குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நில உச்சவரம்புச் சட்டம். Show all posts
Showing posts with label நில உச்சவரம்புச் சட்டம். Show all posts

Friday, April 29, 2022

நிலம் (97) - நில உச்ச வரம்புச் சட்டம் தமிழ் நாட்டில் உள்ளதா?

எவரும் நம்ப மாட்டார்கள். சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஜாக்கிரதையாக இருங்களேன் என்றால் கேட்கவே கேட்க மாட்டேன் என்கிறார்கள். 

தமிழகத்தில் நில உச்ச வரம்புச் சட்டமாவது ஒன்றாவது என்று என்னை நக்கலுடன் பார்ப்பார்கள்.

1962ம் ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டம் முன்பு (தமிழ் நாடு சட்டம் 58, 1861) அதாவது உச்ச வரம்புச் சட்டத்தின் 12 மற்றும் 14வது பிரிவின் கீழ் அரசு தானாகவே எவரிடமாவது உச்ச வரம்புக்கு மேல் நிலம் இருப்பின் அரசு நிலமாக மாற்றி விடும். 

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிப் பார்க்கலாம்.

நிலத்தைக் கிரையம் செய்து விட்டு லீகல் பார்க்க வந்தவர் தந்த ஆவணத்தைப் பார்த்த போது எங்கேயோ பார்த்த அரசு உத்தரவு போல இருக்கிறதே என்று நினைவில் வர ஆய்வு செய்து சொல்கிறேன் என்றுச் சொல்லி அனுப்பி விட்டேன். 

அவரின் நிலம் உச்சவரம்புச் சட்டத்துக்கு உட்பட்டதா? இல்லையா? அந்த இடம் கோவையில் எங்கே உள்ளது என்பது பற்றி விரைவில் பார்க்கலாம்.


Wednesday, December 16, 2020

நிலம் (74) - உபரி நிலங்கள் - ஜாக்கிரதை

விரைவில் தமிழகத்தில் போர் தொடங்கப் போகிறது. 

முன்னெடுப்பாக பத்திரப்பதிவுத் துறையில் அதிகமான பத்திரங்கள் பதியப்படுகின்றன. பொங்கலுக்குள் உச்சத்தைத் தொடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று மாதங்கள் பதிவுத் துறையில் ஒன்றும் பதிவாகாது.

இந்தப் போர் அரசியல்வாதிகள் அனேகரின் வாழ்க்கையை முடித்து வைக்கும் என நினைக்கிறேன்.

வரவு செலவு கணக்கு வழக்குகள் இந்தப் போரில் சரி பார்க்கப்படும். விதியின் விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது யாரோ தெரியவில்லை. பள்ளம் மேடாவதும், மேடு காணாமல் போவதும் விதியின் கையில் உள்ளது.

தேர்தலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகாரத்துக்கு வரப் போர் நடக்கிறது. இது மகாபாரதப் போரை விட கொடிதானதாக இருக்கும். துரியோதன சேனை மிகப் பெரிது. வலிமையானது. 

அதற்குத் தேர்தல் என்று பெயர். 

இந்தியாவில் சமீபத்தில் நடப்பது தேர்தல் இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும். எல்லாமும் விற்பனைக்கு மனச்சாட்சியும் கூடத்தான். சட்டம் எப்போதோ விற்பனைக்கு வந்து விட்டது.

சரி இந்த அக்கப் போர் எப்போதைக்கும் நடந்து கொண்டே தானிருக்கும். மக்களும் ஆட்டு மந்தைக் கூட்டம் போலத்தான்.

சமீபத்தில் கோவையின் மேற்கு மலைச்சாரல் பக்கம் ஒரு பிசினஸ் விஷயமாகச் சென்றிருந்த போது ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

அதற்கு முன்பாக ஒரு இடைச்செருகல்.

டேன் இந்தியா என்றொரு கம்பெனியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஒரு வித்தியாசமான வழக்கு நடந்தது. 

டேன் இந்தியாவிற்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும்படி கோர்ட் மூலம் சொத்து கைப்பற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்தார்கள்.

அந்த நேரத்தில் டேன் இந்தியா வைத்திருந்த நிலங்கள், நில உச்சவரம்பு மற்றும் சீர்திருத்தச் சட்டத்தின்படி, அனுமதி பெறாமல் இருந்த நிலமானது அரசின் சொத்து என வாதிடப்பட்டது.

அதாவது டேன் இந்தியா வாங்கிய நிலங்கள், இன்ன காரணத்துக்காக வாங்கப்படுகிறது, ஆகவே அனுமதி தாருங்கள் என நில உச்சவரம்பு ஆணையத்திடம் அனுமதி பெறாத காரணத்தால், ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட சீலிங் லிமிட் நிலத்தை விட, அதிகமாயுள்ள நிலமானது அரசுக்கு சொந்தமானது என்று வாதிடப்பட்டது.

இது சட்டப்படி சரியானதுதான். பின்னர் அரசுக்குச் சொந்தமான சொத்தினை எப்படி விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுக்க இயலும்? முடியாது. இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளானது அப்பிரச்சினை.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பக்கம் இருக்கும் ஒரு சில கிராமங்களில் சுமார் 1800 ஏக்கர் நிலங்கள் உபரி நிலங்கள் என அறிவிக்கப்பட்டவை. அந்த நிலங்களைக் கிரையம் பெறுவது கூடாது. ஒரு சில பேராசை பிடித்தவர்களால் அந்த நிலங்களுக்குப் பட்டாக்கள் பெறப்பட்டு விற்பனை செய்ய முற்படுகிறார்கள்.

ஒரு சிலர் இன்னும் வியாக்கினமாக, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று விடுகின்றார்கள். பத்திரப்பதிவு அலுவலகங்களில் இப்படியான நிலங்களின் தரவுகள் இருப்பதில்லை. ஆகவே பதிவு அலுவலகங்கள் பத்திரங்களைப் பதிவு செய்து விடுகின்றன.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, தாராபுரம் போன்ற தாலுக்காக்களில் பெரும்பாலான நிலங்கள் உபரி நிலங்கள். அது பற்றிய நோட்டீஸ் நில உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பலரும் இதை மறைத்து விடுகின்றார்கள். 

இது பற்றிய விவரம் எவருக்கும் தெரிந்தபாடில்லை. 25 ஏக்கருக்கும் மேல் என்றாலோ, பிரித்து விற்பனை செய்கிறார்கள் என்றாலோ ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால் மிக நல்ல விஷயம் தெரிந்த லீகல் ஒப்பீனியன் வழங்குபவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அதுமட்டுமல்ல மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் பஞ்சமி பூமிகள் அதிகமுள்ளன. பெரும்பாலான கம்பெனிகள் இந்தப் பஞ்சமி பூமிகளில் தான் கட்டப்பட்டுள்ளன எனத் தெரிய வருகிறது.

கடும் உழைப்பில் கிடைக்கும் பணத்தினை சரியான நிலத்தில் முதலீடு செய்வது முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

உபரி நிலங்கள் மற்றும் சீலிங்க் லிமிட் பற்றித் தெரிந்து கொள்ள என்னை அணுகலாம். நிச்சயம் கட்டணம் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவற்றை கவனித்து வாங்குங்கள்.

வாழ்க வளமுடன்...!




Monday, December 11, 2017

நிலம் (42) - நில உச்ச வரம்புச் சட்டம் இன்னும் இருக்கிறதா?

என்னிடம் ஆலோசனை கேட்க வரும் பலரிடம் நில உச்சவரம்புச் சட்டம் பற்றி விவரித்திருக்கிறேன். ஆனால் ஒருவரும் நம்பமாட்டேன் என்றார்கள். ஒருவர் ”என் வக்கீலிடம் கேட்டேன், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, உங்களுக்கு மட்டும் தான் இப்படி வித்தியாசமான விஷயமெல்லாம் தெரியுமா?” என்று எதிர்கேள்வி கேட்டார். அவரிடம் நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. முட்டாள்களிடம் பேசுவதில் என்ன பிரயோஜனம்? சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா? என்று கூடவா சிந்திக்கக் கூடாது. வக்கீல் சொல்லி விட்டார் என்றால் போதுமா? உண்மை என்று ஒன்று உண்டு அல்லவா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள் என்றே தெரியவில்லை. அது போகட்டும். அது அவரவர் பிரச்சினை.

“சாலையோரம் இருந்த இடத்தினை வாங்காதீர்கள்” என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்கவில்லை. இன்றைக்கு இடித்து விட்டார்கள். என் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை எனக்குத் தெரிந்தவருக்கு. காசும் போச்சு, நிம்மதியும் போச்சு. சொன்னால் கேட்பவர்களுக்கு சொல்லலாம். ஆதாரத்தைக் கொடுத்தும், கேட்கமாட்டேன் என்று நிலம் வாங்கியவரின் கதி இன்றைக்கு அதோகதி. படட்டும். இனி புத்தி வந்து என்ன ஆகப் போகிறது?

நில உச்சவரம்புச் சட்டம் என்றால் என்னவென்றால் ஒரு தனி மனிதர் மொத்தமாக ஐந்து தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அதிகமாக வைத்திருந்தால் அரசு எந்த அறிவிப்பும் இன்றி அதை அரசுடைமையாக்கி விடும். விஷயம் புரிகிறதா? தனியார் கம்பெனிகள் என்றால் 15 தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு என தனியாக அரசு அலுவலகம் வைத்திருக்கிறது.

தினமலரில் வந்த செய்தி கீழே:

நில சீர் திருத்த சட்ட பணிகளை கண்காணிக்கும் துணை கலெக்டர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரிடம், ஒப்படை அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சிலரிடம் உபரியாக உள்ள நிலங்களை பெற்று, நிலம் இல்லாதோருக்கு வழங்கும் நில சீர்திருத்த சட்டம், சுதந்திரத்துக்கு பின் கொண்டுவரப்பட்டது. 

தமிழக நில சீர்திருத்த, நில உச்சவரம்பு சட்டம், 1961ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது, 1970 பிப்., 15 முதல் நடைமுறையில் உள்ளது. நில உச்சவரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின், 1983, மார்ச் முழுவதும், 1.11 கோடி ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில், 72 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 49 லட்சம் ஏக்கர், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நில உச்சவரம்பு சட்டம், தற்போதும் நடைமுறையில் உள்ளது. சட்ட விதிகளின்படி, நிலம் எடுப்பு, பட்டா மோசடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளுக்காக, மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட அளவில், துணை கலெக்டர் தலைமையிலான பிரிவு, நில உச்சவரம்பு சட்ட பணிகளுக்காக இயங்கி வந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, சில மாதங்களுக்கு முன், நில சீர்திருத்த பணிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ., எனப்படும், வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நில சீர்திருத்த அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் ஒப்படை வழங்கும் அதிகாரிகளாக, அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில சீர்திருத்த சட்டத்தில், நிலம் எடுப்பு, ஒப்படைப்பு தொடர்பான பணிகள், சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உபரி நிலம் ஒப்படைப்பு, நில சீர்திருத்தம் போன்ற பணிகள், சட்ட வழிகாட்டுதலின்படி, வருவாய் கோட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படும். 

இது குறித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில், சப்-கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


படித்து விட்டீர்களா? யாரெல்லாம் ஏகத்துக்கும் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றீர்களோ அவர்கள் உடனடியாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று வாழாவிருந்து விடாதீர்கள். அதென்ன தர ஏக்கர் என்று கேள்வி கேட்பவர்கள் போனில் அழைக்கவும். அல்லது மெயில் அனுப்பவும்.

விரைவில் பாகம் பிரித்த சொத்தின் உரிமையாளர், இறந்து போனால் அந்தச் சொத்தின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்விக்கும், வில்லங்கமான ஒரு விஷயத்திற்கு விளக்கம் எழுத இருக்கிறேன்.