150 கிலோ மீட்டர் வேகத்தில் கார் ஓட்டலாம். காற்றைக் கிழித்துக் கொண்டு படு வேகமாய் பைக்கில் பறக்கலாம். ஆகாய விமானத்தில் சாகஜம் செய்யலாம். ஓடலாம், பாடலாம், ஆடலாம் எல்லாம் செய்யலாம். எதுவரையிலும் என்றால் உடல் நலம் கெடும் வரையில்.
பலரும் சொல்லக் கேட்டிருப்போம் ”நல்லாத்தான் இருந்தாரு, திடீரென்று படுத்துட்டாரு”. ஏன் திடீரென்று படுத்து விட்டார்? காரணம் ஏதும் இல்லாமலா இருக்கும்? நிச்சயம் இருக்கும். என்ன தான் மருத்துவம் செய்தாலும் சிலருக்கு உடம்பு நோய் தீரவே தீராது. அதற்கொரு காரணத்தை நம் முன்னோர் பாட்டொன்றில் சொல்லி இருக்கின்றார்கள்.
பஞ்சமாபா தகர்க்கும் பழிதனை நினைப்பவர்க்கும்
கெஞ்சியே மருந்துசெய்து கேடுகள் நினைப்வர்க்கும்
அஞ்சிடா வஞ்சகர்க்கும் அநியாயக்கா ரருக்கும்
நஞ்சினும் கொடியவர்க்கும் நாடியபிணி தீராதே
இப்படி ஒரு பாடல் வைத்திய சார சங்கிரகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. மேற்படி ஆட்கள் எல்லாம் கெடுதல் செய்வதையே தொழிலாய் வைத்திருப்பதால், உடம்பைப் பேண மாட்டார்கள். உடம்பின் நோய் எதிர்ப்புச் சக்தி நன்றாக இருக்கும் வரை ஆடிக் கொண்டிருப்பவர்கள், எதிர்ப்புச் சக்தி குறையத் தொடங்கும் போது நோய் வாய்ப்பட்டு விடுவார்கள். தீர்க்கவே முடியாத நோய்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, செய்த வினையோடு எதிரே நின்று கொண்டிருக்கும்.
வினையைப் பற்றிக் கண்ணதாசன் தன் அர்த்தமுள்ள இந்து மதம் என்ற நூலில் விரிவாக எழுதி இருக்கிறார்.
நோய் எதிர்ப்புச் சக்தி ஏன் குறைகிறது? உடம்பிற்கு நோய் ஏன் ஏற்படுகிறது. இரண்டு வழிகளால் தான் நம் உடல் நோயால் பீடிக்கப்படுகிறது. ஒன்று காற்று மற்றொன்று உணவு. நம் உடலுக்குள் செல்பவை இவை மட்டும் தானே ?
செல்லும் காற்றையும், சாப்பிடும் உணவினையும் சரி செய்தால் நோய் விட்டுப் போய் விடும் அல்லவா? ஆனால் அதை இன்றைய காலத்தில் யார் செய்கின்றார்கள்?
மணமணக்கும் மட்டன் பிரியாணி, சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ், மட்டன் மசாலா கிரேவி, செட்டி நாடு சிக்கன் வறுவல் என்று சாப்பிடுவோர் என்றாவது ஒரு நாள் மட்டும் தானே சாப்பிடுகிறோம், அதனால் ஒன்றும் தொந்தரவு வராது என்று தனக்குள்ளே நினைத்துக் கொள்வார்கள்.
உண்மை என்ன தெரியுமா? உடம்பிற்கு ஒவ்வாத உணவு உண்ணப்பட்ட பிறகு, அதன் விஷத்தன்மையை உடம்பிலிருந்து வெளியேற்ற உடம்பு மாபெரும் போராட்டத்தை நிகழ்த்தும். கத்தி, ரத்தம் எல்லாம் வராது. நோய் எதிர்ப்புச் சக்தி தான் அந்தப் போராட்டத்தை நிகழ்த்தும். இப்படியே நாள் தோறும் போராடிக் கொண்டே வந்தால், உடம்பின் ஸ்பேர் பார்ட்ஸின் நிலை என்னவாகும் என்பதை நீங்களே யோசித்து முடிவெடுத்துக் கொள்ளுங்கள்.
நோய் வரக்காரணம் காற்றும், உணவும். இதைச் சரி செய்தால் நோய் ஏன் வருகிறது???
நம் உடம்பு ரசாயணத்தினால் ஆன ஒரு கூட்டுக் கலவை. இறைவனின் அற்புதப் படைப்பு. அதை ஒழுங்காகப் பேணி வந்தால் நோயற்ற வாழ்வு கிடைக்கும். கண்டதைத் தின்று திரிந்தால் வரும் விளைவுகளுக்கு மருத்துவர் பொறுப்பாக மாட்டார்.
ஒரு கணம் சிந்திப்பீர்.
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.