குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Sunday, May 28, 2023

நிலம் (110) - அடுக்குமாடி குடியிருப்பு டிரான்ஸ்ஃப்ர் கட்டணம் வசூலிக்க கூடாது

சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் அவர்களின் முன்பு விசாரணைக்கு வந்த மேல்முறையீட்டு மனு WP 27155/2016 மீது விசாரணை செய்து ஒரு அக்மார்க் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்.

அடுக்குமாடி குடியிருப்புகளில் துவக்கப்படும் சொசைட்டிகள் தன் இஸ்டத்துக்கு விதிகளை வகுத்துக் கொண்டு, வீட்டின் உரிமையாளர்களிடமிருந்து, வாடகைக்கு இருப்பவர்களிடமிருந்தும் கொள்ளை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். எனக்கும் அனுபவம் உண்டு. கொரானா காலத்தில் வெளியிலிருந்து யாரும் வரக்கூடாது என்று அனுமதி மறுத்தார்கள். நான்கு மாதம் பூட்டிக் கிடந்த வீட்டுக்கு தண்ணீர் கட்டணம் என லம்பாக கட்டணம் கேட்டார்கள். ஒவ்வொரு சொசைட்டியில் இருக்கும் ஆட்கள் ஹிட்லர் போல நடந்துகொண்டிருக்கிறார்கள்.

அடியேன் தான் கொஞ்சம் வித்தியாசமாக ஒரு சொசைட்டி ஆளை டீல் செய்தேன். அதன் பிறகு என் வழிக்கே வராமல் வேறு ஆட்களை வைத்து சகல அயோக்கியத்தனத்தையும் செய்தான். அதற்கும் ஒரு ஏற்பாடு செய்த பின்னால் தான் அடங்கினார்கள்.

இனி அந்த தீர்ப்பைப் பார்க்கலாம்.

கீழ்ப்பாக்கத்தில், 'அங்கூர் கிராண்ட்' அடுக்குமாடி குடியிருப்பில் 60 வீடுகள் உள்ளன. குடியிருப்புகளின் பராமரிப்புக்காக, சதுர அடிக்கு 25 ரூபாய் என, உரிமையாளர்களிடம் இருந்து தொகுப்பு நிதியை, குடியிருப்பு சங்கம் வசூலித்தது. பின் தொகுப்பு நிதியை, சதுர அடிக்கு 50 ரூபாய் என்ற அடிப்படையில் உயர்த்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த குடியிருப்பில் இருந்து ஒரு வீட்டை, ரோஷினி என்பவர் வாங்கினார். டிரான்ஸ்பர் கட்டணமாக 1.47 லட்சம் ரூபாயை சங்கத்துக்கு செலுத்தினார். ஆசிஷ் தவே என்பவர், மற்றொரு வீட்டை வாங்கினார். டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்தும்படி சங்கம் கேட்க, அவர் செலுத்தவில்லை. இதையடுத்து, டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பித் தர சங்கத்துக்கு உத்தரவிடவும், டிரான்ஸ்பர் கட்டணம் கோர வழிவகுத்த துணை விதியை எதிர்த்தும், மாவட்ட பதிவாளரிடம் ரோஷினி முறையிட்டார். சங்க விதி செல்லாது என்றும், டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பி வழங்கவும் மாவட்ட பதிவாளர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் 'அங்கூர் கிராண்ட்' அடுக்குமாடி குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஒவ்வொரு வீட்டின் மறு விற்பனைக்கும், டிரான்ஸ்பர் கட்டணத்தை குடியிருப்பு சங்கம் வசூலிக்கும் என்றால், பலமுறை கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு டிரான்ஸ்பர் கட்டணம் வசூலிப்பது, அனுமதிக்கத்தக்கது அல்ல. எந்த சட்ட விதிகளும் இல்லாத நிலையில், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், டிரான்ஸ்பர் கட்டணத்தை வசூலிக்க முடியாது. வீட்டை விற்கும்போது, பராமரிப்பு கட்டணம் என்ற போர்வையில், டிரான்ஸ்பர் கட்டணத்தை சங்கம் விதிக்க முடியாது. குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கம், லாபம் ஈட்டும் சங்கம் அல்ல. உரிமையாளர்கள், வீடுகளில் வசிப்பவர்களிடம் இருந்து, விகிதாச்சார அடிப்படையில் பராமரிப்பு தொகை வசூலிக்கலாம். இருவருக்கு இடையே நடக்கும் வீடு விற்பனைக்கும், குடியிருப்பு உரிமையாளர்கள் சங்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. வீட்டின் உரிமையாளர், தன் சொத்தை யாருக்கும் விற்க உரிமை உள்ளது. அதில் சங்கம் தலையிட முடியாது. வீடு பராமரிப்புக்கான கட்டணத்தை மட்டுமே சங்கம் கோரலாம். சதுர அடி அடிப்படையில் டிரான்ஸ்பர் கட்டணம் விதிப்பதற்கு, சட்டத்தில் இடமில்லை. அவ்வாறு வசூலிப்பது, சட்டவிரோதமானது. எனவே, நான்கு வாரங்களில் டிரான்ஸ்பர் கட்டணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும். மாவட்ட பதிவாளரின் உத்தரவு, சட்டத்துக்கு உட்பட்டது தான். மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவு இட்டார்.

அதாவது அடுக்குமாடி குடியிருப்பை வாங்குபவர் சங்கத்துக்கு டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்த வேண்டுமாம். இது சங்க விதியாம். 

ஏற்கனவே சம்பாதித்த காசுக்கு அரசுக்கு வரி கட்டணும். அடுத்து அரசுக்கு விற்பனைப் பதிவுக்கட்டணம் கட்ட வேண்டும். இது போதாது என்ற சொசைட்டி என்ற பெயரில் கொள்ளை அடிக்க இப்படி ஒரு வசூல் நடந்து கொண்டிருக்கிறது பல அடுக்குமாடி குடியிருப்புகளில்.

இனி எந்தச் சங்கத்துக்கும் எவரும் டிரான்ஸ்பர் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. தீர்ப்பு கீழே இருக்கிறது. பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

1 comments:

prabha said...

அருமை பகிர்வுக்கு நன்றி...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.