குரு வாழ்க ! குருவே துணை !!

Monday, June 27, 2011

இப்படியும் சில மனிதர்கள்

இந்தப் பையன் மூன்று மாதக் குழந்தையாக இங்கு வந்தான். இன்றைக்கு ஆறு வயதாகி விட்டது என்றார் ஃபாதர். பையன் ”வணக்கம் சார்” என்றான். நேற்றைக்கு எனது நண்பரும், ஃபாதருமானவருடன், அவரின் குடும்பத்தார் நடத்தும் அனாதை விடுதிக்குச் சென்றிருந்தேன். கிட்டத்தட்ட 70 குழந்தைகள் அங்கு பராமரிக்கப்பட்டு, கல்வி கற்க அனுப்பி வைக்கப்படுகிறார்கள்.

ஒவ்வொரு குழந்தையின் முகத்திலும் மலர்ச்சி, மகிழ்ச்சி தெரிந்தது. சந்தோஷமாய் விளையாடுகிறார்கள், படிக்கின்றார்கள். நல்ல போஷாக்குடன் இருக்கின்றார்கள். சுத்தமாய் இருக்கின்றார்கள். மிக ஆச்சரியம் தந்த விஷயம் இது. 

ஆரம்பகாலத்தில், கீரைக்கட்டினைத் திருடிக் கொண்டு வந்து, கடைந்து குழந்தைகளுக்கு கொடுப்போம் என்றார் ஃபாதர். குழந்தைகளின் பசி அழுகையைத் தாங்காமல், இரவில் தென்னைமரம் ஏறி தேங்காய்களைத் திருடி வந்து சாப்பிடக் கொடுப்பேன் என்றார் அவர்.

இப்போதெல்லாம் அனாதை இல்லங்கள் நடத்துவது என்பது எளிதானது அல்ல என்றார். பெண் குழந்தைகளைப் பராமரிக்க ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன என்றுச் சொன்னார். தினசரி 1000 ரூபாய் வேண்டுமென்றார். எங்கிருந்தோவெல்லாம் குழந்தைகளுக்குச் சாப்பாடு வருகிறது. உடைகளும் வருகின்றன. யார் யாரோ தன் உழைப்பினைத் தந்து ஆதரவற்றவர்களுக்கு உணவும், உடையும் வழங்கிக் கொண்டிருக்கின்றார்கள். 

கோடி கோடியாய் மனச்சாட்சியே இல்லாமல் கொள்ளை அடிப்பவர்களும் நம்மிடையே இருக்கின்றார்கள். பிறருக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணிக்கும் சிலரும் நம்மிடையே இருக்கின்றார்கள் என்பதை நினைக்கையில், இறைவனின் திட்டம் என்னவாக இருக்க முடியும் என்றுப் புரிந்து கொள்ள முயலவில்லை.

இந்த விடுதிக்கு உதவி செய்ய விரும்புவோர் மெயில் அனுப்பவும். மேலதிக தகவல்களைத் தந்து உதவுகிறேன்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.