குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label கொரானா வழக்கு. Show all posts
Showing posts with label கொரானா வழக்கு. Show all posts

Saturday, April 4, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(4)


மறுநாள் நீதிபதி சங்கர் கோர்ட்டுக்கு வந்து அமர்ந்தார். ஏகப்பட்ட வக்கீல்கள் முகக் கவசத்துடன் அக்மார்க் குரங்கு போலவே உட்கார்ந்திருந்தார்கள். என்னே ஒரு காட்சி? மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும். எல்லோரும் குரங்குகள் போலவே இருக்கின்றார்கள். மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வக்கீல் அமித் இருக்கானா என்று பார்த்தார். ஆளைக் காணவில்லை. எங்கே போனானா அந்தக் கருமாந்திரம் புடிச்சவன், என்னை மாற்றப்போகிறானாமே, பார்ப்போம் இவன் என்ன கிழிக்கிறான்னு என மனதுக்குள் கருவிக் கொண்டார். ஒரு நீதிபதியையே மிரட்டுகிறானே அவன். அவனுக்கு ஒரு கொரானா பார்சல் செய்து விட வேண்டியதுதான்.

ஏதாவது எக்குத்தப்பாக இனி பேசினான் என்றால், கோர்ட்டை அவமதித்தான் எனச் சொல்லி கொரானா வார்டில் சுத்தம் செய்யப் போட்டு விடுகிறேன். அப்போதான் அவன் அடங்குவான் என மனதுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.

அன்றைக்குப் பார்த்து அமித்துக்கு காலையில் தும்மல் வந்து விட்டது. விடாமல் தும்மலாக போட்டுக் கொண்டிருந்தார். இந்த நிலையில் கோர்ட்டுக்கு வந்து, ஏற்கனவே நீதிபதியையே மிரட்டி இருப்பதால், அந்த ஆளு கொரானா டெஸ்ட் செய்த அறிக்கை வந்த பிறகு, கோர்ட்டுக்கு வா எனச் சொல்லி விட்டால், எந்த ஊரு ஆஸ்பத்திரியோ, எந்த வார்டோ? அதுவும் இது தமிழ்நாடு. இவனுக கையில் மாட்டினால் வச்சு செஞ்சுருவான்களே என்ற பயத்தில் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார்.

இங்கே கோர்ட்டில் ஒரு புதிய வக்கீல் எட்டப்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மனு ஒன்றினைத் தாக்கல் செய்தார்.

மனுவைப் படித்த நீதிபதி சங்கருக்கு தலையே சுற்றியது. என்ன எழவு மனுடா இது? என்று கோபத்தில் கொந்தளித்து வக்கீல் எட்டப்பனைப் பார்த்தார். வக்கீல் எட்டப்பன் கோர்ட்டில் நிற்கவில்லை. குனிந்தபடியே கை இரண்டையும் கூப்பியபடி வைத்துக் கொண்டு, டைனோசார் தலையை நீட்டுவது போல நீட்டியபடி நீதிபதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

”எட்டப்பன், நிமிர்ந்து நில்லுங்கள்” என்றார்.

”என்னால் முடியாது கனம் நீதிபதி அவர்களே, என் உடல் வாகுவே அதுதான். அது மட்டும் காரணம் அல்ல. நான் பிறரின் காலை வாரி விடுவதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தவன். ஆகவே குனிந்து கொண்டிருந்தால் தான் காலை வாரி விட முடியும். நான் பிறந்ததில் இருந்தே இப்படி இருப்பதால், என் உடல் வளைந்து போய் விட்டது. ஆகவே என்னால் நேராக நிமிர்ந்து நிற்க முடியாது ஆனர் அவர்களே…”

“ஓ… உங்கள் வழக்கமே அதுதானா? கொரானா வழக்கில் உங்களையும் இணைத்துக் கொள்ள மனுக் கொடுத்திருக்கின்றீர்களே? வழக்குப் போடச் சொன்னவர்கள் பெயர் தவறாக இருக்கிறதே, புரியும்படிச் சொல்கின்றீர்களா?”

கோர்ட்டில் டைப் செய்யும் பெண்மணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
“கனம் நீதிபதி அவர்களே, எனது கிளையண்டுகள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின் பெயர் கள்ளக்காதலர் சங்கம். முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது” என்றார் எட்டப்பன் வக்கீல்.

எல்லோரும் எட்டப்பனைப் பார்த்தனர். டிவி கேமராக்கள் அனைத்தும் எட்டப்பனை ஜூம் செய்தன. டிவி பார்த்துக் கொண்டிருந்த மக்களில் 90 சதவீதம் பேர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர்.

(** இங்கு ஒரு விஷயத்தை உற்றுக் கவனித்தீர்களா வாசகர்களே. நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள் எல்லோரும் கள்ளக்காதல் சங்கத்தின் ரகசிய உறுப்பினர்கள். அவர்களின் வக்கீல் எட்டப்பனோ நிமிர்ந்து நிற்க முடியாதவர். கோவை தங்கவேல் தர்மம் தர்மம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார் அல்லவா? அவர் இந்த நாவலின் இந்த டிவிஸ்டை உற்று நோக்க வேண்டும். தர்மம் இல்லாத வக்கீல் கூனிப்போய் இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே அடியேனும் தர்மத்தைதான் இங்கு போதிக்கின்றேன் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். இராமாயணத்தில் ஒரு கூனி, இந்த நாவலில் ஒரு எட்டப்பன். சரியா மிஸ்டர் கோவை தங்கவேல் அவர்களே. **)

சரி இனி வழக்குக்கு வந்து விடுவோம்.

நீதிபதி சங்கருக்கு ஏண்டா, இந்த வழக்கை விசாரணை செய்ய எடுத்தோம் எனத் தோன்றியது. ஆனாலும் கட்டழகு டைப்பிஸ்ட் கவிதாவைப் பார்த்தார். கவிதாவின் கண்கள் சங்கரைப் பார்க்க, சங்கரின் கண்ணுக்குள் மின்னல் அடித்தது. விசாரியுங்கள் என்று கண்ணாலே அம்பு விட, அந்த அம்பு நீதிபதி சங்கரின்  விழிகளுக்குப் பாய்ந்து நின்றது.

“கனம் நீதிபதி அவர்களே, இந்தக் கொரானா மனித உரிமைகளை மீறுகின்றது. மனிதர்களுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமை தாம் விரும்புவதைச் செய்வது. எனது கிளையண்டுகள், அவரவர் கள்ளக்காதலிகளையும், காதலர்களையும் சந்திக்க முடியாமல் திண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளி வர இயலாமல், தங்கள் கள்ளகாதலை வளர்க்க முடியாமல், எங்கே தங்கள் காதலின் புனிதச்செடி பட்டுப்போகுமோ என்ற கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள். கொரானாஒ எல்லோரையும் வீட்டுக்குள் இருக்க வைத்து விட்டது. இதனால் என்னென்ன பிரச்சினைகள் உண்டாகி உள்ளது தெரியுமா உங்களுக்கு?”

நீதிபதி சங்கருக்கு கூன் வக்கீல் எட்டப்பனின் வாதம் சுவாரசியமாக இருந்ததால் அவரும் நிமிர்ந்து உட்கார்ந்தார். டைப்பிஸ்ட் கவிதாவை ஒரு கண்ணால் லுக் விட்டு விட்டு, எட்டப்பனை நோக்கினார்.

எதேச்சையாக டிவியைப் பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு இந்த வழக்கின் லைவ் கன்னில் பட, டிவியில் அர்னாப் கோஸ்வாமி இந்தியாவே இந்த வழக்கை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்று லைவ் வர்ணனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து கேமரா நீதிபதி சங்கரைக் காட்டியது. அவரைப் பார்த்தவுடன் பூஜா ஹெக்டேவுக்கு பிடித்து விட்டது. நீதிபதி செல்வம் விரும்பிய பூஜா ஹெக்டேவுக்கே நீதிபதியைப் பிடித்துப் போன விஷயம் தெரியாமல், கோர்ட்டில் கூனன் வக்கீல் எட்டப்பனைப் பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.

(வாசகர்களே, உங்களின் பார்வை பூஜாவின் முகத்தில் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்)

இடைவேளைக்குப் பிறகு தொடரும்.... 

Thursday, April 2, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(3)


வேலனின் வாதம் முடிந்தது.

வக்கீல் அமித் எழுந்தார்.

”நீதிபதி அவர்களே, குற்றம் சுமத்தப்பட்ட கொரானாவின் வக்கீல் சொல்லிய அனைத்து விஷயங்களும் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. இதுவரையில் நான் அரசியல்வாதிகளுக்கு எதிராக வாதிட்டு இருக்கிறேன். அவர்கள் ஊழல் செய்வார்கள், அதற்காக இன்கம்டாக்ஸை வைத்து மிரட்டுவோம், பின்னர் தீர்ப்பையே நான் தான் எழுதி தருவேன். அதைத்தான் நீதிபதியும் படிப்பார். இந்தக் கோவை நீதிமன்றமும், நீங்களும் எனக்குப் புதிது. இன்னும் இந்த கோர்ட்டின் நடைமுறைகள் என்னவென்று எனக்குத் தெரியவில்லை. நீங்கள் வழக்கின் நீதிபதியா இருக்க வேண்டுமா? இல்லை என் தீர்ப்பினை படிக்கும் நீதிபதியை இங்கு கொண்டு வர வேண்டுமா? என யோசிக்க வேண்டும். ஆகவே எனக்கு ஒரு நாள் கூடுதல் அவகாசம் தேவை என உங்களுக்கு உத்தர விடுகிறேன்”

“என்ன, உத்தரவா?” என்று சொல்லியபடி நாற்காலியில் அமர்ந்த அமித்தை கோபப்பார்வை பார்த்தார் நீதிபதி சங்கர்.

நீதிபதியை அவர் கண்டு கொள்ளவே இல்லை. செமகாண்டான நீதிபதி உன்னை வச்சு செய்யப்போறேண்டா அமித்து என்றுக் கருவிய படி எழுந்து சென்றார். கோர்ட் கலைந்தது.

தலைமைச் செயலர் நன்கு தூங்கிக் கொண்டிருந்தார். கொரானா வந்தாலும் வந்தது தூக்கம் போச்சு அவருக்கு. இந்தப் பயல்களை வீட்டுக்குள் இருங்கள் என்றுச் சொன்னால் ஒருவனும் கேட்க மாட்டேன் என்கிறார்கள். லேசாக அடித்தால் அய்யோ குய்யோ எனக் கத்துகிறார்கள். பேஸ்புக்கிலும், டிவிட்டரிலும் படம் போட்டு விடுகிறார்கள். அந்தப் படங்களைப் பார்க்கும் எனக்கே பீதியைக் கிளப்புகிறார்கள். நான் செய்து கொண்டிருக்கும் ஊழல் சமாச்சாரங்கள் நாளைக்குத் தெரியவந்தால், என் நிலைமை என்ன ஆகுமோ தெரியவில்லையே எனக் கலங்கினார். காவல்துறையினர் இப்படியெல்லாம் அடிப்பார்களா எனத் தெரிந்ததும் குலை நடுக்கம் ஏற்படுகிறதே என்று எண்ணிப் பயந்தபடியே தூங்கச் சென்றார்.

அவரின் மனைவியோ இந்த மாதம் கூடுதல் பணம் வரவில்லையே என தூக்கம் வராமல் வீட்டுக்குள்ளேயே உலாவிக் கொண்டிருந்தார்.
இந்த சி.எம் என்ன செய்கிறார். புதிய டெண்டர்களை விட்டால் தானே 30 பர்செண்டேஜில் கொஞ்சமாவது வரும். சாலைகளைக் கழுவி விட மாம்பழப்பட்டி பார்ட்டிக்கு டெண்டர் விட்டிருக்கலாம். கழுவிய பிறகு கிருமி நாசினி தெளிக்க, நம் தம்பியின் கம்பெனிக்கு டெண்டர் தரலாம். கழுவியதாக கணக்கு காட்டினால் போதும். சொளையாக கிடைக்குமே பெட்டி பெட்டியாக என நினைத்த போதே அவருக்கு நாக்கில் எச்சில் சொட்டியது. நாளைக்கு சி.எம்மின் மனைவியிடம் சொல்லி விட்டால் காரியம் ஆகி விடும் என  நினைத்துக் கொண்டே பெட்டி வராத சோகத்தில் அலைந்து கொண்டிருந்தார். கொரானா என்ற வார்த்தையைக் கேட்டாலே கொதிக்க ஆரம்பித்தது தலைமைச் செயலர் மனைவிக்கு.

இது எது பற்றியும் தெரியாமல் தூக்கத்தில் இருந்த தலைமைச் செயலர் கனவு கண்டார். அக்கனவில் வந்தது சாட்சாத் கிருஷ்ண பரமாத்மா.

ஊழல் செய்து மக்களை ஏமாற்றிப் பிழைக்கும் தலைமைச் செயலர் கனவில் பரிசுத்தமான கடவுள் எப்படி வருவார் என உங்கள் அனைவருக்கும் வியப்பாக இருக்கும்.

நல்லவர்களும், நல்ல எண்ணங்களும், செயல்களும் உடையவர்களுக்கு கடவுள் தேவையே இல்லை. ஆனால் அயோக்கிய சிகாமணிகளுக்கு கடவுள் அவசியம் தேவை.

செய்யும் குற்றங்களுக்கு ஏற்ப உண்டியலில் காசு போட்டு, பரிகாரம் செய்து விட்டால் கடவுள் மன்னித்து விடுவார் அல்லவா? ஆகவே கடவுளுக்கும் காசு தேவை என்பதால் கடவுள் அயோக்கியர்களின் கனவில் தான் வந்து கொண்டிருக்கிறார் ஒவ்வொரு யுகங்களாக என்பதை புராணங்கள் வழியே நாமெல்லாம் படித்திருக்கிறோம் என்பதை இவ்விடத்தில் நினைவில் கொள்ளுங்கள்.

பூஜா ஹெக்டே அன்றைக்குப் பார்த்து கிருஷ்ணரை வணங்கினார். 

தலைமைச் செயலர் கனவில் வந்த கிருஷ்ண பரமாத்மா அவரிடம் என்ன சொன்னார்?

இடை வேளைக்குப் பிறகு தொடரும்…

Monday, March 30, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு(2)

நீதிபதி சங்கருக்கு ஆற்றாமை தாங்க முடியவில்லை. இந்தக் கொரானா செய்த வேலையால் அவரின் இமயமலைப்பயணம் சீரழிந்து போனது பற்றி அவருக்குள் புழுங்கினார்.

சரியாக 22.03.2020 இந்தியா முழுக்க 144 தடை விதித்தது மத்திய அரசு. வேறு வழியே இல்லாமல் இமயமலை ஆன்மீக பயணம் கேன்சல் செய்யப்பட்டது. 

அய்யோ...அய்யோ என மனதுக்குள் வெம்பினார் நீதிபதி சங்கர். அருமையான சான்ஸ் போச்சே என நொந்தார். கொரானா என்ற பெயரைக் கேட்டாலே காண்ட் ஆகினார். 

பூஜா ஹெக்டேவை நினைத்து நினைத்து வேதனையில் ஆழ்ந்தார். 

“ஏய்! கொரானாவே, நானென்ன கேட்டேன். ரஜினிகாந்த் செல்வது போல ஒரு ஆன்மீகப் பயணம். இமயமலைக்கு. உதவிக்கு பூஜா ஹெக்டே. வேறு என்ன எதிர்பார்த்தேன்? தியானம் செய்தேனா? முதலமைச்சர் பதவி கேட்டேனா? இல்லை ராஜ்ய சபா எம்.பி பதவியைக் கேட்டேனா? எதுவும் இல்லையே. அட்லீஸ்ட் கவர்னர் போஸ்டாவது கேட்டிருக்கேனா? இல்லையே. இரண்டு நாள் இமயமலைச் சுற்றுப் பயணம் தானே கேட்டேன். அதற்காகவா என்னை இந்தப் பாடு படுத்துகிறாய். இரு உன்னை கூண்டில் ஏற்றி தூக்கு தண்டனை தராமல் விடப்போவதில்லை. மருத்துவ உலகம் உன்னை ஒழிக்கட்டும். அதுவரையில் நான் சும்மா இருக்கப் போவதில்லை. சட்டம் உன்னை விடவே விடாது” என தன் மனதுக்குள் கருவினார்.

அந்த நேரம் பார்த்து கோவை சரவணம்பட்டி போலீஸ் மூலம் இந்த வழக்கு வந்தது. உடனே விசாரிக்கப்படும் என உத்தரவு போட்டு நீதிமன்றத்தில் உட்கார்ந்து விட்டார்.

கொரானாவை கூண்டுக்குள் ஏற்றி தூக்கில் போட அவரால் ஆன சட்டத்தின் வழியை அவர் செயல்படுத்த துணிந்து விட்டார். ஆகவே முகத்தில் மாஸ்கை கட்டியபடி சட்டப்பணி ஆற்ற கோர்ட்டுக்கு வந்து விட்டார் மாண்புமிகு நீதிபதி.

இந்த இமயமலை டீலிங்கைக் கேள்விப்பட்ட எதிர்கட்சி உதவிதலைவர் தன் மாமா மகன் மூலம் நயன்தாராவை ஆன்மீக சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யச் சொல்லி இருந்தார். நீதிபதி அவர் பாட்டுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து விட்டால்,  நம்மால் ஜெயிலில் கிடக்க முடியாதே என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தார். பூஜா ஹெக்டே நீதிபதியின் உள்ளம் கவர்ந்த கள்ளி என்பதை இவருக்கு யாரும் சொல்லவில்லை. 

நீதிபதி நயன் தாராவை கிழட்டு மூதி எனச் சொல்வது அவருக்குத் தெரியாது.  நல்லவேளை, இந்த டீலிங்கைச் சொல்லி இருந்தால், இமயமலை டீலிங்கை விட்டு விட்டு உடனடியாக கைது வாரண்டு பிறப்பித்து இருப்பார். 

அதற்குள் கொரானா வந்து எல்லாவற்றையும் கொலாப்ஸாக்கி விட்டது. எதிர்கட்சித் தலைவருக்கு நல்ல நேரம் தப்பித்துக் கொண்டார்.

இது எதுவும் தெரியாமல் பூஜா ஹெக்டேவும், நயன் தாராவும் அவரவர் வேலையில் இருந்தனர் என்பதை வாசகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

டிவி பார்த்துக் கொண்டிருந்த உயர் நீதிமன்ற வக்கீல் அங்கு வந்த வேலனைப் பார்த்து டென்சனார். வேலன் அவராபீசில் கூட்டித் துடைக்கிறவன். அவனிங்கே என்ன செய்கிறான் என குழம்பினார் ராஜ்.

கொரானாவுக்கு ஆதரவாக வாதாட வேலன் ஆஜராகி இருப்பதை கோர்ட்டில் இருந்த அனைவரும் வச்ச கண்ணின் இமை மூடாமல் பார்த்தனர். மீடியாக்கள் வேலன் முகத்தை ஜூம் செய்தன. நீதிபதி சங்கர் கடுப்போடு வேலனைப் பார்த்தார். அங்கு பூஜா ஹெக்டே டான்ஸ் ஆடுவதைப் போல தோன்ற, மீண்டும் மீண்டும் எரிச்சலானார்.

”கணம் நீதிபதி அவர்களே, எனது கட்சிக்காரர் கொரானாவுக்கு ஆதரவாக வாதாட அனுமதி வழங்கியமைக்கு எனது நன்றிகள் கோடானு கோடியைத் தெரிவித்துக் கொண்டு தொடர்கிறேன்” என்றான் வேலன்.

“ம்.. ஆகட்டும். தொடருங்கள்” என்றார் நீதிபதி.

“சரவணம்பட்டி போலீஸார் பதிந்த குற்றப்பத்திரிக்கையிலே, எனது கட்சிக்காரர் கொரானா மக்களை கொன்று வருவதாகவும்,  பெரும் துன்பத்தைத் தருவதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதாவது கணம் நீதிமான் பரம்பரையில் தோன்றிய ஆன்மீகத்தில் ஈடுபாடு உடைய நீதிபதி அவர்களே.....” 

இதென்ன கூத்து? ஆன்மீக ஈடுபாடு என்கிறானே இவன்? இவன் ஆளும்கட்சி வக்கீலா? நம்ம டீலு இவனுக்கு எப்படித் தெரியும்? டவாலி போட்டுக் கொடுத்து விட்டானா? இல்லை ஆளும்கட்சியின் ராஜதந்திர வேலையா? எனத் தெரியவில்லையே எனக் குழம்பினார் நீதிபதி.

இது எதுவும் தெரியாமல் வேலன் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான்..


”எம் கட்சிக்காரர் கொரானா அவர் பாட்டுக்கு சைனாவில் இருந்தார். அவராகவா இந்தியாவிற்கு வந்தார்? இல்லை உங்களைக் கேட்கிறேன். அவராகவா இந்தியாவிற்கு வந்தார். இல்லையே. அவர் சைனாவில் இருந்தார். சைனாவில் இருந்து இந்தியாவிற்கு அழைத்து வந்தது கேரளாவைச் சேர்ந்த ஒருவர். அவரை உள்ளே விட்டு விட்டு, வேடிக்கை பார்ப்பது அரசாங்கம். அது மட்டுமல்ல, அவரின் இயல்பு என்னவோ அதைப் போலத்தான் அவர் இப்போதும் இருக்கிறார். அவரை தன் உடலுக்குள் விழ வைத்து, அவரின் வேலையை அதிகப்படுத்துவது நம்மைப் போன்றவர்கள். நம்மால் அவர் இரவு பகல் தூங்காமல் வேலை செய்கிறேன் எனப் புலம்புகிறார். அவர் யாரையும் கொல்லவும் இல்லை. கொலை செய்யவும் இல்லை.”

டிவியில் பார்த்துக் கொண்டிருந்த புள்ளிங்கோ குருப்பைச் சேர்ந்தவர்கள் உடனடியாக கொரானா புள்ளிங்கோ அமைப்பை உருவாக்கி டிஷர்ட்டுக்கு லோகோவைத் தயார் செய்தனர்.

ஒரு சிலர் தன் வக்கீலிடம், கொரானாவுக்கு ஆதரவாக எங்களையும் சேர்த்து விசாரிக்கும்படி மனுச் செய்யும்படி கேட்க, வழக்குகள் ஏதுமின்றி வீட்டுக்குள் கோவை தங்கவேல் எழுதிய அரிசி ரொட்டி செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்த வக்கீல்கள் சுறுசுறுப்பாயினர்.

இதைக் கேட்டுக் கொண்டிருந்த அரசாங்க வக்கீல், டெல்லி வக்கீல் அமித்தை நக்கலாகப் பார்த்தார். அமித்துக்கு கொலை, கொள்ளை, அடிதடி என்றால் புரியும். இந்த கொரானா வழக்கு பற்றி தலையும் புரியாமல், வாலும் புரியாமல் குழம்பிக் கொண்டிருந்தார்.

புதிய தலைமுறையில் பிரதிவாதி கொரானா நல்லவரா? கெட்டவரா? என்ற தலைப்பில் விவாதம் தொடங்கியது.



வேளைக்குப் பிறகு தொடரும்....

Sunday, March 29, 2020

உலகை உலுக்கிய கொரானா வழக்கு (1)


அந்த வளாகம் பரபரப்பாய் இல்லை. முகத்தில் மாஸ்க் கட்டியபடி அந்த அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தனர் இருவர்.  

மேஜைகள், நாற்காலிகள் போடப்பட்டன. கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் நீதிபதி சங்கர் வந்தார்.

டவாலி தன் கையில் இருக்கும் குச்சியை தள்ளிப் பிடித்துக் கொண்டிருந்தான். அதைப் பார்த்தும் பயம் அவனுக்கு.

வழக்கு எண் சிபி1/2020, வாதி எப்படிச்சாவேன், பிரதிவாதி கொரானா என்று சத்தமாக அழைத்தான் டவாலி.

காவல்துறை அதிகாரிகள், அரசு வழக்கறிஞர் ஆகியோருடன் எப்படிச்சாவேன் வாதி அமைதியாக உட்கார்ந்திருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் அமித் டெல்லியில் இருந்து ரகசியப் பயணமாய் தனி பிளைட் பிடித்து வந்திந்தார்.

பல டிவி சேனல்களின் கேமராக்கள் நீதிமன்றத்தை உற்று நோக்கின. நீதிபதிக்கு சினிமாவின் மீதும், சினிமா நடிகை பூஜா ஹெக்டேவின் மீது அபார மோகம். அதனால் இந்த வழக்கை உலகம் முழுவதும் பார்க்க வேண்டும் என்பதற்காக அனுமதி வழங்கி இருந்தார்.

டிவி ஆட்களும் எவன் வந்து தும்முவானோ, எப்படி வந்து ஒட்டிக் கொள்ளுமோ என்ற பயத்தில் இருந்ததால், தெருத்தெருவாய் அலைவதை விட, அறைக்குள் அமர்ந்து கொண்டிருக்கலாம் என்பதற்காக, உடனடியாக இந்த லைவ் புரோகிராமிற்கு ஆதரவு தெரிவித்து கேமராக்களையும், மைக்கையும் கொண்டு வந்து நீட்டி விட்டார்கள்.

போன மாதம் எதிர் கட்சி அரசியல் தலைவர் மீது, ஆளும் கட்சி சி.யெம்முக்காக வக்கீல் சொட்டையனால் தொடுக்கப்பட்ட வழக்கை விசாரித்தார் நீதிபதி சங்கர். ஆளும் கட்சி சார்பில் ‘என்ன வேண்டுமானாலும் செய்து தர தயார்’ என அரசு வழக்கறிஞர் பன்னி மூலம் செய்தி தரப்பட்டது.

சங்கர் போனவாரம் டி.ஜேன்னு ஒரு படம் பார்த்துக் கொண்டிருந்தார். ஹீரோயினைப் பார்த்ததும் அவரின் அல்லக்கை துடியாய் துடித்த வேதனை தாளாமல், ;கொஞ்சம் பொறு உனக்கு ஏதாவது வழி பிறக்கும்’ என சமாதானம் செய்து கொண்டார்.

’என்ன வேண்டுமானாலும்’ செய்தி காதுக்கு வந்ததும், டவாலி மூலம் பன்னிக்கு இமயமலையில் வழக்கு தொடர்பாக ஆன்மீக டிஸ்கசனுக்கு ஏற்பாடு செய்தால் அரஸ்ட் வாரண்ட் ரெடி என்று தகவல் தரப்பட்டது.

மறு நிமிடமே, பன்னி மூலம் டிஸ்கஸனுக்கு நாள் குறிக்கப்பட்ட விஷயம் நீதிபதிக்கு டவாலி வழியாக தெரிவிக்கப்பட்டது. அந்த நாள் தான் 22.03.2020.

நீதிபதியின் அல்லக்கை துடியாய் துடிக்க ஆரம்பித்தான். ’பொறுத்தார் பூமி ஆள்வார் என உனக்குத் தெரியாதா தம்பி. பொறுத்திரு. கடமையை முடிப்போம். பின்னர் கச்சேரியை வைப்போம்’ என்று சமாதானப்படுத்தினார் நீதிபதி. 

டிஸ்கஸனில் நடிகையின் அதை ஒரு கடி கடித்து விட்டு தான் அடுத்த வேலை உனக்கு என அல்லக்கையை குஷிப்படுத்திக் கொண்டிருந்தார்.

வாதியின் வழக்கறிஞர் ஒரு மாதமாக ரெஸ்ட்டில் இருந்தார். ஆகவே இது என்ன வழக்கு என புரிந்து கொள்ள இயலாமல் கசகசப்பாய் சரவணம்பட்டி காவல் அலுவலக ஏட்டு எழுதிய எஃப்.ஐ.ஆரை படித்துக் கொண்டிருந்தார்.

பிரதிவாதிக்கு ஆதரவாக ஆஜர் ஆக யார் வரப்போகிறார்கள் என்று இது வரையிலும் தெரியவில்லை. அரசின் வழக்கறிஞருக்கு எரிச்சலோ எரிச்சல். வழக்குப் போட்ட வாதி எப்படிச்சாவேனை கொலை வெறியுடன் பார்த்துக் கொண்டிருந்தார்.

உலகமே டிவியின் முன்னால் உட்கார்ந்திருந்தது. கொரானாவுக்கு ஆதரவாக யார் ஆஜராகி வாதாடப்போகின்றார்கள் எனத் தெரியாமல் கண் இமை மூடாமல் கேமராக்கள் வழியே கேமராமேன்கள் பார்த்துக் கொண்டிருக்க, வளாகத்துக்குள் கார் ஒன்று வந்து நின்றது.


(சினிமா உலகிற்கு கலைச் சேவை செய்து, கலைமாமனி, பத்மஸ்ரீ போன்ற விருதுகளை எதிர்காலத்தில் வாங்கப் போகும் கலைத்தாய் பெற்ற மரகதம் பூஜா ஹெக்டே இவர் தான்)

இந்தக் கொரானா வழக்கு தன்னால் தான் நீதிமன்ற விசாரணைக்கே வந்தது என்றுத் தெரியாமல் பூஜா ஹெக்டே பெடிக்கியூர், மெனிக்கியூர் செய்து கொண்டிருந்தாள்.

விளம்பர இடைவேளை முடிந்ததும் தொடரும் வழக்கு விசாரணை…..


முக்கியமான குறிப்பு:
இது நகைச்சுவைக்காக எழுதப்படுகிற நாவல். இதன் கான்செப்ட் உரிமை எனக்கு மட்டுமே. மற்றபடி இது எவருக்கும் எதிரான நாவல் இல்லை. இதில் வரும் கதாபாத்திரங்களின் பெயர்கள் நாவல் எழுதும் போது புளொவில் வந்தது. ஆகவே எவராவது மனம் கோணினால் தாங்களே நேராக்கிக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன். இந்த நாவலில் வரும் சம்பவங்களும் யாரையும், எவரையும் குறிப்பிடுவன இல்லை.