மறுநாள் நீதிபதி
சங்கர் கோர்ட்டுக்கு வந்து அமர்ந்தார். ஏகப்பட்ட வக்கீல்கள் முகக் கவசத்துடன் அக்மார்க்
குரங்கு போலவே உட்கார்ந்திருந்தார்கள். என்னே ஒரு காட்சி? மனிதன் குரங்கிலிருந்து தான் பிறந்திருக்க வேண்டும். எல்லோரும் குரங்குகள் போலவே இருக்கின்றார்கள். மனதுக்குள் சிரித்துக் கொண்டார். வக்கீல் அமித்
இருக்கானா என்று பார்த்தார். ஆளைக் காணவில்லை. எங்கே போனானா அந்தக் கருமாந்திரம் புடிச்சவன்,
என்னை மாற்றப்போகிறானாமே, பார்ப்போம் இவன் என்ன கிழிக்கிறான்னு என மனதுக்குள் கருவிக்
கொண்டார். ஒரு நீதிபதியையே மிரட்டுகிறானே அவன். அவனுக்கு ஒரு கொரானா பார்சல் செய்து
விட வேண்டியதுதான்.
ஏதாவது எக்குத்தப்பாக
இனி பேசினான் என்றால், கோர்ட்டை அவமதித்தான் எனச் சொல்லி கொரானா வார்டில் சுத்தம் செய்யப்
போட்டு விடுகிறேன். அப்போதான் அவன் அடங்குவான் என மனதுக்குள் வன்மத்தை வளர்த்துக் கொண்டார்.
அன்றைக்குப் பார்த்து
அமித்துக்கு காலையில் தும்மல் வந்து விட்டது. விடாமல் தும்மலாக போட்டுக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில் கோர்ட்டுக்கு வந்து, ஏற்கனவே நீதிபதியையே மிரட்டி இருப்பதால், அந்த ஆளு
கொரானா டெஸ்ட் செய்த அறிக்கை வந்த பிறகு, கோர்ட்டுக்கு வா எனச் சொல்லி விட்டால், எந்த
ஊரு ஆஸ்பத்திரியோ, எந்த வார்டோ? அதுவும் இது தமிழ்நாடு. இவனுக கையில் மாட்டினால் வச்சு செஞ்சுருவான்களே என்ற
பயத்தில் தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு வீட்டிலேயே உட்கார்ந்து விட்டார்.
இங்கே கோர்ட்டில்
ஒரு புதிய வக்கீல் எட்டப்பன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டார். அவர் மனு ஒன்றினைத்
தாக்கல் செய்தார்.
மனுவைப் படித்த
நீதிபதி சங்கருக்கு தலையே சுற்றியது. என்ன எழவு மனுடா இது? என்று கோபத்தில் கொந்தளித்து
வக்கீல் எட்டப்பனைப் பார்த்தார். வக்கீல் எட்டப்பன் கோர்ட்டில் நிற்கவில்லை. குனிந்தபடியே
கை இரண்டையும் கூப்பியபடி வைத்துக் கொண்டு, டைனோசார் தலையை நீட்டுவது போல நீட்டியபடி
நீதிபதியைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
”எட்டப்பன், நிமிர்ந்து
நில்லுங்கள்” என்றார்.
”என்னால் முடியாது
கனம் நீதிபதி அவர்களே, என் உடல் வாகுவே அதுதான். அது மட்டும் காரணம் அல்ல. நான் பிறரின்
காலை வாரி விடுவதில் கெட்டிக்காரன் என்று பெயர் எடுத்தவன். ஆகவே குனிந்து கொண்டிருந்தால்
தான் காலை வாரி விட முடியும். நான் பிறந்ததில் இருந்தே இப்படி இருப்பதால், என் உடல்
வளைந்து போய் விட்டது. ஆகவே என்னால் நேராக நிமிர்ந்து நிற்க முடியாது ஆனர் அவர்களே…”
“ஓ… உங்கள் வழக்கமே
அதுதானா? கொரானா வழக்கில் உங்களையும் இணைத்துக் கொள்ள மனுக் கொடுத்திருக்கின்றீர்களே?
வழக்குப் போடச் சொன்னவர்கள் பெயர் தவறாக இருக்கிறதே, புரியும்படிச் சொல்கின்றீர்களா?”
கோர்ட்டில் டைப்
செய்யும் பெண்மணி உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார்.
“கனம் நீதிபதி
அவர்களே, எனது கிளையண்டுகள் ஒரு அமைப்பை உருவாக்கி இருக்கிறார்கள். அந்த அமைப்பின்
பெயர் கள்ளக்காதலர் சங்கம். முறைப்படி பதிவு செய்யப்பட்டு, அரசிடம் அனுமதி பெறப்பட்டிருக்கிறது”
என்றார் எட்டப்பன் வக்கீல்.
எல்லோரும் எட்டப்பனைப்
பார்த்தனர். டிவி கேமராக்கள் அனைத்தும் எட்டப்பனை ஜூம் செய்தன. டிவி பார்த்துக் கொண்டிருந்த
மக்களில் 90 சதவீதம் பேர் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தனர்.
(** இங்கு ஒரு
விஷயத்தை உற்றுக் கவனித்தீர்களா வாசகர்களே. நிமிர்ந்து உட்கார்ந்தவர்கள் எல்லோரும்
கள்ளக்காதல் சங்கத்தின் ரகசிய உறுப்பினர்கள். அவர்களின் வக்கீல் எட்டப்பனோ நிமிர்ந்து
நிற்க முடியாதவர். கோவை தங்கவேல் தர்மம் தர்மம் என்றுச் சொல்லிக் கொண்டிருப்பார் அல்லவா?
அவர் இந்த நாவலின் இந்த டிவிஸ்டை உற்று நோக்க வேண்டும். தர்மம் இல்லாத வக்கீல் கூனிப்போய்
இருப்பதைக் கவனிக்க வேண்டும். ஆகவே அடியேனும் தர்மத்தைதான் இங்கு போதிக்கின்றேன் என்பதைப்
புரிந்து கொள்ள வேண்டும். இராமாயணத்தில் ஒரு கூனி, இந்த நாவலில் ஒரு எட்டப்பன். சரியா
மிஸ்டர் கோவை தங்கவேல் அவர்களே. **)
சரி
இனி வழக்குக்கு வந்து விடுவோம்.
நீதிபதி
சங்கருக்கு ஏண்டா, இந்த வழக்கை விசாரணை செய்ய எடுத்தோம் எனத் தோன்றியது. ஆனாலும் கட்டழகு
டைப்பிஸ்ட் கவிதாவைப் பார்த்தார். கவிதாவின் கண்கள் சங்கரைப் பார்க்க, சங்கரின் கண்ணுக்குள்
மின்னல் அடித்தது. விசாரியுங்கள் என்று கண்ணாலே அம்பு விட, அந்த அம்பு நீதிபதி சங்கரின் விழிகளுக்குப் பாய்ந்து நின்றது.
“கனம்
நீதிபதி அவர்களே, இந்தக் கொரானா மனித உரிமைகளை மீறுகின்றது. மனிதர்களுக்கு இந்திய அரசியலமைப்புச்
சட்டம் வழங்கிய அடிப்படை உரிமையைப் பறிக்கிறது. ஒவ்வொரு குடிமகனின் உரிமை தாம் விரும்புவதைச்
செய்வது. எனது கிளையண்டுகள், அவரவர் கள்ளக்காதலிகளையும், காதலர்களையும் சந்திக்க முடியாமல்
திண்டாடுகிறார்கள். ஒவ்வொருவரும் தங்கள் வீடுகளிலிருந்து வெளி வர இயலாமல், தங்கள் கள்ளகாதலை
வளர்க்க முடியாமல், எங்கே தங்கள் காதலின் புனிதச்செடி பட்டுப்போகுமோ என்ற கவலையில்
ஆழ்ந்திருக்கிறார்கள். கொரானாஒ எல்லோரையும் வீட்டுக்குள் இருக்க வைத்து விட்டது. இதனால்
என்னென்ன பிரச்சினைகள் உண்டாகி உள்ளது தெரியுமா உங்களுக்கு?”
நீதிபதி
சங்கருக்கு கூன் வக்கீல் எட்டப்பனின் வாதம் சுவாரசியமாக இருந்ததால் அவரும் நிமிர்ந்து
உட்கார்ந்தார். டைப்பிஸ்ட் கவிதாவை ஒரு கண்ணால் லுக் விட்டு விட்டு, எட்டப்பனை நோக்கினார்.
எதேச்சையாக
டிவியைப் பார்த்த பூஜா ஹெக்டேவுக்கு இந்த வழக்கின் லைவ் கன்னில் பட, டிவியில்
அர்னாப் கோஸ்வாமி இந்தியாவே இந்த வழக்கை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது என்று லைவ்
வர்ணனை செய்து கொண்டிருந்தார். அந்த நேரம் பார்த்து கேமரா நீதிபதி சங்கரைக் காட்டியது.
அவரைப் பார்த்தவுடன் பூஜா ஹெக்டேவுக்கு பிடித்து விட்டது. நீதிபதி செல்வம் விரும்பிய
பூஜா ஹெக்டேவுக்கே நீதிபதியைப் பிடித்துப் போன விஷயம் தெரியாமல், கோர்ட்டில் கூனன் வக்கீல் எட்டப்பனைப்
பார்த்துக் கொண்டிருந்தார் அவர்.
(வாசகர்களே, உங்களின் பார்வை பூஜாவின் முகத்தில் இருக்க வேண்டும் என்பதை மறந்து விடாதீர்கள்)
இடைவேளைக்குப்
பிறகு தொடரும்....
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.