நாய்கள் தங்களது வயிற்றுக்கு ஒவ்வாத உணவை உண்டு விட்டால், அருகம்புல்லையோ அல்லது ஏதோ ஒரு புல்லையோ தின்று, செரிமானத்தைச் சரி செய்து கொள்ளும். இதற்காக நாய் எந்த நீட் தேர்வும் எழுதவும் இல்லை. மெடிக்கல் கல்லூரியிலும் படிக்கவில்லை.
அதற்கு அந்த அறிவு எப்படி வந்தது? ஐந்தறிவு பிராணியான நாய்க்கு, உடல் நோய் கண்டால், நோய்க்கு உகந்த மருந்தினைக் கண்டுபிடித்து உண்ணும் அறிவு எங்கிருந்து வந்தது?
என்றாவது யோசித்தீர்களா? இதற்கு விடை என்ன தெரியுமா?
நாய்கள் இயற்கையுடன் இருக்கின்றன. அவை இயற்கையுடன் வாழ்கின்றன. வெள்ளிங்கிரி சுவாமி ஆஸ்ரமத்தில் பப்பி என்றொரு பெண் நாய் இருந்தது. அதற்கு ஏதாவது கொடுத்தால், அதை எடுத்துக் கொண்டு போய், பள்ளம் தோண்டி மண்ணைப் போட்டு மூடி வைத்து விட்டு வரும். நான் நேரில் கண்டது. பசிக்கும் போது, அங்கு வந்து படுத்துக் கொண்டு, எடுத்துச் சாப்பிடும். இந்த அறிவு அதற்கு எங்கணம் வந்தது?
அவைகள் இயற்கையுடன் வாழ்கின்றன.
ஆனால் மனிதனுக்கு நோய் வந்தால் அலோபதி, ஹோமியோபதி, சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், அக்குபஞ்சர், வர்மம் போன்று பல வகையான மருத்துவத்தை எடுக்கிறான். நாயை விட ஆறறிவு கொண்ட மனிதனுக்கு ஏன் இந்த அறிவு இல்லை. நோய் தீர ஏன் பிறரை நாடுகிறான்? அவனுக்கே அவன் உடம்பு தனியாகிப் போனது ஏன்? எப்போதேனும் யோசித்திருக்கின்றீகளா?
இதற்கொரு விடை காணலாம்.
முதலில் மதம் என்றால் மதம் தான் என்பதை அறியுங்கள். எனக்கு பல சாமியார்களுடன் சிறு வயதிலிருந்து பழகும் நாட்கள் இருந்தன. அவர்கள் மூலம் நான் கண்டது, கேட்டது, அறிந்தது எல்லாம் - கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதுதான். அதைத்தான் திருமூலரும் சொல்லி இருக்கிறார்.
மனிதனே கடவுள் என்பது தான் என் நினைப்பு.
என்னில் இருப்பதுதான் உங்களிடமும் இருக்கிறது. நீங்கள் யாரோ நானும் அதே. உங்களையும் என்னையும் பிரிப்பது நம் அறிவு.
உடலுக்கு வலி தெரியாது. மனதுக்குத்தான் வலி தெரியும் அல்லவா?
மதம் என்றால் மதம் தான். மதப்புராணத்தையெல்லாம் தூக்கி ஓரமாக வைத்து விடுங்கள். ஒரு சில விஷயங்களைப் புரிந்து கொள்வதற்காக பைபிளை எடுத்துக் கொள்வோம்.
பைபிளில் சொல்லப்பட்டபடி, ஆதாமை ஏவாள் தோட்டத்திலிருக்கும் ஆப்பிளை எடுத்து உண்ணச் சொல்வாள். ஆதாம் ஆப்பிளை உண்ட பிறகு - இருவரும் நிர்வாணமாக இருப்பதை அறிந்து ஆடை உடுத்த ஆரம்பித்தனர். அதாவது இருவருக்கும் அறிவு வந்து விட்டது என்று படித்திருக்கிறோம்.
அதேதான்..
இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு துண்டிக்கப்பட்டிருக்கிறது என்பதை அறிந்தேன். ஆம், மனிதன் இயற்கையிலிருந்து தன்னை துண்டித்துக் கொண்டுவிட்டான். அது எப்படி, எப்போது நிகழ்ந்தது என்று இன்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். சரியான, துல்லியமான தகவல்கள் இன்னும் கிடைத்தபாடில்லை.
கடவுள் யாரையும் படைப்பதும் இல்லை, கணக்கு வழக்கு பார்ப்பதும் இல்லை, வரவு செலவு கணக்குகள், பாவம் புண்ணியம் போன்றவைகள் எதையும் பார்ப்பதில்லை.
ஒவ்வொருவரின் வாழ்க்கையும் அவரவர் கையில் இருக்கிறது. ஆனால் மனிதனுக்கு வாழத்தான் தெரியவில்லை. ஒன்று எதிர்காலத்தில் வாழ்கிறான். இல்லையெனில் இறந்தகாலத்தில் வாழ்கிறான் என்கிறார்கள் அறிவாளர்கள்.
மனிதனுக்கும் இயற்கைக்குமான தொடர்பினைத் துண்டித்ததில் பெரும் பங்கு வகிப்பது மனிதனின் அறிவு. அதை மனம் என்கிறார்கள்.
இதை மீண்டும் அடைவது எப்படி? அதைக் கண்டுபிடித்து விட்டால் இன்று நம்மிடையே வாழும் ஸ்ரீராம், ஜோதி சுவாமி போல மாறலாம்.
அவர் பெயர்
ஸ்ரீராம். ஆந்திராவில் வசிக்கிறார் என்று நினைவு. இவரைப் பற்றிய ஒரு நிகழ்ச்சியை
நடிகர் ராஜேஷ் யூடியூப் சேனலில் பார்த்தேன். அவர் காலத்தின் முன்பும் பின்பும் சென்று வருவதை ஒருவர் பகிர்ந்து கொண்டார்.
அதாவது அவர் தன் நண்பரிடம் ஒரு கவரைக் கொடுத்து, ஒரு வாரம் சென்ற பிறகு பிரித்துப் பார்க்கும் படி சொல்லி இருக்கிறார். அவ்வாறு பிரித்துப் பார்த்த போது, கடந்த வாரத்தில் நண்பருக்கு நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்தக் கவருக்குள் இருந்த காகிதத்தில் எழுதி இருந்ததாம். இது உண்மை என்றால் எதிர்காலத்துக்குள் சென்று வந்திருக்கிறார் ஸ்ரீராம் என்று புரிந்து கொள்ளலாம்.
ஜோதி சுவாமி பல முறை விடிகாலையில் பேசும் போது, தூக்கத்தின் போது அவர் கேட்ட ஒலிகள், அசைவுகள், ஆட்கள் மீண்டும் தென்படுகிறார்கள் ஆண்டவனே என்று சொல்லி இருக்கிறார். எதிர்காலத்துக்கும் இறந்தகாலத்துக்கும் சென்று வருகிறார் என்று இப்போது புரிகிறது.
ஒரு தடவை சுவாமியும் நானும் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது, தேய்த்துக் குளிக்க ஏதாவது கிடைத்தால் பரவாயில்லை என்று சொல்லிக் கொண்டிருந்த போது, புத்தம் புது பீர்க்கங்காய் குடலைக் கொடுத்தார். தேய்த்து விட்டு செடியோரம் வீசிய போது கண் முன்னாலே மறைந்து போனது கண்டு மண்டை காய்ந்தேன். அப்போதெல்லாம் உணர்ந்து கொள்ளும் தெளிவு எனக்கு வரவில்லை.
இதே போல ஸ்ரீராம் அவர்களும் போட்டோவில் இருந்து எலுமிச்சை பழத்தை எடுத்ததாகப் பேட்டியில் சொன்னார்கள். இது எப்படி சாத்தியமானது என்ற ரகசியம் தெரிந்து விடின் மனிதர்கள் எவரும் துன்பத்தில் உழன்று கிடக்கமாட்டார்கள்.
இயற்கையினுடனான தொடர்பினை மனிதன் இணைத்துக் கொள்வதற்கான வழி கிடைத்து விட்டால் எல்லாம் சுகமே.
இது பற்றி யோசித்துப் பாருங்கள்.
அவ்வளவுதான்.