குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label மாப்பு தரு சாமி. Show all posts
Showing posts with label மாப்பு தரு சாமி. Show all posts

Thursday, April 21, 2022

மாப்பு தரு சாமி - துளிர்

புதிதாக படிப்பவர்கள் கீழே இருக்கும் இந்தப் பாகத்தின் முதற்பகுதியைப் படிக்கவும்.

மாப்பு தரு சாமி - விதை 

மேலே இருக்கும் முதற்பகுதியைப் படித்தவர்கள் தொடர்ந்து படிக்கலாம்.

கேரளா சென்று வந்த சுவாமி என்னிடம் ”மாப்பு தரு சாமி’ என்ற வார்த்தைகளை ஏன் சொன்னார்? என்ற கேள்வியின் விடை காண ஆசிரமம் சென்று வரலாமென்று முடிவு செய்தேன்.

மதியம் போல பைக்கில் ஆசிரமம் சென்றேன். நல்ல வெயில். சூடு அதிகம். வழியெங்கும் காவடி, பால்குடங்கள் சுமந்தபடி மக்கள் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசிக்கச் சென்று கொண்டிருந்தனர். வெள்ளிங்கிரி ஏழாவது மலையில் அருள் பாலிக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரைத் தரிசித்து திரும்பிச் செல்லும் மக்கள் சாரி சாரியாகச் சாலைகளில் சென்று கொண்டிருந்தனர். பலர் கைகளில் ஊன்றுகோல் கண்டேன். அன்றைக்கு என சுமார் ஐம்பதுக்கும் மேலான எண்ணிக்கையில் விதவிதமான கழுத்தில் சலங்கைகளுடன் மாடுகள் பூட்டிய மாட்டு வண்டிகள் ஜல் ஜல் என சென்று கொண்டிருந்தன. இளைஞர்கள் தான் வண்டி ஓட்டிக் கொண்டிருந்தார்கள். ஆச்சரியமாக இருந்தது. 

வெள்ளிங்கிரி பகுதி பக்தி கோலத்தில் மிளிர்கிறது. உண்மையான பக்தியை நான் சாலைகளில் நடந்து செல்லும் பக்தர்களின் வழி கண்டேன்.

நடந்து சென்ற ஒரு இளைஞனை நிறுத்திக் கேட்டேன். காங்கேயத்திலிருந்து பால்குடம் எடுத்து நடந்து வந்து பூண்டியில் அடியிலிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு அபிஷேசம் செய்து விட்டு, மீண்டும் மலையேறி ஏழாவது மலையில் அருள் பாலிக்கும் ஆண்டவரைத் தரிசித்து விட்டு மீண்டும் நடை பயணத்திலேயே காங்கேயம் சென்று அங்கு தனது குலதெய்வத்துக்கு பால் அபிஷேகம் செய்ய வேண்டும் எனச் சொன்னார். சின்னப் பையன். வெள்ளை வேட்டியை மடித்துக் கட்டி மஞ்சள் துண்டினை இறுக கட்டி இருந்தான். விறுவிறுவென நடந்தான். அவன் சொல்லும் போது கண்கள் ஒளிர்ந்தன. இறைவன் மீது கொண்ட பக்தியா? இல்லை அவனது குடும்பத்தின் நலனுக்கான வேண்டுதலா? என்று தெரியவில்லை. கால்கள் வலிக்க நடக்கிறான். இறைவனைத் தரிசித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். அவனைப் பார்க்கையில் உள்ளம் மகிழ்ச்சியடைந்தது. நல்ல வளர்ப்பு. அவனின் அம்மாவும் அப்பாவும் அவனை பக்தியாய் வளர்த்திருக்கிறார்கள் என்று புரிந்தது. 

சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் நடக்கிறான் அவன். 

ஏன்? 

யோசித்துப் பார்த்தால், ஏதோ ஒன்று அவனுக்குத் தேவையாக இருக்கிறது. அந்தத் தேவை நிறைவேறவோ அல்லது நிறைவேற்றிய தேவையின் நன்றிக் கடனுக்காகவோ தன் உடல் வருத்தி தன் பக்தியை இறைவனிடம் சமர்ப்பிக்கிறான். 

என்ன ஒரு முரட்டு பக்தி?

இதற்கெல்லாம் ஈடு இணை என்று எதைச் சொல்வது? 

என் நண்பரின் மனைவி திருப்பூரிலிருந்து பழனி முருகனிடம் வேண்டுதலுக்காக நடைபயணம் செய்வார். அப்பக்தியை என்னவென்று சொல்வது? 

ஒரு வார்த்தை கோபமாகப் பேசி விட்டால் டைஓர்ஸ் என்று இருக்கும் காலகட்டம் இது. 

சரி இனி தொடரலாம்.

முள்ளங்காடு செக்போஸ்ட்டிலிருந்து தெற்கே செல்லும் தார்ச்சாலை வழியாகச் சென்று அங்கிருக்கும் சிறு கிராமச்சாலை கடந்து ஆசிரமம் சென்றேன். ஆசிரமத்தின் முன்பு இடது புறமாய் இருக்கும் மரங்களின் கீழே அமர்ந்து கொண்டேன். அன்று குருநாதரைச் சந்திக்க வரும் பக்தர்கள் கூட்டம் அதிகமாய் இருந்தது. ஜோதி சுவாமிகள் பக்தர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தார். 

எப்போதும் மாலை நேரத்தில் குளிர்காற்று ஆசிரமத்தினை தழுவும். வெயிலில் வந்த எனக்கு அந்த குளிர் அதனால் விளைந்த மகிழ்ச்சி குருநாதரின் அருள்.

பக்தர்களுடன் உரையாடிய சுவாமி  சிறிது நேரம் கழித்து என்னருகில் வந்து அமர்ந்தார். நானெதற்கு வந்திருக்கிறேன் என்று அவருக்குத் தெரியும். என்னிடம் பேச ஆரம்பித்தார்.

”ஆண்டவனே,கொடுங்களூர் பகவதி அம்மன் சன்னிதியில் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தேன். திடீரென்று காதுக்குள் ஒரு குரல். இன்னும் சிறிது தூரம் தள்ளி வா என்றது”

அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

”அங்கு ஒரு குளத்தைப் பார்த்தேன் ஆண்டவனே! அவ்விடத்தில் நின்று கைகூப்பி வணங்கினேன். மீண்டும் அதே குரல், இன்னும் கொஞ்சம் தூரம் கிழக்கே வா என்றது. எனக்கு ஒன்றும் புரியவில்லை ஆண்டவனே. குரல் சொன்னபடி பத்தடி தூரம் நடந்து சென்றேன். அங்கு ஒரு சிறு கோவில் போல ஷெட் இருந்தது. அதன் நடுவே ஒரு சிறு கல் இருந்தது. அவ்விடத்தில் நின்று வணங்கினேன். சிறிது நேரம் சென்ற பிறகு, மீண்டும் அதே குரல் இன்னும் கொஞ்ச தூரம் கிழக்கே வா என்றது. குரல் வழி காட்டியபடி கிழக்கே பத்தடி தூரம் நடந்து சென்றால் அங்கே சிறு கோவிலும் சிலைகளும் இருந்தன. கைகூப்பி வணங்கி நின்று கொண்டிருந்த போது மீண்டும் அதே குரல், நான் இங்கில்லை இன்னும் கொஞ்சம் தூரம் கிழக்கே வா என்றது. குரல் சொன்ன வழியில் நடந்து சென்றேன். சாலையிலிருந்து ஒரு குறுகிய பாதை. அதன் வழியாகச் சென்றேன். அங்கு ஒரு வீடு இருந்தது. அதைத் தாண்டி இடது புறம் சென்றேன். ஆஹா ஆண்டவனே, அங்கு கண்டேன் அம்மாவை” என்றார்.

அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தேன்.

”ஒரு சிறு கோவில், உள்ளே பகவதி அம்மன். கோவிலின் முன்னாலே வலது புறமாய் ஒரு சமாதி. கோவிலின் எதிரில் குளம். பகவதி தாயின் முன்னாலே நின்றேன் ஆண்டவனே. என் கால்கள் தானாகவே உயர்ந்தன. இரு கால்களின் கட்டை விரல்கள் மட்டும் பூமியில் ஊன்றி நின்றதைக் கண்டேன். என்னை அறியாமலே நடந்து கொண்டிருந்த விந்தை அது. பகவதி அம்மனின் அருளால், அவள் குடிகொண்டிருக்கும் இடத்தில் இப்படியான சம்பவம் நடந்தது. அம்மாவை நோக்கி கைகூப்பி நின்று கொண்டிருந்தேன் ஆண்டவனே. அப்போது ஒரு குரல் கேட்டது. ’மாப்பு தரு சாமி, மாப்பு தரு சாமி’ என்று வேண்டியது.”

”எங்கிருந்து குரல் வருகிறது என்று உற்று நோக்கினால், கோவிலின் முன்பு இருக்கும் சமாதியின் உள்ளிருந்து வந்ததைக் கண்டேன். என்னிடம் எதற்கு மாப்பு (மன்னிப்பு) கேட்கிறது அக்குரல் என்று எனக்குப் புரியவில்லை, ஆண்டவனே. புரியாமல் அங்கு நின்று கொண்டிருந்தேன்” என்றுச் சொன்னார்.

கேட்டுக் கொண்டிருந்த எனக்கு கிறுகிறுத்தது. எனக்கோ ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, ஓஷோ, ஜென் தத்துவங்களில் மட்டுமே ஈடுபாடு அதிகம். ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியைப் போல கடவுளைக் கழுவி ஊற்றியவர் எவரும் இல்லை. அதைப் போல ஓஷோ. அந்தளவுக்கு கடவுளையும், பூசாரிகளையும் அவர்களின் திருட்டுத் தனத்தையும் உரித்து தொங்க விட்டவர்கள். இவர்களாவது பரவாயில்லை. 

எம் குருநாதரின் குருவான கேரளா வடகரை சிவானந்த பரமஹம்சரின் வழிபாட்டு முறை கற்பு கண்றாவிகளை கேள்வி கேட்பவை. பிரம்மத்தை உடல் தாண்டி உணர வைப்பவை. சித்த வித்தை என்றொரு புத்தகம் இருக்கிறது. படித்துப் பாருங்கள். ஆசிரமம் சென்றால் நிச்சயம் அதிர்ந்து விடுவீர்கள். ஆசிரம நடைமுறைகள் திடுக்கிடச் செய்வன. சாதாரண நிலையில் இருப்போருக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி உண்டாக்கும். என்னைப் பொறுத்தவரை அவரின் வழிபாட்டு முறை சரி.

இவர்களின் வழியில் அற வாழ்க்கையை நடத்தும் எனக்கு சுவாமி சொன்ன செய்தி குழப்பத்தை ஏற்படுத்தியது.

திடீரென்று மனதுக்குள் ஒரு சம்பவம் நிழலாடியது. அதன் காரணமாய் எனக்குள் இருந்த மனமானது செய்வதறியாது திகைத்து நின்றது. அதுதான் காரணமா? பல விடை தெரியா கேள்விகளுக்கு விடை கிடைத்து விட்டதா? அறிவு ஏற்க மறுத்தது. அது என்ன? என்று பிறகு பார்க்கலாம்.

சுவாமி, என்னைப் பற்றி நன்கு தெரிந்தவர். உடனே அவரிடம் ”நான் அங்குச் செல்ல வேண்டுமென்று கேட்டேன். ஏற்பாடு செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆசிரமம் வரும் சுவாமியின் சீடர் திருச்சூர் சீனி ஏட்டனிடம் என்னை கொடுங்களூர் பகவதி அம்மன் ஆலயம் அழைத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்டார்.

மறுநாள் விடிகாலையில் கோவையிலிருந்து கிளம்பி சீனி ஏட்டன் வீட்டுக்குச் சென்றேன். 

அவர் வீட்டில் ஒரு அற்புதம். 

சீனி ஏட்டனின் அம்மாவைப் பார்த்தேன். தெய்வாம்சம் நிரம்பிய அருள் பொங்கும் அன்பு முகம். 

என் வாழ்நாளில் அப்படி ஒரு பெண்மணியைக் கண்டதே இல்லை. உள்ளத்தூய்மை கொண்ட அன்னை அவர். 

அண்ணணும் தங்கையும் ஒரே வீட்டில் வாழ்கிறார்கள். அந்த அன்னை நற்குழந்தைகளைப் பெற்று இருக்கிறார். அன்னபூரணி அம்மாவைப் போன்ற தூய்மையான தோற்றம். எனக்கு திடீரென்று பகவான் ராமகிருஷ்ணரின் மனைவி சாரதா தேவியார் நினைவிலாடினார். 

ஒழுக்கமும், தெய்வ சிந்தனையும்,  அற வாழ்க்கையும் கொண்ட பெண்கள் தான் பூமியின் உண்மையான தெய்வங்கள். அவர்களின் படைப்புகள் தான் உலகை வழி நடத்தும் திறன் கொண்டவர்களாய் மிளிர்வார்கள். ஆரம்பகாலத்தில் ஜாதி மொழி பார்க்காத மனிதர்களின் வாழ்க்கை அப்படித்தான் இருந்தது. அவர்களின் படைப்புகள் உலகை வழி நடத்தினர். 

ஆனால் இப்போது ஒழுக்கம் தவறிய வாழ்க்கைதான் உயர்வானது என்ற கீழ் சிந்தனையில் பெண்கள் தள்ளப்பட்டு விட்டார்கள். பெண் விடுதலை என்பது தவறாக எடுத்துச் செல்லப்படுகிறது.

பெண்களின் பொருளாதார விடுதலை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற தைரியத்தைக் கொடுத்திருக்கிறது. விஜய் டிவி நீயா நானாவில் ஒரு பெண்மணி அறுனூறு சேலை வாங்கி வைத்திருக்கிறேன் என்றும் நான் சம்பாதிக்கிறேன் நான் வாங்குகிறேன் உங்களுக்கு ஏன் வலிக்கிறது? என்று பேசியதைக் கேட்டேன். இப்படியான பெண்களின் வாரிசுகளின் நிலை என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

சீனி ஏட்டன் இட்லி, தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் மிளகாய் பொடி காலை உணவு அளித்தார். அத்துடன் சாயா ஒன்று. 

வீடு என்பது அறம் வாழும் இல்லம். ஒரு சில வீடுகளுக்குள் நுழையவே முடியாது. உடலில் எரிச்சல் உண்டாகும். ஒரு சில வீடுகளுக்குள் சென்று வந்தால் தரித்திரம் நம்மையும் பீடித்து விடும். பெரும்பாலும் நான் எவரின் வீட்டுக்கும் செல்வது இல்லை. உள்ளே நுழைந்ததும் தெரிந்து விடும் அவர்களின் வாழ்க்கை. இதற்கெல்லாம் ஞானம் தேவை இல்லை. அனுபவத்தில் அறியலாம். வாய் சும்மா இருக்காது. உண்மை பேசுகிறேன் பேர்வழி என உளறி விடுவேன். அது தேவையற்ற மனச்சங்கடங்களை உருவாக்கி விடுவதால் தவிர்த்து விடுவேன். 

சீனி ஏட்டனின் வீட்டில் அன்றலர்ந்த மலர் போன்ற முகங்கள் கண்டேன். மனதும் வயிறும் நிறைந்தது. எல்லாம் குருநாதரின் ஆசீர்வாதம்.

சீனி ஏட்டன் வழிகாட்ட கொடுங்களூர் நோக்கிப் பயணித்தேன்.

சுவாமியிடம் ஏன் அந்தக் குரல் இன்னும் பத்தடி தூரம் வா என்று சொன்னது?  அந்த குரல் யாருடையது? மாப்பு தரு சாமி என்ற குரல் ஏன் சுவாமியிடம் மன்னிப்புக் கேட்டது? இன்னும் பல விடை தெரியாக் கேள்விகளுடன் கொடுங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்தேன்.

தொடரும்...!

Monday, March 21, 2022

மாப்பு தரு சாமி - விதை

’மனமது செம்மையானால் மந்திரம்’ தேவையில்லை என்பதால் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரினை படித்து அதன் வழி நடப்பவன். 

’நீயே கடவுள்’ என்ற திருமூலரின் வார்த்தையின் மீது பிடிப்புக் கொண்டவன். 

வள்ளலாரின் ‘ஜீவகாருண்யத்துக்கு’ மேலானது வேறில்லை என்று நினைப்பவன்.

’அன்பே கடவுள்’ என நம்புபவன். 

உருவ வழிபாடுகள், பூஜைகள், ஆரத்திகள், மந்திரங்கள் ஓதுவது போன்றவற்றில் எனக்கு ஈடுபாடு இருக்காது. 

கோவிலுக்குச் செல்வேன், வணங்குவேன். அவ்விடங்களில் என் மனமானது சலனமற்று இருக்கும். அமைதியாக இருப்பேன். உள்ளத்தில் வேறேதும் சிந்தனைகள் கிளம்பாது. மனம் இறந்த நிலையில் அமைதியாக அமர்ந்திருப்பேன். கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் கூட இங்கணம் அமர்ந்திருப்பேன். எந்த இடம் மன அமைதியைத் தருகிறதோ, மனதில் சலனமற்ற தன்மையை உருவாக்குகிறதோ அந்த இடத்தில் இருப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும்.

சமீப காலமாக நானொரு செயலைச் செய்து வருகிறேன். எனக்கு அது நல்ல பலன்களைத் தருகிறது.

எம் குரு சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆலய வாசலில் ’பேச்சைக் குறைத்து மூச்சை கவனி” என்ற வாசகம் இருக்கும். 

அதன் அர்த்தம் எனக்கு தெரிந்தாலும் அதை நான் பயன்படுத்திப் பார்த்தது இல்லை. 

திடீரென்று ஒரு நாள் மூச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன். மூச்சை நன்கு உள் இழுத்து வெளியில் விடுவேன்.அதைக் கவனிப்பேன். அப்போது வேறு எந்தச் சிந்தனையும் இறாது. அங்கணம் செய்யும் போது மனம் அதன் சிந்தனை அல்லாது போகும். இதனை வாடிக்கையாக செய்து வந்தேன். எப்போதெல்லாம் படுக்கையில் படுத்திருப்பேனோ அப்போதெல்லாம் மூச்சைக் கவனிப்பது எனக்கு வழக்கமாகியது.

இரவுகளில் தூக்கம் வராத நாளில் இங்கனம் செய்யும் போது சட்டென்று தூக்கம் வந்து விடும். 

இப்படியான ஒரு நாளில் ஒரு மாலை நேரம், சிதார் இசை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூச்சைக் கவனிக்க ஆரம்பித்த போது விழிப்பு நிலையில் உடலில் இருந்து எதுவோ வெளியேறியது போல தோன்றியது. அடுத்த நொடியில் நான் என் உடம்பைப் பார்ப்பது போல தோன்றியது. சட்டென்று பயமேற்பட உதறி எழுந்தேன். 

பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன்.

ஜோதி சுவாமிகளிடம் இது பற்றிக் கேட்ட போது, ’தொடர்ந்து அப்படியே செய்து வாருங்கள், சரியான வழியில் தான் செல்கின்றீர்கள்” என்றார்.

சென்ற நாட்களுள் ஒரு நாள் மாலையில் ஆசிரமத்தில் இருந்து வீட்டுக்கு வந்த கோதை படபடப்பாக அருகில் வந்து அறைக்கதவைச் சாத்தினார்.

முகம் பார்த்தேன்.

“ஏங்க, அன்னபூரணி அம்மாவைப் பார்த்தேன், போதுங்க, என் பிறப்பு முழுமையடைந்து விட்டது” என்று சொல்ல எனக்கு ‘ஞே’ என்று தோன்றியது. 

’என்ன சொல்றா?’ என்று குழம்பினேன்.

விபரம் கேட்டேன். சொல்ல ஆரம்பித்தாள்.

மாலை நேரம், மங்கிய பொழுதில், ஜோதி சுவாமி அறைக்குள் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது ’ஜல்,ஜல்’ என்ற ஒலியுடன் ஒரு அம்மா வந்திருக்கிறார். அவரின் முகம் மஞ்சள் வண்ணமாக தேஜஸுடன் ஜொலித்திருக்கிறது. 

அறை வாசலில் நின்று கொண்டு “ஜோதி, சவுக்கியமா?“ என்று கேட்டவுடன்,  அவரைப் பார்த்த சுவாமி அப்படியே பேச்சு மூச்சன்றி மயங்கி விழுந்து விட பதட்டத்துடன் கோதையும் அருகில் இருந்த இன்னும் சிலரும் முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சையை தெளிவிக்க, சுவாமி ”அம்மா! அம்மா!” என்று கோதையிடம் சொல்ல விதிர்த்து நின்ற கோதை அந்த அம்மாவைப் பார்த்து வணக்கம் சொல்ல சிறிது நேரத்தில் வெளியே வந்த அந்த அம்மா காணாமல் போய் விட்டார் எனச் சொன்னார்.

இச்சம்பவம் நடந்தது ஆசிரமத்தில்.

சொல்பவர் மனைவி. 

சுட்டிக் காட்டியவர் ஜோதி சுவாமி. 

நம்பித்தான் ஆக வேண்டும். 

எனக்குள் ஒரு கேள்வி முளைத்து விட்டது. 

”என்னால் புரிந்து கொள்ள முடியாத, உணர்ந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது போலும். அது என்ன?”

மனமற்ற நிலைக்குச் செல்வதைத்தானே யோகிகள் சொல்லி இருக்கின்றார்கள். அந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் பிரபஞ்சத்துடன் இணைந்து விடலாம். ’நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்’ என்ற நிலையில் இயற்கையில் ஆழப் புதைந்து போய் விடலாம் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் கோதை என்னிடம் சொல்லியது வேறொன்றாக இருக்கிறதே எனக் குழப்பமானது.

ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தா காளி கோவிலில் இருக்கும் தெய்வமான காளியுடன் பேசுவார் என்று மகேந்திர நாத் குப்தா ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்” நூலில் எழுதி இருப்பது நினைவுக்கு வந்து விட்டது.

கேள்வி துளிர்த்து.

தளைந்தது.

செடியாகி நின்றது.

சுவாமி திடீரென்று அழைத்து, ”கேரளா போயிட்டு வர்றேன் ஆண்டவனே” என்றுச் சொல்லி விட்டு அக்கா ராஜேஸ்வரியுடன் சென்று விட்டார்.

மாலை நேரத்தில் அவரிடமிருந்து போன் வரவில்லை. 

எனக்குள் சிறு பதட்டம் வந்து விட்டது. 

ஏனென்றால் ரித்திக் முதன் நாள் காரில் சிட் லைட்டை அணைக்காமல் விட்டு விட்டான். காரின் பேட்டரி டவுன். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. விடிகாலையில் கார்கேர் மதன் வீட்டிற்கு வந்து வேறு பேட்டரியை வைத்து காரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டிருந்தார். 

பின்னர் மறுபடி கார் ஸ்டார்ட் ஆனது. பாட்டரியினால் சுவாமியின் பயணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டதோ என்று தோன்றியது.

மறுநாள் காலையில் அழைத்தேன். அழைப்பை எடுக்கவில்லை. அக்காவுக்கு அழைத்தேன் அக்காவும் எடுக்கவில்லை. 

சிறிது நேரம் சென்ற பின்னாலே, சுவாமி அழைத்தார்.

“ஆண்டவனே..! மாப்பு தரு சாமி” என்ற வார்த்தையினைச் சொன்னார்.

எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும் என்பதால் மாப்பு என்றால் மன்னிப்பு என்று தெரியும். 

அந்த வார்த்தையை ஏன் சுவாமி என்னிடம் சொன்னார்?

விரைவில்...