கடந்த வாரத்தில் எனது நண்பரொருவர் என்னைச் சந்தித்தார். அவர் ஒரு இடத்தினை வாங்குவதற்கு முடிவு செய்திருப்பதாகவும், என்னிடம் லீகல் ஒப்பீனியன் பெறலாம் என்றும் வந்திருப்பதாகவும், வெகு கவனமாக ஆவணங்களைப் பரிசீலித்து கிரையம் செய்ய உதவுமாறும் கேட்டுக் கொண்டார்.
முப்பாட்டனாரின் சொத்தில் இன்றைய வாரிசுகளுக்கு உரிமை உண்டு என்பதை நாமெல்லாம் அறிவோம். தாத்தா சொத்துப் பேரனுக்கும் உண்டு என்று கிராமத்தில் கூடச் சொல்வார்கள். தந்தை கூட விற்க முடியாது என்பர் பலர். ஆமாம் அதுதான் உண்மையும் கூட.
நண்பர் கொண்டு வந்து கொடுத்த சொத்தானது, தற்போது விற்பனை செய்ய விரும்பியவரின் தாத்தாவுக்கும் தாத்தா கிரையம் பெற்ற சொத்து. எந்த வித உயிலும் எழுதி வைக்காமல் அனைவரும் காலமாகி விடுகின்றனர். இந்த நிலையில் தற்போதைய உரிமையாளர் என்றுச் சொல்லக்கூடியவரின் தந்தை இந்தச் சொத்தில் ஒரு பகுதியை வேறொருவருக்கு கிரையம் செய்து கொடுத்து விட்டார். இது செல்லாது என்கிறார் த.உ.எ.சொ. அது உண்மைதான் என்று அனைவருக்கும் தெரியும். தாத்தா சொத்து பேரனுக்கு இல்லாமல் விற்க இயலாது.
ஆனால் அந்தக் கிரைய ஆவணத்தை படிக்கும் போது அதில் முக்கியமான விஷயமொன்று இருந்தது. குடும்பத்தின் பணத்தேவைக்காக மேற்படிச் சொத்தினை வேறொருவரிடம் அடமானம் செய்து வைத்திருந்திருக்கிறார் த.உ.எ.சொவின் தந்தை. அதை மீட்பதற்காகவும், மேலும் பணத்தேவைக்காகவும் மேற்படி முப்பாட்டனார் சொத்தினை விற்றிருக்கிறார் அந்த தந்தை. அதாவது குடும்பத்தின் பணத்தேவைக்காக பணம் தேவைப்படும் போது முப்பாட்டனார் சொத்தினை இதர வாரிசுகளின் அனுமதியின்றி ( நிரூபிக்கப்படும் பட்சத்தில்) விற்பது தவறில்லை என்கிறது ஒரு தீர்ப்பாணை.
அந்த விற்பனை செய்யப்பட்ட சொத்தினைத்தான் எனது நண்பர் வாங்குவதற்கு முடிவு செய்திருந்தார்.
கிட்டத்தட்ட நான்கு கோடி இருக்கும் அந்தச் சொத்து. தப்பித்துக் கொண்டார் நண்பர்....
வாழ்க வளமுடன் !!!
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.