இது கொஞ்சம் பிரச்சினையான பதிவு தான்(எனக்கல்ல). எனது பிளாக்கிற்கு அனேக பெண் வாசகிகள் உண்டு என்பதையும் அதனால் உருவாகப் போகும் ஒரு சில பின் விளைவுகளைப் பற்றியும் யோசித்தபோது மனதுக்கு கொஞ்சம் நெருடலாக இருந்ததாலும் இப்படி ஆரம்பித்து விடுகிறேன்.
ஓட்டைகள் இருக்கும் பையில் எதையேனும் ஊற்றி வைத்தால் ஒழுகிப் போய் விடும் அல்லவா? ஏழு ஓட்டைகள் இருக்கும் பையான நம் உடலில் இருக்கும் மூச்சு மட்டும் உள்ளுக்குள்ளேயே சென்று வந்து கொண்டிருக்கிறதே அது எப்படி? அதைத்தான் ‘நம் உடலொரு மாயப்பை” என மரணத்துக்கு விளக்கம் கேட்ட நசிகேதன் சொன்னான். மூச்சை விட்டால் முடிந்து போகும் எல்லாம். இப்படியான ஓட்டைப்பையில் நல்லது கெட்டது என்று வகை தொகையில்லாமல் நாம் சேர்த்து வைத்துக் கொண்டே இருக்கின்றோம். பொய், சூது, திருட்டு, பொறாமை இப்படி தீமைகளாய் நாம் சேர்த்துக் கொண்டே வைத்திருக்கிறோம். அதனால் என்ன கிடைத்து விடப்போகிறது? மாயப்பை என்றேனுமொரு நாள் அழிந்து விடும் என்பதை மனதில் எப்போதும் இருத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
மதிய நேரத்தில் உணவுக்குப் பின்னால் விஜய் டிவியில் வரும் சரவணன் மீனாட்சி தொடரை அவ்வப்போது மனையாள் சகிதம் கண்டு கடுப்பதுண்டு. மதுரை சீரியலில் ஆரம்பித்து மீனாட்சி வரை அழகாய் சென்று கொண்டிருந்த அந்த சீரியல் ஏனோ திடீரென வேறு பக்கம் செல்ல ஆரம்பித்தது. ஓங்கு தாங்கு என்று உதடு பெருத்த ஒரு நாயகியை, கதாநாயகியாக வைத்த இயக்குனரின் ரசனைக்கு என்ன காரணமோ? இருப்பினும் அந்த ஏலேலோ பாடலுக்காக சரவணன் மீனாட்சியை கடுப்புடன் காண்பதுண்டு.
அதிலொரு நாள் மருதாணி வைக்கும் படலம் வந்தது. சரவணன் மீனாட்சிக்கு மருதாணி வைத்து விடுவான். மறு நாள் காலையில் ஒவ்வொருவராக வந்து கையை சுத்தம் செய்து பார்ப்பார்கள். அதில் மீனாட்சியின் கை மட்டும் மருதாணியால் ரத்தச் சிவப்பாக மாறி இருக்கும். அங்கிருக்கும் பாட்டி உனக்கு கணவனாக வருபவன் உன் மீது கொள்ளை அன்பு வைத்திருப்பான் என்றுச் சொல்வார். ’இப்படி வேற ஒன்னு இருக்கோ?’ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.
நேற்று இரவு அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று இரவு உணவை முடித்து விட்டு பான் ஸ்டார்ஸ் பார்ப்பதற்காக டிவியை ஆன் செய்தேன்.
“ஏங்க உங்களுக்கு ஒரு வேலை இருக்கு” என்றார் மனையாள்.
”சொல்லு கோதை, என்ன?”
முகமெல்லாம் புன்னகையுடன் கையொலொரு பிளாஸ்டிக் உறையுடன் அருகில் அமர்ந்து “மருதாணி வைத்து விடுங்கள்” என்றார்.
எனக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்து விட்டது.
“அய்யய்யோ! அடக்கடவுளே! இதென்னடா எனக்கு வந்த சோதனை? அதுவும் பதினைந்து வருடம் கழித்து? இப்படியெல்லாமா மனுசனுக்கு சோதனை வரும்? “ என்று மனது தானாகவே புலம்ப ஆரம்பித்து விட்டது.
// ஆமா நான் ஏன் புலம்புகிறேன் என்று உங்களுக்குப் புரிகிறதா? //
இந்த ஆளு நம்ம மேல பிரியமா இருக்காரா இல்லையான்னு பார்க்கணும் என்று அம்மணி முடிவெடுத்து விட்டார். (டிவி சீரியலினால் எனக்கு வந்த பிரச்சினையைப் பார்த்தீர்களா???) நான் வைத்து விடும் மருதாணி நன்றாக சிவக்கவில்லை என்றால் என் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். காதலித்து கடத்திக் கொண்டு போய் கல்யாணம் செய்தவன் அடியேன். மருதாணி வழியாக என் காதலுக்கு வந்த சோதனையை நானெப்படி வெல்வது?
தோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியை பையனிடம் ”வெட்டி வீசி விடு” என்றுச் சொல்லி இருந்தேன். சரியென தலையை மட்டும் ஆட்டி விட்டான். அந்த மருதாணியால் நான் படும் பாடு அவனுக்கு எங்கே தெரியப்போகிறது? பயல் எனக்கு வேட்டு வைத்து விட்டான். சரி அவன் எதுக்கு வந்தானோ அதைச் செய்கிறான். மனதுக்குள் “ நீ நல்லா வருவாயடா பயலே!” என்று நினைத்துக் கொள்வதை எனக்கு வேறு என்ன வழிதான் இருக்கிறது சொல்லுங்கள் பார்ப்போம்?
”தென்னையை வைத்தால் இளநீரு, பிள்ளையைப் பெற்றால் கண்ணீரு” என்று அன்றைக்கே சொல்லி வைத்தார்கள். எவன் கேட்கிறான்? பட்டால் தான் புத்தி வருகிறது.
இடது கையில் மனையாள் மருதாணியை வைத்துக் கொண்டார். அது முடியும் தருவாய் வரைக்கும் எனக்குள் திக்கென்று இருந்தது. வலது கையை என்னை நோக்கி புன்னகையுடன் நீட்டினார். அது ஏதோ ஒரு பெண் சாமி சூலாயுதத்தை என்னை நோக்கி நீட்டியது போலவே எனக்குத் தோன்றியது.
நெஞ்சுக்குள் படபடப்புடன் கையைப் பிடித்து மருதாணியை எடுத்து விரலில் வைத்து விட்டு, கையின் நடுவில் வட்டம் போல அழகாய் இட்டு, சுற்றி வர ஏழு புள்ளிகளை வைத்து விட்டேன்.
மருதாணி வைத்துப் படுத்துக் கொண்டால் விடிகாலையில் அல்லவா கையைச் சுத்தம் செய்வார்கள்? ஆனால் மனையாளோ பாதி ராத்திரியில் எழுந்து போய் அதுவும் நான் மருதாணி வைத்து விட்டேன் அல்லவா அந்த வலது கையை மட்டும் கழுவி விட்டு வந்து விட்டார்.
இது செல்லாது செல்லாது என்று நீங்கள் சொல்வது எனக்குப் புரிகிறது. எனக்குப் புரிந்து என்ன ஆகப்போகின்றது? புரிய வேண்டியவர்களுக்கு அல்லவா புரிய வேண்டும்? எல்லாம் எனக்கு வந்த சோதனை.
விடிய விடிய நானல்லவா உலகத்தில் இருக்கும் அத்தனை சாமிகளை எல்லாம் தூங்க விடாமல் தொல்லை செய்து கொண்டிருந்தேன். நான் தூங்கிக் கொண்டிருக்கிறேன் என்று அம்மணி நினைத்துக் கொண்டு கையைக் கழுவி வந்து விட்டார். எனக்குள் பீதி கிளம்ப ஆரம்பித்து விட்டது. இரண்டு பிள்ளைகள் இருக்கின்றார்கள் நண்பர்களே, இப்போது இந்தச் சோதனையெல்லாம் தேவையா? நீங்களே சொல்லுங்கள். இப்படியும் கொடுமைகள் இந்த உலகில் நடக்குமா? பெண்கள் ஏன் இப்படியெல்லாம் இந்த் ஆண்களை வதைக்கின்றார்களோ தெரியவில்லை.
உண்மையில் ஆண்கள் தான் பெண்களிடம் மாட்டிக் கொண்டு விழி பிதுங்கிப்போய் படாதபாடு பட்டுக்கொண்டிருக்கிறோம் என்று யாருக்குத் தெரியப்போகின்றது?
எல்லாம் மாயை!
பொழுதும் விடிந்தது.
விடிய விடிய இடது கையில் காய்ந்து இருந்த மருதாணி ஓரளவுக்குத்தான் சிவந்திருந்தது. ஆனால் பாதி ராத்திரியில் எழுந்து போய் கையைக் கழுவி விட்டு வந்த அதுவும் அடியேனால் வைத்து விடப்பட்ட வலது கை ரத்தச் சிவப்பில் சிவந்து இருந்தது. மனையாளுக்கு ஒரே சந்தோஷம்.
அலுவலகத்துக்கு கிளம்பும் போது தோட்டத்தில் இருந்த மருதாணிச் செடியைப் பார்த்தேன். அது காற்றில் அசைந்து என்னிடம் ஏதோ சொல்ல வருவது போல இருந்தது. புன்னகையுடன் அலுவலகத்துக்குக் கிளம்பினேன்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.