குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label அன்னபூரணி. Show all posts
Showing posts with label அன்னபூரணி. Show all posts

Monday, March 21, 2022

மாப்பு தரு சாமி - விதை

’மனமது செம்மையானால் மந்திரம்’ தேவையில்லை என்பதால் ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஆகியோரினை படித்து அதன் வழி நடப்பவன். 

’நீயே கடவுள்’ என்ற திருமூலரின் வார்த்தையின் மீது பிடிப்புக் கொண்டவன். 

வள்ளலாரின் ‘ஜீவகாருண்யத்துக்கு’ மேலானது வேறில்லை என்று நினைப்பவன்.

’அன்பே கடவுள்’ என நம்புபவன். 

உருவ வழிபாடுகள், பூஜைகள், ஆரத்திகள், மந்திரங்கள் ஓதுவது போன்றவற்றில் எனக்கு ஈடுபாடு இருக்காது. 

கோவிலுக்குச் செல்வேன், வணங்குவேன். அவ்விடங்களில் என் மனமானது சலனமற்று இருக்கும். அமைதியாக இருப்பேன். உள்ளத்தில் வேறேதும் சிந்தனைகள் கிளம்பாது. மனம் இறந்த நிலையில் அமைதியாக அமர்ந்திருப்பேன். கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகளில் கூட இங்கணம் அமர்ந்திருப்பேன். எந்த இடம் மன அமைதியைத் தருகிறதோ, மனதில் சலனமற்ற தன்மையை உருவாக்குகிறதோ அந்த இடத்தில் இருப்பது எனக்கு நிரம்பவும் பிடிக்கும்.

சமீப காலமாக நானொரு செயலைச் செய்து வருகிறேன். எனக்கு அது நல்ல பலன்களைத் தருகிறது.

எம் குரு சற்குரு வெள்ளிங்கிரி சுவாமிகளின் ஆலய வாசலில் ’பேச்சைக் குறைத்து மூச்சை கவனி” என்ற வாசகம் இருக்கும். 

அதன் அர்த்தம் எனக்கு தெரிந்தாலும் அதை நான் பயன்படுத்திப் பார்த்தது இல்லை. 

திடீரென்று ஒரு நாள் மூச்சைக் கவனிக்க ஆரம்பித்தேன். மூச்சை நன்கு உள் இழுத்து வெளியில் விடுவேன்.அதைக் கவனிப்பேன். அப்போது வேறு எந்தச் சிந்தனையும் இறாது. அங்கணம் செய்யும் போது மனம் அதன் சிந்தனை அல்லாது போகும். இதனை வாடிக்கையாக செய்து வந்தேன். எப்போதெல்லாம் படுக்கையில் படுத்திருப்பேனோ அப்போதெல்லாம் மூச்சைக் கவனிப்பது எனக்கு வழக்கமாகியது.

இரவுகளில் தூக்கம் வராத நாளில் இங்கனம் செய்யும் போது சட்டென்று தூக்கம் வந்து விடும். 

இப்படியான ஒரு நாளில் ஒரு மாலை நேரம், சிதார் இசை கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மூச்சைக் கவனிக்க ஆரம்பித்த போது விழிப்பு நிலையில் உடலில் இருந்து எதுவோ வெளியேறியது போல தோன்றியது. அடுத்த நொடியில் நான் என் உடம்பைப் பார்ப்பது போல தோன்றியது. சட்டென்று பயமேற்பட உதறி எழுந்தேன். 

பதட்டத்தில் கை கால்கள் எல்லாம் உதற ஆரம்பித்தது. எழுந்து அமர்ந்து கொண்டேன்.

ஜோதி சுவாமிகளிடம் இது பற்றிக் கேட்ட போது, ’தொடர்ந்து அப்படியே செய்து வாருங்கள், சரியான வழியில் தான் செல்கின்றீர்கள்” என்றார்.

சென்ற நாட்களுள் ஒரு நாள் மாலையில் ஆசிரமத்தில் இருந்து வீட்டுக்கு வந்த கோதை படபடப்பாக அருகில் வந்து அறைக்கதவைச் சாத்தினார்.

முகம் பார்த்தேன்.

“ஏங்க, அன்னபூரணி அம்மாவைப் பார்த்தேன், போதுங்க, என் பிறப்பு முழுமையடைந்து விட்டது” என்று சொல்ல எனக்கு ‘ஞே’ என்று தோன்றியது. 

’என்ன சொல்றா?’ என்று குழம்பினேன்.

விபரம் கேட்டேன். சொல்ல ஆரம்பித்தாள்.

மாலை நேரம், மங்கிய பொழுதில், ஜோதி சுவாமி அறைக்குள் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது ’ஜல்,ஜல்’ என்ற ஒலியுடன் ஒரு அம்மா வந்திருக்கிறார். அவரின் முகம் மஞ்சள் வண்ணமாக தேஜஸுடன் ஜொலித்திருக்கிறது. 

அறை வாசலில் நின்று கொண்டு “ஜோதி, சவுக்கியமா?“ என்று கேட்டவுடன்,  அவரைப் பார்த்த சுவாமி அப்படியே பேச்சு மூச்சன்றி மயங்கி விழுந்து விட பதட்டத்துடன் கோதையும் அருகில் இருந்த இன்னும் சிலரும் முகத்தில் தண்ணீர் தெளித்து மூர்ச்சையை தெளிவிக்க, சுவாமி ”அம்மா! அம்மா!” என்று கோதையிடம் சொல்ல விதிர்த்து நின்ற கோதை அந்த அம்மாவைப் பார்த்து வணக்கம் சொல்ல சிறிது நேரத்தில் வெளியே வந்த அந்த அம்மா காணாமல் போய் விட்டார் எனச் சொன்னார்.

இச்சம்பவம் நடந்தது ஆசிரமத்தில்.

சொல்பவர் மனைவி. 

சுட்டிக் காட்டியவர் ஜோதி சுவாமி. 

நம்பித்தான் ஆக வேண்டும். 

எனக்குள் ஒரு கேள்வி முளைத்து விட்டது. 

”என்னால் புரிந்து கொள்ள முடியாத, உணர்ந்து கொள்ள முடியாத ஏதோ ஒன்று இருக்கிறது போலும். அது என்ன?”

மனமற்ற நிலைக்குச் செல்வதைத்தானே யோகிகள் சொல்லி இருக்கின்றார்கள். அந்த நிலையை ஒருவன் அடைந்து விட்டால் பிரபஞ்சத்துடன் இணைந்து விடலாம். ’நான் அசைந்தால் அசையும் உலகமெல்லாம்’ என்ற நிலையில் இயற்கையில் ஆழப் புதைந்து போய் விடலாம் என்றெல்லாம் சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் கோதை என்னிடம் சொல்லியது வேறொன்றாக இருக்கிறதே எனக் குழப்பமானது.

ஸ்ரீராமகிருஷ்ணர் கல்கத்தா காளி கோவிலில் இருக்கும் தெய்வமான காளியுடன் பேசுவார் என்று மகேந்திர நாத் குப்தா ‘ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்” நூலில் எழுதி இருப்பது நினைவுக்கு வந்து விட்டது.

கேள்வி துளிர்த்து.

தளைந்தது.

செடியாகி நின்றது.

சுவாமி திடீரென்று அழைத்து, ”கேரளா போயிட்டு வர்றேன் ஆண்டவனே” என்றுச் சொல்லி விட்டு அக்கா ராஜேஸ்வரியுடன் சென்று விட்டார்.

மாலை நேரத்தில் அவரிடமிருந்து போன் வரவில்லை. 

எனக்குள் சிறு பதட்டம் வந்து விட்டது. 

ஏனென்றால் ரித்திக் முதன் நாள் காரில் சிட் லைட்டை அணைக்காமல் விட்டு விட்டான். காரின் பேட்டரி டவுன். கார் ஸ்டார்ட் ஆகவில்லை. விடிகாலையில் கார்கேர் மதன் வீட்டிற்கு வந்து வேறு பேட்டரியை வைத்து காரை ஸ்டார்ட் செய்து ஓட விட்டிருந்தார். 

பின்னர் மறுபடி கார் ஸ்டார்ட் ஆனது. பாட்டரியினால் சுவாமியின் பயணத்துக்கு ஏதாவது பிரச்சினை வந்து விட்டதோ என்று தோன்றியது.

மறுநாள் காலையில் அழைத்தேன். அழைப்பை எடுக்கவில்லை. அக்காவுக்கு அழைத்தேன் அக்காவும் எடுக்கவில்லை. 

சிறிது நேரம் சென்ற பின்னாலே, சுவாமி அழைத்தார்.

“ஆண்டவனே..! மாப்பு தரு சாமி” என்ற வார்த்தையினைச் சொன்னார்.

எனக்கு மலையாளம் கொஞ்சம் தெரியும் என்பதால் மாப்பு என்றால் மன்னிப்பு என்று தெரியும். 

அந்த வார்த்தையை ஏன் சுவாமி என்னிடம் சொன்னார்?

விரைவில்...