குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, April 28, 2020

கொரானா சொல்லப்படாத உண்மைகள்


அமெரிக்காவில் பத்து லட்சத்துக்கும் அதிகமாக கொரானாவில் பாதிப்படைந்து, அதில் 50000 பேர் உயிரிழப்பு நடந்திருக்கிறது என்கிறது செய்தி. இதை நம்பலாம். ஏனென்றால் அங்கு ஓரளவு பத்திரிக்கை முதலாளிகள் தைரியசாலிகள்.

ஆனால் தமிழகத்திலோ, இந்தியாவிலோ வரக்கூடிய செய்திகளை நம்பக் கூடிய அளவுக்கு மீடியாக்கள் இதற்கு முன்னால் உண்மையான செய்திகளை வெளியிடவில்லை. அரசு என்ன சொல்கிறதோ அதைத்தான் சொன்னார்கள்.

கோவையில் உண்மையை வெளியிட்ட சிம்ப்ளிசிட்டி இணைய பத்திரிக்கையின் நிர்வாகி கைது அதை வெளிக் கொணர்ந்து இருக்கிறது. ஊருக்கு உண்மையைச் சொன்னால் கைது. தமிழக அரசின் கண் அசைவுகளுக்கு ஏற்ப தான் பத்திரிக்கைகளும், டிவிக்களும் செய்திகளை வெளியிடுகின்றன என்பதில் யாருக்கும் எந்த வித சந்தேகமும் தேவையில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.

என்ன உண்மை என உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் சொல்லுங்களேன் என்று கேட்க தோன்றும். அந்தளவுக்கு தரவுகளை என்னால் திரட்ட முடியாது. செய்தி தாள்களில், இணையங்களில், அரசு உத்தரவுகளில் வரக்கூடிய ஒரு சில செய்திகளை படிக்கும் போது பூனைக்குட்டி வெளியில் வந்து விடுகிறது. உண்மையை மறைக்கலாமே தவிர முற்றிலுமாக தவிர்க்க முடியாது. அது உண்மையின் இயல்பு. பொய் பல அலங்காரங்களுடன் வெளியிடப்படும் போது, அந்தச் செய்தியில் உண்மை எங்கோ ஓரிடத்தில் ஒட்டிக் கொண்டு விடும். அதைக் கண்டுபிடிக்க வேண்டும்.

அம்மா உணவகம் மூலம் இலவச உணவு அளிக்கப்படுகிறது என்கிறது அரசு. அதைக் கிண்டல் செய்து கார்ட்டூன் வரைகிறது ஆர்.;பி.ஐ.இயக்குனரின் பத்திரிக்கை துக்ளக். மக்களுக்குப் பதிலாக திமுக என எழுதி இருக்கிறார்கள். எழுத்துப் பிழை அல்ல. கருத்துப் பிழை. உண்மை மக்கள் பட்டினியாக கிடக்கிறார்கள் என்பது.
நேற்று முதலமைச்சர்களுடன் பிரதமர் பேசிய போது, வரும் ஜூன், ஜூலை மாதங்களில் தொற்று அதிகரிக்கும் எனச் சொன்னதாக, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பகிர்ந்து கொண்டதாகச் செய்திகள் படிக்க கிடைக்கின்றன. அப்போது இன்னும் இரண்டு மாதங்களுக்கு லாக் டவுன் இருக்கலாம் என சிந்தனை வருகிறது.


கேரளா முதலமைச்சர் பி.எம்முக்கு லெட்டர் எழுதுகிறேன் எனச் சொல்லி, ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. உங்களால் எங்களுக்கு எந்த வித நன்மையும் இல்லை என்பதற்காக அவர் நேரத்தை விரயம் செய்ய விரும்பவில்லையோ என நினைப்பு வருகிறது.

கொரானா டெஸ்டிங்கை இரண்டு நாட்கள் நிறுத்தி வைக்கிறோம் என தமிழக அரசு அறிவிக்கிறது. அப்போது அரசு அறிவிக்கும் தொற்று எண்ணிக்கை சரியானதாக இருக்காது என அறிவு சொல்கிறது. தொற்று எண்ணிக்கை எவ்வளவு எனத் துல்லியமாக அறிவிக்க டெஸ்ட் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் தொற்று எண்ணிக்கை குறைவாகத்தானே இருக்கும்? ஆக தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் ஒரு முடிவுக்கு வர வேண்டி உள்ளது.

பிரதமர் மோடி அவர்கள், பசியோடு இருப்பவர்களுக்கு உதவுங்கள் என்று ஏழு கட்டளைகளைப் பின்பற்றும்படி ரேடியோவில் பேசுகிறார். ஆக மத்திய அரசு மக்களுக்கு உதவாது என்று சொல்லாமல் சொல்கிறார் என்று தெரிகிறது.

நாங்கள் வரியை மட்டும் வசூலிப்போம். அதை குறித்த காலத்துக்குள் மாநில அரசுக்கு கொடுக்க மாட்டோம். மக்கள் செத்துப் போனாலும் கூட நாங்கள் கவலைப்பட மாட்டோம். ஆனால் பெரிய நிறுவனங்கள் நடத்தும்  முதலாளிகளுக்கு வட்டி, வரிகளுக்கு தள்ளுபடி வழங்குவோம் என்று சொல்கிறாரோ என்ற முடிவுக்கு வர வேண்டி இருக்கிறது.

எக்கனாமி நன்றாக இருக்கிறது என்று பேசுகிறார். நாமும் நம்புகிறோம். ஆனால் இந்தியாவில் மியூட்சுவல் ஃபண்ட் பிசினஸ் செய்யும் டெம்பிள்டான் நிறுவனத்திற்கு 50000 கோடி நிவாரணம் அறிவிக்கிறது ஆர்.பி.ஐ. நன்றாக இருக்கிறது எக்கனாமி என்று ஒரு பக்கம் பேசி முடிப்பதற்குள், இந்த செய்தி வெளி வருகிறது. மியூட்சுவல் ஃபண்ட்ஸ் அடிவாங்கினால் மொத்தமாக ஷேர் மார்க்கெட் படுத்து விடும் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மை பின் ஏன் டெம்பிள்டானுக்கு ஆர்.பி.ஐ. நிவாரணம் வழங்குகிறது? ஆக இந்தியப் பொருளாதாரத்தில் பிரச்சினை இருக்கிறது என தெரிகிறது. இனி பிரதமர் சொல்வதை நம்பலாமா வேண்டாமா என்று அறிவு ஆராய்ச்சி செய்கிறது.
தமிழகத்தை பி.ஜே.பி தான் ஆள்கிறது என்கிறார்கள். அப்படியெல்லாம் இல்லை என்பார்கள். பால்பாக்கெட் கெட்டுப் போனவுடன், அதை சி.எம்க்கு டிவீட் செய்கிறான். ஆஃப்டர் ஆல் ஒரு கூத்தாடிக்கு வீட்டுக்கே பால் பாக்கெட் கொண்டு போய் கொடுக்கப்படுகிறது. வாங்கியவன் பேசாமல் இருந்திருக்கலாம். வேண்டுமென்றே அசிங்கப்படுத்த வேண்டும் என்பதற்காக, அதை டிவீட் போடுகிறான். ஒரு டிவீட்டுக்கு அரசு எனக்கு எவ்வாறு வேலை செய்கிறது எனப் பாருங்கள் என தற்பெருமைக்காக, கேவலப்படுத்துகிறோம் என்று தெரிந்தே அதைச் செய்கிறான் அவன். இப்போது நம் தமிழகத்தின் முதலமைச்சருக்கு நெட்டில் வேறு பெயர் வைத்து அழைக்கிறார்கள். இந்தச் சம்பவம் உண்மையில் சென்ஸார் போர்டில் உறுப்பினராக இருக்கும் ஒரு கூத்தாடிக்கு இந்த அரசு பயந்து கொண்டிருக்கிறதோ என்று தோன்றுகிறது. ஆக பி.ஜே.பி தான் தமிழகத்தை ஆள்கிறது என்ற செய்தியில் உண்மை இருக்கிறது என்று நம்பிட வேண்டியிருக்கிறது.
இப்படித்தான் வெளியிடப்படும் செய்திகளில் இருக்கும் பொய்களைக் களைந்து உண்மைகளைக் கண்டுபிடிக்க வேண்டும். உலகம் முழுவதும் இதே கதைதான். ஏதோ இந்தியாவில் மட்டும் தான் இப்படியெல்லாம் நடக்கிறது என்று நினைத்து விட வேண்டாம்.

ஒரு நண்பர் என்னிடம், அரசு கொரானா இல்லை என்று அறிவித்த பிறகு, பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பலாமா வேண்டாமா என்று கேட்டார்.
கொரானாவுக்கு மருந்து இருக்கிறது என்று உறுதியாக தெரியும் வரையில் அனுப்புவதில் எனக்கு உவப்பில்லை. ஒரு வருடம் லீவ் போட்டு விட்டால் போச்சு. அரசுக்கு கொரானாவில் செத்தார் என்பது அது அறிவிக்கும் எண்ணிக்கையில் ஒரு எண் கூடும். அவ்வளவுதான். அது அவர்களுக்கு எண் மட்டுமே. ஆனால் நமக்கோ அது ஒரு உயிர். நம் வாழ்வின் துடிப்பு. நம் வாழ்க்கை. டிப்ளமேட்ஸ், அரசியல்வாதிகள் தப்பித்துக் கொள்வார்கள். ஆனால் பிறரின் வாழ்க்கை? யாருக்கு யார் உத்தரவாதம் தர முடியும்? நாம் தான் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்.

இனி என்னதான் செய்வது? பிள்ளைகளின் எதிர்காலம் என்ன? நம் எதிர்காலம் என்னவாகும்?

பசிக்கு உணவு அதற்காக உழைப்பு, உடலுக்கு உடை, இருக்க ஓர் இடம். இது போதும். கடவுள் மனிதனை இயற்கையோடு ஒன்றி வாழத்தான் படைத்தார். காசு சம்பாதிக்க அல்ல.

பின்னே இந்த அரசியல்வாதிகளை என்ன செய்யலாம்? இனி வரும் காலங்களிலும் காசு வாங்கிக் கொண்டு ஓட்டுப் போடலாம். எவனாது அரசு இயந்திரத்தை இயக்க வேண்டுமே?

நமக்குத்தான் தைரியம் இல்லையே. கேள்வி கூட கேட்க மாட்டோமே? தெருவில் இறங்கி நிற்க கூட தைரியமில்லையே? எக்கேடு கெட்டால் தான் நமக்கு என்ன? கூனிப் போய் விட்டது மனசும் உடம்பும் நமக்கு.

ஆக, அரசு தன்னால் இயன்றதைச் செய்யும். அது எல்லோருக்குமானதாக இருக்காது. மக்கள் தான் தங்களை காத்துக் கொண்டு உயிரோடு இருக்க வேண்டும். இல்லையென்றால் சுடுகாடு. மக்கள் உயிருடன் இருந்தால் ஓட்டுப் போட்டு ஜன நாயகத்தை நிலை நாட்டலாம். வரி கொடுக்கலாம். உயிருடன் இல்லாது செத்துப் போனால் அது அரசின் புள்ளி விபரங்களுக்கு உதவும். இத்தனை பேர் உயிருடன் உள்ளார்கள். இத்தனை பேர் இறந்து விட்டார்கள் என்று அரசு கணக்குகளை டிவியில் வெளியிடும். நிச்சயமாக இறப்பு விகிதம் குறைவாகத்தான் இருக்கும். உண்மைக்கும் அரசியலுக்கும் தூரம் அதிகமோ அதிகம்.

நீங்கள் புள்ளி விபரங்களில் எதுவாக இருக்க விரும்புகின்றீர்கள் என்பது உங்களின் அறிவுக்கு உட்பட்டது.

ஆகவே நண்பர்களே, இதுவும் கடந்து போகும் என்ற எதிர்மறைச் சிந்தனையில், விதி இதுதான், கடவுளின் விருப்பம் இது, இயற்கையின் சீற்றம் இது என்று வசதிக்கு ஏற்றபடி சிந்தித்து முடிவெடுப்போம்.

குறிப்பு : செய்திகளை உற்றுக் கவனியுங்கள். உண்மையை உணர்ந்து கொள்வோம். நம்மையும், நம் உறவுகளையும், நண்பர்களையும் காப்பாற்றுவோம்.

வாழ்க நலமுடன்…வளமுடன்…!!

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.