குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, March 27, 2020

மனிதர்களுக்கு கடவுளிடமிருந்து வந்த எச்சரிக்கை

ஊழல் செய்தவன் வைத்திருக்கும் பணமும், பணமே இல்லாதவனின் நிலையும் இன்றைக்கு ஒன்றே ஒன்று தான். 

உயிர் பயம். எல்லோருக்கும் ஒரே பயம். உயிர் மீதான ஆசை.

அரசியல்வாதிகள் என்ன செய்வதென்று தெரியாமல் விழி பிதுங்கி கிடக்கிறார்கள். 

பிரதம மந்திரியும், மந்திரிகளும் வாயில் துணி கட்டிக் கொண்டு மீட்டிங்க் போடுகின்றார்கள். ஒருவர் மீது ஒருவருக்கு நம்பிக்கை இல்லை.

யாரிடம் நோய் கிருமி ஒட்டி இருக்கும் என கணிக்கத் தெரியாத நிலை. மூன்றடி தள்ளி உட்கார்ந்திருக்கிறார்கள். சக மனிதர்கள் மீதான நம்பிக்கை அற்றுப் போனார்கள் தலைவர்கள் எனும் வினோதங்கள்.

ராஜதந்திரிகள் எங்கே போனார்கள் ? விலா எலும்பு ஆட்கள் எங்கே?

ஜாதி எங்கே? மதம் எங்கே? ஆண் எங்கே? பெண் எங்கே? கோவில்கள் எங்கே? சர்ச்சுகள் எங்கே? மசூதிகள் எங்கே?  பூஜைகள் எங்கே? பிரார்த்தனைகள் எங்கே? தொழுகைகள் எங்கே ?நாடெங்கே? மொழி எங்கே? யாகங்கள் எங்கே? ஒருவரையும் காணவில்லை.

அதர்மத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த காவல்காரர்கள் பீதியின் பிடியில் சிக்கி வீதியில் நின்று கொண்டிருக்கிறார்கள். யாரிடமிருந்து பரவும் என்று தெரியாத நிலையில் கதி கலங்கி நிற்கிறார்கள். 

கிளை, வட்டம், ஒன்றியம், மாவட்டங்கள் எல்லோரும் வீட்டிக்குள் ஒடுங்கிக் கிடக்கிறார்கள். கரை வேட்டிகள் கலங்கி நிற்கின்றன. இவர்கள் எல்லோரும் இப்போது எங்கே போனார்கள் என்று தேடிப்பாருங்கள்....

உலகெங்கும் நீதிமன்றங்கள் அரசியல்வாதிகளின் படுக்கையறைகளாகிய கொடுமைகளை ஒவ்வொருவரும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். உலகிற்கே நீதி சொன்ன தமிழ் நாட்டில் துரோகம் வழக்கமானது. சட்டம் ஒழிக்கப்பட்டது. 

அரசின் உத்தரவுக்கு ஏற்ப நீதிபதிகள் நீதி வழங்கினார்கள். சட்டம் அழிக்கப்பட்டது. தர்மம் கொலை செய்யப்பட்டது.  

எல்லோருக்கும் ஒவ்வொரு நியாயம். அது பற்றிய ஆதாரங்களை தேடிப் பிடித்து, நாம் நம்பிக்கொண்டிருக்கும் நியாயத்துக்கு வக்காலத்து பேசிக் கொண்டிருந்தோம்.

ஃபேஸ்புக்கில், டிவிட்டரில் கமெண்ட் போடுவதை எதிர்ப்பாய் காட்ட வைக்கப்பட்டோம்.  உலக அரங்கில் டிவிட்டர், ஃபேஸ்புக் இரண்டும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே சாளரம் வீசின. அரசு அலுவலர்கள் அடங்கிப் போனார்கள். இல்லையென்றால் அடக்கப்பட்டார்கள். அதர்மம் தலை விரித்து ஆடியது.

மீடியாக்காரர்கள் ஒவ்வொருவரும் ஊழலின் ஒட்டு மொத்த விசிறிகளாய் மாறினார்கள். அவர்கள்ள மதம், இனம், மொழி, அரசியல், கட்சி கண்ணாடிகள் வழியாக செய்தி வெளியிட வேண்டியவர்கள் ஆனார்கள். 

உலக மனிதர்கள் அனைவரும் யாரோ ஒருவனின், ஒரு கூட்டத்தின் ஆசைக்காக மாறினார்கள். மாற்றப்பட்டார்கள். இது எதுவும் தெரியாமல் நாமெல்லாம் தர்மம் இது, பாவம் இது, புண்ணியம் இதுவென வெட்டிப் பேச்சு பேசிக் கொண்டிருந்தோம். 

ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமாய் மாறி மனதுக்குள் மிருகங்களாய் மாறினோம். தோற்றத்தில் நாகரீக மனிதர்களாய் நடித்துக் கொண்டிருந்தோம்.

கடமையை நாம் செய்யத் தவறினோம். தன் இயல்பு மறந்தோம். காசேதான் கடவுள் என்று அலைந்தோம். வெளி நாடு வாழ்க்கை இனித்தன நமக்கு. ஆனால் இப்போது வெளி நாடு என்றாலே அலறுகிறோம். என்ன ஒரு விசித்திரம் பாருங்கள். ஒரு மாதம் முன்பு வரை இப்படி ஒரு நிலை வரும் என்று கனவு கூட கண்டிருக்கமாட்டோம். ஆனால் எல்லாமும் நடக்கிறது. மனிதர்கள் சக மனிதர்களை அழிக்க ஆயுதங்களை உருவாக்கினார்கள். அவைகள் இப்போது என்ன செய்கின்றன? கொரானாவின் மீது உலக போலீஸ் அமெரிக்கா அணுகுண்டைப் போடுமா? 

கடவுள் இன்றும் நம்மைக் கைவிடவில்லை. 

அவர் நம் முன்னால் விதித்த கட்டளை இருக்கிறது. 

சுய கட்டுப்பாடும், சுய ஒழுங்கும், சமுதாயத்தின் மீதான அன்பும் காட்டப்படவில்லை எனில் எல்லோரும் அழிக்கப்படுவீர்கள் என்கிறார் கடவுள்.

அதர்மத்தை வேடிக்கை பார்ப்பதை விட்டு விடுங்களென்று ஒரே ஒரு எச்சரிக்கை மட்டும் விடுத்திருக்கிறார் கடவுள் எனுமியற்கை.

மனிதர்களிடத்தில் அதர்மத்தின் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்க, அதிகரிக்க இறைவன் மனிதர்களுக்கு பாடம் புகட்டி விரும்பியதன் விளைவு தான் கொரானா.

இனியும் திருந்தவில்லை எனில் முற்றிலுமாய் பூமியில் இருந்து துடைத்து எறியப்படுவோம் என்பதனை எவரும் மறந்து விடாதீர்கள். நம் வாரிசுகளும் சொத்துக்களும் ஒன்றுமே இல்லாமல் தூசியாகிப் போவார்கள்.

தர்மத்தைக் காக்க துணிவு கொள்ளுங்கள்.

அன்பை விதையாய் விதைப்போம். அதை அன்பு மலர் மலரும் மரமாய் வளர்த்தெடுப்போம்.

உலகிற்கு தேவை மனிதாபிமானம் மிக்க தலைவர்கள். அவர்களை நாம் தேர்ந்தெடுப்போம் கட்சி பேதங்கள் இன்றி.

உலகிற்கு அன்பினை பரிசளிப்போம். 

போனதெல்லாம் போகட்டும் இனி வரும் காலம் வசந்தமாய் மலரட்டும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.