புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கும் இடைப்பட்ட பகுதிதான் எனது ஊர். ஆவணம் தாத்தா ஊர். நெடுவாசல் எனது ஊர். ஆனால் வளர்ந்ததெல்லாம் தாத்தாவிடம். ஒரு பெண்ணால் ஏற்பட்ட நிகழ்வுகளால் ஊரில் பெரும் தனக்காரனாய் வாழ வேண்டிய அடியேன் ஊரு விட்டு ஊர் வந்து பிழைக்க வேண்டிய விதிப்பலனை அடைந்திருந்தேன்.
பிள்ளை பிராயத்தின் போது கூட பழகிய பல்வேறு வகுப்புத் தோழர்கள் காலவெள்ளத்தில் எங்கெங்கோ அடித்துச் செல்லப்பட்டிருக்கிறோம். ஆவணத்தின் வடக்குத் தெருவில் இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் தான் எனது ஆரம்பக்கல்வி ஆரம்பம். எனது பள்ளித்தோழன் சின்னையனை இன்றும் மறக்க முடியவில்லை. ஊரில் பெரும் பணக்காரனான சின்னையன் என் மீது கொண்ட அன்பினால் என்னை முதுகில் சுமந்து என் வீட்டுக்கு அழைத்து வர முற்படுவான். அவனது தாத்தா அதற்காக அவன் முதுகில் சவட்டி விடுவார். அருகிலிருக்கும் பிள்ளையார் கோவிலில் என்னை அமர வைத்து விட்டு அம்மாவிடம் சென்று அழுது கொண்டே தங்கவேலை தூக்கிக் கொண்டு வர விடமாட்டேன் என்று தடுத்து விட்டார் என்றுச் சொல்லி இருக்கிறான். ஏன் இந்த அன்பு? காரணங்கள் அறியா வயதில் ஏற்படும் அன்பு வயது வளர வளர காரணங்களை அறிந்து கொள்ள முயல்கிறது. வயது ஏற ஏற அனுபவங்களை மற்றும் மனது அறிந்து கொள்வதில்லை. அன்பினை மறைத்து விடவும் முயல்கிறது. பயன் கிடைக்குமா என்று அலைபாய்கிறது.
சிறு வயதில் சின்னஞ்சிறு பாலகர்களுக்கிடையே உண்டாகும் நட்புக்கு ஏதும் காரணமும் இருக்க முடியுமோ? காரணம் அறிந்தா நட்பு ஏற்படும்?
எத்தனை வயது ஏறினாலும் என்ன? சின்னஞ்சிறு வயதில் கொண்ட நட்பு சிதைந்தா போய் விடும். இன்னும் சிதையாமாலிருக்கும் இன்னுமொரு நண்பணுண்டு.
அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பல்வேறு துயரங்களிலும் துன்பங்களிலும் ஆட்பட்டுக்கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றான் அவன்.
அவனுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன. பல்வேறு துயரங்களிலும் துன்பங்களிலும் ஆட்பட்டுக்கொண்டு அல்லல்பட்டுக் கொண்டிருக்கின்றான் அவன்.
எங்கிருப்பான் அவன்? அனுமானிக்கவே முடியாது. ஆவணத்திலிருப்பான் அல்லது மலேசியாவில் இருப்பான் அல்லது சிங்கப்பூரில் இருப்பான். திடீரென்று துபாயிலிருந்து பேசுகிறேன் என்பான்.
ஏதாவதொரு நாள் போன் வரும். ”தங்கம் ! சதக்கு பேசுறேண்டா” என்பான். ஊருக்குச் சென்றால் எங்கிருந்தாலும் தேடி வந்து விடுவான். ஊருக்கு வந்து விட்டான் என்றால் உடனே போன் வரும்.
எனது பாலப்பிராயத்திலிருந்து அவனிடமிருந்து நான் அடைந்தது அவனின் அன்பு மட்டுமே. அன்றைக்கு இருந்த அதே அன்பு இன்றைக்கும் அவனிடமிருந்து கிடைத்துக் கொண்டே இருக்கிறது. அவனிடமிருந்து போன் வந்து, அவன் பேசினால் எனக்கு உலகம் இயங்குவது நின்றே போய் விடும். அவனின் ஏகாந்த அன்பில் கரைந்து போய் விடுவேன்.
ஊருக்கு வந்தானென்றால் பலாப்பழத்தைத் தூக்கிக் கொண்டு கோவைக்கு வருவான். ”ஒரு நாள் கூட இருடா” என்பேன். கேட்கமாட்டான் உடனே சென்று விடுவான்.
பலனை எதிர்பாராத அந்த அன்பு உயிரை நான் என்றைக்கேனும் மறக்க முடியுமா? அவன் தான் எனது ஆருயிர் நண்பர் “சதக்கத்துல்லா!”