குரு வாழ்க ! குருவே துணை !!

Tuesday, June 14, 2011

மகனின் முதல் பாக்கெட் மணி

மகன் சீருடை அணியும் போது பாக்கெட்டில் காசு சத்தத்தைக் கேட்ட மனைவி அதை பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுத்தார். அழுது கதறி விட்டான். என் ஃப்ரண்ட் தான் எடுத்து வரச் சொன்னான் என்று அழுதான். அவ்வாறு கொண்டு வரவில்லை என்றால் டீச்சரிடம் சொல்லி விடுவதாய் மிரட்டினான் என்று சொல்ல எனக்கு கிர்ரென ஆகி விட்டது.  இந்த வயதில் வீட்டிலிருந்து காசு எடுத்து வா என்று யாரோ ஒரு பையன் மிரட்டுகின்றானே என்ற கோபம். மனைவியோ படு மோசமாக வெலவெலத்துப் போய் விட்டார். பையன் யாரிடமும் சொல்லாமல் கொள்ளாமல் பணத்தை எடுத்து வைத்திருக்கின்றானே என்று அப்செட் ஆகி வெடவெடத்து விட்டாள். இவ்வளவுக்கும் பையன் தான் வகுப்புத் தலைவன், பள்ளியிலேயே நல்ல மாணவன் என்று பெயரெடுத்தவன். எனக்கு எல்லையில்லா கோபம் வந்து விட்டது. காசை மட்டும் வாங்கி வைத்துக் கொண்டு, பள்ளிக்கு அனுப்பி வைத்து விட்டோம்.

நாங்கள் எங்கள் குழந்தைகளுக்கு கடைகளில் விற்கும் சாக்லெட், எண்ணெய்ப் பலகாரம், நொறுக்குத் தீனிகள் வாங்கிக் கொடுப்பது இல்லை. பெரும்பாலும் மகனின் அப்பத்தா செய்து கொடுக்கும் முறுக்குகள், மடக்குப் பணியாரம் மற்றும் வீட்டிலேயே செய்யும் நொறுக்குத் தீனிகளையும், பிஸ்கட்டுகளையும் தான் பள்ளிக்குக் கொடுத்து அனுப்புவோம். பிள்ளைகள் இருவரும் கடைகளில் விற்கும் நொறுக்குத் தீனிகளை சாப்பிடமாட்டார்கள். இது நாள் வரையிலும் இவ்வாறு தான் மனைவி குழந்தைகளை கவனித்து வந்தாள்.

என்னவென்று தெரிந்து கொள்ள விரும்பி, இருவரும் பள்ளிக்குச் சென்றோம். அங்கு பிரின்ஸிபல் மேடம் எங்களை அன்பாக வரவேற்று விசயத்தைக் கேட்டார்கள். நாங்கள் மேற்படிச் சம்பவத்தைச் சொன்னோம்.

மகனின் வகுப்புத் தோழன் நொறுக்குத் தீனி வாங்கிக் கொடுத்திருக்கிறான். மகனிடம் நாளைக்கு நீ வாங்கி கொடுக்கணும் இல்லையென்றால் மேம்மிடம் சொல்லி விடுவேன் என்றுச் சொல்லி இருக்கிறான். என் பையன் படு சென்ஸ்டிவ்வானவன். அவனை யாரும் குறையோ, குற்றமோ சொல்லக்கூடாது என்று நினைப்பவன். அனைவரும் அவனை நல்லவன் என்றுச் சொல்ல வேண்டுமென்று நினைப்பவன். அதன்படியே நடந்து கொள்ள முனைவான். யாரும் தவறு செய்தால் கோபம் வந்து விடும். எங்களிடம் சொன்னால் திட்டுவோம் என்று நினைத்துக் கொண்டு, முதன் முதலாய் பணத்தை எடுத்து வைத்திருக்கிறான். அசிஸ்டண்ட் பிரின்ஸ்பல் விசாரித்துக் கொண்டு வந்து எங்களிடம் சொன்னார்கள்.

அதன் பிறகு இரண்டாவது படிக்கும் குழந்தைகளின் வயதில் இருப்பவர்களுக்கு, பள்ளிக் கேண்டீன் மற்றும் கடைகளில் விற்கும் பலகாரங்களை வாங்கிச் சாப்பிடவும், காசு கொடுத்து சில்லறை பெறவும் ஆசை இருக்குமாம்.இது இந்த வயதில் சகஜமான விஷயமாம்.  அதுவும் இரண்டு வருடத்திற்குதான் அவ்வாறு இருக்கும். அதன்பிறகு கேண்டீன் உணவு சரியில்லை என்பதைப் புரிந்து கொள்வார்கள். ஆகையால் அவனுக்கு பாக்கெட் மணி கொடுத்து அனுப்புங்கள். அதுவும் தினமும் கொடுக்காமல் வாரத்திற்கொருமுறையோ அல்லது இரு முறையோ கொடுத்து விடுங்கள் என்று சொன்னார். அப்போதுதான் காலையிலிருந்து பதட்டத்தில் இருந்த மனைவி சற்றே ஆசுவாசப்பட்டாள். எனக்கும் மனசு கொஞ்சம் லேசானது போல இருந்தது. மகன் வரிசையில் முதல் ஆளாய் வந்து கொண்டிருந்தான். மனைவி டீச்சரிடம் செல்ல, மனைவியை கட்டிப் பிடித்த டீச்சர், ஹி ஈஸ் எ காட் கிஃப்ட் சைல்ட் ஃபார் யூ என்று சொல்லி இருக்கிறார்.

மகனை அழைத்த நான், காலையில் அவர் பாக்கெட்டில் வைத்திருந்த பணத்தினைக் கொடுத்து, உன் நண்பனும் நீயும் கேண்டீனில் தேவையானவற்றை வாங்கிச் சாப்பிடுங்கள் என்றுச் சொல்லி விட்டு, லேசான மனதோடு பள்ளியில் இருந்து திரும்பி வந்தோம்.

என் மகனின் முதல் பாக்கெட் மணி ரூபாய் 16.00


நான் ஒழுக்கத்தையும், நேர்மையையும், பிறரை புண்படுத்தா எண்ணமும் கொண்டவர்களாய் பிள்ளைகளை வளர்க்க வேண்டுமென்ற விருப்பம் உள்ளவன். அதன்படி குழந்தைகளை வளர்க்க முற்பட்டு வருகிறேன். மேற்படி சம்பவத்தை மகன் விவரித்துச் சொல்லத் தெரியாமல், அதன் காரணமாய் நானும் என் மனைவியும் பதட்டப்பட்டு விட்டோம். இச்சம்பவம் எனது வாழ் நாளில் மறக்க முடியாத ஒன்றாகும். பள்ளியில் பதட்டப்பட்ட மிகச் சரியாக  எங்களை வழி நடத்தி, பிரச்சினை தீர வழி செய்தார்கள். இச்சமயத்தில் பள்ளியின் பிரின்ஸ்பலுக்கும், அசிஸ்டண்ட் பிரின்ஸ்பலுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1 comments:

ரமேஷ் பாபு said...

நல்ல அனுபவம். எல்லா பெற்றோருக்கும் இது ஒரு பாடம்

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.