குரு வாழ்க ! குருவே துணை !!

Sunday, April 26, 2020

சினிமா வழியான ரகசிய தாக்குதல்


இரக்கம் மானுட உலகில் மட்டுமல்ல, விலங்குகளின் வாழ்விலும் வெளிப்படும் ஜீவகாருண்யத்தின் உணர்வு நிலை.

நீங்கள் யுடியூப் வீடியோக்களில் பார்த்திருக்கலாம். பல விலங்குகள் தன் இனம் அல்லாத பல உயிரினங்களைப் பாதுகாப்பதும், பாலூட்டி வளர்ப்பதுமான பல காட்சிகளை. பார்க்க விரும்பினால் மீண்டும் தேடிப்பாருங்கள். ஆயிரக்கணக்கில் வீடியோக்கள் கொட்டிக் கிடக்கின்றன.

தண்ணீரிலிருந்து வெளியில் வந்து துடித்துக் கொண்டிருந்த மீனை ஒரு பறவை மீண்டும் தூக்கி தண்ணீருக்குள் போட்ட வீடியோவைக் கூட நீங்கள் பார்த்திருக்கலாம். பறவைக்கு மீன் ஆகாரம். பசியை விட இரக்க உணர்வு அப்பறவையிடமிருந்து உடனடியாக வெளிப்பட்டது. பசி, தாகம், கோபம் இவை எல்லாவற்றையும் விட இரக்க உணர்வு, எல்லா உயிரினங்களிடத்திலும் ‘சட்’டென்று வெளிப்படுபவை.

எத்தனையோ பேர் சாலைகளில் அடிபட்டுக் கிடப்பவர்கள் பிழைக்க வேண்டுமென பிரார்த்திப்பார்கள். அது போன்ற சம்பவங்களைப் பார்க்கும் போது, மனதுக்குள் சட்டென்று கவிழும் இரக்க உணர்வு உடல் முழுதும் வியாபித்து மனம் துயரத்தில் வீழும் அல்லவா?

நாய் – கற்காலத்திலிருந்து இதுவரையிலும் மனிதனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் ஈடு இணையற்ற விலங்கு. வேட்டைக்காகவும் ஆடு,மாடு மந்தைகளைக் காப்பது முதற்கொண்டு, மனிதனைக் காத்து வரும் அற்புதமான இறைவனின் படைப்பு அது. காவல்காரன் கூட துரோகி ஆகலாம். நாய்கள் அப்படி ஆவதில்லை. அதனுடைய எஜமானனை எவராவது அடிக்க கை ஓங்கினால் பட்டென்று கவ்வி விடும். ஒரு சில நாய்கள் தலையைக் கவ்வி தனியாகப் பிடுங்கி எடுத்து விடும் கோபம் கொண்டவை. தன் எஜமானன் மீதான அன்பினால் அவைகள் சக மனிதர்களை கொல்லக் கூட தயங்காது. மனிதனின் மீது ஜீவகாருண்யத்தைக் காட்டுவதில் நாய்க்கு நிகராக தாயைத்தான் சொல்லலாம்.

முயலை வாயில் கவ்வி, அதை தன் எஜமானனிடம் கொண்டு வந்து கொடுத்து விட்டு, அவர் போடும் கறிக்காக காத்துக் கிடக்கும் அந்த விசுவாசமான நாய். கணவன் இறந்தால் கூட பிள்ளைகளோ, மனைவியோ கூட இறந்து விடுவதில்லை. ஆனால் பாசமுள்ள நாய்கள் உண்ணாமல் பட்டினி கிடந்து செத்துப்போன கதைகளை நாமெல்லாம் கேட்டிருக்கிறோம்.

ஜீவகாருண்யம் மனிதனுக்கும் விலங்குகளுக்கும் ஒரே உணர்வாகத்தான் வெளிப்படுகிறது.

அந்த இரக்கம் எனும் உணர்வு மனிதனிடத்தில் அவனறியாமல் அவனைப் பல சங்கடங்களில் சிக்க வைத்து விடும். பல பேருக்கு இந்த அனுபவம் இருக்கலாம். நாமெல்லாம் இன்றைக்கு சொல்லொண்ணா துயரில் ஆழ்ந்திருக்க காரணமும் அந்த இரக்க உணர்வுதான்.

மனிதனின் இரக்க சுபாவத்தை வெளிப்படுத்த வைத்து, அதன் விளைவாக தன்னை ஒரு கடவுள் ரேஞ்சுக்கு உயர்த்தி, அதன் மூலம் ரசிகனின் பாக்கெட்டில் இருக்கும் பணத்தை அவனை அறியாமலே, அவனுக்குப் புரியாமலே சுரண்டி கோடிகளைக் குவித்து மனித குலத்துக்கே கேடு விளைவிப்பதில் சினிமாவுக்கு நிகராக வேறு ஒன்றையும் சுட்டிக் காட்ட முடியாது.

தீவிரவாதத்துக்கும் எல்லாம் மேலானது இது. மனிதனை அவன் அறியாமலே அடிமையாக்கி, அது தான் உண்மையான மகிழ்ச்சி என நம்ப வைக்கும் செயலை தீவிரவாதத்துக்கும் எல்லாம் உயர்ந்த தீவிரவாதம் என்று தான் சொல்ல வேண்டும் அல்லவா?

ஒவ்வொரு மனிதனின் உணர்வுக்குள் அசுர தாக்குதலை நிகழ்த்தி, அவனறியாமலே அடிமையாக்கி விடுகிறது சினிமா. மனிதனின் உளவியலில் வெகு நுட்பமான வகையில் தாக்குதல் நடத்தி, அவனக்குப் புரியாமலே உணர்வினூடே பதிந்து, அதன் பலனை அட்சர சுத்தமாய் அறுவடை செய்து விடுகிறார்கள் புத்திசாலி சினிமாக்காரர்களில் பலர்.

சினிமாக்களில் ஹீரோக்கள் கொடுமையான பல வேதனைகளை வில்லன்களால் அனுபவிப்பார்கள். ஹீரோக்களின் அம்மா துடிக்கத் துடிக்க கொல்லப்படுவார். தங்கைகள் ஹீரோவின் முன்னாள் கற்பழிக்கப்படுவர். வில்லன்கள் செய்யும் செயல்களால் ஹீரோ பெரும் துயரம் கொள்வார். கண்ணீர் வடிப்பார். வேதனையில் விம்முவார். இப்படித்தான் தமிழ் சினிமாவிலும், தெலுங்கு சினிமாவிலும் பல படங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

திரையின் முன்னால் காசைக் கொடுத்து, படம் பார்த்துக் கொண்டிருக்கும் ரசிகனின் நெஞ்சுக்குள் ஹீரோவின் மீதான இரக்கமும், அவன் எது செய்தாலும் சரி, ஏன் இன்னும் ஹீரோ வில்லனைக் கொல்லாமல் இருக்கிறான் என்ற எண்ணமும் எழுவது திண்ணம் அல்லவா? 

இரக்க சுபாவத்தின் இன்னொரு முகம் கொடூரம். ஹீரோ வில்லனைக் கொன்றாலும் பரவாயில்லை என்று மனம் கோபம் கொள்ளும். இன்றைக்கு ரசிகக் குஞ்சுகள் தன் நடிகன் பெரியவன் என டிவீட், ஃபேஸ்புக்கில் எழுதி, மீம்ஸ் போட்டுக் கொண்டிருப்பார்கள் என்ன காரணத்தினால் நாம் அவ்வாறு செய்கிறோம் எனத் தெரியாமலே. உண்மையில் ரசிகக் குஞ்சுகள் ஒரு வித கிளர்ச்சியின் பாதிப்பில் இப்படியான செயல்களைச் செய்கிறார்கள் என அவர்கள் அறிவதில்லை.

அது மட்டுமின்றி, பருவ வயதில் சக பெண்களை ஏறெடுத்துப் பார்க்கவும் முடியாமல் தவிக்கும் இளவட்டங்களின் முன்னால், அழகு மிளிரும் பாவைகளுக்கு அரைகுறை ஆடைகள் உடுத்தி அவளின் கழுத்தில் கை வைத்து தடவி, தொப்புளில் முட்டை சுட்டு, பிசைந்து, பிசைந்து, கடித்து, நக்கி, உறிஞ்சி இன்னும் என்னென்ன சேட்டையெல்லாம் செய்யலாமோ அத்தனையும் செய்து ஹீரோயிசத்தைக் காட்டுவது போல, ரசிகனின் ஏக்கத்தைத் தீர்ப்பார் ஹீரோ. தவித்த வாய்க்கு தண்ணீர் கொடுத்தவரை மறக்க முடியுமா? அது போல காம உணர்வின் வடிகாலுக்கு உதவும் ஹீரோ ரசிகனின் உள்ளத்தில் ஒட்டிக் கொண்டு விடுகின்றார்.

வெள்ளைதுணியில் ஒளிரும் பிம்பத்தைப் பார்க்கும் ரசிகக்குஞ்சுகளின் காம உணர்ச்சிகள் தூண்டப்பட்டு, அந்த இன்பத்தினால் எழும் குதூகலத்தில் ஹீரோவின் அடிமையாகி விடுவார்கள். பின்னே என்ன ஹீரோவின் மீதான இரக்கம், அவன் செய்யும் காமச் சேட்டைகள் இவை ஒவ்வொரு ரசிகக் குஞ்சுகளின் மனதில் பசுமரத்தாணி போல பதிந்து விடும். இதில் ஆண், பெண் வேறுபாடுகள் இல்லை. ”முதல் நாள் முதல் சோ” என்பார்கள் அல்லவா ஒரு சில ரசிகர்கள்? அவர்கள் அனைவரும் இந்த விதமான காட்சிகளால் தூண்டப்பட்டவர்கள் தான்.

இவர்களைப் போன்றவர்கள் வீட்டுக்கும், நாட்டுக்கும், சமூகத்திற்கும் கேடு விளைவிப்பவர்கள். இவர்கள் தான் என்ன செய்கிறோம் என்று அறியாத அடிமைகளாகி, ஒப்புக்கு வாழ்வார்கள். ஒரு சிலர் காலப் போக்கில் உண்மையை உணர்ந்து கொள்வார்கள். உண்மை புரிந்த உடன் விலகி விடுவார்கள். பெரும்பான்மையானவர்கள் தங்கள் ஆயுள் காலம் முடியும் வரை அடிமைகளாக இருந்து கொண்டு, அதற்கு பெயர் “ரசிகன்” என்றுச் சொல்லிக் கொண்டு திரிந்து செத்துப் போவார்கள். 

இந்த உண்மையை அட்சர சுத்தமாக புரிந்து கொண்டவர்களில் முதன்மையானவர்கள் எஸ்.ஏ.சந்திரசேகரும், பாலசந்தரும். பெரும்பாலும் சினிமாக்களில் ஒரு ஜாதி ஆதிக்கம் அதிகமிருக்கும். அவர்கள் எல்லா ஃபீல்டுகளிலும் இருப்பார்கள். அவர்களின் நோக்கம் வேறு. முன்பே எழுதி இருக்கிறேன் தேடிப்பிடித்துப் படித்துக் கொள்ளுங்கள்.

எஸ்.ஏ.சந்திரசேகரின் ஆரம்பகாலப் படங்களில் கற்பழிப்புக் காட்சிகள் அதிகமிருக்கும். சட்டத்தைக் கேள்வி கேட்கும் படங்கள் எனச் சொல்வார் அவர். சினிமா வசனங்கள் நாட்டின் அரசியலமைப்பினைக் கேள்வி கேட்கும். ஓட்டைகளை அலசும். 

ஆனால் உண்மை என்ன? அரசியலமைப்பு எல்லோருக்கும் நன்மை செய்வதற்காகத்தான் உருவானது. ஆனால் அதை பயன்படுத்துவோரால் தான் அது சிறுமை பெறுகிறது. சினிமாவில் என்ன சொல்வார்கள் தெரியுமா? மொத்த அரசியலமைப்பே தவறு என்பார்கள். ஆட்கள் தவறு என்று சொல்வதை விட அரசியலமைப்பு மீது தாக்குதல் நடத்தி ஹீரோ வேஷத்துக்கு பலம் சேர்ப்பார்கள். ஹீரோ பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் சண்டை போட்டு நாட்டைக் காப்பாற்றுவார்.

கற்பழிப்புக் காட்சிகள் மன வக்கிரத்தின் உச்ச நிலை. ஆனால் ரசிகனுக்கு அது ஒரு வேறு விதமான உணர்வினை உண்டாக்க்கி கிளர்ச்சி தன்மையை கிளறி விடும். அவருக்கு என்ன தேவை எனில், இவரின் அடுத்த படத்தில் எந்த நடிகையை யார் கற்பழிக்கப் போகிறான் என ரசிகன் பார்க்க வர வேண்டுமென்பது. திரையில் காட்டுவார். ரசிகன் மயங்குவான். அதைத் தொடர்ந்து எஸ்.ஏ.சந்திரசேகரின் அடுத்த படங்களுக்கு ரசிகன், ‘முதல் நாள் முதல் சோ” என்று அலைய ஆரம்பித்து விடுவான். அவர் என்ன எதிர்பார்த்தாரோ அதை மிகச் சரியான வகையில் ரசிகனின் நெஞ்சில் விதைத்திருப்பார். நாட்டுக்கு நல்லது செய்ய அல்ல. எவன் எக்கேடு கெட்டாலும் சரி, எனக்கு பணம் கொட்ட வேண்டும். அதற்கு இது ஒரு வழி. அவ்வளவுதான்.

அதுமட்டுமல்ல, இன்று தமிழகத்தில் அரசியலுக்கு வரப்போகிறார் என்று அவர் தன் மகனுக்கு அவர் கொடுக்கும் அலப்பறைகள் ஊரெல்லாம் தெரிந்த கதை. தன் மகனை வைத்து எஸ்.ஏ.சந்திரசேகர் எடுத்த ஆரம்பகாலப் படங்கள், விசிலடிச்சான் குஞ்சுகளின் காம உணர்வைத் தீண்டி விடும் தன்மையானவை. ரசிகன் என்றொரு படத்தில் ஃப்ளூபிலிம் காட்சியை விஜய் பார்ப்பது போல வைத்திருப்பார். ஆங்காங்கே, அவ்வப்போது பார்வையாளன் கிளர்ச்சி அடையும் படி காட்சிகளை வைப்பார்கள். படத்தில் ஒன்றும் இருக்காது. ஆனால் சீன்கள் நிறைய இருக்கும். அதில் விஜய் நடிக்கும் பாடல் காட்சியில் நடிகை கருப்பு டவுசர் போட்டுக் கொண்டு மழையில் நனைந்து கட்டிப் பிடித்து பின்புறத்தை உரசி, ஆட்டிக் கொண்டிருப்பார். பாத்ரூம் கதவுக்குள் மாமியாரைத் தடவுவார் விஜய். 

பின்னர் போகப் போக காதலுக்காக தியாகி ஆவது, ஊருக்கு நல்லது செய்வது போல படங்களை விடுவார்கள். இப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பார்வையாளன் மனதில் ஹீரோவை கடவுள் ரேஞ்சுக்கு உயர்வடைய வைப்பார்கள். 

அதுமட்டுமல்ல, காசு கொடுத்தால் கூவும் ஒரு சில விவரமான ரசிகர்களை இவர்கள் கண்டுகொண்டு, இவர்களே காசு கொடுத்து பாலாபிஷேகம், பீராபிஷேகம் நடத்துவார்கள். தமிழ் நாட்டில் இருக்கும் சினிமா தியேட்டர்கள் 1000 என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த 1000 தியேட்டரில் 100 பேர் ரசிகக் குஞ்சுகளாக இருப்பார்கள். மொத்தம் 100000 - ஒரு லட்சம் பேர் குஞ்சுகளாய் மாறி குதூகலித்து கிடப்பார்கள். ஆனால் டிவியில் பார்த்தீர்கள் என்றால் கோடிக்கணக்கில், உலகமெங்கும் என அள்ளி விடுவார்கள். இதன் அரசியல் வேறு. நேரம் வரும் போது எழுதுகிறேன்.

தமிழ் ஊடகங்களில் வேலை செய்யும் வாழவே தகுதியற்ற பல அயோக்கிய சிகாமணி நிருபர்களை சூட்டிங்க் இடையில் வர வைத்து ஜூஸ் கொடுப்பது, துணை நடிகையை அறிமுகப்படுத்தி வைப்பது, ஹீரோயினை அறிமுகப்படுத்தி விடுவது போன்ற அக்மார்க் அயோக்கியத் தனங்களைச் செய்வார்கள். பணம் கொடுத்து ஆஹா ஓஹோ என எழுதச் செய்வது போன்ற பல்வேறு நரித்தந்திரங்களைச் செய்வார்கள் மீடியாக்காரன் போன்ற ஒரு அக்மார்க் அயோக்கியனை நீங்கள் எங்கேயும் பார்த்திருக்க முடியாது. மக்களுக்கு உண்மையைச் சொல்ல வேண்டியவர்கள் சொல்வதே இல்லை. அப்படியானவர்களை நாம் இப்படித்தான் குறிப்பிட வேண்டும் அல்லவா? நல்ல நிருபர்கள் கோபம் கொள்ள வேண்டாம்.

பாலசந்தர் கதை வேறு. அதற்கான களம் வரும் போது எழுதுகிறேன்.

உங்களுக்கு நினைவில் இருக்கலாம் ஒரு ஹிந்தி பாட்டு. “சோலி கே பீச்சா கியா ஹே” இந்தப் பாட்டில் நடனமாடிய நடிகை மாதுரி தீட்சித் ஒரு காலத்தில் ஹிந்தி சினிமா உலகில் நிரந்தர கதாநாயகியாக இருந்தார். இந்தப் படம் வந்த போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஜாக்கெட்டுக்குள் என்ன இருக்கு என்று அர்த்தம் தொனிக்கும் இரட்டை அர்த்தப் பாடல் வரி இது. அதன் கிளர்ச்சி காரணமாக, ஹாஸ்டலின் புக் செல்ஃபில் மாதுரி தீட்சித் புகைப்படத்தை வைத்து ரசித்துக் கொண்டிருந்தேன். இதே போன்ற சம்பவங்கள் உங்கள் ஒவ்வொருவருக்கும் நடந்திருக்கும். இப்போது யோசித்துப் பாருங்கள். எந்த ஒரு நிகழ்வினால் ஒரு நடிகையையோ அல்லது நடிகரையோ பிடித்திருக்கிறது என. மனதுக்குள் ஒரு தெளிவு பிறக்கும். எந்த ஒரு படம் பார்த்த பிறகு நாம் ரசிகனாய் மாறினோம் என்ற விஷயம் பிடிபடும். பின்னர் மனது தெளிவாகி விடும்.

இது ஒரு மன நோய். ஆம் என்னைப் பொறுத்தவரை சினிமா ஹீரோயின் அல்லது ஹீரோவின் மீதோ வெறித்தனமான அன்பு வைத்திருக்க காரணம் மன நோய். ரசிகனாய் இருக்கும் ரசிகனுக்கு ஒரு தம்பிடி லாபம் இல்லை. 

இங்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.ரசிகன், என் ரசிகன், உங்களால் தான் நான் என்றெல்லாம் சொல்லும் ஹீரோக்கள் தன் படங்களில் எந்த ரசிகனுக்கு வாய்ப்புக் கொடுத்து அவனையும் நடிகனாக்கி அழகு பார்த்தார்கள்? சொல்லுங்கள் பார்ப்போம். ரஜினி அவரின் மகள்கள், சகலையின் மகன், அவரின் நண்பர்களின் வாரிசுகள் இப்படித்தான் வாய்ப்புக் கொடுப்பார். கமலோ சொல்லவே வேண்டியதில்லை. ரஜினி ஒரு படி மேலே. தன் படம் ஜப்பானில் ஓடுகிறது என்பதற்காக ஜப்பான்காரப் பெண் ஒருத்தியை ஒரு படத்தில் நடிக்க வைத்தார். இதுதான் அக்மார்க் பிழைப்புதனம். 

ரசிகனாக இருப்பது என்பது மன நோய். அந்த மன நோயால் பீடிக்கப்பட்டவர்கள் மருத்துவம் செய்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் ரசிகனின் பாக்கெட்டில் இருக்கும் பணம் ஹீரோக்களின் கல்லாபெட்டிக்குள் சென்று கொண்டே இருக்கும்.

இப்போது நிதர்சனத்துக்கு வாருங்கள்.

இந்திய அரசியல் பல காலங்களில் பிணத்தின் மீது கட்டமைக்கப்பட்ட ஆட்சிகளாக இருந்தன அல்லவா? இந்திராகாந்தி சுடப்பட்டு கொல்லப்பட்டார். ராஜீவ் காந்தி மீது இந்திய மக்களுக்கு இரக்கம் கடலெனப் பொங்கி பிரவாகமெடுத்து, அவரைப் பிரதமராக்கி விட்டுத்தான் அமைதியானார்கள். ராஜீவ் கொல்லப்பட்டார், மீண்டும் காங்கிரஸ் ஆட்சி. இப்படி ஒவ்வொரு மரணத்தின் பின்பும் மக்களுக்கு எழும் இரக்கமென்னும் சுபாவத்தினாலே அறுவடைகளை அழகாகச் செய்து கொண்ட வரலாற்று நிகழ்வுகளை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம்.

இதற்கெல்லாம் காரணம் நம் மனதில் இருக்கும் கடவுள் தன்மை கொண்ட இரக்கம் எனும் உணர்வுதான். இல்லையென்று உங்களால் மறுக்கவே முடியாது.

ஒரு புலி உங்களைக் கொல்ல வருகிறது. அதன் காலில் அடிபட்டு ரத்தம் வருகிறது. அதைப் பார்க்கும் போது, அய்யோ பாவம் என தோன்றும். அது உங்களைக் கொல்ல வருகிறது என்றாலும் கூட, நொடியில் அந்த எண்ணம் தோன்றி மறையும். அந்த நொடி புலிக்குப் போதும். இரையாகி விடுவீர்கள் அல்லவா? அது போன்ற உணர்வு எழும் போதெல்லாம், அது சரிதானா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். பூனை வளர்ப்பதற்காகவெல்லாம், அது பசியாக கிடந்து அல்லலுறுகிறதே என்பதற்காகவெல்லாம் இரக்கப்பட்டால், காசு தான் கரியாகும். இமயமலைக்கு அழைத்துச் சென்றவரின் அன்பு இன்றைக்கு செல்லாக்காசு ஆகிப் போன கதையை, அந்த அன்பு சொல்லும்.

இரக்கமும், ஜீவகாருண்யமும் சரியானவைகளுக்குச் சேர வேண்டும் எனப் புரிந்து கொள்ளுங்கள்.

எல்லோரையும் ஏமாற்றும் வஞ்சக நரிகளிடம், இரக்கத்தைக் காட்டினால் நாம் அழிக்கப்படுவோம்.

அந்த நரிகளின் சுய நலம், நம் இரக்க உணர்வினை அவர்களின் பிழைப்புக்கு பயன்படுத்தி விடுவார்கள் என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

ரசிகன் என்ற சொல் மனநோயைக் குறிக்கும் சொல். இனி நான் அவருக்கு ரசிகன் என்று சொன்னீர்கள் என்றால் நீங்கள் ஒரு அடிமுட்டாளான அடிமையும், மனநோயால் பீடிக்கப்பட்டிருக்கும் அவலமானவர் என்றும் புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் உழைப்பில் கிடைக்கும் பலன்களை, தேவைப்படுபவர்களுக்கு பகிர்ந்து கொடுங்கள். ஒரு சினிமா பார்ப்பதற்கு செலவழிக்கும் தொகை இன்னொருவருக்கு ஒரு நாள் உணவு என்பதை மறந்து விடாதீர்கள்.

அதற்காக மகிழ்ச்சியாக இருக்க படமே பார்க்க கூடாதா என்று கேட்காதீர்கள். அதற்கு ஹீரோயிசம் இல்லாத எதார்த்தமான படங்களைப் பாருங்கள். அது தான் உண்மையான படைப்பும் கூட.

இனி நல்ல எதார்த்தமான பல படங்களை விமர்சனமாக எழுதலாம் என நினைக்கிறேன். முதல் நாளே பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டீர்கள் என்றால் அது உங்களின் நோயின் தன்மை முற்றி, ஹீரோவுக்கு அடிமையாகி விட்டீர்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். அது ஒரு விதமான போதை. போதையிலிருந்து வெளி வாருங்கள். வாழ்க்கை சுகமானது.

அதை தன்னை உருவாக்கிய குடும்பங்களுடனும், உறவினர்களுடனும், நட்புக்கள் உடனும் கொண்டாட்டமாய் வாழலாம்.

எனது அன்பும், அசீர்வாதமும் என்னை விட இளையவர்களுக்கு. என்னை விட அனுபவத்தில் முதிந்தவர்களிடம் ஆசீரவாதங்கள் செய்யுங்கள் எங்கள் எல்லோரையு என வேண்டிக் கொள்கிறேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.