நண்பர் பழனியிலிருந்து ஒரு சொத்தினை விற்பனை செய்து தரும் பொருட்டு விபரங்கள் அனுப்பி இருந்தார். நேரில் சென்று இடத்தினைப் பார்வையிட்டு வந்தேன். மிக நல்ல இடம். 60 கோடி விலை சொன்னார்கள்.
நான் பரிந்துரைக்கும் நிலங்கள் வில்லங்க சுத்தியாய் இருக்க வேண்டும் என்பதில் கருத்தாய் இருப்பேன்.
வில்லங்கங்கள் இருக்கும் சொத்துக்கள் வேறு இருக்கின்றன. அதன் விற்பனை வேறு. அது இங்கே வேண்டாம்.
தங்கத்திடமிருந்து ஒரு சொத்து வருகிறது என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவார்கள். விலை பேச மட்டுமே வருவார்கள், பிற காரியங்கள் எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன்.
ஆகவே சொத்தின் மீதான வில்லங்கங்களை 120 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். நிலம் விற்பனை என்றால் சர்வே எண் பெற்று ஆரம்ப கட்ட ஆய்வினை முடித்து விட்டுத்தான் பார்வையிடச் செல்வது வாடிக்கை.
நண்பரின் அழுத்தப் பரிந்துரையினால் அந்த நிலத்திற்குச் சென்று விட்டு திரும்பினேன்.
அந்தச் சொத்தின் சர்வே நம்பர் வைத்து ஆராய்ந்தேன்.
சொத்துக்களை ஒரு குடும்பம் தன் பிள்ளைகளுக்கு எழுதி வைத்த போது ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் சுமார் இரண்டு ஏக்கர் சொத்தினை இனி வரக்கூடிய வாரிசுகள் விற்பனை செய்யாமல், அந்தச் சொத்தில் வரக்கூடிய வருமானத்தினை கோவையில் பிரபலமாக இருக்கும் ஒரு சிவன் கோவிலில் நடைபெறும் கட்டளைக்கு, நிலத்தின் வரி வகையறாக்கள் செலவுகள் போல மீதமுள்ள தொகையினை கொடுத்து வர வேண்டுமென்றும் பத்திரத்தினை பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள்.
ஆக இந்தச் சொத்தினை விற்பனை செய்ய முடியாது, அந்தக் குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே நிர்வாகம் செய்ய வேண்டும், வருமானத்தை சிவன் கோவிலில் நடக்கும் கட்டளைக்குக் கொடுத்து வர வேண்டும் என்பது தெளிவாக பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.
மேற்படி சொத்தின் பட்டாவும் கோவில் பெயரில் மாற்றப்பட்டு தர்மகர்த்தாக்களாக சொத்தினை எழுதி வைத்த நபர்களின் வாரிசுகள் நியமிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆனால் நடப்பு பட்டாவோ வேறு பெயரில் இருந்தது.
என்ன நடந்தது?
எப்படி பட்டாவில் பெயர் மாற்றினார்கள்?
முன்னுரை படித்து விட்டீர்களா?
இனி ஸ்டெப் பை ஸ்டெப்பாக கோவில் நிலத்தின் பட்டாவை எப்படி உங்கள் பெயருக்கு மாற்றுவது எனப் பார்க்கலாம்.
வாரிசுதாரர்கள் அந்தக் கோவிலுக்கு பாத்தியமான சொத்துக்களுடன் இதர சொத்துக்களையும் சேர்த்து பாகப் பிரிவினைப் பத்திரம் ஒன்றினைத் தயார் செய்ய வேண்டும். பாகப் பிரிவினை சொத்துக்களில் பொதுச் சொத்து (கவனிக்க) என்ற பகுதியில் வாரிசுகளில் ஒருவரை உரிமையாளர் என்ற பெயரில் பதிவு செய்தல் வேண்டும். பாகப் பிரிவினைப் பத்திரத்தில் கோவிலுக்கு கட்டளைக்கு கொடுத்த பத்திரத்தினை குறிப்பிடாமல் அதற்கு முன்பு உள்ள பத்திரத்தினையும், வாரிசு சான்றுகளையும் இணைத்தல் அவசியம்.
மேற்படிப் பாகப்பிரிவினை பத்திரத்தை ஈடுகாட்டி வட்டிக்கு பணம் வாங்க வேண்டும். வட்டியும் அசலும் கட்டத் தேவையில்லை. வட்டிக்கு பணம் கொடுத்தவர் வாரிசுகளில் யாரோ ஒருவரின் நெருங்கிய உறவினராக இருத்தல் அவசியம்.
வட்டியும் அசலும் திரும்ப வரவில்லை என்பதால் வட்டிக்குப் பணம் கொடுத்தவர் மணி சூட் போடுவார். வழக்குகளில் ஆஜராக கூடாது. எக்ஸ்பார்ட்டியாய் தீர்ப்பு வட்டிக்குப் பணம் கொடுத்தவருக்கு கிடைத்து விடும். கோர்ட் மூலமாக மேற்படிச் சொத்தினை கிரையம் செய்து கொள்ளல் வேண்டும்.
இப்போது வட்டிக்குப் பணம் கொடுத்தவர் கோர்ட் மூலம் மேற்படிச் சொத்தின் உரிமையாளர் ஆகி விட்டார்.
இனி பட்டா மாற்றம் செய்ய வேண்டும். தமிழக வருவாய் துறையில் நல்ல காசுள்ளங்கள் உண்டு. ஆகவே அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைமேற்கொண்டு பட்டாவை வழங்கி விடுவார்கள்.
பட்டா கோவில் பெயரில் அல்லவா இருக்கிறது? பிரச்சினையை எப்படி நீக்குவது? இனி பார்க்கலாம்.
நிலத்தினை பராமரித்து வந்தவர் விவசாயம் செய்யும் பொருட்டு வாங்கிய கடனைக் கட்ட இயலாததால் கடன் கொடுத்தவருக்கு கோர்ட்டு நிலத்தினைக் கிரையம் செய்து கொடுத்து விட்டது. இது சட்டப்படி சரியானது. ஆகவே பட்டாவை கடன் கொடுத்தவர் பெயருக்கு மாற்றி விடலாம். இருப்பினும் கோவில் இணை ஆணையர் இதை உற்று நோக்கி ஒரு தடையின்மை சான்றிதழ் வழங்கி விட்டால் சொத்தின் முழு உரிமை கடன் கொடுத்தவருக்கே வந்து விடும் அல்லவா?
ஆகவே கோவிலின் இணை ஆணையரை அணுகி தர்மப்படி அதாவது தர்மப்படி கொடுத்து மேற்கண்ட விஷயங்களைக் குறிப்பிட்டு கடன் கொடுத்தவர் ஒரு அப்பாவி என்றும், கடன் கொடுக்கும் போது மேற்படி சங்கதிகள் ஏதும் தெரியாது என்றும், அந்த நிலத்திற்காக ஏகப்பட்ட செலவுகளைச் செய்து விட்டார் என்றும், தற்போது கோவிலில் கார்த்திகை மாதம் நடத்தப்பட்ட கட்டளை நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆகவே கட்டளைக்கு நிதி கொடுக்க வேண்டுமென்ற ஷரத்து செல்லாததாகி விட்டது என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையினை இந்த விண்ணப்பதாரரிடம் சுமாராக ஐம்பது இலட்சம் பெற்றுக் கொண்டு அப்பாவியாய் ஏமாந்து போனவருக்கு நிலத்தினைக் கொடுத்து விடலாம் என்றும் ஒரு பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று தமிழக அற நிலையத்துறைக்கு அனுப்பி வைத்தால் அங்கும் கொஞ்சம் தர்மப்படி கொடுத்தால் சொத்து முழுமையாக கடன் கொடுத்தவரிடம் வந்து விடும்.
நிலத்தின் விலை என்ன? அறுபது கோடி.
கோவிலுக்கு கொடுக்க வேண்டியது என்ன? ஒரு அம்பது இலட்சம்.
கைப்படி, தர்மப்படி இவற்றுக்கு இருபது இலட்சம் என செலவானால் மொத்தம் ஒரு எழுபத்தைந்து இலட்சம் வரும்.
வருமானம் என்ன?
கொஞ்சமே கொஞ்சம் தான் அதாவது ஒரு அம்பது கோடி.
போதுமே? போதாதா? போதாது என்றால் அடுத்த நிலம் இருக்கிறதே?
ஒரு கோவில் பெயரில் இருக்கும் சொத்தினை உங்களது பெயருக்கு மாற்றம் செய்வது எப்படி என்றும் வரவு செலவு கணக்கினைத் தெளிவாக எழுதி இருக்கிறேன்.
அவ்ளோ தான்.
இப்படித்தான் நண்பர் பரிந்துரைத்த அந்தச் சொத்தின் பட்டா மாற்றப்பட்டது என்று விவரித்தேன் அவரிடம். அசந்து போனார்.
“அண்ணா...! என்ன கொடுமை இது?” என்று வருந்தினார்.
வருந்தி என்ன ஆகப் போகுது? எவன் போய் சிக்கப் போகின்றானோ அவனுக்குத்தான் வருத்தம் வர வேண்டும். நமக்கென்ன ஆகப் போகுது?
ஒரு விஏஓ, ஆர்.ஐ, தாசில்தார், ஆர்.டி.ஓ மற்றும் கோவில் இணை ஆணையர் இவர்கள் நினைத்தால் ஒரு கோவிலின் நிலத்தின் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதை நினைவில் கொள்க.
பத்திரங்கள், பட்டாக்கள், சட்டங்கள் எதுவும் இவர்களை ஒன்றும் செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இவர்களுக்கு எதிரான சட்டப் போராடத்தின் முடிவில் ஒன்றும் நடக்காது. அவரவர்கள் ரிட்டயர்ட் ஆகி விடுவார்கள். வழக்குப் போட்டவனுக்கும் வயதாகி செத்துப் போவான். நீதிமன்றங்கள் வழக்கு கட்டுகளை வைத்துக் கொண்டு வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும்.
இதனை ஆய்வு செய்ய எனக்கு நேரமாகி விட்டதே என்று வருத்தமாக இருந்தாலும், உங்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்று எழுதி இருக்கிறேன்.
இன்னும் ஒரு அற்புதமான வழி அதாவது கோவில் நிலங்களை தங்கள் பெயரில் பட்டா போட வழி இருக்கிறது. அதை இங்கு எழுத இயலாது. அந்த வழி சூப்பர் ஸ்டார் வழி. கில்லி மாதிரி தட்டித் தூக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வழி முறை உள்ளது. ஆகவே ஆராய்ந்து தெளிந்து புரிந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும்.
அப்படி மாற்றிய சொத்துக்களை விற்பனைக்கு வைத்து, அதனை ஆய்வு செய்யும் வேலை என்னிடம் வந்தால் நான் உண்மையைக் கண்டுபிடித்து விடுவேன், என்னிடம் தர்மப்படி, கைப்படி எல்லாம் செல்லாது என்று வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன்.
இதே போல அரசு புறம்போக்கு நிலங்களையும் பட்டா பெறலாம். ஏகப்பட்ட வழிகள் உண்டு. அதையும் போகப் போக எழுதுகிறேன். பயனடைந்து கொள்ளுங்கள்.
புத்திசாலிகள் புரிந்து கொள்ளுங்கள்.
தர்மம் நின்றும் கொல்லாது நிற்காமலும் கொல்லாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள்.
தர்மம் நின்று கொல்லும் என்பது தத்துவப் பிழை.
வாழும் வழி என்ன தெரியுமா? பிறரை அழி என்பதுதான்.
நம் தலைவர்களும் அதைத்தானே செய்கிறார்கள் சட்டத்தின் வழியாக. தலைவன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் செல்வதே நல்லது.
முற்குறிப்பு பின்குறிப்பாய்:
கலிகாலமாம். நல்லவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிதாயிருக்கிறது என்கிறார்கள். காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிட வேண்டும். இல்லையெனில் வாழ முடியாது.
திருடத் தெரிந்தவன் எவனோ அவனே சமூகத்தில் உயர்ந்தவனாய் மதிக்கப்படுகிறான். கொலைகாரன் எவனோ அவனே தலைவனாகிறான். மக்களை வதைப்பவன் எவனோ அவனே கொண்டாடப்படுகிறான். ஆகவே கலிகாலம் என்றுச் சொல்வது சரிதான்.
பணம் இருப்பவன் எவனோ அவனே வெற்றியாளன் என்கிறது உலகம்.
பணமில்லாதவனுக்கோ வாழ்க்கையே இல்லை. உயிரோடு ஏன் இருக்க வேண்டுமென்கிறது அரசுகள்.
1500 ரூபாய் உதவித் தொகையும், வருடம் 6000 ரூபாய் விவசாயி உதவித்தொகையும், நூறு நாட்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 120 ரூபாய் கூலி தருவோம், இதை வைத்துப் பிழைத்துக் கொள், இல்லையெனில் செத்துப் போ என்று கூறாமல் வழிகாட்டுகின்றன அரசுகள்.
தலைவர்கள் ஏழைகளை முன்னேற்றுவோம் என்று உரையாற்றுகிறார்கள். விலைகளை இவர்களே ஏற்றுவார்கள், ஆனால் வேறொருவர் விலைகளைக் குறைக்கவில்லை எனப் போராட்டம் செய்வார்கள்.
விலை ஏற்றியதால் தான் விலை உயர்கிறது, நீங்கள் குறைக்கலாமே என்று எவருக்கும் கேள்வி கேட்க இங்கு முதுகெலும்பு இல்லை. முதுகெலும்பில்லா மனிதர்கள் மண்புழுவுக்குச் சமானம். ஆகவே உயிரோடு இருப்பதன் பயன் என்னவோ என்று கேட்காமல் கேட்கிறார்கள் அரசாளுபவர்கள்.
உணவுப் பொருட்களின் விலைகள் 200 மடங்கு ஏறி விட்டன. ஆனால் கூலியோ ஏறவே இல்லை. எப்படி உண்பது? எப்படி வாழ்வது?
இந்தியாவில் இனி ஏழைகள் வாழ அனுமதி இல்லை என்று விரைவில் சட்டம் வரும். 140 பணக்காரர்களும், அவர்களுக்கு வேலை செய்யும் பணியாளர்களின் கூட்டமும் இருந்தால் போதுமானது என்கிறார்கள்.
ஆகவே பணமே கலிகாலத்தில் பிரதானமாயிருப்பதால், அந்தப் பணத்தை எந்த வழியிலேனும் சம்பாதித்து விடுவது தான் வெற்றியான வாழ்க்கை.
நேர் பட வாழ்க்கை, அற வாழ்க்கை, தர்ம வழி என்று இனிப் பேசுவதில் பயனில்லை என்பதால் இனி உங்களுக்கு எப்படி சட்டத்தின் வழியாக மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்று ஒரு உண்மைச் சம்பவத்தின் வாயிலாக வழி காட்டப் போகிறேன்.
படித்து, புரிந்து, தெளிந்து வேலையை ஆரம்பியுங்கள். வெற்றி நேர்மையாய் வாழ்பவனுக்கு கிடைப்பதை விட நேர்மையற்றவர்களுக்கு எளிதாய் கிடைக்கும். வாழ்த்துகிறேன்.
நல்லவனாய் வாழ்வதை விட திருடனாய், கொலைகாரனாய், மதக்கலவரக்காரனாய், ஏமாற்றுக்காரனாய், முடிச்சவிக்கியாய், மொள்ளமாறியாய் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று சமூகம் பாடம் சொல்கிறது. சமூகத்தின் வழி எவ்வழியோ அவ்வழியில் பீடு நடை போடுங்கள்.
பணமிருந்தால் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். எப்படி என்கின்றீர்களா ஒரு நூறு கோடி எஸ்.பி.ஐ தேர்தல் பாண்ட் கொடுங்கள். ஓடோடி வருவார்கள் உணவு அருந்த உங்கள் வீட்டுக்கு.
ஆகவே பணமே குறிக்கோள். அதை எளிதில் அடைவது எப்படி?