இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் கோவை டைம்ஸ் பகுதியில் ரஜினி காந்த் அவர்களின் சொத்து ஏலம் பற்றி ஒரு பத்தி வெளிவந்திருக்கிறது. எந்த ஒரு செய்திக்கும் விரிவான அலசலை அளிக்கும் பத்திரிக்கை ரஜினி என்கிற கோபுரத்தின் கதையைப் பற்றி விரிவாக அலசி இருக்க வேண்டிய தருணத்தை வேண்டுமென்றே தவிர்த்து இருக்கிறது.
கோடம்பாக்கத்தின் தெருக்களிலும், ஒவ்வொரு சினிமா அலுவலகத்திலும் இளைமையையும், எதிர்காலத்தையும், குடும்பத்தையும் தொலைத்து விட்டு கட்டுக்கட்டாகப் பணமும், புகழும் கிடைக்க வேண்டுமென்பதற்காக எல்லாவற்றையும் இழந்து நிற்கும் எண்ணற்ற இளைஞர்களின் மனதுக்குள் ஒரு கேள்வியை எழுப்பி இருக்க வேண்டிய அலசலை டைம்ஸ் ஆஃப் இந்தியா தவற விட்டு தன் ஊடக தர்மத்தை வசதியாக மறந்து விட்டது. சினிமா என்ற மாயா உலகத்தின் மறுபக்கம் தான் ரஜினியின் சொத்து ஏலத்திற்கு வந்தது. இதே போல அமிதாப்பச்சனின் சொத்தும் ஏலத்திற்கு வந்தது நினைவிலிருக்கலாம். சினிமா மோகத்தின் மீதான மாயையை அலசி ஆராய்ந்து கட்டுரையை வெளியிட வேண்டிய தர்மத்தை டைம்ஸ் ஆஃப் இந்தியா மறந்து விட்டது.
என்னைப் போன்று எத்தனை எத்தனையோ லட்சோப லட்சம் வாசகர்கள் கொடுக்கும் சிறு பணத்தில் வளர்ந்து நிற்கும் இந்தப் பத்திரிக்கை மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க வேண்டிய தார்மீகக் கடமைக்கு ஆட்பட்டது. ஆனால் ரஜினி போன்ற மாயா உருவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தர்மத்தைக் காக்கத் தவறி நிற்கிறது.
என்றைக்கு ஒரு தராசு ஒரு பக்கமாக சாய்ந்து நிற்கிறதோ அன்றிலிருந்து தன் முடிவுக்கான ஆரம்பப் படியை அது எடுத்து வைத்து விட்டது எனலாம். நூற்றாண்டு கால டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் இன்றைய நிலைக்கு இன்னுமொரு உதாரணம்,
இன்றைய சினிமா விமர்சனத்தில் கயல் திரைப்பட விமர்சனம் என்பதற்குப் பதிலாக வெள்ளைக்காரத்துரை திரைப்படத்தை தவறுதலாக வெளியிட்டு இருக்கிறது.
காலம் சொல்லும் பதிலுக்கு கேள்வியை இவர்களே தயார் செய்திருக்கிறார்கள். பதில் வெகு கடுமையாக இருக்கக் கூடாது என்று அதன் வாசகன் என்ற நிலையில் விரும்புகிறேன்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.