தமிழ் நாட்டு அரசின் அந்த நாள் அரசவைக் கவிஞர், இந்த நாளில் எவரும் அறியா கவிஞரான முத்துலிங்கம் 02.02.2023 தினமணியில் ’மொழிப்போர் தியாக வரலாறு’ என்ற கட்டுரையை எழுதி இருக்கிறார்.
கவிஞர்களுக்கு இப்போது புகழும் இல்லை, பெரிய கவிஞர்கள் என்ற பட்டமும் கிடைப்பதில்லை. ஏனென்றால் முன் காலத்தில் சமுதாய, அரசியல், வாழ்வியல் சீரழிவுகளை கூர்மையான வார்த்தைகளால் கவிதை நடையில் எழுதவென்றே ஒரு கூட்டம் இருந்தது. கவியரங்கங்கள் கூட நடத்தப்பட்டு, அவர்களுக்கு மரியாதையும், பொன்னாடையும், புகழாடையும் வழங்கப்பட்டன.
சினிமாக்களில் பாடல்கள் எழுதினார்கள். நல்ல சம்பாத்தியமும் கிடைத்தன. மக்களிடையே புகழும் கிடைத்தன. அதெல்லாம் ஒரு காலம்.
இப்போது வலிகளை, இன்பங்களை, துயரங்களை, சீர்கேடுகளை, அக்கிரமங்களை படித்த ஒவ்வொருவரும் எழுதி விடுகிறார்கள். அதாவது கவிஞர்களானார்கள் மக்கள். தனிப்பட்ட முறையில் இனி கவிஞர்கள் என்று சொல்ல முடியாது.
அந்த வகையில் நாதியற்றுப் போன கவிஞர் முத்துலிங்கம், எதுக்காகவோ ஆசைப்பட்டு, அல்லது சொரிந்து விடுவதற்காகவும், தன் இருப்பை யாருக்கோ தெரிவிக்க வேண்டியும் பொய்களை அவிழ்த்து விட்டு, அதுவும் பார்ப்பனியர் சாதி வெறி பிடித்தலையும் தினமணியில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
தமிழ் நாட்டின் ஆட்சி மொழி தமிழ் இல்லையாம். ஆங்கிலம் தான் இருக்கிறதாம். கவிஞர் கவிதைக்கு வேண்டுமானால் பொய் புனையலாம். இப்போது, அதுவும் தற்போதைய தமிழ் நாட்டு மக்களிடம் போகிற போக்கில் தமிழே தமிழ் நாட்டில் இல்லை என்பது போன்ற ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார்.
பரிதாபத்துக்குரியவரானார் கவிஞர் முத்துலிங்கம். தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் தான் படிக்கிறார்கள். ராஜாஜி மாணவர்களை ஹிந்தியில் படிக்க கட்டாயச் சட்டம் கொண்டு வந்தார். அதை எதிர்த்துதான் மொழிப்போர் நடத்தப்பட்டது.
மொழி வழி மாநிலங்கள் பிரித்த போது, அதன்படி ஆட்சி நடத்தப்படுகிற போது, எதற்காகத் தமிழர்களின் பிள்ளைகள் ஹிந்தியில் பாடம் படிக்க வேண்டும் என கவிஞர் சொல்லுவாரா?
தமிழ் நாடு அரசு தமிழில் தான் சட்டங்கள் வெளியிடுகிறது. ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைக்க ஆங்கிலத்தில் சட்டங்கள் வெளியாகின்றன. ஒன்றிய அரசுப் பணியிலிருந்து மா நிலப் பணிக்கு வரும் அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் இருக்கும் அரசு சட்டங்களை எளிதில் புரிந்து கொள்ள முடியும் என்பதால், ஒன்றிய அரசின் இணைப்பு மொழியான ஆங்கிலத்திலும் சட்டங்கள் வெளியிடப்படுகின்றன.
தமிழில் படித்தவருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். வசதியாக மறந்து போனார் முத்துலிங்கம்.
நீதிமன்றத்தில் வழக்கு மொழியாக தமிழைக் கொண்டு வர முயற்சி செய்தபடியே தான் இருக்கிறார்கள். ஆனால் ஒன்றிய அரசு தமிழை வளரவே விடக்கூடாது என்பதற்காக அனுமதி தரவில்லை. இது ஏதும் தெரியாத தற்குறி இல்லை கவிஞர். ஆனாலும் பொய்யாக எழுதுகிறார்.
தமிழ் நாட்டில் மாணவர்கள் தமிழில் படிக்கிறார்கள். ஆங்கிலமும் படிக்கிறார்கள். ஆங்கிலம் படித்த காரணத்தால் உலகெங்கும் பணி செய்கிறார்கள். பல நிறுவனங்களின் தலைவர்களாக இருக்கிறார்கள். ஹிந்தி படித்து விட்டு, தமிழ் நாட்டுக்கு வேலைக்கு வரவில்லை.
சுமார் 80 வயதான நிலையில் செய்நன்றி மறந்து போய் இப்படியான பொய்களை பொது வெளியில் அவிழ்த்துக் கொட்டுவதை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டுமென்று தமிழன் என்ற வகையில் அவரைக் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தக் கட்டுரையின் இறுதியில் கவிஞர் முத்துலிங்கம் தெரிவித்திருக்கும் கருத்துக்கு கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தினமணி வன்மம் கொண்டு தமிழர்கள் மீதும் தமிழின் மீதும் சேற்றை வாரி இறைத்துக் கொண்டிருக்கிறது. காலம் விரைவில் பதில் சொல்லும்.
கவிஞர் முத்துலிங்கம் எழுதிய - மொழிப்போர் தியாக வரலாறு கட்டுரை. இக்கட்டுரையின் இறுதி பத்தி கீழே. எவ்வளவு வன்மம் பாருங்கள் இவருக்கு?
நன்றி : தினமணி