செய்யப்பட்டது.
அய்யோ...அய்யோ என மனதுக்குள் வெம்பினார் நீதிபதி சங்கர். அருமையான சான்ஸ் போச்சே என நொந்தார். கொரானா என்ற பெயரைக் கேட்டாலே காண்ட் ஆகினார்.
பூஜா ஹெக்டேவை நினைத்து நினைத்து வேதனையில் ஆழ்ந்தார்.
“ஏய்! கொரானாவே, நானென்ன கேட்டேன். ரஜினிகாந்த் செல்வது போல ஒரு ஆன்மீகப் பயணம். இமயமலைக்கு. உதவிக்கு பூஜா ஹெக்டே. வேறு என்ன எதிர்பார்த்தேன்? தியானம் செய்தேனா? முதலமைச்சர் பதவி கேட்டேனா? இல்லை ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டேனா? எதுவும் இல்லையே. அட்லீஸ்ட் கவர்னர் போஸ்டாவது கேட்டிருக்கேனா? இல்லையே. இரண்டு நாள் இமயமலைச் சுற்றுப் பயணம் தானே கேட்டேன். அதற்காகவா என்னை இந்தப் பாடு படுத்துகிறாய். இரு உன்னை கூண்டில் ஏற்றி தூக்கு தண்டனை தராமல் விடப்போவதில்லை. மருத்துவ உலகம் உன்னை ஒழிக்கட்டும். அதுவரையில் நான் சும்மா இருக்கப் போவதில்லை. சட்டம் உன்னை விடவே விடாது” என தன் மனதுக்குள் கருவினார்.
அந்த நேரம் பார்த்து கோவை சரவணம்பட்டி போலீஸ் மூலம் இந்த வழக்கு வந்தது. உடனே விசாரிக்கப்படும் என உத்தரவு போட்டு நீதிமன்றத்தில் உட்கார்ந்து விட்டார்.
கொரானாவை கூண்டுக்குள் ஏற்றி தூக்கில் போட அவரால் ஆன சட்டத்தின் வழியை அவர் செயல்படுத்த துணிந்து விட்டார். ஆகவே முகத்தில் மாஸ்கை கட்டியபடி சட்டப்பணி ஆற்ற கோர்ட்டுக்கு வந்து விட்டார் மாண்புமிகு நீதிபதி.
இந்த இமயமலை டீலிங்கைக் கேள்விப்பட்ட எதிர்கட்சி உதவிதலைவர் தன் மாமா மகன் மூலம் நயன்தாராவை ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். நீதிபதி அவர் பாட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டால், நம்மால் ஜெயிலில் கிடக்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பூஜா ஹெக்டே நீதிபதியின் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதை இவருக்கு யாரும் சொல்லவில்லை.
நீதிபதி நயன் தாராவை கிழட்டு மூதி எனச் சொல்வது அவருக்குத் தெரியாது. நல்லவேளை, இந்த டீலிங்கைச் சொல்லி இருந்தால், இமயமலை டீலிங்கை விட்டு விட்டு உடனடியாக கைது வாரண்டு பிறப்பித்து இருப்பார்.
அதற்குள் கொரானா வந்து எல்லாவற்றையும் கொலாப்ஸாக்கி விட்டது. எதிர்கட்சித் தலைவருக்கு நல்ல நேரம் தப்பித்துக் கொண்டார்.
இது எதுவும் தெரியாமல் பூஜா ஹெக்டேவும், நயன் தாராவும் அவரவர் வேலையில் இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
டிவி பார்த்துக் கொண்டிருந்த உயர் நீதிமன்ற வக்கீல் அங்கு வந்த வேலனைப் பார்த்து டென்சனார். வேலன் அவராபீசில் கூட்டித் துடைக்கிறவன். அவனிங்கே என்ன செய்கிறான் என குழம்பினார் ராஜ்.
கொரானாவுக்கு ஆதரவாக வாதாட வேலன் ஆஜராகி இருப்பதை கோர்ட்டில் இருந்த அனைவரும் வச்ச கண்ணின் இமை மூடாமல் பார்த்தனர். மீடியாக்கள் வேலன் முகத்தை ஜூம் செய்தன. நீதிபதி சங்கர் கடுப்போடு வேலனைப் பார்த்தார். அங்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடுவதைப் போல தோன்ற, மீண்டும் மீண்டும் எரிச்சலானார்.
”கணம் நீதிபதி அவர்களே, எனது கட்சிக்காரர் கொரானாவுக்கு ஆதரவாக வாதாட அனுமதி வழங்கியமைக்கு எனது நன்றிகள் கோடானு கோடியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்” என்றான் வேலன்.
“ம்.. ஆகட்டும். தொடருங்கள்” என்றார் நீதிபதி.
“சரவணம்பட்டி போலீஸார் பதிந்த குற்றப்பத்திரிக்கையிலே, எனது கட்சிக்காரர் கொரானா மக்களை கொன்று வருவதாகவும், பெரும் துன்பத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதாவது கணம் நீதிமான் பரம்பரையில் தோன்றிய ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய நீதிபதி அவர்களே.....”
இதென்ன கூத்து? ஆன்மீக ஈடுபாடு என்கிறானே இவன்? இவன் ஆளும்கட்சி வக்கீலா? நம்ம டீலு இவனுக்கு எப்படித் தெரியும்? டவாலி போட்டுக் கொடுத்து விட்டானா? இல்லை ஆளும்கட்சியின் ராஜதந்திர வேலையா? எனத் தெரியவில்லையே எனக் குழம்பினார் நீதிபதி.
இது எதுவும் தெரியாமல் வேலன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..
”எம் கட்சிக்காரர் கொரானா அவர் பாட்டுக்கு சைனாவில் இருந்தார். அவராகவா இந்தியாவிற்கு வந்தார்? இல்லை உங்களைக் கேட்கிறேன். அவராகவா இந்தியாவிற்கு வந்தார். இல்லையே. அவர் சைனாவில் இருந்தார். சைனாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது கேரளாவைச் சேர்ந்த ஒருவர். அவரை உள்ளே விட்டு விட்டு, வேடிக்கை பார்ப்பது அரசாங்கம். அது மட்டுமல்ல, அவரின் இயல்பு என்னவோ அதைப் போலத்தான் அவர் இப்போதும் இருக்கிறார். அவரை தன் உடலுக்குள் விழ வைத்து, அவரின் வேலையை அதிகப்படுத்துவது நம்மைப் போன்றவர்கள். நம்மால் அவர் இரவு பகல் தூங்காமல் வேலை செய்கிறேன் எனப் புலம்புகிறார். அவர் யாரையும் கொல்லவும் இல்லை. கொலை செய்யவும் இல்லை.”
டிவியில் பார்த்துக் கொண்டிருந்த புள்ளிங்கோ குருப்பைச் சேர்ந்தவர்கள் உடனடியாக கொரானா புள்ளிங்கோ அமைப்பை உருவாக்கி டிஷர்ட்டுக்கு லோகோவைத் தயார் செய்தனர்.
ஒரு சிலர் தன் வக்கீலிடம், கொரானாவுக்கு ஆதரவாக எங்களையும் சேர்த்து விசாரிக்கும்படி மனுச் செய்யும்படி கேட்க, வழக்குகள் ஏதுமின்றி வீட்டுக்குள் கோவை தங்கவேல் எழுதிய அரிசி ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வக்கீல்கள் சுறுசுறுப்பாயினர்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்க வக்கீல், டெல்லி வக்கீல் அமித்தை நக்கலாகப் பார்த்தார். அமித்துக்கு கொலை, கொள்ளை, அடிதடி என்றால் புரியும். இந்த கொரானா வழக்கு பற்றி தலையும் புரியாமல், வாலும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.
புதிய தலைமுறையில் பிரதிவாதி கொரானா நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.
வேளைக்குப் பிறகு தொடரும்....