குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, June 15, 2011

வாழை இலையில் உணவு பரிமாறும் முறை



அந்தக் காலத்தில் பெண்கள் தலைமுறை தலைமுறையாக சில பழக்க வழக்கங்களை தன் வாரிசுகளுக்கு கற்றுக் கொடுத்து வருவார்கள். உடனடி மருத்துவம் முதல் பல வகையான வழக்கங்கள் வாழையடி வாழையாக வரும். ஆனால் இன்றைய காலத்தில் அதெல்லாம் ஒழிந்து விட்டது. இன்றைக்கு வாழை இலையில் சாப்பாடு பரிமாறுதல் எப்படி என்பதையும், எப்படி உண்பது என்பதையும் பார்க்கலாம்.

வாழை இலையின் இடது மூலையில் உப்பினை வைத்தல் வேண்டும். வலது கீழ்ப்பக்க மூலையில் இனிப்பு பலகாரம், பாயாசம் வைக்க வேண்டும்.மேல்பகுதியில் வலதிலிருந்து இடது பக்கமாக பச்சடி, கூட்டுக்கறி, பொரித்த கறி, பால்கறி, வறுவல், ஊறுகாய் ஆகியவற்றையும் வைத்தல் வேண்டும்.இடது பக்கத்தின் கீழ்ப்புறமாக அப்பளம், வடை, பொறியல் பரிமாற வேண்டும். இனிப்பு பலகாரம் அருகில் சித்ரான்னமும், பருப்பு, நெய் பரிமாறவும். அடுத்து, சோறுடன் குழம்பும், அடுத்து ரசமும் பரிமாறி, பாயசம் பரிமாற வேண்டும். கடைசியாக தயிர் சோற்றுடன் பரிமாறி முடித்தல் வேண்டும்.

வாழை இலையில் பரிமாறுதல் எப்படி என்பதினை குழந்தைகளுக்கு கற்றுக் கொடுங்கள். இனி சாப்பிடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.

இனிப்பில் ஆரம்பித்து, உப்பு, புளி, காரம், தாவர வகை கறிகள் சாப்பிட்டு கடைசியாக துவர்ப்பில் அதாவது ஊறுகாய், தயிரில் முடிக்க வேண்டும். உடலுக்குத் தேவையான அனைத்துச் சுவைகளையும் சாப்பாட்டின் போது சேர்த்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் தான் சாப்பிட வேண்டும்.

இப்பதிவு எழுத உதவியது : தாவர போஷன சமையல் புத்தகம் - 1978 பதிக்கப்பட்டது.

3 comments:

நானானி said...

வாழையிலையில் சாப்பிட்டு முடித்தவுடன் இலையை மடிப்பதிலும் ஒரு வழக்கம் ந்டைமுறையில் உள்ளது.
சுபநிகழ்ச்சிகளில் உணவு உண்டு முடித்தவுடன், மேல் பக்கத்திலிருந்து கீழ் பக்கமாக மடிக்க வேண்டும். 'இன்னும் பல சுபநிகழ்ச்சிகள் உங்க வீட்டில் நிகழ வேண்டும்' என்று வாழ்த்துவது போல்.

அசுபநிகழ்ச்சியாயின் கீழ் பக்கத்தை மேல் நோக்கி மடித்தால், இம்மாதிரியான் அசுபநிகழ்ச்சிகல் இனி வேண்டாம் என்ற கருத்துப் பட.

வாழையிலை சாப்பாடு எனக்கு மிகவும் பிடிக்கும். பதிவு நன்றாக இருக்கு.

குடந்தை அன்புமணி said...

இப்படி பறிமாறும் முறையைப் பார்த்து ரொம்ப நாளாச்சு... பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.

Thangavel Manickadevar said...

நன்றி நனானி, அன்பு.. வாழை இலையில் சாப்பாடு போடுவதற்கு ஒரு காரணமும் இருக்கிறதாம். உடம்பிற்கு ஒவ்வாத விஷங்கள் ஏதேனும் உணவில் இருந்தால், அவ்விஷத்தை உறிஞ்சிக் கொள்ளுமாம் வாழை என்றுச் சொல்லுவார்கள்.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.