புறநானூறு பாடிய மன்னர்களில் ஒருவன் கணைக்கால் இரும்பொறை, கோச்செங்கண்ணான் என்ற மன்னனிடம் போரில் தோற்று சிறைப்பட்டிருந்தான். சிறையிலிருந்த காலத்தில் பாடிய பாடல் புற நானூற்றில் இருக்கும் 74 வது “குழவி இறப்பினும், ஊன் தடி பிறப்பினும்” என்ற பாடலை நாம் பிள்ளைப் பிராயத்தில் படித்திருப்போம். இரும்பொறை மன்னாக இருந்து போரில் தோற்றுச் சிறைப்பட்டவன். தண்ணீர் தாகமெடுத்த காரணத்தால், சிறைக்காவலனிடம் தண்ணீர் கேட்க, அவன் நேரத்தே கொண்டு வந்து கொடுக்காத காரணத்தால், தண்ணீரே குடிக்காமல் செத்த மானமுள்ள வீரன் இரும்பொறை. கதை இவரைப் பற்றியதல்ல. சோழ மன்னன் செங்கண்ணான் பற்றியது.
இவனுககு ஏன் செங்கண்ணன் என்ற பெயர் வந்தது தெரியுமா? செங்கண்ணனின் தாய் நிறைமாதக் கர்ப்பிணி. ஜோசியக்காரர் இன்னும் சிறிது நேரம் கழித்துப் பிறந்தால், பிறக்கும் குழந்தை தரணியாள்வான் என்றுச் சொல்லி இருக்கிறார். ஆனால் பிரசவ வலி வந்து விட்டது. குழந்தை பிறந்து விடும் போல இருக்கிறது. இன்னும் சிறிது நேரம் குழந்தை பிறக்காமல் இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்கின்றாள் கோச்செங்கண்ணானின் தாய்.
பிரசவ வலி என்பது உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை உலுக்கி எடுக்கும் கொடூரமானது. பிறப்புறுப்பு வழியாக குழந்தை வெளியேற உடம்பே அதிர அதிர அமிலத்தில் ஊறிய உடம்பாய் வலியில் துடிதுடிக்கும் அந்த நேரத்தின் வலியை சுகப்பிரசவமடைந்த பெண்கள் உணருவார்கள். அப்படிப்பட்ட வலியில் துடித்த செங்கண்ணானின் தாய் தன்னை தலைகீழாக கட்டி தொங்க விடச் சொல்கிறாள். உயிரே போய் விடும் என்று கணவனும், பிறரும் துடிக்கின்றார்கள். என் உயிர் பெரிதல்ல. என் மகன் வாழ்வாங்கு வாழவேண்டும் என்பதற்கான என் உயிரையும் நான் இழப்பேன் என்கிறாள் அந்த தமிழச்சி.
தலைகீழாக கட்டித் தொங்கவிடப்படுகிறாள் அந்த தாய். நேரமும் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பிட்ட நேரம் வந்ததும் கீழே இறக்கப்படுகிறாள். குழந்தையும் பிறக்கிறது. அக்குழந்தையின் கண்கள் இரண்டும் கொவ்வைப் பழம் போல சிவந்திருக்கிறது. என்னை ஆளும் செங்கண்ணை உடைய எங்கோச் செங்கண்ணான் என்றுச் சொல்லி முடித்து தன் குழந்தை தரணி ஆள தன்னுயிரை விடுகிறாள் அவள். அவள் அப்படி சொன்னதாலே மன்னனின் பெயர் செங்கண்ணன் என்று ஆனது.
தாயின் தியாகத்தால் கண்களிரண்டும் செவந்து போன காரணத்தால் இம்மன்னன் செங்கண்ணான் என்று பெயர் பெற்றான். தமிழகத்தில் ஆயிரம் சிவன் கோவில்களைக் கட்டிய பெருமை உடையவன் இந்த மன்னன்.
தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் மகன் தரணியாள வேண்டுமென்று நினைக்கும் தாய் இருந்த புண்ணிய பூமி தமிழர்கள் பூமி.
தன் மகன் இறந்த பிறகும் அவன் எழுதி வந்த பிளாக்கை தொடர்ந்து எழுதி, அவன் நினைவாகவே வாழ்ந்து கொண்டிருக்கும், அன்பின் உருவமான தாய் ஒருவரின் பிளாக்கை உங்களுக்கு அறிமுகப்படுத்துகிறேன்.
அன்பும், தியாகமும், பாசமும் நிரம்பிய இது போன்ற தாய்கள் இருப்பதால் தான், நம் பூமி இன்றைக்கும் பசுமையாக இருக்கிறது போலும். நான் தமிழனாய் பிறந்ததில் பெரும் பெருமையடைகிறேன்.
* * *
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.