குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 28, 2026

வழி விடுங்கள், வழி கிடைக்கும்

புரட்டாசி மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை நாள். 

கோவை பீளமேடு ஆஞ்சநேயர் கோயில். வீல்சேரின் அடியேன், கோதை பின்னால்.

கோயிலின் வளைந்து நெளிந்த கம்பி வரிசைகளுக்குள் எங்களது பயணம் நகர்ந்தது. எங்களைச் சுற்றிலும் பக்தர்களின் நெரிசல். 

திடீரென்று ஒரு புள்ளியில் ஒட்டுமொத்த வரிசையும் ஸ்தம்பித்தது. என்னவென்று பார்த்தால், வயதான ஒரு மனிதர் நெய் தீபம் ஏற்றும் இடத்தில் நின்றுகொண்டு, டப்பாவிலிருந்து நெய்யை விளக்கின் அருகில் ஊற்ற முயன்றுகொண்டிருந்தார். உறைந்த நெய் விழ மறுக்க, அதை தீபத்தில் காட்டி உதறிக்கொண்டிருக்க, அவருக்குப் பின்னால் நின்றிருந்த வரிசை நகராமல் நின்றுவிட்டது.

பொறுமை இழந்த இருபது முப்பது பேர் வரிசையை விட்டு விலகி, வலது புற இடைவெளி வழியாக நேராகச் சென்று பத்தாயிரம் வடை மாலை சாற்றப்பட்ட ஆஞ்சநேயப் பெருமானை வழிபட்டுச் சென்று கொண்டிருந்தனர்.

எங்களுக்குப் பின்னால் நின்றவர்கள், "இவ்வளவு நேரம் காத்திருக்கிறோம், இவர்கள் இப்படிச் செய்கிறார்களே" என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். 

கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து, ஆஞ்சநேயரின் சன்னதிக்கு அருகில் நெருங்கினேன். 

அங்கே ஒரு அரசு அலுவலர் நீண்ட நேரமாக நின்றுகொண்டிருந்தார். நல்ல உயரமான தோற்றம். தன் பிரம்மாண்டமான உயரத்தால் தனக்குப் பின்னால் நிற்பவர்களுக்குப் பகவானின் திருமுகம் கொஞ்சம் கூடத் தெரியாமல் மறைத்துக் கொண்டிருக்கிறோம் என்ற அந்தச் சிறிய பிரக்ஞைகூட அவருக்கு இல்லை. அர்ச்சகர் அவரிடம் பலமுறை சொல்லியும் அதைக் காதில் வாங்கிக்கொள்ளாமல் நின்றிருந்தார்.

ஒருவர் ஒரு சில பெண்களை கம்பியை உருவி, உள்ளே விட்டு அமரச் செய்தார். 

அர்ச்சகர் மைக்கில் ஆஞ்சநேயரின் பெருமைகளும் வடமாலையின் அற்புதங்களையும் விவரித்துக் கொண்டிருந்தார்.

தீபாராதனை காட்டப்பட்டது. தீபத்தை வணங்கி விட்டு இடதுபுறமாக நகர்ந்தோம். அந்த அரசு அலுவலர் பகவானின் பின்புறமுள்ள புகைப்படங்களைத் தொட்டு முணுமுணுத்துக் கொண்டிருந்தார்.

வாழ்க்கை ஏமாற்றங்களின், துன்பங்களின், துயரங்களின் தொடர்கதை. அதில் இன்பம் ஒரு நொடியில் வந்து சென்று விடும். பெரும்பான்மையாக துன்பங்களையும், துயரங்களையும் அனுபவித்துக் கொண்டிருப்பது மனித வாழ்வின் மாறாத தன்மை.

இந்தத் துயரங்களிலிருந்து தப்பிக்க, கோயிலுக்கு ஓடிவருகிறோம். 

"எல்லாரையும் முந்திச் சென்று, பகவானின் சன்னதியை அடைந்து, எனக்கு மட்டும் அந்தத் தரிசனம் கிடைக்க வேண்டும்" என்ற சுயநலத்துடன் செல்கிறோம்.

அமைதியைத் தரவேண்டிய ஆலயம், ஈகோக்களின் போர்க்களமாக மாறுவதுதான் காலக்கொடுமை. 

பகவானின் சன்னதியில் நின்று வேண்டும் போது  கருணை மனம் செத்து விடுகிறது. 

"எனக்கு முன்னும் பின்னும் நிற்பவனும் நல்லபடியாக இருக்க வேண்டும்" என்ற சிந்தனை அந்தத் தருணத்தில் எங்கோ தொலைந்து போகிறது. 

"நான், என் தரிசனம், என் வரம்" என்ற குறுகிய வட்டத்திற்குள் பிரார்த்தனை சுருங்கி விடுகிறது.

இந்த உலகில் எவராலும் தனித்து வாழ்ந்து விட முடியாது. உறவுகளும் நண்பர்களும் இல்லாத ஒரு வாழ்க்கை வெறும் மாயை. நமக்குச் சுற்றி இருப்பவர்களின் நலனையும் நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

விவசாயி இல்லை என்றால் உணவில்லை; வண்டிக்காரர் இல்லை என்றால் பயணமில்லை; சலவைக்காரர், மருத்துவர், செவிலியர் என்று ஒவ்வொரு மனிதனின் கைகளிலும் நம் வாழ்வு பின்னப்பட்டிருக்கிறது. 

இந்தச் சங்கிலியில் நாமும் ஒரு பகுதியாகத்தான் இருக்கிறோம். தனியாக வாழ்ந்து விடலாம் என்று நினைப்பது அறியாமை. விலகி வாழும் ஒரு சில சதவிகிதத்தினரைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால், நம் வாழ்க்கை மற்றவர்களை நம்பித்தான் இயங்குகிறது. ஆனால் அவர்களைப் பற்றி நாம் சிந்திப்பதே இல்லை.

முந்திச் சென்று விபூதியைப் பிடுங்குவதிலும், "எனக்குத்தான் முதல் மரியாதை" என்று மார் தட்டுவதிலும் எந்த ஆன்மீகமும் இல்லை. 

கோயில் அர்ச்சகர் ஒரு பூவை கையில் வைத்துவிட்டால், "கடவுள் என்னைத் தேடி வந்துவிட்டார்" என்று உச்சி குளிர்ந்து போவது மனப்பிரமை.  அகந்தையை (Ego) வளர்த்துக்கொள்ளும் கேவலமான வழி.

ஆலயம் செல்கிறீர்களா? முதலில் பிறருக்கு வழிவிடுங்கள்.

நிசப்தமாய் அமருங்கள்.

உங்களைப் போலவே அவர்களும் ஏதோவொரு துயரச் சுமையோடுதான் அங்கே வந்து நிற்கிறார்கள் என்பதை உணருங்கள்.

உங்களுக்குப் பின்னால் இருப்பவரின் முகத்தைப் பாருங்கள்; அவரும் வாழ வேண்டும் என்று நினையுங்கள்.

அவருக்கு வழிவிட்டு, அவரின் பின்னாலே நீங்களும் செல்லுங்கள். என்ன ஆகிடப் போகிறது கொஞ்ச நேரம் காத்திருந்தால்?

எவனோ ஒருவன் செய்யும் விதிமீறலால் நாமெல்லாம் சிக்னலில் காத்திருக்கின்றோமே அப்போதெல்லாம் நாம் காத்திருக்கிறோம். அவசரப்படுவதில்லை. 

இந்த உலகத்தில் அன்பைத் தவிர பெரிதாக நாம் ஒன்றையும் எவருக்கும் கொடுத்து விட முடியாது.

கடவுளிடம் சென்று "என் மீது அன்பு வையுங்கள்" என்று கையேந்துகிறீர்கள். 

ஆனால், உங்கள் கண்முன்னே நிற்கும் சக மனிதனிடம் ஒரு துளி அன்பையும் இரக்கத்தையும் காட்ட மறுக்கிறீர்கள் என்றால், கடவுள் எப்படி உங்கள் மீது கருணை காட்டுவார்? 

விதைத்ததைத் தானே அறுவடை செய்ய முடியும்?

கோயிலுக்கு வரும் ஒவ்வொரு மனிதனின் இதயத்திலும் உள்ள சுயநலம் நீங்கி, பரஸ்பர அன்பும் மனிதமும் மலர வேண்டும்.

கோயிலுக்குச் செல்லும்போது முதலில் மற்றவர்களுக்கான வழியை விடுங்கள்.

உங்களுக்கான வழியைப் பிரபஞ்சம் தானாகவே காட்டும்!

வளமுடன் வாழ்க.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.