மனிதனைப் போன்ற சுயநலவாதி இந்த உலகத்திலேயே வேறு எந்த உயிரும் இல்லை. உடலில் ரத்தத்தின் சூடு இருக்கும் வரை அவன் எதையும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. வயதான பிறகு ஞானோதயம் வந்து என்ன புண்ணியம். போனது போனதுதான்.
நண்பரொருவரின் உறவினர்கள் கோவை வடவள்ளி அருகில் இருக்கும் முதியோர்கள் தங்குமிடத்தில் தங்கி, தங்களின் கடைசிக் காலத்தை கழித்துக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைப் பார்த்து விட்டு வரலாம் என நானும், நண்பரும் சென்றிருந்தோம்.
மதிய உணவு நேரம். எங்களுக்கும் அவர்கள் சாப்பிடும் உணவு கிடைத்தது. சாத்வீக உணவு. பூசணிக்காய் மோர்குழம்பு, உருளைப் பொறியல், டம்ளரில் ரசம் கொடுத்தார்கள். தயிருடன் மோரும். சீரக தண்ணீர் குடிக்க. அப்பளம். பச்சை அரிசிச் சோறு. என்னுடன் சுமார் 25க்கும் அதிகமான, வயதான ஆண்களும், பெண்களும் சாப்பிட்டார்கள். ஒருவருடன் ஒருவர் பேசிக் கொள்ளக் கூட இல்லை. என்னை வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தனர். சாத்வீக உணவு எனது ஃபேவரைட். கோவை நேரம் ஜீவா போல இருக்க கொடுத்து வைக்கணும். நமக்கு அதெல்லாம் சரிப்பட்டு வருவதில்லை.
(பூசணிக்காய் மோர் குழம்பு - படம் உதவி கூக்கிளார்)
என்னுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களின் முகங்களில் சோகம் கப்பிக் கிடந்தது. மகிழ்ச்சியாக ஒருத்தரைக் கூட பார்க்கவில்லை. என்னுடன் வந்த நண்பரின் உறவினர் தன் மனைவியுடன் தங்கி இருக்கிறார். ஆகையால் அவர் குழந்தை போல சிரித்துப் பேசினார். அவரின் மனைவி அக்மார்க் லட்சுமி தேவி. முகத்தில் அவ்வளவு சாந்தம். ’நல்லா இருங்க, நல்லா இருங்க’ன்னு சொல்லிக் கொண்டே இருந்தார். மனைவியுடன் கடைசிக் காலங்களைக் கழிப்பதுக்கும் குடுப்பினை வேண்டும்.
பேரன் பேத்திகளுடன் விளையாடிக் கொண்டு, ஆசையாக பெற்று வளர்த்த மகனை பார்த்தபடி வாழும் வாழ்க்கை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. கால ஓட்டத்தில் பணம் பூதாகாரமாய் கண் முன்னே நிற்க, உறவுகளைத் தொலைத்து விட்டு, அதைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிற வாழ்க்கை முறையில் அம்மா, அப்பாவைப் பார்க்க முடியுமா? எவரோ ஒருவருக்கு வேலை செய்யணும், காசு வரும். சுகப்படுத்தனும் நம்பி வந்தவர்களை. இல்லையெனில் சமூகம் காறித் துப்பி விடும். காசு அளவுகோல் கொண்டு மனிதன் அளக்கப்படுகிறான். வாழ்க்கை எடை போடப்படுகிறது. மனிதனின் நல்லது கெட்டது அதை வைத்துப் பேசப்படுகிறது. காசில்லாத வாழ்க்கை என்பது கனவில் கூட வராது மாமனிதர்களுக்கு.
ஊரிலிருந்து நடு நிசி ஒன்றைரைக்கு போன் வந்திருந்தது. விடிகாலையில் பார்த்தேன். அழைத்தால், ”உன் பிணம் என் வீட்டில் கிடக்கிறது, வந்து தூக்கிட்டுப் போ” என்றார் மாமா. என் மூத்த அக்காவின் கணவர். எனக்கு தாய் மாமா. பிணமென்று சொன்னது என் அம்மாவை. அம்மாவுக்கு மூன்று மகள்கள் வேண்டாத உறவாக அடியேன். அம்மா எப்போதும் மகள்கள் மீது அதுவும் முதல் மகள் மீது பிரியமாய் இருப்பார்கள். முதல் மகளின் பசங்களின் மீது அவ்வாறே. தலைச்சன் பிள்ளை அல்லவா? பாசம் இருக்கத்தானே செய்யும்.
இடையில் ஒரு விஷயம் சொல்ல வேண்டும். சுமார் 15 வருடத்துக்கு முன்பு, மனைவி கர்ப்பமாக இருந்த போது, காலையில் ஒன்பது மணிக்குத்தான் உணவு தருவார் அம்மா. பால் கூட எட்டு மணிக்குதான். என் அக்காவின் மகள் கர்ப்பிணியாக இருக்கும் போது காலை ஆறு மணிக்கே பால் கறந்து, காய்ச்சி கொடுப்பாராம் அம்மா. மனைவி ஊருக்குச் சென்றிருந்த போது பார்த்து விட்டு என்னிடம் ஆற்றாமையால் சொன்னார். மனைவியிடம் ”அது பேத்தி, நீ வேறு வீட்டுப் பெண் அல்லவா, அப்படித்தான், இதையெல்லாம் கண்டு கொள்ளாதே” என்று அப்போதைக்குச் சொல்லி வைத்தேன்.
அம்மா ஊரில் இருக்கும் போது கையில் அருவாளால் வெட்டிக் கொண்டார். காயமேற்பட்டு காய்ச்சல் வந்து விட்டது. சமைக்க முடியவில்லை. கடையிலிருந்தும், அக்கா வீட்டிலிருந்து வந்த சாப்பாட்டில் ஏதோ பிரச்சினை. வயித்தால் எடுத்து விட்டது. மாத்திரைகள் வாங்கிக் கொடுத்தும் சரியாகவில்லை. டீ ஹைட்ரேட் ஆகி உடல் சோர்வடைந்து விட்டது. டிஸ் எண்ட்ரி நிற்காமல் தொடர்ந்திருக்கிறது.
மாமா வீட்டுக்கு கொண்டு வந்திருக்கிறார்கள். உடம்பு ரொம்ப மோசமாகி விட பயந்து போனார் மாமா. 400 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் எனக்கு இப்படி ஒரு அழைப்பு. அன்றைக்கே கார் கொண்டு வந்து, என் தங்கை வீட்டில் கொண்டு போய் அம்மாவைப் போட்டு விட்டு வந்து விட்டார். தங்கையாலும் முடியாமல் மறுநாள், பேராவூரணியில் இருக்கும் தர்ஷணா மருத்துவமனையில் சேர்த்து விட்டனர். எனக்கு போன். பல வேலைகள் கிடக்க மனதுக்குள் அலாரம் அடிக்க ஆரம்பித்தது.
நானும் நண்பரும் கோவையிலிருந்து கிளம்பினோம். மதியம் 12க்கு பேராவூரணி சென்று விட்டேன். அது எலும்பு முறிவு மருத்துவமனை. அங்கு பெட்டில் குளுகோஸ் ஏறிக் கொண்டிருந்தது. படுக்கையில் புரண்டு கொண்டு உளறிக் கொண்டிருந்தார் அம்மா. அருகில் தங்கை கையைப் பிசைந்தபடி நின்று கொண்டிருந்தார்.
”கிட்னி பெயிலியர் ஆகி விட்டது. இன்றைக்கு இரவு தாங்காது” என்றார் டாக்டர். ரிப்போர்ட் கொண்டு வரச் சொல்லி பார்த்தேன். ரிப்போர்ட் பக்கா நார்மல். டி ஹைட்ரேட் ஆகி இருந்ததைக் கண்டேன். பிபி இல்லை, சுகர் இல்லை, பிற எல்லாம் நார்மல். ஆஹா ஏதோ சமாச்சாரம் போலத் தெரிகிறதே, விட்டு வைத்தால் டாக்டர் நீலகண்டன் முடித்து விடுவார் போல என நினைத்துக் கொண்டு, சில சீன்களை போட்டு விட்டு, கோவைக்கு வந்து விட்டேன். அம்மாவுக்கு அவ்வளவு பெரிய பிரச்சினை இல்லை. நீர் உணவும், சத்தான உணவும் எடுத்துக் கொண்டால் சரியாகி விடும் எனத் தெரிந்தது.
மறு நாள், வீட்டுக்கு அனுப்பி விட்டார் டாக்டர் நீலகண்டன். ஒரு பில் இல்லை. வெறும் டோக்கன். அதில் அமவுண்ட் குறித்துக் கொண்டு, சீல் வைத்து தருகிறார்கள் இந்த மருத்துவமனையில். மக்களே, யாரையாவது முடிக்க வேண்டுமென்றால் இங்கு அழைத்துச் செல்லுங்கள். பரலோக பிராப்தி கேரண்டி. அப்படி ஒரு கைராசி டாக்டர் இவர். (உண்மையில் நடந்த சம்பவத்தை எழுதி இருக்கிறேன். பொய் இல்லை,புரட்டு இல்லை).
வீட்டுக்கு வந்தவுடன் எலும்பு ரசம் வைத்து, சாப்பாடு கொடுக்கச் சொன்னேன் சின்ன அக்காவிடம். கோவையிலிருந்து மீண்டும் ஊருக்கு குழந்தைகளை அழைத்துக் கொண்டு சென்றேன். நான்கு நாட்கள் அங்கு இருந்தேன், நேரத்துக்கு உணவு கொடுக்க ஆள் தயாராகி விட்டார். கோவைக்கு அழைத்து வந்து விட்டேன். அவர் பாட்டுக்கு நடக்கிறார். கண் தெரியவில்லை என்றார். அதற்கு சொட்டு மருந்து ஊற்றி வருகிறேன். இப்போது நன்றாகத் தெரிகிறது என்கிறார். நான் சுத்த சைவம். அம்மாவோ அசைவம். இதை மட்டும் தான் என்னால் சரி செய்ய முடியவில்லை. இருப்பினும் 86 வயதுக்கு சைவமே சரியானது என மனதை தேற்றிக் கொள்கிறேன்.
மாமாவுக்கும், அக்காவுக்கும் வயதாகி விட்டது. தங்கையோ அம்மாவுக்கு சிலாக்கியமில்லாத மகள். இரண்டாவது மகளோ எப்போதும் ஏதாவது வைது கொண்டே இருப்பவர். நேரத்துக்குச் சாப்பாடு, குளியல். அவருக்கு அவைகள் தன் மகள்களிடமிருந்து கிடைக்கவில்லை.
அவன் என்ன செய்கிறான், அவன் பொண்டாட்டி சொகுசாத்தானே இருக்கிறாள், கொண்டு போய் வைத்துப் பார்க்கட்டுமே என்ற பேராசை என் உடன் பிறந்தார்களுக்கு. ”இங்கே பாரு கோதை, உன் மாமியாளை இனி இங்கு கொண்டு வந்து விடாதே, என்னால் பார்க்க முடியாது” என கடுமையான உத்தரவு வேறு போட்டிருக்கின்றார்கள் அக்காக்கள்.
அம்மாவுக்குச் சோறிடுவதும், பணி செய்வதும் எவ்வளவு கொடுமையான பாவச் செயல் தெரியுமா? அந்தக் கொடுமையை மகள்கள் செய்யலாமா? மகன் தானே செய்ய வேண்டும். வேண்டாத மருமகள் இப்போது தாயாய் மாறினாள். எம் மகள்கள் என்னைப் பார்த்துக் கொள்வார்கள் என்று ரகளை செய்த அம்மா, அமைதியாக இருக்கிறார். காலம் சொல்லிய பதிலை அவர் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும். அவருக்குத் தெரியவில்லை வயோதிகர்கள் காப்பகம் பற்றி.
காலையில் பேரன் பேத்தியுடன் அளாவளாவல், நேரத்துக்கு உணவு, மருந்துகள், குளியல், அமைதியான தூக்கம், பழங்கதைகள் என சுவாரசியமாய் செல்கிறது அவரின் வாழ்க்கை.
மூத்தமகளின் மகன் ”தேவசேனாதிபதி பொங்கலுக்கு வருகிறேன் என்றுச் சொன்னானே வந்து விட்டானா?” என்று நேற்று மனைவியிடம் கேட்டாராம்.
தலைச்சன் பிள்ளையாகப் பிறப்பதுக்கும் ஒரு கொடுப்பினை வேண்டுமல்லவா?
* * *