குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, March 15, 2023

பேராசியர்களுக்கு தகுதி குறைப்பு - யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் அக்கிரமம்

இந்தியா முழுமைக்கும் ஒரே கல்வி என இந்தியா மாநிலங்களின் சுயாட்சிக்கு வேட்டு வைத்துக் கொண்டிருக்கும் இந்திய ஒன்றிய அரசின் கீழ் இயங்கும்  யுனிவர்சிட்டி கிராண்ட் கமிஷனின் சேர்மன் மமிடாலா ஜகதீஷ் குமார் - ராவ்  ஒரு  நயவஞ்சகமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். 

ஜகதீஷ் குமார் மீது 2017ம் ஆண்டில் ஜவஹர்லால் நேரு கல்லூரியில் பணி செய்து வந்த சைத்ய பிரபா தாஸ் என்ற தலித் அசோசியட் புரபசரை, புரபசராக தகுதி உயர்த்த முடியாது என்றக் குற்றச்சாட்டு இருக்கிறது. ஜகதீஷ் குமார் ராவ் கம்யூனிட்டியைச் சேர்ந்தவர் என்றும், அவர் சாதி பார்த்துதான் தகுதி உயர்வு வழங்குகிறார் என்று கேரவன் மேகசின் கட்டுரை எழுதி இருக்கிறது. 

படிக்க மாணவர்களுக்கு பல நுழைவுத் தேர்வுகளை நடத்தி, அவர்களின் கனவுகளுக்கும், வாழ்விற்கும் வாய்க்கரிசி போட்டுக் கொண்டிருக்கிறது இந்திய ஒன்றிய அரசு பல ஆண்டுகளாக என்று எல்லோருக்கும் தெரியும். 

ஏழை மாணவர்கள் கல்வி கற்று, உயர் பதவிகளை அடைந்து விடக்கூடாது என்ற கொள்கைக்காக, கீழ்சாதி என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கும் நாதாரிகளின் மனம் மகிழும் வண்ணம், ஏழைகளான இந்திய மக்களின் புதல்வர்களின் கல்வியை தடுப்பதற்காக, நரித்தனமாக நுழைவுத் தேர்வுகளை தகுதி என உருவாக்கி வைத்திருக்கிறது ஒன்றிய அரசு. 

பல மொழி, பல வகையான நிலப்பரப்புகள், பல கலாச்சாரங்கள் கொண்ட ஒன்றிய மாநிலங்களின் கல்வியில் தலையிட்டு மாணவர்கள் பலரைக் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். அனிதா ஒரு எடுத்துக்காட்டு.

கல்லூரியில் புரபஸராக தகுதி உயர்ந்த முன்பு இருந்த பி.ஹெச்.டி படிப்பு என்ற தகுதி தேவையில்லை என்கிறார் ஜகதீஷ் குமார் சேர்மன். 

மாஸ்டர் டிகிரி படித்தாலே போதும், புரபஸர். பி.ஹெச்.டி எல்லாம் தேவையில்லையாம்.

மாணவர்கள் படிக்க நுழைவுத் தேர்வு தகுதி எனில் கல்லூரி புரபசர்களுக்கு தகுதி தேவையில்லையா? 



Thursday, February 2, 2023

கவிஞர் முத்துலிங்கத்திற்கு கடுமையான கண்டனம் - தினமணி கட்டுரை

தமிழ் நாட்டு அரசின் அந்த நாள் அரசவைக் கவிஞர், இந்த நாளில் எவரும் அறியா கவிஞரான முத்துலிங்கம் 02.02.2023 தினமணியில் ’மொழிப்போர் தியாக வரலாறு’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார்.

கவிஞர்களுக்கு இப்போது புகழும் இல்லை, பெரிய கவிஞர்கள் என்ற பட்டமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் முன் காலத்தில் சமுதாய, அரசியல், வாழ்வியல் சீரழிவுகளை கூர்மையான வார்த்தைகளால் கவிதை நடையில் எழுதவென்றே ஒரு கூட்டம் இருந்தது. கவியரங்கங்கள் கூட நடத்தப்பட்டு, அவர்களுக்கு மரியாதையும், பொன்னாடையும், புகழாடையும் வழங்கப்பட்டன.

சினிமாக்களில் பாடல்கள் எழுதினார்கள். நல்ல சம்பாத்தியமும் கிடைத்தன. மக்களிடையே புகழும் கிடைத்தன. அதெல்லாம் ஒரு காலம்.

இப்போது வலிகளை, இன்பங்களை, துயரங்களை, சீர்கேடுகளை, அக்கிரமங்களை படித்த ஒவ்வொருவரும் எழுதி விடுகிறார்கள். அதாவது கவிஞர்களானார்கள் மக்கள். தனிப்பட்ட முறையில் இனி கவிஞர்கள் என்று சொல்ல முடியாது. 

அந்த வகையில் நாதியற்றுப் போன கவிஞர் முத்துலிங்கம், எதுக்காகவோ ஆசைப்பட்டு, அல்லது சொரிந்து விடுவதற்காகவும், தன் இருப்பை யாருக்கோ தெரிவிக்க வேண்டியும் பொய்களை அவிழ்த்து விட்டு, அதுவும் பார்ப்பனியர் சாதி வெறி பிடித்தலையும் தினமணியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் இல்லையாம். ஆங்கிலம் தான் இருக்கிறதாம். கவிஞர் கவிதைக்கு வேண்டுமானால் பொய் புனையலாம். இப்போது, அதுவும் தற்போதைய தமிழ் நாட்டு மக்களிடம் போகிற போக்கில் தமிழே தமிழ் நாட்டில் இல்லை என்பது போன்ற ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.

பரிதாபத்துக்குரியவரானார் கவிஞர் முத்துலிங்கம். தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள். ராஜாஜி மாணவர்களை ஹிந்தியில் படிக்க கட்டாயச் சட்டம் கொண்டு வந்தார். அதை எதிர்த்துதான் மொழிப்போர் நடத்தப்பட்டது. 

மொழி வழி மாநிலங்கள் பிரித்த போது, அதன்படி ஆட்சி நடத்தப்படுகிற போது, எதற்காகத் தமிழர்களின் பிள்ளைகள் ஹிந்தியில் பாடம் படிக்க வேண்டும் என கவிஞர் சொல்லுவாரா? 

தமிழ் நாடு அரசு தமிழில் தான் சட்டங்கள் வெளியிடுகிறது. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க ஆங்கிலத்தில் சட்டங்கள் வெளியாகின்றன. ஒன்றிய அரசுப் பணியிலிருந்து மா நிலப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அரசு சட்டங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால், ஒன்றிய அரசின் இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் சட்டங்கள் வெளியிடப்படுகின்றன.

தமிழில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வசதியாக மறந்து போனார் முத்துலிங்கம்.

நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழைக் கொண்டு வர முயற்சி செய்தபடியே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு தமிழை வளரவே விடக்கூடாது என்பதற்காக அனுமதி தரவில்லை. இது ஏதும் தெரியாத தற்குறி இல்லை கவிஞர். ஆனாலும் பொய்யாக எழுதுகிறார்.

தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் படிக்கிறார்கள். ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆங்கிலம் படித்த காரணத்தால் உலகெங்கும் பணி செய்கிறார்கள். பல நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். ஹிந்தி படித்து விட்டு, தமிழ் நாட்டுக்கு வேலைக்கு வரவில்லை.

சுமார் 80 வயதான நிலையில் செய்நன்றி மறந்து போய் இப்படியான பொய்களை பொது வெளியில் அவிழ்த்துக் கொட்டுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று தமிழன் என்ற வகையில் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். 

இந்தக் கட்டுரையின் இறுதியில் கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்திருக்கும் கருத்துக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தினமணி வன்மம் கொண்டு தமிழர்கள் மீதும் தமிழின் மீதும் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. காலம் விரைவில் பதில் சொல்லும். 

கவிஞர் முத்துலிங்கம் எழுதிய - மொழிப்போர் தியாக வரலாறு கட்டுரை. இக்கட்டுரையின் இறுதி பத்தி கீழே. எவ்வளவு வன்மம் பாருங்கள் இவருக்கு?


நன்றி : தினமணி


Tuesday, January 31, 2023

ரஜினிகாந்த் பெயரைச் சொன்னால் குற்றம் - ரஜினியின் அறிக்கை

ரஜினிகாந்த் - பெயர் வைத்தது பாலச்சந்தர். சிகரெட் ஸ்டைலை படத்தில் பயன்படுத்தியது அவரே. ரஜினியின் ஒவ்வொரு ஸ்டலையும் யாரோ ஒரு இயக்குனர் உருவாக்கினார். அவருக்கான வசனத்தையும் யாரோ எழுதினர். எல்லாவற்றிலும் பலன் பெற்றது ஒரே ஒரு ஆள் - ரஜினிகாந்த். இறைவன் அவருக்கு கொடுத்திருக்கும் வரம் என்கிறார்கள். அது அப்படித்தான்  இருக்க வேண்டும். இறைவனின் செயலின் காரணத்தை அவ்வளவு எளிதில் கண்டுபிடிக்க முடியாது.

பார்ப்பான் ரங்கராஜ்பாண்டே (கோவிலில் பூசாரி வேலை செய்து வந்தவர்களுக்கு பாண்டே என்று பெயர் வைப்பார்களாம்) இது பற்றி ஆராய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் குடும்பம் நான்கு தலைமுறையாக நாயனம் வாசித்த்தால் தான் முதலமைச்சராக இருக்கிறார் என தர்மத்தின் பாதையைக் கண்டுபிடித்த புத்திசாலி ரஜினியையும் ஆராய வேண்டும். அதே போல பிரதமர் மோடி எப்படி பிரதமர் ஆனார் என்று கண்டுபிடித்தால் பிபிசிக்கு பதில் அளிக்கலாம். ஆகவே பார்ப்பான் ரங்கராஜ் பான்டே பூசாரி அது பற்றியும் ஆராய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ரஜினிக்காந்துக்காக ஒரு வக்கீல் பப்ளிக் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார். கீழே இருக்கிறது பார்த்துக் கொள்ளுங்கள். 

ரஜினியின் ஃபேன் என்றுச் சொல்ல - இனி ரஜினிக்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்க. ஒரு டிவி நிகழ்ச்சியில் வருகின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அது கமர்ஷியல் நிகழ்ச்சி அல்லவா? அந்த நிகழ்ச்சியில் நீங்கள் யார் ரசிகர் என்று கேள்வி கேட்கப்பட்டால் ரஜினிகாந்த் என்றுச் சொல்லக்கூடாது. ஏனென்றால் அப்படிச் சொன்னால் அது சட்டப்படி தவறு. அந்த நிகழ்ச்சி பணம் சம்பாதிக்கும் அல்லவா? கமர்ஷியல் நோக்கில் தன் பெயரைப் பயன்படுத்த ரஜினி காந்த் அவர்களுக்கு மட்டுமே உரிமை உண்டு என்கிறது அவர் வெளியிட்ட அறிக்கை.

ஆகவே நீங்கள் ரஜினி ரசிகர் என்று கூடச் சொல்லக்கூடாது. ரஜினி காந்த் அவர்கள் தன் ரசிகர்களுக்கு செய்யும் தொடர் நன்மைகளில் இதுவும் ஒன்று என்று நீங்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.

”என்னங்க ரஜினி இப்படியெல்லாம் செய்கிறார்? அவருக்கு உருவமும், வாழ்க்கையும் அளித்த தமிழர்கள் - சம்பாதிக்கவே கூடாதா? இப்படியும் ஒரு தற்குறி இருப்பாரா என்றெல்லாம் சொல்லி வருத்தப்பட்டார் ஒருவர். 

”கிராமப்புற மேடை நடிகர்கள், பாடகர்கள் இனி என்ன செய்வார்கள்?” என்று கேட்டார்.

சூப்பர் ஸ்டார் பட்டத்தை வேறொருவருக்கு மாற்ற வேண்டியதுதான். சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினிக்கு மட்டுமே குத்தகைக்கு எவரும் கொடுக்கவில்லை. ஆகவே இனி எவரையாவது சூப்பர் ஸ்டார் என்றுச் சொல்லிக் கொள்ளுங்கள். வக்கீல் கேஸ் போட்டால் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுச் சொல்லி வைத்தேன். சமாதானம் ஆகவில்லை அப்படியும் அவர்.

செய்நன்றி அற்றவர் என்று எவரும் ரஜினிகாந்த் அவர்களைச் சொல்லி விடக்கூடாது. அவர் மிகவும் நல்லவர். வல்லவர், திறமைசாலி மற்றும் மாபெரும் தியாகி. 

ஆகவே அவரின் அடுத்தடுத்த படங்களையும் பிரமோட் செய்யுங்கள். ஆனால் ஒன்று ரஜினிகாந்த் என்று பெயரை எங்கும் பயன்படுத்தி விடக்கூடாது என்பதில் கவனமாய் இருங்கள். 

டிவிட்டரிலும், ஃபேஸ்புக்கிலும், யூடிப்பிலும் பணம் சம்பாதிக்கிறீர்கள் அல்லவா? இனி ரஜினிகாந்த பெயரை மேற்கண்டவற்றில் பயன்படுத்தி பணம் சம்பாதிப்பது, இந்த அறிக்கையின் படி சட்டப்படி தவறு. ஆகவே வம்பு, வழக்கு என்று சிக்கிக் கொள்ள வேண்டாம்.



ரஜினிகாந்த் எவ்ளோ பெரிய தியாகி என்பதைச் சொல்லும் அவர் கடிதம் கீழே இருக்கிறது. படித்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு அவர் எவ்வளவு பெரிய தியாகம் செய்திருக்கிறார் என்று புரிந்து கொள்ள முடியவில்லை. 

தன் ரசிகர் மன்றத்தின் மூலமாக எத்தனை போராட்டங்களை நடத்தி இருக்கிறார் அவர்? தமிழக மக்களுக்காக தமிழகமெங்கும் நடைபயணங்களை நடத்தி இருக்கிறாரா? குற்றம் எங்கு நடந்தாலும் ரசிகர் மன்றம் போராட்டம் செய்திருக்கிறதா? என்றெல்லாம் கேள்விகள் கேட்டு விடக்கூடாது. 

தமிழ்நாடே அவர் எப்போது முதலமைச்சர் ஆவார் என்று காத்துக் கிடந்தது. ஆனாலும் அவர் தனக்கு முதலமைச்சர் பதவியே வேண்டாமென்று உதறி தள்ளி தானொரு ஆன்மீகவாதி என்று நிரூபித்து விட்டார். அவரின் ஆன்மீகம் உண்மையானது.

போலி ஆன்மீகம் அல்ல என்பதை நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். போலி ஆன்மீகம் என்றவுடன் ராசய்யா (அவரில்லை - இவர் வேற) நினைவுக்கு வந்து விடக்கூடாது உங்களுக்கு. அப்படியெல்லாம் நீங்கள் நினைத்தால் அது  தேச விரோதம். 

கீழே இருக்கும் கடிதம் மூலம் முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுத்த தானைத்தலைவர் ரஜினிகாந்த் என்பதை மறந்து விடாதீர்கள். ஆகவே மறந்தும் செய்து விடாத காரியம் என்னவென்றால் எங்கும் ரஜினிகாந்த் பெயரை உச்சரித்து விடக்கூடாது என்பதே. 



THANKS TO RAJINIKANTH TWITTER AND SRITHAR PILLAR TWITTER. 

தமிழக மக்களுக்கு ரஜினிகாந்த் அவர்களின் அறிக்கை சென்று சேர வேண்டுமென்ற காரணத்தால் கடிதம் பயன்படுத்தப் பட்டிருக்கிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். ரஜினிகாந்த் விரும்பினால் நீக்கி விடுகிறேன் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Sunday, January 29, 2023

நெடுவாசல் வேலு வாத்தியார்

நெடுவாசல் சாந்தி அக்கா தீடீரென காலமாகி விட்டார். மறுநாள் துக்கம் விசாரிக்கச் சென்றிருந்த போது, வேலு வாத்தியாரின் மறைவு கேட்டு வீட்டுக்குச் சென்ற போது அவர் எழுதிய நெடுவாசல் கிராம வரலாறு புத்தகத்தை அவரின் மனையாள் என்னிடம் கொடுத்தார். புத்தகத்தைப் புரட்டிய போது எனக்குள் ஆச்சரியம்.

ஆசிரியர் வேலு

எத்தனையோ மனிதர்கள் பிறந்து, வாழ்ந்து, மறைந்து போகின்றனர். தான் வாழ்ந்த ஊரின் வரலாற்றை எழுதியவர்கள் மிகச் சிலரே. நெடுவாசல் கிராமத்தின் தோற்றத்திலிருந்து ஊரின் பழக்கங்கள் வரை ஒவ்வொரு நிகழ்வையும் பதிவு செய்திருக்கும் அப்புத்தகம் வரலாறானது அவரைப் போலவே. 

1976ம் ஆண்டிலிருந்து 2012ம் ஆண்டு வரை ஆசிரியராகவும், தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராகவும் பணிபுரிந்தார். 1974ம் ஆண்டிலிருந்து அவர் திராவிட கழக உறுப்பினர். பகுதறிவாளர் கழக மாவட்ட புரவலராக இருந்திருக்கிறார். 1977ம் ஆண்டிலிருந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக இருந்திருக்கிறார். 1991ம் ஆண்டிலிருந்து புலால் உணவை நீக்கி வடலூர் இராமலிங்க அடிகளாரின் சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் ஈடுபாடு கொண்டு வாழ்ந்தவர்.

அதுமட்டுமல்ல தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைத் தலைவராக இருந்திருக்கிறார்.  மேதகு மொரார்ஜி தேசாய், மேதகு ராஜீவ் காந்தி, மாண்புமிகு புரந்தரேஸ்வரி அம்மையார் ஆகியோர் கலந்து கொண்ட ஆசிரியர் கூட்டணி மா நாடுகளில் முக்கியப் பங்கெடுத்தவர் வேலு ஆசிரியர். இத்தகைய பெருமை கொண்டவருக்கு இன்று பேராவூரனியில் நினைவேந்தல் விழா நடக்கிறது. 

பதினொரு நாட்டார் அகமுடையார் உறவின் முறை கிராமங்களில் இப்படி ஒருவர் வாழ்ந்திருக்கிறார் என்பது அதிசயமே. 

ஆவணம் கிராமத்தில் ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்ட கவி ஈஸ்வரர் வேலாயதனார் என்பவர் வாழ்ந்து காலமானார்.

திருவாசகத்துக்கு இணை சொல்லும் வகையில் ஆவணம் கிராமத்தில் கவியீஸ்வரர் வேலாயுதனார் என்ற வேலாயுத தேவர் திருச்சிற்றம்பலம் சிவபெருமான் மீதும், ஆவணத்தில் குடிகொண்டிருக்கும் சிவபெருமான் மீதும் கொண்ட பக்தியினால் பல்வேறு பாடல்களை எழுதினார். அவரின் கையெழுத்து நீட்சியெழுத்தாக இருப்பதால் அச்சுக்கோர்ப்பவருக்குப் புரியாது. ஆகையால் அவரின் எழுத்தை அழகாக படியெடுத்து எழுதிக் கொடுப்பது என் வாடிக்கை.

ஆவணம் அரசு துவக்கப்பள்ளியின் பின்னாலே இருந்த புளியமரத்தடியில் அமர்ந்து கொண்டு, மாலை நேரங்களில் பிரதி எடுத்து எழுதிக் கொடுப்பேன். அவர் காலமாவதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பு, என்னிடம் தன் இறப்பைத் தெரிவித்தார். அந்தளவுக்கு சிவபெருமான் மீது அதீத பக்தி கொண்டவர், இறைவனாகவே வாழ்ந்தவர்.  வேலு ஆசிரியர் அவர்களும், வேலாயுதனார் இருவரும் சுத்த சன்மார்கத்திலே ஈடுபாடு கொண்டவர்கள்.

பெரிய மனிதர்கள் வந்த சுவடு தெரியாமல் மறைந்து போவார்கள். அதைப் போல நெடுவாசலில் வாத்தியார் என்ற சொல்லுக்கு இலக்கணம் மாறாமல் வாழ்ந்த வேலு ஆசிரியர் காலமாகி இருக்கிறார்.

இன்று அவரின் புகைப்படத் திறப்பு விழா பேராவூரணியில் நடக்க இருக்கிறது. எனது ஊருக்குப் பெருமை சேர்த்த வேலு ஆசிரியரின் புகழ் என்றென்றும் நிலைத்து நின்று, நெடுவாசலுக்குப் பெருமை சேர்க்கும். 

வேலு ஆசிரியர் எழுதிய புத்தகத்தைப் படிக்க விரும்புவர்கள் கீழே இருக்கும் முகவரியில் தொடர்பு கொள்ளவும். தமிழ்மணி பதிப்பகம், நெடுவாசல் கிராமம், ஆலங்குடி வட்டம், புதுக்கோட்டை மாவட்டம், அஞ்சலக எண் : 622304, போன் : 86086 36044


அவரை வணங்கி மகிழ்கிறேன்.

இன்று 29.01.2023ம் தேதி பேராவூரணியில் நடக்க இருக்கும் புகைப்படத் திறப்பு விழா அழைப்பிதழ் கீழே.




Friday, January 27, 2023

புரட்சிக்கவியின் புரட்சிப்பாடல்

பாரதிதாசன் அன்று எழுதியது. படித்துப் பாருங்கள்.  உண்மை என்றும் உறங்குவதில்லை. அது காட்டிடைப் பொந்தில் வைத்த தீ போல பற்றிப் பரவும். நயவஞ்சகச் செயலாளர்களும், மிச்சம் கிடைக்கும் கறிக்கு எச்சில் வடித்து நிற்கும் துரோகிகளும், தூய தீயில் கருகி காணாமல் போவர் என்பது நடந்தே தீரும் என்று தர்மம் சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது.

சமீபகாலமாக மனதுக்குள் சந்தோஷம். தர்மம் நின்று கொல்லும் என்று நடக்கும் காட்சிகள் சொல்கின்றன. 

இடையில் கொஞ்சம் வருத்தமே. தர்மமா? அது இருக்கிறதா என்ற சந்தேகம் வந்தது. இப்போது இல்லை. 

இந்தியாவில் இருக்கும் ஒரே ஒரு நயவஞ்சக, செய்நன்றி அற்ற நரிக்கூட்டம் விரட்டி அடிக்கப்படும் நாள் தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை வந்து விட்டது. உலகெங்கும் நடக்கும் செயல்களில் தாம் மட்டும் சிக்கிக் கொள்ளாமல் தப்பித்துக் கொள்ளும் மன்னிப்புக் கூட்டாத்தாரின் மன்னிப்பு என்ற வார்த்தையும் நயவஞ்சக அர்த்தமே என்று உலகோர் புரிந்து கொண்டனர்.

கடவுளும் இருக்கிறார். அறமும் தர்மமும் இருக்கிறது. 

இனி புரட்சிகவி - இடையில் கொஞ்சம் கொஞ்சம் எடிட்டிங்க் செய்திருக்கிறேன் படிக்க சுவாரசியமாக இருக்கும் என.

இனி புரட்சிக்கவி உங்களிடையே ....!


"பேரன்பு கொண்டவரே, பெரியோ ரேஎன்

பெற்றதாய் மாரே,நல் இளஞ்சிங் கங்காள்!


நீரோடை நிலங்கிழிக்க நெடும ரங்கள்

நிறைந்துபெருங் காடாக்கப் பெருவி லங்கு

நேரோடி வாழ்ந்திருக்கப் பருக்கைக் கல்லின்

நெடுங்குன்றில் பிலஞ்சேரப் பாம்புக் கூட்டம்

போராடும் பாழ்நிலத்தை அந்த நாளில்

புதுக்கியவர் யார்?அழகு நகருண் டாக்கி!


சிற்றூரும், வரப்பெடுத்த வயலும், ஆறு

தேக்கிய நல்வாய்க் காலும்வகைப் படுத்தி

நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்

நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள்?


கற்பிளந்து, மலைபிளந்து, கனிகள் வெட்டிக்

கருவியெலாம் செய்துதந்த கைதான் யார்கை?


பொற்றுகளைக் கடல்முத்தை மணிக்கு லத்தைப்

போய்எடுக்க அடக்கியமூச் செவரின் மூச்சு?


அக்கால உலகிருட்டைத் தலைகீ ழாக்கி

அழகியதாய் வசதியதாய்ச் செய்து தந்தார்

இக்கால நால்வருணம் அன்றி ருந்தால்

இருட்டுக்கு முன்னேற்றம் ஆவ தன்றிப்

புக்கபயன் உண்டாமோ? பொழுது தோறும்

புனலுக்கும், அனலுக்கும், சேற்றினுக்கும்,

கக்கும்விஷப் பாம்பினுக்கும், பிலத்தி னுக்கும்,

கடும்பசிக்கும், இடையறா நோய்க ளுக்கும்,

பலியாகிக் கால்கைகள் உடல்கள் சிந்தும்

பச்சைரத்தம் பரிமாறி இந்த நாட்டைச்

சலியாத வருவாயும் உடைய தாகத்

தந்ததெவர்? அவரெல்லாம் இந்த நேரம்

எலியாக, முயலாக, இருக்கின் றார்கள்


ஏமாந்த காலத்தில் ஏற்றங் கொண்டோன்

புலிவேஷம் போடுகின்றான்! பொதுமக்கட்குப்

புல்லளவு மதிப்பேனும் தருகின் றானா?


ஒருமனிதன் தேவைக்கே இந்தத் தேசம்

உண்டென்றால் அத்தேசம் ஒழிதல் நன்றாம்”

Tuesday, January 24, 2023

சூரைக்காற்றாய் டி.ராஜேந்தர் எனும் அஷ்டாவதானி

தன்னம்பிக்கையின் முகவரி, சினிமா உலகில் புடம் போட்ட தூய தங்கம், உண்மை பேசும் உற்சாகவாதி என பல தளங்களில் தடம் பதித்த பெருமை மிகு தமிழர் டி.ராஜேந்தர் அவர்கள்.

சுய ஒழுங்கும், சுய கட்டுப்பாடும் மிக்க மிகச் சிறந்த மனிதர். கை நீட்டி அவரை எவராலும் குற்றம் சுமத்தி விட முடியாது. சினிமா எனும் சகலலோப சல்லாபச் சந்தையின் விளைந்த தூய முத்துப் போன்ற தூய்மையான மனிதர்.

அவரின் படங்களும், பாடல்களும் இன்றைக்கும் அழிக்கவியலா காவியங்களாய் மிளிருபவை. காலத்துக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்தும் அப்டேட் ஆண்ட்ராய்டு வெர்சன் போல டி.ஆர் தன்னை வெளிப்படுத்திய தருணம் 2023 ஆண்டில் நிகழ்ந்திருக்கிறது.

கிட்டத்தட்ட 14 ஆண்டுகளாய் தவமிருந்த காற்று கடந்த ஜனவரி 20ம் தேதியன்று சூரைக்காற்றாய் இசை உலகை சுழன்று அடித்தது. மீண்டும் இந்தியா முழுவதும் தன் படைப்பால் கவனம் பெற்ற அஷ்டாவதானி என நிருப்பித்திருக்கிறார்

முருகப் பெருமானின் அருளாலே, மீண்டும் டி.ஆர் இந்தியாவைத் திரும்ப பார்க்க வைத்திருக்கிறார்.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியை நானறிவேன். 

என்னுடன் பேசும் போது, சட்டென்று முருகன் மீது பாட்டெடுத்து, பாட ஆரம்பிப்பார். கேட்கும் எனக்கோ நெக்குருகி விடும் மனது.

முருகன் மீது அவர் கொண்ட பக்தியின் பாவம் பாடலாக பரவி, கேட்போர் மனதை உலுக்கிக, உருக்கி விடும். இசை உலகின் மறைபொருளாய் இருந்தார். அவரின் குரலுக்கு தமிழ் நாடே ஆடியதை நாமெல்லாம் கண்டோம். இசை மேடையெங்கும் ஒலித்தது அவரின் பாடல்கள். கேட்போர் நரம்புகளைச் சுண்டி இழுத்தன அவைகள்.

அவற்றை எல்லாம் வென்று சரித்திரம் படைத்தது அவரின் வந்தே வந்தே மாதரம். இந்திய தாய்க்கு அவர் செலுத்திய வணக்கம் இது.

“வந்தே வந்தே மாதரம்” பாட்டு கேட்கையில் அது சுனாமி போல மனதுக்குள் சுழலும். 

பாட்டைக் கேட்க கேட்க உங்கள் மனதுக்குள்ளும் அது நிகழும்.

இனிய நண்பர் டி.ஆர் அவர்கள், விரைவில் சினிமாவில் புதுக்களத்தில் புதிய தொரு கோணத்தில் தன் படைப்பினை ரசிகர்களுக்கு விருந்து வைக்கப் போகிறார் என்ற செய்தியை அவர் பேட்டியில் கண்ட போது எல்லையில்லா மகிழ்ச்சி உண்டானது.

அவர் நலமுடனும் வளமுடனும் வாழ எம் குருவிடம் பிரார்த்திக்கிறேன்.


வந்தே வந்தே மாதரம் - தமிழ்


வந்தே வந்தே மாதரம் - இந்தி


பேட்டிகள்





Thursday, January 19, 2023

விதி எப்படி வேலை செய்யும் தெரியுமா?

கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பது பற்றிய சர்ச்சைகள் மனிதர்கள் இருக்கும் வரை இருந்து கொண்டே இருக்கும். அதைப் பற்றி இப்போது பார்க்கப் போவதில்லை. என்னைப் பொறுத்தவரை கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் கதை தான். யானையைக் குருடர்கள் தடவிப் பார்த்து விவரித்த கதையையும் சேர்த்துக் கொள்ளலாம்.

ஆனால் விதி அல்லது தர்மம் அதன் பலன்கள் பற்றிய சம்பவங்கள் பலதும் என்னை வசீகரிப்படுத்திக் கொண்டிருப்பவை. அப்படி என்னை வசீகரித்த ஒரு சில சம்பவங்கள் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

ராமர் கோவில் கட்ட ரதயாத்திரை தொடங்கிய அத்வானிக்கு பிரதமர் பதவி கிடைக்கவில்லை. ஏன்?  ராமர் கைவிட்டு விட்டாரா? 

முஸ்லிம்களின் மசூதியை இடித்ததற்கு காரணமாய் இருந்தவர் அத்வானி. கொடுமை என்னவென்றால் அத்வானியின் உறவினர் முஸ்லிம் ஒருவரை திருமணம் செய்திருக்கிறார். 

ஆகமம், நியமம் என்று மூச்சுக்கு மூச்சு இந்து, பார்ப்பனியம் பேசும் சுப்ரமணிய சாமியின் மகளின் கணவர் பெயர் நசீம் ஹைதர். இது தான் தர்மத்தின் பலன்.

2011ல் காங்கிரசைத் தோற்கடிக்க, பாஜகவின் மறைமுக  பகடையாகப் பயன்பட்டவர் அண்ணா ஹசாரே. விதி என்னவென்றால் டெல்லியில் எந்தக் கட்சித் தொடர்பு இல்லாத அரவிந்த் கேஜரிவால் முதலமைச்சர். பஞ்சாபிலும் அரவிந்த் கேஜரிவாலின் ஆம் ஆத்மி கட்சி. 

ஆளுநரை வைத்துக் கொண்டு இரண்டு மா நிலங்களிலும், அரசியல் சட்டத்துக்குப் புறம்பான வேலை செய்ய தூண்டிக் கொண்டிருக்கிறது பிஜேபியும் மோடி அரசும். பிரதமர் மோடியின் கண்ணுக்குள் கத்தியை விட்டு ஆட்டிக் கொண்டிருக்கிறார் அரவிந்த் கேஜ்ரிவால்.

எந்த ஆயுதம் எடுக்கிறார்களோ அதே ஆயுதத்தால் பலன். 

செய்யும் செயலுக்கு ஒப்பான பின் விளைவுகள் நிச்சயம் உண்டு என்று அரசியலில் மட்டுமல்ல பிசினஸிலும் உண்டு. அதை பிறிதொரு நேரத்தில் எழுதுகிறேன்.

இதை விட மற்றொரு ஆகச் சிறந்த உதாரணம் என்ன தெரியுமா?

ஐ.டி ஊழியர்களின் அலப்பறை. இவர்களால் நிலத்தின் விலை உயர்ந்தது. வீட்டு வாடகை உயர்ந்தது. நான் சம்பாதிக்கிறேன், எனக்கு தேவைப்படுகிறது, வாடகை அதிகம் கொடுக்கிறேன். உனக்கு எதுக்கு எரியுது? என்று கேட்டார்கள். ஏழைகள் இவர்களின் அட்டகாசத்தால், திமிறினால் சம்பாதிக்கும் பணத்தில் 50 சதவீதம் வாடகைக்குச் செலவழிக்க நேரிட்டது. இன்னும் குறைந்த பாடில்லை.

நான் சம்பாதிக்கிறேன், நிலம் வாங்கிப் போடுகிறேன். எனக்குத் தேவை, அதிக விலை கொடுக்கிறேன் என்று எகத்தாளம் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய சைட்டுகளை வாங்க ஆளில்லை இப்போது.

நான் சம்பாதிக்கிறேன், தென்னை தோப்பு வாங்குகிறேன். எனக்குத் தேவை, ஆகையால் அதிக விலை கொடுக்கிறேன், உங்களுக்கு என்ன? என்று லொள்ளுப் பேசினார்கள். அதிக விலைக்கு வாங்கிய தென்னைத் தோப்புகளை விற்கவும் முடியாமல், மெயிண்டெனன்ஸ் செய்தே ஆக வேண்டிய கட்டாயத்தில் யாரோ ஒருவருக்கு மாதம் தோறும் தண்டம் அழுதுக் கொண்டிருக்கிறார்கள் இவர்கள்.

கொரானா வந்தது. ஐ.டி ஊழியர்களின் வாயில் வெள்ளத்தை ஊற்றி நிரப்பியது. வீடுகள் ஏலம், கார்கள் ஏலம், கடனாளி, லே ஆஃப், அரைச் சம்பளம், ஆட்குறைப்புகள் என ஐ.டி செக்டார் ஊழியர்களின் நிலை ஆப்பசைத்த குரங்கானது. மாட்டிக் கொண்டார்கள்.

இன்னும் இருக்கிறது சம்பவங்கள்.

விரைவில் பார்க்கலாம்.

Wednesday, January 18, 2023

தனியார் டிரஸ்டுகள் தகவல் அறியும் உரிமைச் சட்ட வரம்புக்குள் வராது

செய்தியை மட்டும் படித்துக் கொள்ளுங்கள். தனியார் டிரஸ்டுகளின் வருமான வரி, செலவு, வரி விலக்கு விபரங்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது. 

Income Tax Act 1961 - Section 138 Amendment

Amendment of section 138.

28. In section 138 of the Income-tax Act, for sub-section (1), the following sub-section shall be substituted, namely:—

"(1) (a) The Board or any other Income-tax authority specified by it by a general or special order in this behalf may furnish or cause to be furnished to—

(i) any officer, authority or body performing any functions under any law relating to the imposition of any tax, duty or cess, or to dealings in foreign exchange as defined in section 2 (d) of the Foreign Exchange Regulation Act, 1947 (7 of 1947.); or

(ii) such officer, authority or body performing functions under any other law as the Central Government may, if in its opinion it is necessary so to do in the public interest, specify by notification in the Official Gazette in this behalf, any such information relating to any assessee in respect of any assessment made under this Act or the Indian Income-tax Act 1922 (11 of 1922) as may. in the opinion of the Board or other Income-tax authority, be necessary for the purpose of enabling the officer, authority or body to perform his or its functions under that law.

(b) Where a person makes an application to the Commissioner in the prescribed form for any information relating to any assessee in respect of any assessment made under this Act or the Indian Income-tax Act. 1922 (11 of 1922). on or after the 1st day of April, 1960, the Commissioner may, if he is satisfied that it is in the public interest so to do, furnish or cause to be furnished the information asked for in respect of that assessment only and his decision in this behalf shall be final and shall not be called in question in any court of law.".

[Finance (No. 2) Act, 1967]

செய்தி கீழே!


இந்தச் செய்திக்கும் கீழே இருக்கும் செய்திக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

 நன்றி : தினமணி

வக்கீல் நீதிபதி நீதிமன்றம் என்பவை என்ன?

அன்பு நண்பர்களே!

ஜனநாயகத்தின் வேர்களில் ஒன்றான நீதிமன்றம் என்றால் என்ன என்பது பற்றி மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் சாட்சியத்துடன்.

நீதிமன்றங்கள் மக்களுக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தின் படி நீதி வழங்குகிறது என்று நீங்கள் நம்பிக் கொண்டிருந்தீர்கள் என்றால் இந்தப் பதிவைத் தொடர்ந்து படிக்காதீர்கள். விலகிச் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை வளர்க்கும் புத்தகங்களால் பலர் முன்னேற்றமடைந்தார்கள் என்று நம்பிக் கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து படிக்காதீர்கள், விலகிக் சென்று விடுங்கள். 

தன்னம்பிக்கை புத்தகங்கள் எப்போதும் வெற்றியைத் தந்து விடாது நண்பர்களே.  புத்தகம் எழுதியவருக்கு வருமானம் மட்டுமே தரும். படிப்பவர்களுக்கு தோல்வி தான் மிஞ்சும். தன்னம்பிக்கையை விட இன்னொரு விஷயம், வெற்றி அடைய மிகவும் முக்கியமானது.

PERSEVERENCE

இதைப் பற்றி ஏதாவதொரு சூழலில் எழுதுகிறேன். வெற்றி என்பது பணத்தில் உள்ளது என்ற நம்பிக்கை உடையவர்களுக்கு PERSEVERANCE முக்கியம்.

அறத்தின் வழி நின்று உண்மை என்னவென்று எழுதும் போது, உண்மைகள் வெளியாகும். அது அதிர்ச்சியை உங்களுக்குத் தரும். 

மலையாளத்தில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. இப்பதிவு சினிமா மார்க்கெட்டிங்க் இல்லை. 

உண்மை. 

அந்தப் படத்தின் பெயர்,”முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ்”.

இது ஹாட்ஸ் ஸ்டாரில் வெளியாகி இருக்கிறது. அனைவரும் அவசியம் பாருங்கள். நீதிதுறையில் இது ஒரு சிறு துளி. படத்தை அவசியம் பாருங்கள். அதிர்வீர்கள் என்பது உண்மையிலும் உண்மை.

வக்கீல்களுக்கு ஆக்சிடெண்ட் வழக்குகளில் கொட்டும் பணமழை பற்றிய மிகத் தெளிவான விரிவுரை முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ். 

இரத்தத்தின் பணம். 



தொழில் தர்மம் என்பார்கள் வக்கீல்கள். நீதிபதிகளோ வாய் திறக்க மாட்டார்கள்.  நீதிமன்றங்களோ வழக்கம் போல சாட்சியாய் இருக்கும். அரசோ எனக்கென்ன என்பது போல இருக்கும். மக்களோ நெருப்பில் நெளியும் புழுக்கள் போல கிடப்பார்கள்.

அறம் - தர்மம் - நீதி இவைகளில் நம்பிக்கையற்றவர்களாக இருப்பின், நீங்கள் கோடி கோடியாக சம்பாதிக்க வேண்டுமெனில் நீதித்துறையில் கால்பதியுங்கள். பெரிய அகலமான பைப்பில் கொட்டும் நீரைப் போல உங்களின் கல்லாவுக்குள் அருவியென பணமழை கொட்டும் என்பதை  என்னால் உறுதியாக சொல்ல முடியும். பல துறைகள் இருக்கின்றன. தேவை கொஞ்சம் புத்திசாலித்தனமும், எப்படி என்கிற வழிமுறையும் தான்.

இந்தப் படத்தை பார்த்து முடிக்கும் போது, வக்கீல் - நீதிபதி - நீதிமன்றம் என்பவை என்ன என உங்களுக்குப் புரிந்து இருக்கும் என நம்புகிறேன். 

மறந்து விடாதீர்கள். முகுந்தன் உண்ணி அசோசியேட்ஸ் படத்தை அவசியம் பார்த்து விடுங்கள்.

Monday, January 16, 2023

நிலம் (106) - 3.25 லட்சம் நிலங்கள் தவறான பதிவு

இரண்டு மாதங்களுக்கு முன்பு சத்தியமங்கலத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். நேரில் சந்தித்தேன். 1.75 ஏக்கர் நிலம் கிரையம் வாங்கி இருப்பது செல்லாது என்று வக்கீல் நோட்டீஸ் வந்திருந்தது.

பிரச்சினை என்னவென்றால், கோசணம் கிராமம் 1973ம் ஆண்டில் நிர்வாக வசதிக்காக கோசனம் அ மற்றும் கோசனம் ஆ என இரண்டு ரெவின்யூ கிராமங்களாகப் பிரிக்கப்பட்டு புதிய சர்வே எண்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த சர்வே எண்கள் குழப்பத்தில் உண்டான வழக்கு இது. இந்தச் சொத்தின் உரிமையைச் சட்டப்படி உரித்தாக்க இனி பல வேலைகள் செய்ய வேண்டி இருக்கும். இந்த வழக்கில் தாசில்தார் வழங்கிய உரிமைச்சான்று போலி என தற்போது டி.ஆர்.ஓ ஆர்டர் போட்டிருக்கிறார்.

இதற்கு முன்பு வழங்கிய உரிமைச் சான்றின் நிலை? என்னவோ? அதனை வழங்கிய தாசில்தார், ஆர்.இ, வி.ஏ.ஓ மீது என்ன நடவடிக்கை எடுக்கும் அரசு? 

இதெல்லாம் நடக்ககூடிய காரியமா? நாம் தான் கவனமாக இருக்க வேண்டும்.

எனக்குத் தெரிந்து ரெவின்யூ அதிகாரிகள் எவரும் ஆவணங்களைப் படித்துப் பார்ப்பதே இல்லை. அது வி.ஏ.ஓவாக இருந்தாலும் சரி, தாசில்தாராக இருந்தாலும் சரி. என் அனுபவத்தில் கண்ட விஷயம்.

லீகல் ஒப்பீனியன் பார்க்கும் போது நான்கு, ஐந்து தடவையாவது ஆவணங்களைப் படிப்பதுண்டு. கண்களைக் கட்டும் போலி மாய வித்தைகளால்  ஏமாந்து விடக்கூடாது அல்லவா?

எங்கே ஆதாரம் என்பீர்கள்? இதோ ஆதாரம் கீழே. கோவை, திருப்பூர் ஆகிய பகுதிகளில் பல தனியார் நிலங்கள் கோவில் நிலங்களாக மாற்றப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஒரு நிலத்தை மீட்டுக் கொடுத்திருக்கிறேன்.