குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 11, 2017

நிலம் (42) - நில உச்ச வரம்புச் சட்டம் இன்னும் இருக்கிறதா?

என்னிடம் ஆலோசனை கேட்க வரும் பலரிடம் நில உச்சவரம்புச் சட்டம் பற்றி விவரித்திருக்கிறேன். ஆனால் ஒருவரும் நம்பமாட்டேன் என்றார்கள். ஒருவர் ”என் வக்கீலிடம் கேட்டேன், அப்படி எல்லாம் ஒன்றுமில்லை, உங்களுக்கு மட்டும் தான் இப்படி வித்தியாசமான விஷயமெல்லாம் தெரியுமா?” என்று எதிர்கேள்வி கேட்டார். அவரிடம் நான் சொல்வது உண்மை என்று நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. முட்டாள்களிடம் பேசுவதில் என்ன பிரயோஜனம்? சொல்வதில் ஏதாவது உண்மை இருக்குமா? என்று கூடவா சிந்திக்கக் கூடாது. வக்கீல் சொல்லி விட்டார் என்றால் போதுமா? உண்மை என்று ஒன்று உண்டு அல்லவா? ஏன் சிந்திக்க மாட்டேன் என்கிறார்கள் என்றே தெரியவில்லை. அது போகட்டும். அது அவரவர் பிரச்சினை.

“சாலையோரம் இருந்த இடத்தினை வாங்காதீர்கள்” என்று படித்துப் படித்துச் சொன்னேன். கேட்கவில்லை. இன்றைக்கு இடித்து விட்டார்கள். என் முகத்தைக் கூட பார்க்க முடியவில்லை எனக்குத் தெரிந்தவருக்கு. காசும் போச்சு, நிம்மதியும் போச்சு. சொன்னால் கேட்பவர்களுக்கு சொல்லலாம். ஆதாரத்தைக் கொடுத்தும், கேட்கமாட்டேன் என்று நிலம் வாங்கியவரின் கதி இன்றைக்கு அதோகதி. படட்டும். இனி புத்தி வந்து என்ன ஆகப் போகிறது?

நில உச்சவரம்புச் சட்டம் என்றால் என்னவென்றால் ஒரு தனி மனிதர் மொத்தமாக ஐந்து தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ள முடியும். அதிகமாக வைத்திருந்தால் அரசு எந்த அறிவிப்பும் இன்றி அதை அரசுடைமையாக்கி விடும். விஷயம் புரிகிறதா? தனியார் கம்பெனிகள் என்றால் 15 தர ஏக்கர் மட்டுமே வைத்துக் கொள்ளலாம். அதற்கு மேல் என்றால் அரசிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு என தனியாக அரசு அலுவலகம் வைத்திருக்கிறது.

தினமலரில் வந்த செய்தி கீழே:

நில சீர் திருத்த சட்ட பணிகளை கண்காணிக்கும் துணை கலெக்டர் பணியிடங்கள் கலைக்கப்பட்டு, வருவாய் கோட்டாட்சியரிடம், ஒப்படை அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது.

சிலரிடம் உபரியாக உள்ள நிலங்களை பெற்று, நிலம் இல்லாதோருக்கு வழங்கும் நில சீர்திருத்த சட்டம், சுதந்திரத்துக்கு பின் கொண்டுவரப்பட்டது. 

தமிழக நில சீர்திருத்த, நில உச்சவரம்பு சட்டம், 1961ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது, 1970 பிப்., 15 முதல் நடைமுறையில் உள்ளது. நில உச்சவரம்பு சட்டம் நடைமுறைக்கு வந்த பின், 1983, மார்ச் முழுவதும், 1.11 கோடி ஏக்கர் உபரி நிலம் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றில், 72 லட்சம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. இதில், 49 லட்சம் ஏக்கர், நிலமற்ற ஏழைகளுக்கு வழங்கப்பட்டது. நில உச்சவரம்பு சட்டம், தற்போதும் நடைமுறையில் உள்ளது. சட்ட விதிகளின்படி, நிலம் எடுப்பு, பட்டா மோசடி தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பணிகளுக்காக, மாவட்டம் தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட அளவில், துணை கலெக்டர் தலைமையிலான பிரிவு, நில உச்சவரம்பு சட்ட பணிகளுக்காக இயங்கி வந்தது. மத்திய அரசின் உத்தரவுப்படி, சில மாதங்களுக்கு முன், நில சீர்திருத்த பணிகள் அனைத்தும், ஆர்.டி.ஓ., எனப்படும், வருவாய் கோட்டாட்சியர் வசம் ஒப்படைக்கப்பட்டது. நில சீர்திருத்த அதிகாரம் பெற்ற அலுவலர் மற்றும் ஒப்படை வழங்கும் அதிகாரிகளாக, அதிகாரபூர்வமாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நில சீர்திருத்த சட்டத்தில், நிலம் எடுப்பு, ஒப்படைப்பு தொடர்பான பணிகள், சப்-கலெக்டர் அல்லது ஆர்.டி.ஓ., வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உபரி நிலம் ஒப்படைப்பு, நில சீர்திருத்தம் போன்ற பணிகள், சட்ட வழிகாட்டுதலின்படி, வருவாய் கோட்ட அளவிலேயே மேற்கொள்ளப்படும். 

இது குறித்து, மக்களுக்கு அறிவிப்பு செய்யும் வகையில், சப்-கலெக்டர் மற்றும் ஆர்.டி.ஓ., அலுவலகங்களில், பெயர் பலகை வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்


படித்து விட்டீர்களா? யாரெல்லாம் ஏகத்துக்கும் சொத்துக் குவித்து வைத்திருக்கின்றீர்களோ அவர்கள் உடனடியாக பாதுகாத்துக் கொள்ளுங்கள். தும்பை விட்டு வாலைப் பிடிக்கிறேன் பேர்வழி என்று வாழாவிருந்து விடாதீர்கள். அதென்ன தர ஏக்கர் என்று கேள்வி கேட்பவர்கள் போனில் அழைக்கவும். அல்லது மெயில் அனுப்பவும்.

விரைவில் பாகம் பிரித்த சொத்தின் உரிமையாளர், இறந்து போனால் அந்தச் சொத்தின் அடுத்த வாரிசு யார்? என்ற கேள்விக்கும், வில்லங்கமான ஒரு விஷயத்திற்கு விளக்கம் எழுத இருக்கிறேன். 

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.