குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, March 27, 2022

காக்கை குருவி ஹிஜாப் முஸ்லிம்கள் இந்துக்கள் இந்தியா

கோவை பேரூரிலிருந்து சிறுவாணி வரை சாலையை இருபக்கமும் அகலப்படுத்திக் கொண்டிருகின்றார்கள். கனரக இயந்திரங்கள் சாலைகளின் இருமருங்கும் பள்ளம் தோண்டி மண்ணை எடுத்து விட்டு ஜல்லி நிரப்பப்பட்டு வேலை நடந்து கொண்டிருக்கிறது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான கூட்டம் கார்களிலும், பைக்குகளிலும் டான்ஸ் கிளப்பின் ஹெட் ஆஃபீசுக்கு வருகிறது. சாலையை அகலப்படுத்த வேண்டிய அவசியம் வந்து விட்டது. 

ஈஷா சிவராத்ரி டான்ஸ் கிளப் ஒரு அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கிறது. யானை வழித்தடத்தில் அனுமதி கிடைத்தது எப்படி என்பதெல்லாம் மர்மத்தின் கதை. இந்த அபார்ட்மெண்ட் பற்றிய தகவல்கள் ரெராவில் கிடைக்கவில்லை. அந்த அபார்ட்மெண்ட் கட்டிக் கொண்டிருக்கும் போதே ஈஷா டான்ஸ் கிளப் ஓனரின் நட்புவட்ட மந்திரி பிரதானிகளின் அன்பினால் அபார்ட்மெண்ட்டுக்கு செல்லும் சாலைகளை செப்பனிட்டும், சாலையோரம் சிமெண்டால் தடுப்புகள் கட்டி அகலப்படுத்திக் கொடுத்தார்கள். கொடுப்பினை வேண்டும்.


(ஈஷா டான்ஸ் கிளப் கட்டிக் கொண்டிருக்கும் அபார்ட்மெண்ட் வட்டத்தில் இருப்பது)

இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இருக்கும் காருண்யா போலீஸ் நிலையத்தின் கேட்டை கடந்த வாரம் யானை ஒன்று கோபத்தில் உடைத்து எறிந்து விட்டது. பார்க்க புகைப்படம். ஆதாரம் இருக்கிறது. சும்மாச்சுக்கும் எழுதவில்லை.


கடந்த வாரத்தில் யானையால் உடைக்கப்பட்ட காருண்யா நகர் காவல்துறை அலுவலகத்தின் பிரதான கேட்

இப்படியெல்லாம் தொண்டாமுத்தூர் ஈஷா டான்ஸ் கிளப்பால் வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறது. வளர்ச்சி என்பது இயற்கையை அழித்தலில் தான் தொடங்குகிறது அல்லவா? அதை செவ்வனே செய்கிறார்கள் இந்தப் பகுதியில்.

கோடை காலத்தில் மலைகளில் தண்ணீர் இருக்காது. யானைகள் மலையிலிருந்து உணவுக்காகவும், தண்ணீருக்காகவும் பல்லாண்டுகாலமாக இருக்கும் வழித்தடம் வழியாக கீழே வரும்.

அந்த வழித்தடத்தில் ஈஷா டான்ஸ் கிளப்பைக் கட்டி வைத்துக் கொண்டுள்ளது. சிவராத்ரி அன்றைக்கு மலைகளில் அமைதியாக இருக்கும் காக்கை குருவிகளில் இருந்து அனைத்து மிருகங்களையும் டான்ஸ் என்ற பெயரில் கடூர சத்தத்தினால் பீதிக்குள்ளாக்கி வருகிறது. இதைப் பற்றிய எந்த ஒரு அறிவும் புரிதலும் இன்றி அரிப்பு தாளாமல் கார்களில் குவியும் மனிதப் பிறவிகளை என்னவென்று சொல்வது என்று தெரியவில்லை.

ஆன்மீகத்தின் முக்கியதன்மை அமைதியாக இருப்பது. ஆட்டம் பாட்டம் இல்லை. 

அது மட்டுமல்ல சாலையை அகலப்படுத்துகிறேன் பேர்வழி என ஆலந்துறை அரசுப் பள்ளியின் எதிரில் இருந்த பெரிய மரமொன்றை வெட்டி வீழ்த்தி விட்டார்கள். மிகப் பெரிய மரம் அது. அடுத்து காருண்யா நகரில் சிறுவாணி சூப்பர் மார்க்கெட் பகுதியில் இருந்த பெரிய மரங்களை எல்லாம் வெட்டி விட்டார்கள். 

காக்கைகளும், குருவிகளும் அடைந்திருந்த வாழ்விடமான அந்த மரங்களை மனிதப்பதர்களின் வசதிகளுக்காக வெட்டி விட்டார்கள். எத்தனை ஆண்டுகாலமாக அம்மரங்கள் அங்கிருந்தனவோ தெரியவில்லை. எத்தனையோ சின்னஞ் சிறு பறவைகளுக்கு அவைகள் புகலிடமாக இருந்தன. இனி அப்பறவைகள் வாழ்விடத்திற்கு  என்ன செய்யப் போகின்றனவோ தெரியவில்லை.

மரங்களை வெட்டா வண்ணம் சாலைகள் அமைத்தால் ஒன்றும் குறையப்போவதில்லை. நாம் பிறக்கும் முன்பே உருவான மரத்தை வெட்ட வேண்டுமா என்று காண்ட்ராக்டர் கூட நினைக்கவில்லை. ஊர்க்காரர்கள் கூட தடுக்கவில்லை. என்ன தான் ஜென்மமோ தெரியவில்லை.

ஏற்கனவே ஈஷா டான்ஸ் கிளப் நூறு ஏக்கரில் இருந்த மரங்களை வெட்டி, பெரும் பாறைகளை வைத்து கிளப்பை சுற்றிலும் மதில் கட்டி விட்டது. இந்த இடத்தில் யானை வழித்தடமில்லை என்று சான்றிதழ் கொடுத்த அரசு மகானுபாவர்கள் ஏன் பெரும் பாறைகளை வைத்து மதில் கட்டினீர்கள் என்று கேள்வி கேட்டிருக்க மாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் கிளப்பின் கருணையில் வாழும் கிளப் டான்ஸ் சேவகர்கள் அவர்கள். சம்பளத்தை விட கிம்பளமும், அதிகாரமும் பெரிது அல்லவா? 

அறம், சட்டம், தர்மம் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? அதுதான் பரிகாரம் இருக்கிறதே, நவீன குரு இருக்கின்றார்களே. அவர்கள் சிவபெருமானையே பூமிக்கு கொண்டு வந்து பதிய வைத்திருக்கிறார்கள். அவர் நம்மை கவனித்துக் கொள்ள மாட்டாரா? என்ற நிலையில் சட்டம் பற்றியெல்லாம் கவலைப்பட ஒன்றுமில்லை.

இப்படி மரங்களையும், வழித்தடங்களையும் அழித்து விட்டால் காக்கைகளும், குருவிகளும் வேறு எங்குதான் போகும்? யானைகளும், இதர விலங்குகளும் வேறு எங்குதான் செல்லும்?  அவைகள் எப்படித்தான் உயிர் வாழ்வது? எல்லாவற்றையும் ஆக்கிரமித்து அழித்து விட்டால், பறவைகள் குடியிருக்கும் பெரும் மரங்களை வெட்டி விட்டால் அவைகள் எப்படித்தான் வாழும்? ஏன் இவைகளைப் பற்றிச் சிந்திக்க வேண்டும்?  விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் கேட்பதற்கு நாதி எவர் இருக்கிறார் இங்கே? உழவு மாட்டைக் கூட வயதானால் அறுப்புக்கு அனுப்பும் மனிதர்கள் தானே இவர்கள்.

பிரிட்டிஷாரிடம் அடிமையாக கிடந்த ஜீனில் பிறந்தவர்களுக்கு கேள்வி கேட்க கூட தைரியமில்லை.

காக்கைகளும் குருவிகளும் விலங்குகளும் இல்லாமல் மனிதன் வாழ முடியுமா? பசு மாட்டுக்கு மட்டும் தான் பேசுமா இந்த உலகம்? பசு மாடு பால் தரவில்லை என்றால் அதையும் அல்லவா அனாதை ஆக்கி இருக்கும் இந்த உலகம்? இத்தனை அக்கிரமங்களும் ஒரே ஒரு டான்ஸ் கிளப்புக்காக நடத்தப்படுகிறது என்பதுதான் கொடுமை.

இயற்கையை அழித்து அழித்து சுடுகாடாய் மாற்றித்தான் ஆன்மீகத்தை வளர்க்க வேண்டுமா? பிற உயிரை வதைத்துதான் ஆன்மீக வளர்ச்சி பெற வேண்டுமா? 

ஹிஜாப் போடக்கூடாது என்று தடை விதித்திருக்கிறது கர்நாடக ஆளும் பாஜக அரசு.

அடப் பதர்களே..!

இந்தியா என்ற நாடே இல்லாத நாளில் முஸ்லிம் மன்னர்கள் தான் இந்த நாட்டை ஆண்டார்கள். ஓளரங்க சீப் ஆங்கிலேயர்களைக் கட்டி வைத்து அடித்து துரத்தினார். பகதூர்ஷா காலத்தில் தான் ஈஸ்ட் இந்தியா கம்பெனி வாணிபம் செய்ய அனுமதி பெற்றார்கள். தென் பகுதியில் தமிழர்கள் ஆண்டார்கள். அன்றைக்கு பிரிட்டிஷ்காரனை எதிர்த்து நின்று போரிட்டுச் செத்துப் போனவர்கள் முஸ்லிம்கள். பல இனத்தவர்களும் போரிட்டு உயிரை விட்டார்கள். 

ஒருங்கிணைந்த அவன் ஆளுகைக்கு உட்பட்ட இடங்களில் வசித்து வந்த உருவ வழிபாட்டினை கொண்டவர்களை பிரிட்டிஷ்காரன் தான் இந்து என்று அழைத்தான். அவன் ஆளுகைக்கு உட்பட்ட ஹிந்துஸ்தான் என்ற பகுதியை இந்தியா என்று கட்டமைத்தான். அதன் பின்னால் தான் இந்து மதம் உருவானது, இந்துக்கள் என்று உருவானது.

அதற்கு முன்னாலே இந்திய வடபகுதி முஸ்லிம் மன்னர்களால் ஆளப்பட்டது. இந்துக்கள் எவரும் இந்தியாவை உருவாக்கவில்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக இருந்தனர். அவரவர் பகுதிக்கு அவரவர் தலைமையில் ஆண்டு வந்தார்கள். மண்ணின் மைந்தர்களான முஸ்லிம்களை வெறுக்கும்படியும், அவர்களின் உடை கலாச்சாரத்தில் நுழைய பாஜகவிற்கு தகுதியே இல்லை. ஆட்சி அதிகாரத்தில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வோம் என்ற மமதையில் ஆடும் பதர்களுக்கு, ஆன்மீக பூமியான இந்தியா அழிவைத்தான் பரிசளிக்கும்.

உலகிலேயே இந்தியா மக்கள் தான் அதிக அளவில் கொல்லப்பட்டவர்கள். கொன்றவன் பிரிட்டிஷ்காரன். அவனைக் கேட்க இங்கு எவனுக்கும் தைரியமில்லை. ஹிஜாப் போட்டால் தடுக்கிறார்கள்.

அன்றைக்கு எங்கே போனார்கள் இன்று இந்து மதம் என்று பேசுபவர்கள்? மக்களை மதத்தின் பெயரால் பிரித்து தங்களுக்குள் அடித்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கும் பிரிட்டிஷ் ஷூவை நக்கிக் குடித்த வந்தேறிகளின் சூழ்ச்சி இது.

இந்துக்களை விட தற்போதைய இந்தியாவின் வட பகுதி முழுமையும் நான்கு தலைமுறைகளாக ஆட்சி செய்த முஸ்லிம்கள் இந்தியாவின் மண்ணின் மைந்தர்கள் அவர்கள். நன்றி மறந்து விடக்கூடாது.

வந்தேறிகள் துபாஷி என்ற பெயரில் மொழி பெயர்ப்பாளராய் இருந்து கொண்டு காட்டிக் கொடுத்தவர்கள். இதர இன மக்களை பிரிட்டிஷ் அடிமைப்படுத்த துணை சென்றவர்கள். அவர்கள் பிரிட்டிஷாருடன் உட்கார்ந்து கொண்டு அனைவரையும் அழித்தவர்கள். பிரிட்டிஷ்காரன் காலத்தில் கொல்லப்பட்ட ஒவ்வொரு உயிர்களுக்கும் பதில் சொல்ல வேண்டியவர்கள் இந்த வந்தேறிகள்தான். கூடவே இருந்த இனத்துரோகிகள் அவர்கள். மன்னிக்கவே கூடாத சூழ்ச்சிக்காரர்கள்.

செட்டியாரும், முதலியாரும், பள்ளர்களும், பறையர்களும், முஸ்லிம்களும் நிறைந்த நாட்டில் பிரிட்டிஷ்காரனால் வலிந்து திணிக்கப்பட்டவர்கள் இன்றைய கிறிஸ்துவர்கள். வரலாறு இதைத்தான் சொல்கிறது.

இந்தியா ஆன்மீக பூமி. பல கோடிக்கணக்கான உயிர்களை பலியிட்டு உருவானது இந்தியா. மஹாத்மா காந்தியின் புதிய ஆயுதமான அஹிம்சையை பிரிட்டிஷ்காரனால் வெற்றி கொள்ள முடியவில்லை. அன்றைய காலத்தில் பிரிட்டிஷாருக்கு எதிராகப் போராட்டம் செய்து பனிரெண்டு வருடம் ஜெயிலில் கிடந்த நேருவைப் பற்றிப் பேச இங்கு எவருக்கும் தகுதி இல்லை.

எல்லோரும் எல்லாவற்றையும் பேசி விட முடியாது. 

கர்ப்பினி பெண் ஒருத்தியின் வயிற்றைக் கிழித்து குழந்தையை எடுத்து, அதன் தலையை வெட்டி வீழ்த்திய காலத்தில் அமைதியாக வேடிக்கை பார்த்த மனிதர்களை நாம் சகித்துக் கொண்டிருக்கிறோம் என்பது காலத்தின் கொடுமை என்றுச் சொல்வதை விட நல் வார்த்தை ஏதுமில்லை.

ஆன்மீக பூமியில் விரைவில் நல்லன நடக்கும் என்ற நம்பிக்கை மட்டும் பொய்க்கவில்லை. 

அசுரர்கள் அழிவது போல எல்லாமும் சுத்தப்படுத்தப்படும் காலமும் விரைவில் வரும். வந்தே தீரும். அறம் என்றும் உயிர்ப்போடு இருக்கும் பூமி நமது இந்தியா.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.