குரு வாழ்க ! குருவே துணை !!

Saturday, March 26, 2022

புதிய கல்விக் கொள்கை - தமிழர் விரோத பத்திரிக்கையாக மாறுகிறதா தினமணி?

 எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை

செய் நன்றி கொன்ற மகற்கு - திருக்குறள்.

வேறு எந்த உதவியையும் மனிதன் மறக்கலாம் ஆனால் செய் நன்றியை மறந்த ஒருவனுக்கு வாழ்வில் உயர்வென்பதே இல்லை என்கிறார் தமிழ் புலவர் திருவள்ளுவர்.

இன்றைய 26.03.2022 தினமணி தலையங்கத்திலே ’அஸர் 2021’ அறிக்கை பற்றிய கவலையைத் தெரிவித்து ஆசிரியர்களும் பெற்றோர்களும் கூட்டாக பங்கு பெற்று மாணாக்கர்களின் கல்வியை உயர்த்திட வேண்டுமென்று அக்கறையுடன் முடித்திருக்கிறது.

தலையங்கத்தின் இறுதியில் ஒரு பத்தி இப்படி இருக்கிறது.”கரோனா இல்லாத சமயத்திலேயே எட்டாம் வகுப்பு வரை அனைவரும் தேர்ச்சி (ஆல் பாஸ்) என்பதால் 5ம் வகுப்பு மாணவர்களால் கூட 2ம் வகுப்பு பாடங்களைக் கூட சரியாகப் படிக்க முடியவில்லை என பல ஆய்வுகள் சுட்டிக் காட்டி உள்ளன. மாணவர்களால் புரிந்து கொள்ள இயலாத நிலையில், அவர்களுக்குப் பாடம் நடத்துவது பெரும் சிரமமாக இருப்பதாக 64.5 சதவீத ஆசிரியர்கள் தெரிவித்துள்ளதை ’அஸர் 2021’ அறிக்கை சுட்டிக் காட்டுகிறது” 

தினமணி ஆசிரியரே....!

மாணவன் சரியாகப் படிக்கவில்லை என்பதற்கான முக்கியமான காரணம் முதலில் ஆசிரியர் தான். அடுத்து அவனது சூழல் அல்லது அவனது உறவினர்களாக இருக்கும். எந்த மாணவன் எப்படி படிப்பான் என்பதை ஆசிரியர் கண்டுணர்ந்து கல்வி புகட்ட வேண்டியது அவர் பணி. அனைவரும் பாஸ் என்றால் மாணவர்கள் படிக்க மாட்டேன் என்கிறார்கள் என்று ஆசிரியர்கள் சப்பைக் கட்டு கட்டுவார்கள். முற்றிலும் இது சால்சாப்பு. எந்தப் பெற்றோரும் தன் மகன் படிக்க கூடாது என்று விரும்ப மாட்டார்கள். 

ஆல் பாஸ் என்றால் கல்வி இடை நிற்றல் குறையும் என்றும், மாணவனுக்கு திடீரென்று நன்கு படிக்க வேண்டுமென்ற ஆர்வம் வந்து விட்டால் போதும் என்பதற்காகத்தான் அரசு அனைவரும் பாஸ் என்றுச் சொல்கிறது. ஆரம்ப காலங்களில் சரியாகப் படிக்காத பல மாணாக்கர்கள் ஒரு சில வருடங்களில் நன்கு படிப்பார்கள் என்பதை ஆறேழு வருடம் ஆசிரியப் பணி செய்து வந்த எனக்கு நன்கு தெரியும். புதிய கல்விக் கொள்கை தேர்வு வைக்கச் சொல்கிறது. 

தேர்வில் தோல்வி அடைந்தால் இன்றைய பாஜக ஆட்சியில் முற்றிலுமாக அழிக்கப்பட்ட இந்தியாவில் அடுத்த வேளை சோற்றுக்கு வேலை செய்யச் சென்று விடுவார்கள். 30 சதவீதம் விலைவாசி உயர்ந்து விட்டது. நல் உணவு என்பது எட்டாகனியாகப் போனது ஏழைகளுக்கு. விலை வாசி உயர்வால் ஜி.எஸ்.டி வரிவசூல் அதிகரிக்கிறது. ஆறேழு வருடங்களுக்கு முன்பு இரண்டாயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்ட மளிகைப் பொருட்கள் இன்றைக்கு நான்காயிரம் ஆகிறது. அதே வருமானம், ஆனால் செலவினம் கூடுகிறது. இந்த நிலையில் மீண்டும் தேர்வில் தோல்வி அடைந்த ஒரு மாணாக்கன் மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிப்பான் என எதிர்ப்பார்ப்பது அறிவீனம். பெற்றோர்களும் சடைந்து போவார்கள். மேற்படிப்புக்கு எவனும் வரக்கூடாது என்பதுதான் புதிய கல்விக் கொள்கையின் மறைமுக திட்டம் என்பதைக் கல்வியாளார்கள் சொல்லி இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு அரசுப் பள்ளி ஆசிரியர்களும் மிக நன்றாக பாடம் நடத்தக் கூடிய அனுபவம் பெற்றவர்கள். தனியார் பள்ளி வரும் முன்பே அரசால் நடத்தப்பட்டப் பள்ளிகளில் படித்தவர்கள் தான் இன்றைக்கும் உலகை ஆள்கிறார்கள். அவர்களால் தான் உலகம் வளர்ச்சி அடைந்திருக்கிறது.

அதை விடுத்து 5ம் வகுப்பு மாணவர்களால் 2ம் வகுப்பு பாடங்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எழுதுவது கயமைத்தனம்.

ஆளும் பாஜக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ள புதியக் கல்விக் கொள்கையை தமிழகம் எதிர்க்கிறது. அதற்காக மக்களிடம் பொய்யை விதைக்க தங்களின் அறிவை கயமைத்தனமாகப் பயன்படுத்துவது கொடூரம்.

5ம் வகுப்பில் தேர்வு, 8ம் வகுப்பில் தேர்வு, 10ம் வகுப்பில் தேர்வு, 12ம் வகுப்பில் தேர்வு, கல்லூரிகளில் படிக்க நுழைவுத் தேர்வு என ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு தயாரிப்பு நிறுவனத்திலே தரத்தினை சோதிக்கும் படி மனிதர்களைச் சோதிப்பது என்பது மனித குல வரலாற்றில் இல்லாத கொடூரம்.

பாஜகவின் பிரதமர் மோடி எந்தக் கல்வித் தகுதியை வைத்துக் கொண்டு நாட்டை ஆளுகிறார்? ஆசிரியர் அவர்களே?

நீங்கள் என்ன கல்வித் தகுதியில் தினமணிக்கு ஆசிரியராக இருக்கின்றீர்கள்?

கல்வி என்பது அறிவு தேடலுக்கானது. அது மனிதனின் தரம் அல்ல.

உங்களின் பத்திரிக்கையில் வெளியிடப்படும் ஒவ்வொரு கட்டுரையும், தலையங்கமும் தமிழருக்கு விரோதமாக இருக்கிறது. 

கடவுள் என்பது கற்பிதம் என்ற பெரியாரின் சொற்களால் விளைந்தவை தான் பகுத்தறிவு. 

தமிழர்கள் பகுத்தறிவு மிக்கவர்கள். வீரம் மிக்கவர்கள், அறம் வாழ்வு வாழ்பவர்கள். அவர்களால் உணவு உண்ணும் நீங்களும் உங்கள் பத்திரிக்கையும் தொடர்ந்து தமிழர் விரோத செய்திகளை பொய்யாகப் புனைந்து மக்களை மாக்களாக மாற்றி விடலாம் என மனப்பால் குடிக்காதீர்கள்.

உங்களுடைய நோக்கம் புதிய கல்விக் கொள்கை மிக மிக நல்லது. அதை திமுக அரசு எதிர்க்கிறது என்று மக்களிடம் பொய்யைப் பரப்புவது மட்டுமே.

சமீபத்திய சட்டசபை நிகழ்வில் தமிழகத்தின் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் அவர்கள் தமிழகம் வளர்ந்த மாநிலம் என்றும் உத்திரப் பிரதேசம் பீகாருடன் ஒப்பிடக்கூடாது என்று மட்டும் தான் சொன்னார். 

தமிழகத்தில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன் பயன்படுத்துகிறார்கள் என்றார். அதற்கு உடனே சங்கி மீடியாக்களும், சங்கி போலிகளும் செல்போன் வைத்திருப்பதால் தமிழகம் பணக்கார மா நிலம் என்றுச் சொல்வதாக திரித்து சங்கி தளம் பேஸ்புக்கிலும், யூடியூப்பிலும் போலிச் செய்தியை புரட்டுச் செய்தியைப் பரப்பி வருவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அத்தகையை போலிச் செய்திகளை அடையாளம் கண்டு, எழுதுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு அமைப்பு ஒன்றினை உருவாக்கி இருக்கிறது.

தமிழர்கள் சீரழிய வேண்டுமென்ற உயரிய சிந்தனையில் நடத்தப்படும் பத்திரிக்கைகள் காலப் போக்கில் என்னவாகும் என்பதை அறம் வழி வாழ்வியல் கொண்ட தமிழகம் உங்களுக்கு புகட்டும்.

வாழ்க வளமுடன்...!


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.