குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 5, 2015

10 ரூபாயும் ஒரு மூதாட்டியும்

சமூக ஆர்வலர்கள் இப்போதெல்லாம் அழிக்கப்படுகின்றார்கள் அல்லது கொல்லப்படுகின்றார்கள். எல்லோருக்கும் உண்மை கசந்து விடுகிறது. சிலருக்கு கொலை செய்யும் மனத்தையும் தந்து விடுகிறது. சாலையில் அடிபட்டுக் கிடக்கும் ஒருவனை பார்க்கும் போது, ஓடோடி அவனுக்கு உதவி செய்யத் துடிக்காத இதயம் எவருக்கும் இல்லாமலிருக்காது. இருந்தும் பலரும் ஒதுங்கிக் கொள்கின்றார்கள். அதற்கு காரணங்கள் பல இருக்கின்றன. சமூகத்தின் நன்மைக்காக உதவிட வேண்டுமென்று நினைப்போருக்கு உண்மையில் கசப்பான அனுபவங்களே ஏற்படுகின்றன. சமீபத்தில் கோவையில் இப்படித்தான் மணல் கடத்தலுக்காக சமூக ஆர்வலர் கொடூரமாகத் தாக்கப்பட்டிருக்கிறார். ஒரு சிலர் செய்யும் சில செயல்களால் மனித சமுதாயத்துக்கு கிடைத்திட வேண்டிய பல்வேறு நல்ல காரியங்கள் சீர்பட்டுப் போகின்றன.

நேற்றைக்கு கணபதி பகுதியில் மின் நிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. அலுவலகத்தில் அடியேன் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். அப்போது வாசலில் ஒரு குரல். நெடு நெடுவென்ற உயரம். கெச்சலான தேகம். மஞ்சள் பூசிய முகம். நெற்றியில் குங்குமம். பட்டுச்சேலை போன்று வெகு நேர்த்தியாக உடுத்தப்பட்டிருந்தது. கையில் ஏதோ ஒரு துணிக்கடையின் பை. 

ஏறிட்டுப்பார்த்தேன், “பன்னாரி அம்மன் கோவிலுக்கு காணிக்கை” என்றார் அந்த மூதாட்டி. அருகில் வரச்சொல்லி, பத்து ரூபாய் நோட்டினை எடுத்து நீட்டினேன். வாங்கிக் கொண்ட அந்த மூதாட்டி இப்படித் தொடர்ந்தார்.

”மகாராசனாட்டம் இருக்கிறாய், ஆனால் மனதுக்குள் பல்வேறு போராட்டங்கள். ஒவ்வொரு காரியத்திலும் தடை. மனதுக்குள் வலி. எந்தப் பிசினஸும் ஒழுங்காக நடப்பதில்லை. கண் திருஷ்டி இருக்கிறது. அதுதான் உன்னை இந்தப் பாடு படுத்துகிறது. உன்னால் கை காட்டப்பட்டவர்கள் இன்றைக்கு எங்கேயோ இருக்கின்றார்கள். ஆனால் நீயோ இருந்த இடத்திலேயே இருக்கின்றாய், இன்னும் கொஞ்சம் குறி சொல்லனும், அந்த சேரில் உட்காரட்டுமா?”

”பாட்டி நீங்கள் சொல்வது மாதிரியெல்லாம் இல்லை. ஒன்றும் வேண்டாம். கிளம்புங்கள்” என்றேன்.

அந்த மூதாட்டியோ திரும்பவும் ”உனக்கு கண் திருஷ்டி நிறைய இருக்கு, அதைச் சரி செய்ய வேண்டும்” எனச் சொல்லிக் கொண்டே எதிரில் அமர எத்தனித்தார்.

”பாட்டி அப்படி ஏதாவதிருந்தால் அதோ அங்கே போட்டோவில் உட்கார்ந்திருக்கின்றாரே எனது குரு நாதர் அவர் பார்த்துக் கொள்வார். நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டாம்” என மறுத்தேன். சுவாமியைப் பார்த்தார் அந்த மூதாட்டி. ”நீ நன்றாக இருப்பாயப்பா” என்றுச் சொல்லி விடை பெற்றுக் கொண்டு சென்று விட்டார்.

மனதுக்குள் ஏதும் பிரச்சினையோடு இருந்திருந்தால் பாட்டி பர்சைக் காலி செய்திருக்கும்.

கடந்த வாரம் ஒரு பெரியவர் அலுவலக வாசலில் வந்து நின்று கொண்டு, “வயதானவன், நல்ல வார்த்தை சொல்வேன், காபி குடிப்பதற்கு ஏதாவது தர முடியுமா?” என்று கேட்டார். நான் திரும்பிக் கொண்டேன். எனது நண்பர் இரக்க சுபாவி. அவரை உள்ளே வர வைத்து எதிரில் அமர்ந்து கொண்டார்.

பிறந்த நாள், நேரம், இடம் கேட்டார். நண்பர் சொன்னார். கையை நீட்டச் சொன்னார். தட்சிணை வைக்கச் சொன்னார். நண்பர் திகைத்து விட்டு எவ்வளவு என்று கேட்டார்.”ஒரு நூறு ரூபாய் வையுங்களேன்” என்றார் கிழவர். நண்பர் வேறு வழி இன்றி கையிலிருந்த நோட்டுகளை எடுத்துக் கையில் வைக்க அதைக் கவனமாக எடுத்து வைத்துக் கொண்டு பலன் சொல்ல ஆரம்பித்தார்.

மேலே அந்த மூதாட்டியார் சொன்னாரே அதையே அந்தப் பெரியவரும் சொன்னார். ஐந்து நிமிடங்களாய் ஒப்பேத்தி விட்டு, அடுத்து உங்கள் குழந்தைகளுக்கும் பார்க்கலாமா என்று ஆரம்பித்தார். நான் மனதுக்குள் சிரித்துக் கொண்டே நண்பரைப் பார்க்க, நண்பரோ அலறியடித்துக் கொண்டு போதும் என்றுச் சொல்லி எழுந்து விட்டார்.

அடுத்து பெரியவர் என்னைப் பார்த்து, ”அய்யா உங்களுக்கு?” என்று ஆரம்பித்தவுடனே பெரிய கும்பிடு போட்டு விட்டேன். ஆள் எழுந்து விட்டார்.

“அறுபது ரூபாய்” கொடுத்தேன் என்றார் நண்பர் வருத்ததுடன்.


0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.