Tuesday, November 23, 2021
பிட்காயின் உண்மை என்ன? தெளிவான விளக்கம்
Sunday, November 14, 2021
மக்களாட்சியை சர்வாதிகாரம் செய்கிறதா உச்சநீதிமன்றம்? - ஓர் பார்வை
காலச்சுவடு நவம்பர் 2021 இதழில் வெளியான தலையங்கமும், பி.ஏ.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் இரட்டைக்குழல் துப்பாக்கிகளா? என்ற கட்டுரையும் எனக்குள் ஒரு சாமானியன் என்ற வகையில் பல்வேறு வகையான அதிர்ச்சியை உருவாக்கியது.
தலையங்கத்திலே சு மோட் என்ற லெட்டர் ஆஃப் ஸ்பிரிட் எனும் சட்டப்பிரிவின் துணை கொண்டு தானாகவே வழக்கு - விசாரணை செய்யும் சுப்ரீம் கோர்ட்டின் செயல்பாடுகள் அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டதா என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார் ஆசிரியர்.
சட்டம் இயற்றும் மன்றங்கள், அரசு நிர்வாகம், நீதிமன்றம் மூன்றும் தங்கள் எல்லைக்கோட்டுக்குள் நின்று கொண்டால் நல்லது என்கிறது தலையங்கம்.
லக்கிம்பூர் கேரியில் ஒன்றிய அரசின் அதாவது மோடியின் மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடிய விவசாயிகள் மீது ஆளும் பாரதீய ஜனதா கட்சியின் அமைச்சரின் மகன் காரை ஏற்றிக் கொலைச் செய்த சம்பவம்
ஜார்கண்ட் மாநிலத்தில் காலை நேரத்தில் உடற்பயிற்சி செய்த நீதிபதி மீது வேனை ஏற்றிக் கொன்ற சம்பவம்.
சாத்தான் குளத்திலே காவல்துறையினால் அடித்துக் கொள்ளப்பட்ட தந்தை, மகன் கொலைச் சம்பவம்.
நீட் தேர்வைக் குறித்து சூர்யா தெரிவித்த கருத்துக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முனைந்த சம்பவம் என மேலே கண்ட நான்கு நிகழ்வுகளுக்கு உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணை செய்வது சரியா என்றொரு கேள்வியை தலையங்கம் முன் வைக்கிறது.
அரசு நிர்வாகம் செய்ய வேண்டிய வேலையினை நீதிமன்றம் செய்வது எந்த வகையில் சட்டத்துக்கு உட்பட்டது? என்றும் அசாதாரணமான சூழலில் உச்ச நீதிமன்றம் நடந்து கொள்ள வேண்டிய சட்டத்தின் உட்பிரிவை வைத்துக் கொண்டு எப்போதும் சாதாரண ஒன்று போல தானாகவே முன் வந்த் வழக்குப் பதிந்து விசாரணை நடத்துவது சரியாக இருக்குமா என்றும் கேள்விகளை தலையங்கம் முன்வைக்கிறது.
அதே நேரத்தில் பிரசாந்த் பூஷன் நீதிபதிகளைக் குறித்து தெரிவித்த விமர்சனத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்து விசாரணை செய்து ஒரு ரூபாய் அபராதம் விதித்தது சரியா என்றும் கேட்கிறது.
ஜெ வழக்கிலே நீதிபதி குமாரசாமி வழங்கிய தீர்ப்பிற்காக அவருக்கு வழங்கப்பட்டது தான் என்ன? உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து தண்டனையை உறுதி செய்த போது, தவறாக தீர்ப்பினைக் கொடுத்த நீதிபதி குமாரசாமியின் மீதான நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது எனில் நீதிமன்றம் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் இருக்கிறது என்று ஒரு சாமானியன் நம்ப வேண்டிய சூழல் உருவாவதை தடுக்க முடியாது.
இதே உச்ச நீதிமன்றத்தை நான்கு நீதிபதிகள் கடுமையாக பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் விமர்சித்த போது ஏன் வழக்கு தொடுக்கவில்லை என்ற கேள்வி சாமானியன் மனதில் எழுகிறது. நீதிமன்றம் சர்வாதிகாரமாகச் செயல்படுகிறதா என்றும் கேட்கத் தோன்றுகிறது.
இதை நிரூபிக்கும் பொருட்டு பி.ஏ.கிருஷ்ணன் ஒரு சில கருத்துக்களை தன் கட்டுரையில் முன் வைக்கிறார்.
கட்டுரையினை ஒவ்வொரு தமிழரும் அவசியம் படித்துப் பாருங்கள். நம்மைச் சுற்றி என்னவெல்லாம் நடக்கிறது? எப்படி நாம் அடிமையாக இருக்கிறோம் என்ற உண்மை முகத்தில் அறையும். அதுமட்டுமல்ல கோவிட் பேண்டமிக் போன்ற நிகழ்வுகளை அரசுகள் மக்களைக் கட்டுப்படுத்தும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி வருவதையும் காணலாம்.
ஏர்போர்ட்டுகளில் கோவிட் செக்கிங்க் செய்ய அடிக்கப்படும் கொள்ளை பற்றி ஒன்றிய அரசுக்குத் தெரியாதா? தெரிந்தும் ஏன் அமைதியாக இருக்கிறது? ஆளும் பாஜக அரசு சாமானியனுக்கு ஆட்சி செய்யவில்லை என்கிற எண்ணத்தினை நாள் தோறும் வலுப்படுத்தி வருகிறது.
கீழே இருக்கும் படத்தினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். எல்லோருக்கும் உச்ச நீதிமன்றத்தின் செயல்பாடுகள் தெரிய வேண்டுமென்ற அவசியம் கருதி காலச்சுவடு அனுமதிக்கும் என்ற நிலையில் இப்பகுதியினை இங்கு பதிக்கிறேன். நன்றி : காலச்சுவடு மற்றும் ஆசிரியர் இருவருக்கும்.
2021ம் ஆண்டு - கார்த்திகை தீபபெருவிழா அழைப்பிதழ்
பேரன்புமிக்க ஆன்மீக அன்பர்களுக்கு,
நமது சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆசிரமத்தில் வரும் 19.11.2021ம் தேதியன்று கார்த்திகை தீப பெருவிழா நடக்க இருக்கிறது.
வருடம் தோறும் நடக்கும் நிகழ்வு.
அழைப்பிதழ் இத்துடன் இணைத்திருக்கிறேன்.
இதனையே நேரடி அழைப்பாக ஏற்றுக் கொண்டு வெள்ளிங்கிரி மலை அருளாளன் எல்லாம் வல்ல எம் பெருமானின் ஆசியினாலே, நம் குருவின் ஆசிரமத்தில் நடக்க இருக்கும் விழாவில் கலந்து கொண்டு திருவருளும், குருவருளும் பெற்று நோய் நொடி இல்லாமல் நூற்றாண்டு காலம் வாழையடி வாழையென வாழ வேண்டுமென்ற ஆவலினால் உங்கள் அனைவரையும் எம் குருவின் அனுமதியின் பேரிலே அன்புடன் அழைக்கிறேன்.
அனைவரும் குடும்பத்தோடு வந்து கலந்து கொள்ளுங்கள். மாலையில் நடக்கும் தென் கைலாயத்தில் வீற்றிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவருக்கு தீப மேற்றும் வைபவத்திலே கலந்து கொண்டு பேரருளினாலே செல்வமும், புகழும், சீரும், சிறப்பும், நீண்ட நல் ஆயுளும் பெற்றிட வாருங்கள்.
காலையில் சிற்றுண்டி வழங்கப்படும். மதியம் அன்னம் அளிக்கப்படும். குடும்பத்தோடு வந்து கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்திட அழைக்கிறேன்.
வழி : பூண்டு வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் செல்லும் வழியில் முள்ளங்காடு ஸ்டாப்பில் இடது புறம் செல்லும் சாலையில் வந்தால் நொய்யல் ஆற்றங்கரை ஓரத்திலே இருக்கும் நம் குருவின் ஆசிரமம்.
வேறேதேனும் தகவல்கள் வேண்டினால் அழைப்பிதழில் கொடுக்கப்பட்டிருக்கும் தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்க.
Monday, October 25, 2021
நிலம் (90) - பெயர் வில்லங்கச் சான்றிதழ் - Nominal Index Encumbrance Certificate
முன்னாள் சட்டப்பேர்வை உறுப்பினர் திரு.டி.ஆர்.எஸ்.வேங்கடரமணா அவர்கள் இன்றைய (25.10.2021) தினமணியில் அற்புதமான கட்டுரை ஒன்றினை எழுதி இருக்கிறார்.
வில்லங்கச் சான்றிதழ் போடும் போது மேனுவல், கணிணி சான்றிதழ்கள் போடுவோம். கிராமம், சர்வே எண் ஆகியவைகளை விண்ணப்பத்தில் கொடுத்து கட்ட வேண்டிய கட்டணத்துடன் கொடுக்க வேண்டிய கையூட்டுப் பணத்தையும் கொடுத்தால் நான்கைந்து நாட்களுக்குப் பிறகு வில்லங்கச் சான்றிதழ் நகல் கிடைக்கும். இது நடைமுறை.
அதுமட்டுமின்றி அடியேன் மேனுவல் வில்லங்கம் போடும் போது மூன்று தடவை ஒரே வில்லங்கத்தைப் போடுவதுண்டு வெவ்வேறு பெயர்களில். காரணம் மேனுவல் வில்லங்கத்தைப் பதிவு செய்யும் அரசு ஊழியரின் போன். பார்த்துப் பார்த்து எழுத வேண்டும். ஒரு பதிவு காணாமல் போனால் வில்லங்கம் இருப்பது தெரியாமல் போய் விடும்.
பதிவு அலுவலகங்களில் பல விதமான புத்தங்கள் இருக்கின்றன. நீங்கள் வில்லங்கச் சான்றிதழில் படித்திருப்பீர்கள். புத்தகம் 1, 4, 3 என்று. அவைகள் ஒவ்வொன்றும் பதியக்கூடிய பத்திரங்களின் தன்மைக்கு ஏற்ப அந்தந்தப் புத்தகங்களில் பதிவு செய்து வைப்பார்கள்.
இப்போது கணிணி வந்து விட்டதால் இன்னும் வசதி.
வில்லங்கச் சான்றிதழ் என்பது வில்லங்கம் பார்க்கப் பயன்படுத்தும் ஒரு முறை மட்டுமே. அதில் பதிவு ஏதும் வரவில்லை என்பதால் சொத்து வில்லங்கம் அற்றது என்று நினைத்துக் கொள்ளக் கூடாது. எனது இதர பதிவுகளைப் படித்துப் பாருங்கள்.
வில்லங்கம் பார்க்க நாமினல் இண்டக்ஸ் எனும் ஒரு முறை இருக்கிறது என்று எனக்கு இன்றைக்குத் தான் தெரிய வந்தது. மூத்தோர் சொல்.
அது என்ன நாமினல் இண்டக்ஸ் வில்லங்கச் சான்றிதழ் என்கின்றீர்களா?
சிட்டா போல என வைத்துக் கொள்ளுங்களேன்.
ஒரு கிராமத்தில் இருக்கும் சொத்துக்களை பெயரை வைத்துக் கண்டுபிடிப்பது. பெயர் வில்லங்கம் என்று அதற்குப் பெயர். உரிமையாளர் பெயர், அவரின் தந்தையின் பெயரை வைத்து ஒரு கிராமத்தில் அவர் பெயரில் இருக்கும் சொத்துக்களை அறிய முன்னாட்களில் செயல்பாட்டில் இருந்த பெயர் வில்லங்கச் சான்றிதழ் அது.
அது இப்போது வழக்கத்தில் இல்லையாம். ஏன் இல்லை? எளிதில் ஊகித்து விடலாம். அரசியல்வியாதிகள் காரணம்.
அவ்வாறு எளிதில் பெயர் வில்லங்கம் போட்டால் ஊழலைக் கண்டுபிடித்து விடுவார்கள் என சமயோஜிதமாக சிந்தித்து வழக்கொழித்து விட்டனர்.
மக்கள் இயக்கங்கள் இந்த வகை வில்லங்கத்தைச் செயல்படுத்தக் கூறி தமிழக அரசிடம் மனு அளிக்க வேண்டும்.
இதற்கிடையில் உங்களுக்கு ஒரு செய்தியைச் சொல்லி விடுகிறேன்.
ஆன்லைன் பட்டாவில் பெயரை வைத்து தேடும் வசதி இருக்கிறது. அதில் பெயரின் மூன்று எழுத்துக்களைக் கொடுத்து கண்டுபிடிக்கலாம். இருப்பினும் அது சாலச் சிறந்தது இல்லை.
ஏனெனில் பட்டாக்கள் அடிக்கடி மாறுபவை அல்லவா?
பெயர் வில்லங்கத்தின் அவசியத்தை தமிழக அரசிடம் மனுவாய் அளித்து வசதி செய்து தரும்படி மக்கள் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.
இந்திய அரசின் பிராப்பர்ட்டி கார்டு எல்லாப் பக்கமும் அமல்படுத்தப் பட்டால் பினாமி சொத்து சட்டத்தினை அமல்படுத்தி விடலாம். ஊழல் பெரும்பாலும் குறைந்து போகும்.
ஆனால் செய்ய விடமாட்டார்கள்.
இதோ அந்தக் கட்டுரை. படித்துப் பாருங்கள். நன்றி தினமணி.
Friday, October 22, 2021
வினோதய சித்தம் திரைப்படம் விமர்சன ஆய்வு
அமெரிக்காவிலிருக்கும் நண்பரின் வேண்டுகோளுக்காக நேற்று இரவு வினோதய சித்தம் படத்தினைப் பார்த்தேன்.
படம் ஜீ5-யில் வெளியாகி உள்ளது. பல இடங்களில் தெளிவான திரைப்பட ஃபைல்களும் கிடைக்கின்றன. டிஜிட்டல் உலகிது. உரிமையாளரை விட பிறருக்குதான் நன்மை. ஃபேஸ்புக் கண்டெண்டுகளை தனதாக்கி கொள்வதைப் போல.
கண்டெண்ட் உருவாக்குபவர்களுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லாமல் செய்யும் டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவற்றின் மீது அதீத பிரியம் கொள்ளும் மடச்சாம்பிராணிகள் இருக்கும் வரை வாழ்க்கை சுகபோகம் தான். இது அவர்களின் பிரச்சினை இல்லை, நம்பும் மனிதர்களின் மனப்பிறழ்வு நோய்.
சரி படத்துக்கு வந்து விடலாம்.
படம் என்ன சொல்கிறது?
தம்பி ராமையா ஒரு குடும்பத்தின் தலைவர். பெரிய நிறுவனத்தில் பணிபுரியும் மேலாளர். கண்டிப்பானவர். மனைவி, இரண்டு மகள்கள், ஒரு மகன் என வாரிசுகள். மகனுக்கு அமெரிக்காவில் பணி. மகள்கள் படித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கோவை செல்லும் ராமையா, வீட்டுக்கு வரும் போது ஆக்ஸிடெண்டில் இறக்கிறார். அதன் பிறகு காலம் (டைம்) சமுத்திரக்கனி வடிவில் வருகிறது. தம்பி ராமையாவின் கடமைகள் நிறைவேற்ற மீண்டும் உயிர்ப்பிக்கிறது. ராமையா உயிர் பெறுகிறார். தன் இல்லறக் கடமைகளை நிறைவேற்ற வீட்டுக்குள் வருகிறார் 90 நாட்கள் கெடுவுடன்.
மகள் இன்னொருவனுடன் சென்று விடுகிறாள். சின்ன மகள் ராமையாவின் ஆசைக்காக அவரின் நண்பரின் மகனை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். மகனோ அமெரிக்காவில் பணி இழந்து வரும் போது ஒரு பெண்ணுடன் வருகிறான்.
காதலித்தவன் உடன் சென்ற மகளை ஏற்று திருமணம் செய்விப்பது, இளைய மகளின் திருமணம் நிறுத்தப்பட்டு படிப்பினைத்தொடர அனுமதிப்பது, கிறிஸ்டியன் மருமகளை ஏற்றுக் கொள்வது, கம்பெனியில் ஜி.எம் போஸ்ட் நிராகரிக்கப்பட்டு பிறகு மேனேஜிங்க் டைரக்டர் வாய்ப்பு பெறுவது, மனைவியின் பார்க்கின்ஸன் நோய்க்கு அமெரிக்காவிற்கு அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்வது என தன் கடமைகளை முடித்து விட்டு காலக்கெடுவுக்குள் இறந்து போய் விடுகிறார் தம்பி ராமையா.
தம்பி ராமையா தற்போது இருக்கும் நிறுவனத்திற்கு இண்டர்வியூவுக்காகச் செல்கிறார். அங்கு மதனகோபால் என்ற நபரும் வருகிறார். அந்த இண்டர்வியூயில் மதனகோபால் கலந்து கொண்டால், இவருக்கு வேலை கிடைக்காது என்பதனால், பொய் தகவலைக் கூறி இண்டர்வியூவில் கலந்து கொள்ள முடியாமல் செய்கிறார் தம்பி ராமையா. இதற்குப் பதிலாக தம்பி ராமையா ஆர்வத்துடன் எதிர்பார்த்த ஜி.எம் போஸ்ட்டுக்கு ஒரு இளைஞரை நியமிக்கிறார் இயக்குனர். அவர் மதனகோபாலின் மகன் வேணு என்கிறார் காலம்.
அடுத்து சந்தியா. தம்பி ராமையா காதலித்து கை விட்ட பெண். அவர் தற்போது மேகாலயாவின் கவர்னர் ஆக இருக்கிறார் என்கிறார் காலம்.
கணக்கு நேராகி விட்டது.
படம் அவ்வளவுதான்.
இணையதளங்களில் இப்படத்தினைப் பாராட்டித் தள்ளி இருக்கிறார்கள். பலராலும் சிலாகிக்கப்பட்டிருக்கிறது.
சரி இனி ஆய்வுக்குப் போகலாம்.
* * *
படத்தின் கிளைமேக்ஸில் தம்பி ராமையா காலத்துடன் சொர்க்கத்துக்குச் செல்வார். அப்போது,
”ஏம்பா சொர்க்கத்தில் என்ன மொழிப்பா?”
”அங்கே மொழி எல்லாம் இல்லை”
“அப்போ நரகத்திலே?”
”அங்கே இருந்துதானே உங்களைக் கூட்டிட்டு போறேன்”
பூமியை நரகம் என்கிறார் சமுத்திரகனி (1)
* * *
தம்பி ராமையாவின் மனைவி, தன் இளைய மகளிடம், ”பதினாறு வயதில் அப்பாவின் ஆசைக்காக திருமணம் செய்து கொண்டேன். அதன் பிறகு மாமனார், மாமியார், புருஷன், என் பிள்ளைகள் என அவர்களுக்கு என்ன பிடிக்குமுனு பார்த்துப் பார்த்துச் செய்தேன். ஆனால் இப்ப வரைக்கும் எனக்கு என்ன பிடிக்கும் என எனக்குத் தெரியாமலே போய் விட்டது” என்கிறார்.
குடும்ப வாழ்க்கையில் ஈடுபடும் பெண்கள் அடிமையாக வாழ்கிறார் என்கிறார் சமுத்திரக்கனி (2)
* * *
பதின்ம வயதில் இருக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுய சிந்தனை உள்ளது, அவர்கள் எடுக்கும் முடிவுகள் எல்லாமே சரியாகத்தான் இருக்கும் என்பதால் பெற்றோர்களின் ஆசைகளை அவர்களின் மீது திணிக்காமல் அவர்களை அவர்களாகவே வாழ விடுங்கள் என்கிறார் சமுத்திரக்கனி (3)
* * *
மூத்த பெண் பிள்ளை காதலித்தது, மகன் கிறிஸ்டியன் பெண்ணைக் காதலித்தது அனைத்தும் தம்பி ராமையாவின் மனைவிக்கு முன்பே தெரியும். எல்லாம் தெரிந்தவராய் நடந்து கொள்ளும் தம்பி ராமையாவுக்குத் தெரியாது. தம்பி ராமையாவின் மனைவி ரொம்ப நல்லவர். அதாவது மனைவி தன் கணவனிடம் எல்லாவற்றையும் மறைத்து விட்டு குடும்பத்தை நிர்வகித்து வருகிறார் என்கிறார் சமுத்திரக்கனி (4)
* * *
மதன கோபாலை ஏமாற்றியதற்காக அவரின் மகன் வேணு கோபாலுக்கு ஜி.எம். பதவி கிடைத்தது. மதன கோபாலை ஏமாற்ற வில்லை என்றால் தற்போது கிடைக்கும் சம்பளத்தை விட மிக உயர்ந்த சம்பளத்துடன் வேலை இருந்ததாகவும், அது மதனகோபாலுக்கு கிடைத்து விட்டதாகவும் சொல்கிறார் சமுத்திரகனி. அதாவது உனக்கு கிடைக்க வேண்டிய பெரிய வேலை உன்னால் உனக்கு கிடைக்காமல் போனது என்கிறார் சமுத்திரக்கனி (5)
* * *
சந்தியாவை திருமணம் செய்யாமல் போனதால் தான் அவர் மேகாலயாவின் கவர்னர் ஆக இருக்கிறார். அவருக்கு நன்மைதான் செய்திருப்பதாகச் சொல்கிறார் சமுத்திரகனி (6)
* * *
மேலே குறிப்பிட்டிருக்கும் 6 குறிப்புகளை மீண்டும் படித்துப் பாருங்கள். இனி விளக்க உரையைப் பார்க்கலாம்.
* * *
1வது குறிப்பு:-
பூமியை நரகம் என்றால் இங்கு வசிப்பவர்கள் எல்லோரும் குற்றவாளிகளா? கொலை செய்தவர்களா? மாபாதகம் செய்த தீயவர்களா?
மனிதராய் பிறக்க மாதவம் செய்ய வேண்டுமென்கிறார்கள் முன்னோர்கள்.
ஆனால் இயக்குனர் பூமியை நரகம் எனச் சொல்கிறார்.
இதன் அர்த்தம் என்னவாக இருக்கிறது என்று ஆராய்ந்து பார்த்தோமென்றால் பாபிகளே என்று கூக்குரல் இடும் மதம் நினைவுக்கு வருகிறது. இல்லையென்று உங்களால் மறுக்க முடியாது சமுத்திரக்கனி. நீங்கள் பிற மதத்தினை நாசூக்காக கிண்டல் செய்து அதை படத்தினைப் பார்ப்பவர்களின் மனதில் பதிய வைக்க முனைந்திருக்கின்றீர்கள்.
1வது குறிப்பின் வசனத்தின் அடிக்காரணம் : மதம் எனப் புரிந்து கொள்ளுங்கள். (எவ்வளவு காசு வாங்கினீர்கள்?)
* * *
2வது குறிப்பு:-
உண்மையில் மனிதப்படைப்பின் நோக்கம் உயிர்களைப் படைப்பதற்காகத்தான் என்கிறது இயற்கை. ஆணும் பெண்ணும் திருமணம் செய்து கொண்டு தன் குடும்பத்திற்காகத்தான் வாழ வேண்டும். வேறு எதற்காக வாழணும் என்று சமுத்திரக்கனி சொல்வாரா?
ஆசைகள் எப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கும். ஒவ்வொரு ஆசைகளும் நிறைவேறிய பிறகு அடுத்து என்ன என்ற தேடுதல் அற்றுப் போய் வெறுமை மண்டி விடும். அதற்காகத்தான் மனித உணர்வுக்குள் பாசம், பற்று என்ற உணர்வுகளை மனத்தில் உருவாக்கி குடும்பப்பிணைப்பினை இரும்பினை விட கடினமானதாக வைத்திருக்கிறது இயற்கை.
ஒவ்வொரு விலங்கிற்கும் இந்த உணர்வு உண்டு அல்லவா? மனிதர்கள் ஆறறிவினால் வாழ்க்கை நியதிகளை ஒழுங்குபடுத்தி இருக்கின்றார்கள்.
மனிதர்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் என்ற ஒன்று இல்லவே இல்லை. இரண்டு நபர்கள் இணைந்து, கூட்டாக உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்படும் பிள்ளைகள் பின்னாட்களில் அதே வேலையைத்தான் செய்ய வேண்டும். தன் கடமையைச் செய்ய வேண்டும். பெண்களுக்கு மட்டுமே தனிப்பட்ட ஆசைகள் இருப்பதாகவும், ஆண்களுக்கு அது இருக்கவே கூடாது என்பது போலவும் அல்லவா இயக்குனர் சொல்கிறார்.
உங்கள் படத்தில் தம்பி ராமையா உழைப்பது யாருக்காக? அவர் ஏன் தன் காதலியை விட்டு விட்டு வேறொரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்? அவரின் ஆசை என்னவானது? ஏன் அதைப் பற்றிப் பேசவில்லை நீங்கள்? பேச மாட்டீர்கள். ஏனென்றால் உங்களின் டார்கெட் ஆண்கள் அல்ல. பெண்கள். பெண்கள் வழி மாற்றப்பட்டால் சமூகக் கட்டமைப்பு குலையும். அதை நீங்கள் உங்கள் படத்தின் வழியாகச் சொல்லி மூளைச்சலவை செய்திருக்கின்றீர்கள்.
பெண்களுக்கு தனிப்பட்ட ஆசைகள் இருப்பதாகவும், அது திருமணத்தினால் பறிக்கப்பட்டு அடிமையாக்கப்பட்டதாகச் சொல்லக் காரணம் என்ன?
பெண்கள் சமூகத்தில் தனிமையில் வாழ வேண்டும். இப்படியே பெண்ணியம் பேசிப் பேசி ’சிங்கிள் மதர்’ என்ற ஒரு இனத்தையே உருவாக்கி வைத்துள்ளார்கள் சினிமாக்காரர்களும், பல இலக்கியவியாதிகளும். அரசியல்வாதிகளைக் கூட நம்பி விடலாம். ஆனால் இவ்வகையான ஆட்கள் மனித குலத்திற்கே ஆபத்தானவர்கள். சிங்கிள் மதர் என்றால் எளிதாகக் கைப்பற்றி அனுபவித்து விட்டு தூக்கி எறிந்து விடலாம் அல்லவா?
இதைப் பற்றி அறிந்து கொள்ள நீங்கள் நடிகைகள் ஸ்ரீபிரியா, கஸ்தூரி மற்றும் தினமலர் அந்து மணியிடம் விசாரணை செய்து கொள்ளுங்கள். அதுமட்டுமல்ல தினமலர்-வாரமலர் குற்றாலம் டூர் சென்று வரும் பெண்களை விசாரணை செய்து பாருங்கள்.
பூமியில் பூகம்பம் வந்தால் அது நரகமாகி விடுமா? பூகம்பம் வருகிறது என்பதற்காக பூமியை விட்டு ஓடி விட முடியுமா? வேறு வழி இல்லை. வாழ்ந்து தான் ஆக வேண்டும்.
ஒருவனை அழிக்க வேண்டுமென்றால் ஆசையைத் தூண்டி விடு என்பார்கள். இயக்குனர் பெண்களுக்கு அவர்களின் ஆசை என்பது போல ஒரு மாயையை உருவாக்குகி இருக்கிறார்.
வேலை செய்து வாழ்க்கைக்காக. வேலைக்காக ஒரு மனிதன் வாழ்ந்தான் என்றால் அது அவன் கொண்ட நோய். புரிதல் தன்மை இல்லாதவன் அவன்.
திருமணமான ஆணும் பெண்ணும் எல்லா ஆசைகளையும் விட்டு விட்டு தன் குடும்பத்திற்காகத்தான் வாழ்வார்கள். இயற்கை விதி அது. இதில் பல முரண்பாடுகள், அக்கிரமங்கள் இருக்கும். அவை விதி விலக்குகள். விலக்குகளை விதிகளாக மாற்றிப் பேசுவது மடமை. இல்லறம் அன்றி நல்லறம் ஏதுமில்லை. இல்லறவியல், அகநானூறு என்று பாடல்கள் புனைந்த பெருமைக்குரியது தமிழ் கலாச்சாரம்.
* * *
3வது குறிப்பு:-
இளம் வயதினர் உணர்வுகளின் பிடியில் இருப்பார்கள். அவர்களின் சிந்தனைகள் எதிர்காலத்தில் இருக்காது. உணர்வுகள் நிகழ்காலத்தில் நிகழ்பவை. வாழ்வியல் அனுபவம் கொண்ட மூத்தோர்களின் வழி காட்டுதல் மிக அவசியமானவை.
அதற்காகத்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் மக்கள் பிரதிநிதிகளுக்கு வயது நிர்ணயம் செய்யவில்லை. வயது என்பது அனுபவம். வெறும் அனுபவம் என்று கடந்து போய் விட முடியாது. சூழலியல் அனுபவம் என்பது வெகு முக்கியம்.
வாழ்வியல் அமைவிடங்கள். கலச்சாரம், சமூகம் இவைகளின் பிரதிபலிப்பாகத்தான் மூத்தோர்களின் அனுபவம் இருக்கும். சல்லிப்பயல்களைப் பற்றி இங்கு சிந்திக்க கூடாது. பெரும்பான்மை பற்றிய சிந்தனை வர வேண்டும்.
மூத்தோர்கள் சொற்கள் தான் எதிர்காலத்தின் வழித்தட அறிவிப்புப் பலகைகளாக இருந்து வருகின்றன.
இங்கு சித்தர்கள், ஓஷோ, ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி, புத்தர், சூஃபிக்களுக்கு வேலை இல்லை. அவர்கள் மனித மனத்திற்கான ஆய்வாளர்கள். கரை புரண்டோடும் மன வெள்ளத்தினை சரியான பாதை நோக்கித் திருப்பி விடுபவர்கள்.
பிள்ளைகள் ஆசைப்படுவதை படிக்க வையுங்கள், அவர்களின் முடிவு சரியாகத்தான் இருக்கும் என்கிறார் சமுத்திரக்கனி. எது சரி? எது தவறு என்று அனுபவம் வாய்ந்தவர்களிடம் ஆலோசனை செய்து ஒரு செயலைச் செய்வதுதான் புத்திசாலித்தனம்.
உணர்வுகளால் உருவாகும் முடிவுகள் எதிர்காலத்தில் ஆபத்தினை உருவாக்கி விடும். பெரும்பாலும் சிக்கல்களைத்தான் தரும். இஞ்சினியரிங்க், ஐ.டி படிப்புகள் படித்தவர்களின் தற்போதைய நிலை என்னவென்று நான் சொல்லித்தான் தெரியவில்லை.
உணர்வுகளைத் தூண்டி விட்டு, மடை மாற்றப்படும் பிள்ளைகள் இப்போது தற்கொலைகள் செய்து கொள்கிறார்கள். ஆதரவு சொல்லக்கூட ஆட்கள் இல்லை. ஆதரவற்றவர்களின் இறுதிப்புகலிடம் தற்கொலை. ஆதரவு சொல்லவும் கட்டண மருத்துவர்கள் வந்து விட்டார்கள்.
ஏனென்றால் பெண்களை ஆசை அது இதுவென்றுச் சொல்லிப் பிரித்து விட்டால் ஆண்கள் தனியனாக வாழ வேண்டும். ஆண்களும் பெண்களும் தனிமைப்படுத்தப்பட்டால் அவர்கள் சென்று சேரும் இடமெல்லாம் அயோக்கியர்கள் கூடாரம்.
அப்போதுதான் டாஸ்மாக்குகள் வருமானம் பல்கிப் பெருகும். மருத்துவ மாஃபியா கல்லா கட்டும். ஹோட்டல்களுக்கு வியாபாரம் ஆகும். மீடியாக்களில் வரும் விளம்பரங்கள் காசாகும். அவ்வாறு காசு ஆனால் தான் நாடு செழிக்கும்.
குடும்பம் சிதைக்கப்பட்டு, இளம்பிள்ளைகளை பெற்றோர்களிடமிருந்து பிரித்தால் தான் வியாபாரம் பெருகும்.
படிப்பு என்பது வேலைக்கான தகுதி சமுத்திரக்கனி. அது வாழ்க்கைக்கான தகுதி அல்ல.
பதவி என்பது ஈகோவிற்கான முதலீடு. தனி மனிதனுக்கு உதவாது.
பணம் வாழ்க்கைக்காக. வாழ்க்கை பணத்துக்காக அல்ல.
கோடானு கோடி பணம் குவித்திருப்போர் பலரும் தங்கள் இறுதியில் சேவை செய்கிறார்கள்.
தன் தேவைக்கும் மேலே இருக்கும் பணம் வெறும் எண்கள் மட்டுமே.
மனம் ஆசைப்படுவதை எல்லாம் செய்ய ஆரம்பித்தால் தெருவில் ஒருத்தனும் உயிரோடு இருக்க முடியாது சமுத்திரகனி.
சும்மா வெள்ளை அடிக்காதீர்கள். உங்கள் நோக்கம் குடும்பக் கட்டமைப்பினை சிதைப்பது அல்லவா?
* * *
4வது குறிப்பு:-
இல்லறத்தின் மாண்பினை உங்கள் மனைவி அறிவார் சமுத்திரகனி. முதலில் உங்கள் மனைவியிடம் தெளிவு பெறுங்கள். இல்லையென்றால் உங்கள் படத்தினை தயாரித்த நல்லம்மை ராமனாதனிடம் சென்று கேளுங்கள். நல்லம்மை அம்மையார் தன் கணவனிடம் இப்படித்தான் நடந்து கொண்டிருக்கின்றாரா என்று கேளுங்கள்.
அபிராமி ராமநாதன் வியாபாரம் செய்கிறார்.
சினிமா என்பது வியாபாரம் என்பதை என்று மக்கள் புரிந்து கொள்கின்றார்களோ அன்றைக்குத்தான் விடிவுகாலம் பிறக்கும். இல்லையெனில் நாட்டை ஆள ஓட்டுப் போட்டு விடும் ஈனத்தனம் நடந்து கொண்டே தான் இருக்கும்.
அடிக்குறிப்பு: வியாபாரத்துக்கும் தொழிலுக்கும் வித்தியாசம் உண்டு. டாடாவிடம் ஒரு முறை நீங்கள் ஏன் அம்பானி போல உலகப் பணக்காரர்கள் வரிசையில் வரமுடியவில்லை என்று கேட்கின்றார்கள். அதற்கு அவர் அம்பானி வியாபாரம் செய்கிறார், நான் தொழில் செய்கிறேன் என்கிறார்.
அம்பானியின் வியாபாரம் என்பது தெருவில் கடை விரித்து நடத்தப்படுபவை. ஆனால் தொழில் என்பது தொழிலாளர்களுக்காகவும், நாட்டின் நன்மைக்காகவும் செய்யப்படுபவை.
ஒரு மனைவியானவள் தன் கணவனிடம் குடும்பத்தில் நிகழப்போகும் மாற்றத்தினை முன் அறிவித்து சரி செய்வாள். சரி தவறு எவை என்று தன் குடும்பத்திற்குச் சொல்லத் தெரிந்திருத்தல் வேண்டும்.
நீங்கள் உங்கள் படத்தில் காட்டிய மனைவிக்குப் பெயர் மனைவி அல்ல. அவள் மனிதப் பிறவியே அல்ல. கணவன் மனைவுக்குள் உண்மை இல்லை எனில் அது இல்லறமே இல்லை. அதற்குப் பெயர் கள்ளத்தனம். ஓடி ஓடி உழைத்து வீட்டுக்கு கொண்டு வரும் கணவனுக்கு மனைவி செய்யும் துரோகம்.
ஆனால் அப்பெண்ணை நீங்கள் தியாகி என்கின்றீர்கள். உள் நோக்கம் புரிகிறது சமுத்திரகனி
* * *
5 மற்றும் 6வது குறிப்பு:-
உன்னால் தான் உனக்கு கிடைத்திருக்க வேண்டிய பெரிய சம்பளத்துடனான வேலை கிடைக்காமல் சிறிய சம்பளத்தில் வேலை செய்கிறாய் என்கிறார் சமுத்திரக்கனி. 6வது குறிப்பில் உன்னால் கை விடப்பட்ட பெண் இப்போது கவர்னராக இருப்பதால் நீ அவளுக்கு நன்மை தான் செய்திருக்கிறாய் என்கிறார். தம்பி ராமையா செய்தது இரண்டு தவறு என்றால் அதற்கான பலனை அடைவதுதான் சரி என்றால் சந்தியாவின் தற்போதைய வாழ்க்கை கவர்னர் என்பதால் சமமாகி விட்டது என்கிறார் சமுத்திரக்கனி. உயர் பதவி ஒருவருக்கு கிடைத்து விட்டால் ஏமாற்றிய பாவம் சேராது என்கிறார் போலும்.
உங்களின் அறம் புரிகிறது சமுத்திரக்கனி.
அறம் பற்றிப் பேச சமுத்திரகனிக்கு தகுதி இருக்கிறதா என்றால் இல்லை என்பேன். ஏனெனில் அவர் இன்னும் திருந்தியபாடில்லை.
மக்களால் மறக்கப்பட்டு ராதிகாவிடம் சென்று சீரியல் இயக்கும் வாய்ப்பினைப் பெற்று, அதன் பிறகு படம் இயக்கி வெற்றி பெற்று, நடிகனாக மாறி மக்களின் அபிமானத்தைப் பெற்றாலும், தனக்கு இச்சமூகம் எந்த வித பிரதிபலனும் பாராமல் கொடுத்தவைகளை வைத்து சமூகத்திற்கு கேடு விளைவிக்கும் படைப்புகள் மூலம் எதிர்வினை ஆற்றுகிறார்.
ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் அறத்தின் வழி வாழ்க்கை நடத்தி இருந்தால் அது அவனின் வாரிசுகள் வழியாகத்தான் நிரூபிக்கப்படும்.
எம்.ஜி.ஆர் அவ்வாறு வாழ்ந்தாரா என்று இவ்விடத்தில் யோசிக்க வேண்டும். ஜெயலலிதா அவ்வாறு வாழ்ந்தாரா என்று சிந்தனை செய்தல் அவசியம். அவ்வாறு சிந்தித்துப் பார்த்தீர்கள் என்றால் வாழ்க்கையின் அடித்தளம் எதுவென்று புரிந்து விடும்.
* * *
நீண்ட பதிவாகி விட்டது. ஐந்து மணிக்கு ஆரம்பித்தேன். இப்போது ஏழு மணி ஆகி விட்டது. இரண்டு மணி நேரம் விழுங்கி இருக்கிறது இப்பதிவு. எனக்கு மீண்டும் கிடைக்கவே கிடைக்காத நேரத்தை நான் இழந்திருக்கிறேன் இப்பதிவினால் என்பதையும், நீங்கள் படிக்கும் நேரத்தினையும் இழந்திருக்கின்றீர்கள் என்பதையும் விட இப்பதிவு உங்கள் மனதுக்குள் ஏற்படுத்திய தாக்கம் என்னவென்பதை புரிந்து கொள்ள முயலுங்கள்.
உங்களிடம் கேட்க வேண்டியது ஒன்று மட்டுமே?
குடும்ப அமைப்பு தேவையா? தேவை இல்லையா? இதற்கான பதிலை நீங்களே உங்களுக்குள் உங்கள் அனுபவ அறிவு, படிப்பறிவு கொண்டு தேடிக் கொள்ளுங்கள்.
* * *
என்ன இருக்கிறதோ அதை வெளிப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் என்கிறார் நண்பர். ஆனால் நான் படைப்பினை ரசிப்பதை விட அதன் உள் நோக்கம் என்னவென்பதை ஆராய்பவன். காரணமின்றி காரியமில்லை அல்லவா?
காலம் என்பது எதிர்காலத்திலும் இல்லை, இறந்த காலத்திலும் இல்லை. அது இந்த நொடியில் இருப்பது. ஆகவே இப்படத்தின் கருவே முற்றிலும் தவறான புரிதல் கொண்டது. அதுமட்டுமல்ல காலம் என்பது உயிர்களுக்கு மட்டுமே.
உண்மையில் காலம் என்ற ஒன்று இல்லவே இல்லை.
* * *
Saturday, October 16, 2021
பெருந்தகை குணவதி ஞானசெளந்தரி நினைவு அஞ்சலி
அகனமர்ந்து செய்யாள் உறையும் முகமனர்ந்து
நல்விருந்து ஓம்புவான் இல்
அறத்துப்பால் - இல்லறவியல் - விருந்தோம்பல் அதிகாரத்தில் வள்ளுவப் பெருந்தகையாளர் இல்லறத்தின் செழுமை பற்றி எழுதி இருக்கிறார்.
திருக்குறளில் ஒரு அதிகாரத்துக்கு விருந்தோம்பல் என ஏன் பெயர் வைத்தார் என்று எனக்குள் கொஞ்ச காலம் மனக்கிலேசமாக இருந்தது. விருந்தோம்பல் இல்லறத்துக்கு அவ்வளவு முக்கியமா என்று கூட சிந்தித்தேன்.
பக்தவசலம் முதலமைச்சராக இருந்த போது இந்தி எதிர்ப்பு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தது. திமுக கோயம்புத்தூரில் இந்தி எதிர்ப்புப் போராடத்தை முன்னின்று நடத்த ஒரு இளைஞரை நியமித்தது. அவரின் தீவிர போராட்டத்தின் வீச்சு தாளாமல் அன்றைய முதல்வர் பக்தவச்சலம், அந்த இளைஞரை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார். அவர்தான் துடிப்பும், தீரமும், திண்மையும் நிறைந்த கொங்கு மண்ணின் ஆன்மீகச் செம்மல் சாமி என்று அழைக்கப்படும் மாமனார் ஞானசம்பந்தம் அவர்கள். அவர்களின் இல்லறத்தை சிறக்க வந்த குணவதியாளர் அத்தையார் ஞானசெளந்தரி.
ஒரு மாலை நேரத்திலே, திருச்சியிலிருந்து இளங்கோ என்ற மாமனாரின் நண்பர் என்னைச் சந்திப்பதற்காக வந்திருந்தார். வீட்டிற்குள் நுழைந்தவுடன் தண்ணீருடன், விதவிதமான தின்பண்டங்கள் வந்து விடும். அடுத்து பக்குவமான பதத்தில் சர்க்கரையிட்டு நுரை பொங்க மணமணக்கும் காஃபி. நாக்கில் பட்டு உடம்பெல்லாம் காஃபியின் சுவையினை சிலிர்க்க வைக்கும் கைப்பக்குவம்.
காஃபியை அருந்தி விட்டு பேசிக் கொண்டிருக்கும் இடைவேளையில் சமையலறையிலிருந்து வாசம் வந்து கொண்டிருக்கும். அது என்னவாக இருக்குமென மனம் யோசித்துக் கொண்டிருக்கையில் தேங்காய் சட்னி, கொத்தமல்லிச் சட்னியுடன் வித விதமான பஜ்ஜிகள் தட்டில் ’என்னை எடுத்து சாப்பிட்டு விட்டு பின்னர் பேசேன்’ என்றுச் சொல்லிக் கொண்டிருக்கும்.
பஜ்ஜி சொன்னால் நம்மால் தட்ட முடியுமா? இல்லை நாக்கைத்தான் கட்டுப்படுத்த முடியுமா? கொலஸ்ட்ரால், வயிற்றுப் பிரச்சினை, ஜீரணமாகாது போன்றவைகள் எல்லாம் காணாமல் போய் விடும். எண்ணை இல்லாமல் பக்குவமாய் சமைக்கப்பட்ட பஜ்ஜிகள் நாக்கினை தூண்டில் போட்டு இழுக்கும். அத்தையாரின் கைப்பக்குவம். ஹோட்டல்களில் கிடைக்காத, அறுசுவை கலைஞர்களால் இயலாத சுவையில் இருக்கும் ஒவ்வொன்றும்.
விருந்தினரை வரவேற்கும் பாங்கு. அவர்களுக்காக தன்னை வருத்திக் கொண்டு உபசரிக்கும் தன்மை.
பஜ்ஜிகளை உண்ட பிறகு பேசிக் கொண்டிருந்தேன். நேரமாயிற்று. டிஃபன் வந்து விட்டது. சுடச்சுட தோசை. வயிறு புடைத்து விட்டது.
தன் வீட்டிற்கு வரும் உறவினர்களைக் கொண்டாடும் பண்பு, உபசரிக்கும் பாங்கு, இன் முகம் தவழ உணவு பரிமாறும் தாயுள்ளம் நிறைந்த குணவதி அவர். விருந்தோம்பல் இல்லறத்தின் மாண்பு என்று அத்தையாரிடம் கற்றுக் கொண்டேன். வள்ளுவர் சும்மா எழுதி வைக்கவில்லை. அதற்கு அர்த்தம் உண்டு என்பதை அவர் நிருபித்தார்.
நேற்று அவரில்லா வீட்டின் வாசலில் அமர்ந்திருந்தேன் நீண்ட நேரம். காஃபி குடிங்க எனச் சொல்ல யாருமில்லை. பலகாரம் கொண்டு வந்து தர அவரில்லை.
விருந்தினராக வருபவர்களை முகம் மலர்ந்து வரவேற்று அமையும் வீட்டில் செல்வம். அருளும் மகாலட்சுமி நிலையாக வசிப்பாள் என்றுச் சொல்கிறார் வள்ளுவர். லட்சுமி வாசம் செய்யும் அந்த வீட்டின் இல்லற விளக்கினை தூண்டி விடும் தாயுள்ளம் இறைவனிடம் சென்று விட்டது.
ஒருவர் வீட்டுக்குச் செல்வது என்றால் மகிழ்ச்சி வர வேண்டும். இப்போதெல்லாம் அப்படியா இருக்கிறது? எந்த பெண் தன் உறவினரை வரவேற்கிறாள்? இல்லை குழந்தைகளாவது வரவேற்கிறதா? ஏன் இங்கு வந்தாய் என்பது போல பேசுவார்கள்.
’வீட்டில் வேலை இல்லாமல் இங்கு வந்து நம்ம கழுத்தை அறுக்கிறது’ என்பது போல கடுகடுவென முகத்தை வைத்துக் கொண்டிருக்கும் எத்தனையோ பெண்களைப் பற்றி நாமெல்லாம் வாழ்க்கையில் கண்டிருக்கிறோம்.
அந்த வீட்டில் சந்தோஷம் இருக்குமா? செல்வம் இருக்குமா? முகமலர்ந்து உபசரிக்கும் பண்பற்ற பெண்களால் இல்லறம் தான் நல்லறமாக இருக்குமா? உறவுகளையும், நட்புகளையும் கொண்டாடும் தன்மையற்ற பண்புகளை பெண்கள் இப்போதெல்லாம் அது பெண்ணியம் என்பதாய் நினைக்கின்றார்கள்.
ஒரு பெண் தன் வாழ்ந்த வாழ்க்கையின் அடையாளமாக விட்டுச் செல்லுவது தன் குழந்தைகளை. அக்குழந்தையின் குணமே அப்பெண் வாழ்ந்ததின் அர்த்தத்தைச் சொல்லும்.
அத்தைக்கு உடம்பு சரியில்லை. பெண்பிள்ளைகள் இல்லை. ஒரே ஒரு மகன் மட்டுமே. உணவு கொடுப்பதில் இருந்து, அவரின் ஒவ்வொரு தேவையையும் கூடவே இருந்து கவனித்துக் கொண்டார் அத்தையின் அன்பு மகன்.
சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். உடல் மெலிந்து இருந்தார். அந்த நேரத்தில் கூட அவர் ’காஃபி போட்டுக் கொடு, அந்தப் பலகாரத்தைக் கொண்டு வந்து கொடு’ என்று மகனிடம் சொல்லிக் கொண்டிருந்தார். அதற்கு திருமணம் முடிந்து குழந்தைகள் இருக்கும் அவரின் மகன் சொன்ன வார்த்தை
“சரி. மம்மி”
காஃபி கொண்டு வந்து கொடுத்தார். பலகாரங்கள் கொடுத்தார். சாப்பிட்டு விட்டுப் போகலாமென்றார்.
மங்கலம் என்ப மனைமாட்சி மற்று அதன்
நன்கலம் நன்மக்கட் பேறு
இல்லறத்தின் சிறப்பு நற்குணம் வாய்ந்த மனைவி என்பார்கள். அதை விடச் சிறப்பு நன் மக்கட்களைப் பெறுவது என்கிறார் வள்ளுவனார். அத்தகைய ஒரு மகனை பெற்று தன் குணம் கொஞ்சம் கூட குறையாமல் வளர்த்திருக்கிறார் அவர்.
மிகச் சிறந்த இல்வாழ்க்கைக்கு அவரின் புதல்வரே சாட்சி.
அழகு குறைந்தவுடன் மனைவியைக் கண்டு கொள்ளாத இந்தக் கலியுகத்தில் இல்லறத்தின் மாண்பினை எனக்கு ஒரு சம்பவம் நினைவுபடுத்தியது.
”மகளோட அம்மாவுக்கு உடம்பு சரியில்லை மாப்ளை, நைட்டெல்லாம் தூங்க முடியவில்லை. எனக்கு உடம்பு சரியில்லாத போது, அவதானே என்னைக் கவனித்துக் கொண்டாள். இப்போ அவளுக்கு நான் தானே பார்க்கணும்? குளிக்க வைப்பதில் இருந்து, உடை மாற்றி, தலை சீவி முடிந்து, பொட்டிட்டு அமர வைத்து உணவு கொடுத்து, உறங்க வைப்பது வரை நாந்தான் மாப்பிள்ளைப் பார்க்கிறேன்” என்றார்.
கேட்டவுடன் எனக்குள் சொல்ல முடியா உணர்வு உண்டானது. இல்லறத்தின் உயர்வு இதுதான்.
விட்டுக் கொடுத்துச் செல்லும் பாங்கு, உறவுகளையும், நட்புகளையும் கொண்டாடி வரவேற்று உபசரிக்கும் தன்மை என இனிமை நிறைந்த இல்லறத்தினை நடத்தி வந்த அத்தையை இனி என்று காண்பேன்?
இல்லறம் அன்றி இவ்வுலகில் நல்லறம் ஏதுமில்லை.
அத்தையாரின் ஆத்மா சாந்தியடையட்டும் என எல்லாம் வல்ல இறை சக்தியினை வேண்டிக் கொள்கிறேன்.
* * *
15.10.2021
Friday, October 1, 2021
இந்திய வளர்ச்சிப்பாதைக்கு காரணம் காங்கிரஸா? பிஜேபியா?
நிலம் (89) - 10 செண்ட் பூமியை மனைப்பிரிவாக பதிவு செய்ய முடியுமா?
- ஒரு தனி நபரின் 10 செண்ட் விவசாய நிலத்தினை மனைப்பிரிவாகப் பதிவு செய்யலாம்.
- பத்து செண்ட் இடத்தினை இரண்டு பகுதிகளாக் பிரித்துப் பதிவு செய்து கொடுக்கலாம். இதற்கு லே அவுட் அனுமதி தேவையில்லை.
- சென்னை மெட்ரோபொலிட்டனுக்கு உட்பட்ட பகுதியில் 8 மனைகளுக்கு மிகாமல் இருக்கும் பகுதியை மனைப்பிரிவாக பதிவு செய்யலாம்.
- விவசாய நிலத்தில் வீடு கட்டி பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பகுதியையும் வீட்டு மனையாக பதிவு செய்யலாம்.
- கிராமப் புறங்களில் சாலை ஒட்டி இருக்கும் பகுதியில் உள்ள நிலத்தில் புதிய சாலை வசதி ஏதும் ஏற்படுத்தாமல் வீட்டு மனைகளாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
- பதிவுச் சட்டம் 1908 பிரிவு 22 ஏ (2) வில் - 21.10.2016க்கு முன்பு விடுதலை ஆவணம், கிரைய உடன்படிக்கை, பொது அதிகார ஆவணம் போன்றவை மூலம் பதிவான வீட்டு மனைகளை பதிவு செய்து கொள்ளலாம்.
- அதிக பரப்பளவு கொண்டு விவசாய நிலத்தில் ஐந்து செண்ட் பூமியை மட்டும் வீட்டு மனையாகப் பதிவு செய்து கொள்ளலாம்.
Wednesday, September 29, 2021
நிலம் (88) - கோவை வீரகேரளம் மகாராணி அவென்யூ ஃபேஸ் 4 - டிடிசிபி அப்ரூவல் ரத்தாகுமா?
சில வருடங்களுக்கு முன்பு போனில் அழைத்தவர் கோவை வீரகேரளத்தில் இருக்கும் மகாராணி அவென்யூ 4வது பார்ட் டிடிசிபி அப்ரூவல் மனையிடத்தில் மனை வாங்க லீகல் தர முடியுமா? எனக் கேட்டார். கட்டணம் கேட்டார். சொன்னேன். சார், என்ன இது? இவ்வளவு கேட்கின்றீர்கள் என்றார். எனது கட்டணம் இது. முடிந்தால் கொடுத்து லீகல் ஒப்பீனியனும், டிராப்டும் வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையென்றால் விட்டு விடுங்கள் எனச் சொல்லி விட்டேன். அதன் பிறகு அவர் அழைக்கவில்லை.
அவரின் பெயர் தெரியும். வில்லங்கச் சான்றிதழில் அவர் வாங்கிய இடத்தினைப் பார்த்தேன். நன்றாக இருந்தால் சரி என அத்துடன் மறந்து போனேன். ஒரு சிலருக்கு மன நோய் உண்டு. அதாவது சிக்கல்களை விரும்பும் மனம் அது. புத்திசாலித்தனத்தை எந்த இடத்தில் காட்ட வேண்டுமென்பது அறியாமல் மயங்கும் மனசு. எங்கு எதைப் பேச வேண்டும்? எதில் ரிஸ்க் எடுக்க கூடாது என்ற தெளிவில்லை எனில் எப்போதும் தேவையற்ற சிக்கல்கள் வந்து விடும்.
இந்த இடத்தின் டிடிசிபி அப்ரூவலில் மொத்தம் 108 வீட்டு மனைகளுக்கும் இரண்டு ரிசர்வ் சைட்டுகளுக்கும் அனுமதி வழங்கி இருக்கிறது டிடிசிபி அலுவலகம். அதன் பிறகு இந்த சைட்டின் புரமோட்டர் ராமசாமிகவுண்டர் ரிசர்வ் சைட்டுகள் இரண்டினையும் இணைத்து பிளாட்டாக கன்வெர்ட் செய்து, அதை வீரகேரளம் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் அதாவது (இ.ஓ)விடம் மனை அனுமதி பெற்று பழைய டிடிசிபி பிளானுடன் இதை இணைத்து விற்பனை செய்து விட்டார்.
இ.ஓவிற்கு வீட்டு மனைப்பிரிவு அனுமதி வழங்க அனுமதி கிடையாது. வீட்டு மனைப்பிரிவு அமையும் இடத்தினை ஆய்வு செய்து, மனை வழங்கலாம் என்று பரிந்துரை செய்ய மட்டுமே அவருக்கு சட்டத்தின் வழி உரிமை உள்ளது. இது விதிமீறல். சென்னை உயர் நீதிமன்றம் இவரின் இந்த விதிமீறலைப் பற்றி ஒரு வார்த்தைச் சொல்ல வில்லை.
எனக்குத் தெரிந்த ஒரு இ.ஓ நான்கு இடங்களில் பத்து வீடுகள் கொண்ட அபார்ட்மெண்ட்கள், பல கடைகள், இடங்கள் என கட்டி வாடகைக்கு விட்டு பெரும் பணம் சம்பாதித்து வருகிறார். தற்போது பேக்கரி பிராஞ்சைஸ் எடுத்து கோடியில் வருமானம் செய்து கொண்டிருக்கிறார். முறைகேடான ஊழல் பணத்தில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்திய அரசாங்கத்தின் ஐ.டி பிரிவு இவ்வாறான ஊழல்வாதிகளை எப்போதும் கண்டுகொள்வதே இல்லை.
சரி விஷயத்துக்கு வந்து விடுவோம்.
வீரகேரளம் கோவை கார்ப்பொரேஷன் லிமிட்டில் 2011ம் வருடத்தில் இணைக்கப்பட்டது. அதன் பிறகு கார்ப்போரேஷன் லிமிட்டில் இருந்த வீட்டு மனைகளின் ரிசர்வ் சைட்டுகள் கணக்கெடுப்பு நடந்த போது மகாராணி அவென்யூவில் நடந்த முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டு அந்த இரண்டு ரிசர்வ் சைட்டுகளையும் வேலி போட முயன்ற போது அந்த ரிசர்வ் சைட்டுகளை விலைக்கு வாங்கியவர்கள் சென்னைக் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டார்கள்.
எல்லா வக்கீல்களுக்கும் தெரியும் வீட்டு மனைப்பிரிவு அனுமதியை ஒரு எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்க முடியாது என. ஆனாலும் இந்த வழக்கில் வாதிகளுக்கு ஆதரவாக வக்கீல் கோர்ட்டில் வழக்குப் போட்டு விட்டு, எக்ஸ்கியூட்டிவ் அலுவலர் வழங்கிய ஆணை சரியானதுதான் என்றுச் சொல்லி வாதாடி இருக்கிறார்.
இவரைப் போன்றவர்களிடம் தான் லீகல் ஒப்பீனியன் வாங்குவேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருக்கின்றார்கள் பலர். அது அவர்கள் பிரச்சினை.
என்ன நடந்திருக்கிறது மகாராணி அவென்யூ 4வது பேசில்? என பார்க்கலாம். டிடிசிபி அனுமதி பெற்ற வீட்டு மனை வரைபடத்தின் படி மனைப்பிரிவு அமைந்துள்ளதா என, அந்த வீட்டு மனை இருக்கும் கிராமத்தின் பஞ்சாயத்து அலுவலகத்திடம் ஒப்புதல் பெற வேண்டும் என்பது விதி.
ஏனென்றால் அந்த பஞ்சாயத்துக்கு வீட்டு வரி வசூல் செய்யவும். வீடு கட்ட அனுமதி கொடுக்கவும் அந்த வரைபடம் தான் மூல ஆவணம். கிராம பஞ்சாயத்தின் வருமானத்திற்காக அரசு இப்படி ஒரு ஏற்பாட்டினைச் செய்து வைத்திருக்கிறது.
மகாராணி அவென்யூ டிடிசிபி பிளான் நம்பருடன் இன்னும் கொஞ்சம் நிலத்தினை வாங்கி, அதனுடன் ரிசர்வ் சைட்டுகளையும் இணைத்து பிளான் போட்டு இ.ஓவிடம் கையொப்பம் பெற்று ராமசாமிகவுண்டர் சைட்டுகளை விற்று விட்டார்.
இதை எப்படி கண்டுபிடிப்பது என்று நீங்கள் கேட்கலாம். அதை என்னைப் போன்றவர்கள் பார்த்துக் கொள்வார்கள்.
இதில் தவறு செய்தது வீட்டுமனைப்பிரிவு உரிமையாளர். அதற்கு உடந்தை வீரகேரளத்தின் எக்ஸ்கியூட்டிவ் அலுவலர். பாதிக்கப்பட்டது ஏழு சைட் வாங்கியவர்கள். இவர்கள் என்ன செய்திருக்க வேண்டும்? அந்த இ.ஓ எவன் என்று விசாரித்து தெரிந்து கொண்டு அவனிடம் சென்றிருக்க வேண்டும்.
அந்த இரண்டு சைட்டுகளையும் பஞ்சாயத்துக்கு நன்கொடை ஆவணம் கூட எழுதிக் கொடுக்காமல், கையூட்டுப் பெற்றுக் கொண்டு ஏழு பேரின் வருமானத்தில் ஓட்டை போட வைத்த இ.ஓவினை அரசு என்ன செய்து விடும் என்று நினைக்கின்றீர்கள்?
அவன் மயிரில் ஒன்றினைக் கூட பிடுங்க முடியாது. ஊழல்வாதிகள் இதோ இன்றைக்கும் ஒய்யாரமாய் உலா வருகின்றார்களே யாரால் என்ன செய்ய முடிந்தது?
இன்றைய ஹிந்துவில் உத்திரப்பிரதேசத்தில் ஆர்.டி.ஐ ஆர்வலர்கள் பதினோறு பேர் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் எனச் செய்தி வெளியாகி இருக்கிறது. ஒரு சாமியார் ஆட்சிக்கு வந்த பிறகுதான் இவ்வாறு நடக்கிறது. சாமியாருக்கும் நாடாள ஆசையுண்டு. அத்தனைக்கும் ஆசைப்படு என்று ஒரு சாமியார் சொல்லித் திரிகிறார்.
இந்த உலகத்தின் பெரும்பான்மை மனிதர்கள் அயோக்கியத்தனம் செய்பவனையும், துரோகிகளையும், ஊழல்வாதிகளையும் கையெடுத்துக் கும்பிடுகிறது. இந்த அரசின் சிஸ்டமே குற்றவாளிகளைப் பாதுகாப்பது தான். நல்லவர்களைப் பாதுகாப்பது என்பது கிஞ்சித்தும் கிடையாது. அவனவன் போராடிக் கொள்ள வேண்டும். மனிதர்களின் மனம் பணத்தினை நோக்கியும், அதிகாரத்தின் குருதிச் சுவையினையும் விரும்ப ஆரம்பித்து விட்டது. மக்கள் மனம் இவ்வாறு எனில் மக்களின் வேலைக்காரர்களான அரசு அதிகாரிகளும், அரசியல்வாதிகளும் மாறித்தான் போவார்கள். அவர்களைக் குறை சொல்ல ஏதுமில்லை அல்லவா?
ஊழலில் குளித்து கும்மாளமிடும் அரசு அதிகாரிகளுக்கு தூக்குத் தண்டனை விதித்தால் ஒரு வேளை இம்மாதிரியான குற்றம் நடக்காமல் இருக்கலாம். ஆனால் நடக்காது. ஏனெனில் அரசை நிர்வகிக்கும் அரசியல்வியாதிகளும், அதிகாரிகளும் கூட்டுச் சேர்ந்து நீண்ட நாட்களாகி விட்டன.
அறியாத பலர் இவ்வகைப் பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு அல்லலுறுவதைக் காணும் போது மனசுதான் வலிக்கிறது.
உங்களுக்கான லீகல் அட்வைசிங்க் பெற என்னை அணுகலாம். கோவை மட்டுமல்ல தமிழ் நாடெங்கும் சர்வீஸ் கிடைக்கும்.
வாழ்க வளமுடன்...!
Tuesday, September 21, 2021
நீட் தேர்வு தினமலர் முனைவர் காயத் திரி
நீட் தேர்வு குறித்து முனைவர் காயத்திரி அவர்கள் கடந்த 20.09.2021ம் தேதியன்று தினமலரில் சிந்தனைக் களம் என்ற பகுதியில் கீழே படத்தில் இருக்கும் கட்டுரையினை எழுதி இருக்கிறார்.
இந்தியாவில் பல்வேறு வகையான கல்வித்திட்டங்கள் உள்ளன. சிபிஎஸ்சியும் ஒன்று. ஒவ்வொரு மாநிலங்களும் ஒவ்வொரு வகையான பாடத்திட்டங்களை வைத்திருக்கின்றன. வேறுபட்ட கல்வித் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, இந்தியா முழுவதுமான ஒரே தேர்வு என்றால் எப்படி சரியாகும்? எல்லாக் கல்வித் திட்டத்தினையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்படும் கேள்வித்தாளுக்கு முழுமையான பதிலை மாணவனால் எங்கனம் எழுத முடியும்?
ஆகவே நீட் தேர்வு என்பது ஒரு மோசடி என்பது தெளிவு. இதைப் பற்றி ஒரு வரி கூட இக்கட்டுரையில் அவர் எழுதவில்லை.
நீட் தேர்வில் வெற்றி பெற ஒரே வழி நீட் கோச்சிங்க். லட்சக்கணக்கில் பணம் செலுத்தும் வசதி உடையவருக்கு நீட் தேர்வில் வெற்றி கிடைக்கும். இதற்கு நீட் கோச்சிங்க் சென்டர்கள் சொல்லும் வெற்றிக் கணக்கே சாட்சி.
இல்லையென்று இந்தக் கல்வியாளரால் எழுத முடியுமா? முடியாது. அதை மறைத்து விடுவார்.
ஒன்றிய அரசு ஒவ்வொரு மொழி வழி மாநிலங்களின் கல்வியை மாநிலப்பட்டியலில் இருந்து நீக்கி ஒன்றிய அரசுப்பட்டியலில் சேர்த்தது பெரும் மோசடியான அரசியலமைப்புச் சட்டத்துக்கு விரோதமானது. மொழி வழி மா நிலங்கள் தனக்கென தனிப்பட்ட வரலாறு, கலாச்சாரம் கொண்டவை. இப்படி இருக்கும் போது இந்தியா முழுமைக்கும் ஒரே கேள்வித்தாள் என்றால் அது மோசடி இல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்?
பிஜேபி அரசின் காவி மயக் கல்விக்கு அடித்தளம் போட்டு வைத்திருக்கிறது. ஆரம்பமே தகராறு. இவருக்கு இதுவெல்லாம் நினைவில் இல்லை போல.
அடுத்து, முன்னைவர் காயத்திரி தன் கட்டுரையில் சுட்டுவது திமுகவின் நீட் ரத்து பற்றி. திமுக அரசு நீட் தேர்வு பற்றி ஆராய, ஒரு குழுவை உருவாக்கிய உடனே பிஜேபி கோர்ட்டிற்குச் சென்று தடை கேட்டது.
சேப்பாக்கம் உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதாக முழங்கினாராம். ஏன் செய்யவில்லை என்கிறார். அதிமுக துரோகி எட்டப்பனும் தான் சொன்னான். தீர்மானம் இயற்றினான். அதைப் பற்றி ஏன் இவர் எழுதவில்லை. ஏனென்றால் அதிமுக அடிமையாக படுத்துக் கிடக்கிறது. அதைப் பற்றி ஒரு வரி எழுதவில்லை. திமுக நீட் தேர்வினை ரத்துச் செய்வதாகச் சொல்லி வெற்றி பெற்றார்கள் என்றும், அவர்கள் மக்களை ஏமாற்றி விட்டார்கள் என்பது போல தோற்றத்தினை உருவாக்கி இருக்கிறார் முன்னைவர்.
நீட் தேர்வு பற்றி மக்கள் கருத்து அறிய குழு போட்டவுடனே பிஜேபி தமிழக மாணவர்களின் எதிர்காலத்தைப் புதைத்திட நீதிமன்றப்படியேறியதே, அந்த தடங்கல் பற்றி வாயைத் திறக்காத கல்வியாளர், கல்வி படிக்க விரும்பும் மாணவர் தரம் பற்றி கேள்வி எழுப்புகிறார்.
ஒரு மாணவன் கல்வி கற்பதன் காரணமாகத்தான் தரம் உயர்கிறானே ஒழிய, கல்வி கற்கவே தரம் வேண்டும் என்று சொல்லும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்திற்கு கோடாரியாய் இருக்கிறார்கள். ஏழை மாணவன் உயர் கல்வி உரிமையைப் பெறக்கூடாது என்ற சிந்தனை கொண்டவர்கள் என்பது அவர்களின் இந்த கட்டுரையில் வெளிப்படுகிறது.
ஒவ்வொரு குழந்தையும் காலம், சூழல் போன்றவற்றுக்கு ஏற்பத்தான் கல்வியினை கற்கும். ஆரம்பத்தில் நன்றாகப் படிக்காத குழந்தைகள், பின் நாட்களில் நன்கு படிப்பார்கள்.
எல்லோருக்கும் தெரிந்த உண்மை இது. நீ ஆரம்பத்தில் நன்றாகப் படிக்கவே இல்லை, ஆகவே உனக்கு படிப்பு தர முடியாது என்றுச் சொல்லும் இந்த வகைத் தேர்வுகள் மனித மேன்மைக்கும் வளர்ச்சிக்கும் எதிரானவை அல்லவா?
இதை வழிமொழியும் பிஜேபியும், தினமலரும், இந்தக் கல்வியாளரும் மனித குலத்தின் வளர்ச்சிக்கு எதிரான சிந்தனை கொண்டவர்கள் அல்லவா?
தன் கட்டுரையில் திமுகவினை சாடு சாடு என சாடி விட்டு, கல்வியில் அரசியல் என்கிறார். கல்வியில் அரசியலைக் கலப்பது பிஜேபி தான். வேறு எவரும் இல்லை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.
பொறியியல் கல்லூரிகளில் தரம் இல்லையாம்? தரமில்லாத எந்த ஒன்றும் காலப்போக்கில் இல்லாது போகும். அதைச் சரி செய்ய கடுமையான சட்டங்கள் தான் தேவை. மாணவனைக் கல்வி தான் தரப்படுத்தும். அதை எப்படி தரமாக வழங்குவது என அரசு கல்வி நிலையங்களைக் கண்காணித்து செயல்படுத்திட வைத்தல் வேண்டும். அதை விடுத்து படிக்கவே தேர்வு வைப்பேன் என்பது கொடும் செயல். கொடுமைச் சிந்தனை. கொலைகார எண்ணம். மக்களை மாக்களாக்க வைக்கும் பாதகச்செயல்.
திமுவைத் திட்டி, இட ஒதுக்கீட்டை கிண்டல் செய்து, பொறியியல் கல்வியை தரம் தாழ்ந்து விட்டது என்றுச் சொல்லி வரும் இவர், அடுத்து நீட் தேர்வில் வெற்றி பெற்றால் குறைந்த கட்டணத்தில் படிக்கலாம் என்கிறார்.
இது நாள் வரை, மெடிக்கல் படிக்க எந்த கோச்சிங்க் செல்லாமலும், கட்டணம் இல்லாமலும் சீட் பெற்று படித்த மாணவர்களுக்கு இது பெரும் சுமை.
நீட் கோச்சிங்க் சென்டர்களில் குவியும் கள்ளப்பணம் பற்றி இவர் வாய் திறக்கவில்லை. அங்கு நடத்தப்படும் தீண்டாமைகளை இவர் எழுதவில்லை. சமீப நீட் தேர்வில் கேள்வித்தாள் வெளியானது பற்றியோ, பீகார் மாநிலத்தில் தேர்வு என்கிற பெயரில் நடத்தப்படும் மோசடி பற்றியோ வாய் திறக்கவில்லை. திருட்டுத் தேர்வு, கேள்வித்தாள் மோசடி செய்து வெற்றி பெரும் மாணவர்களைப் பற்றி ஒரு வார்த்தை இக்கட்டுரையில் உள்ளதா என்றால் இல்லை.
ஐஏஎஸ் தேர்வில் ஒரு பிசி மாணவனைப் பார்த்து, தேர்வாளர் ம்... நீங்களெல்லாம் இட ஒதுக்கீட்டில் தேர்ச்சி பெற்று அரசாள வந்து விட்டீர்கள் என்றுச் சொல்லி அவரை பெயில் ஆக்கிய சாட்சி என்னிடம் இருக்கிறது. தேர்வாளர் ஒரு பிராமின் என்று இங்கு சொல்ல விரும்புகிறேன். ஏன் அவன் நாடாளக் கூடாது என்று அவர் ஏன் கோபப்படுகிறார் என்று தெரிந்து கொண்டீர்களா? இதைத்தான் பிஜேபி அரசு செய்ய விரும்புகிறது.
உயர்கல்வி உயர் ஜாதியினருக்கு என்கிறது பிஜேபி அரசு.
கல்வியாளர் அடுத்து பரிந்துறை செய்கிறார் இப்படி
மருத்துவம் இல்லை என்றால் என்ன? வேறு படிப்புகள் இருக்கின்றனவே என்கிறார். இவருக்குக் கொடுக்கப்பட்ட அசைன்மெண்ட் என்னவென்று தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. ஏன் பெட்ரோமாக்சே தான் வேண்டுமா? வேறு எதுவும் வேண்டாமா என்று கேட்கிறார்.
அதாவது நாடாளும் கல்வி, மருத்துவம் போன்றவைகள் எங்களுக்கே உங்களுக்கு கீழ் நிலைப் படிப்பு இருக்கிறது அதைப் படியுங்களேன் என்கிறார்.
அப்துல்கலாம், ரஜினியை உதாரணம் காட்டுகின்றார். ஒரே ஒரு அப்துல் கலாமும், ரஜினியும் தான் இருக்க முடியும். அவர்களைப் போல இன்னொருவர் இருக்க முடியுமா? இவருக்குத் தெரியாதா? தெரியும். சொல்ல மாட்டார். அசைன்மெண்ட் அப்படி.
சினிமாவில் சாதித்தவனை விட அழிந்தவர்கள் தான் அதிகம். கோடியில் ஒருவன் வெற்றி பெறுகிறான் அதுவும் சிறிது காலம். அவரை உதாரணமாகக் காட்டும் இவரின் பாதகச்சிந்தனைக்கு மாற்றாக வேறு எதனையும் சுட்டிக்காட்ட முடியாது. ஒரு கல்வியாளர் என்ற போர்வையில் கல்வியில் வெற்றி பெற்றவர்களை உதாரணம் காட்டாமல் சினிமாக்காரனை உதாரணம் காட்டி, நீங்களும் சினிமாவுக்குச் சென்று அழிந்து போ என்றுச் சொல்லாமல் சொல்ல வருகிறாரா என்று தெரியவில்லை.
ஏன் இப்படி பொருமலுடன் இக்கட்டுரையினை எழுதி இருக்கிறார் இவர்?
ஏழை கீழ்சாதி மாணவர்கள் மருத்துவர் ஆகி விட்டால் கீழ் சாதிக்காரனிடம் மருத்துவம் செய்ய சனாதன தர்மமும், ஆகம விதிகளும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்ல வருகின்றார்கள் என நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவே நீட் தேர்வு வைத்து உங்களை நாங்கள் வடிகட்டி விடுவோம் என்றுச் சொல்லாமல் சொல்கிறார்கள்.
கல்வி கற்க தடை போடும் எவரும் நிரந்தரமாக வாழ்ந்தது இல்லை. கல்வி கற்றுக் கொடுப்பவனை கடவுள் என்கிறது தமிழ் கலாச்சாரம்.
பிஜேபி தன் நிலைப்பாட்டை மாற்றி நாட்டை நிர்வாகம் செய்வதை கவனிக்க வேண்டும். அதை விடுத்து கல்வி கற்க தடை ஏற்படுத்தினால் காலம் அவர்களை மொத்தமாக அழித்து விடும்.
தன் வாழ்க்கையை நிரந்தரம் செய்ய முடியாத இவர்கள், மற்றவர்களுக்கு அழிவினை உண்டாக்கும் செயல்களைச் செய்கிறார்கள்.
அவ்வாறு செய்பவர்களுக்கு அறம் அதற்குரிய பலனை அளிக்கும் என்பது வரலாறு சொல்லும் செய்தி. நயவஞ்சக நரிகளையும், ஓநாய்களையும் தமிழர்கள் அறிந்து தெளிய வேண்டும்.
கல்வியாளர்கள் என்கிற போர்வையில் உலா வரும் பாதகச் சிந்தனைவாதிகளை உலகம் ஒதுக்கி தள்ளி விட வேண்டும். இவர்கள் மனித குலத்தின் ஒட்டுண்ணிகள். ஒட்டுண்ணிகள் காலப்போக்கில் உதிர்ந்து போய் விடும்.அவர்களை இனம் கண்டு கொண்டு, இவர்களையும் இவர்களின் படைப்புகளையும் உதறித் தள்ளிடல் காலத்தின் கட்டாயம்.
எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்திடல் வேண்டும். அது ஒன்றே தர்மம்.
அது ஒன்றே அறம்.
வாழ்க வளமுடன்...!