விடிகாலையில் உழவர் சந்தைக்கு காய் வாங்குவதற்காக மழையில் நனைந்து கொண்டே மனையாளுடன் சென்றேன். மழை அரும்புகள் சாரையாய் பூமியைத் தழுவிக் கொண்டிருந்தன. ”பூமி தன்னைத் தானே குளிர்விக்கிறது போலும் கோதை” என்றேன். வழக்கம் போல, ”ஓ அப்படியா?” என்று பதில் வந்தது.
செல்வ விநாயகர் கோவிலைத் தாண்டும் போது பார்வை அவரை நோக்கிச் செல்ல, அங்கு அவருக்கே ஏதும் இல்லாத நிலை போல. மார்கழி மாதம் வந்தால் பொங்கல், பிரசாதம் என்று களையாக இருப்பார் பிள்ளையார். நானும் வாரா வாரம் பிள்ளையாரை நேசமாகப் பார்க்க ஆரம்பித்தேன். இனிப்பு பொங்கல் சூடாய் கிடைக்கும். சில சமயம் சுண்டலும் தருவார்கள். எந்த பாரியாளின் கைப்பக்குவத்திற்கும் எட்டாத சுவையாக இருக்கும் பிரசாதம்.
இப்போதெல்லாம் பிள்ளையார் கோவிலில் அதிகம் கூட்டம் காணாது. இடது பக்கமாய் இருக்கும் கலைஞர் படிப்பகத்தின் திண்ணையில் ஒன்றிரண்டு பேர் பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். மழையினால் இன்றைக்கு ஒருவரையும் காணோம்.
சந்தையின் வாசலில் பூ விற்றுக் கொண்டிருக்கும் பெண் தலை மீது பிளாஸ்டிக் பை சிவப்பாய் மாட்டப்பட்டிருந்தது. எப்போது பார்த்தாலும் மலர்ந்த பூவை நூலோடு கோர்த்துக் கொண்டே இருப்பார் அந்தப் பெண்.பைக்குளுக்கு டோக்கன் வாங்கும் பாட்டி எப்போதும் புன்னகையுடனே இருப்பார். அவரைப் பார்த்து சிரிப்பொன்றினை சிந்து விட்டு, வண்டியை கீரைக்கார கவுண்டர் இருக்குமிடம் விட்டேன்.
”மழை வந்து இன்னிக்கு வியாபாரத்தை கெடுத்துப் போச்சுங்க” என்றார்.
“மழை வந்தாலும் சங்கடம், வல்லேன்னாலும் சங்கடம் தான் போல” என்று சொல்லிவிட்டு, ”நவாப்பழத்தை பசங்ககிட்டே கொடுத்தேன்னா, அவங்க உருட்டி விளையாடுறாங்க” என்றேன்.
கேட்டு விட்டு சிரி சிரியென்று சிரித்தார். உழவர் சந்தை நவாப்பழம் ஒன்றும் அப்படிச் சுவையாக இருப்பதில்லை.கொஞ்சம் துவர்ப்பு தட்டுது. ஆசையாக் கேட்டேன்னு கவுண்டரு பறிச்சிக் கொடுத்தாரு. அதுல இரண்டைக் கொண்டு போயி பிள்ளையளுக்கு கொடுங்கோன்னு சொன்னாரு. அந்தப் பழத்தை வாங்கி பசங்க, கீழே பளிங்கு போல உருட்டி விளையாட ஆரம்பிச்சுட்டானுங்க.
வியாபாரம் ஒன்னும் சரியில்லை. கூட்டமும் குறைவாத்தான் இருந்தது. எதிர்த்த கடைக்காரர் அழுகிப் போன பூசணிக்காய குப்பைத் தொட்டிக்குள்ளே தூக்கி போட்டுக்கிட்டு இருந்தாரு. கருவேப்பிலை விக்கிற அம்மாவைக் காணல.
”அண்ணன் மருமவன் ஆக்சிடெண்டில செத்துப் போனாரு இல்லைங்களா, அந்தப் புள்ள மருந்தைக் குடிச்சிட்டு, குழந்தைக்கும் கொடுத்துட்டு இப்போ குழைந்தையும் செத்துப் போச்சுங்க.அந்தப் புள்ளய மட்டும் காப்பாத்திட்டோம். என்ன ஏன் காப்பாத்துறீங்க. நான் செத்துத்தான் போவப்போறேன்னு சொல்லிகிட்டு இருக்குன்னாரு” கவுண்டரு.
போனவாரம் சந்தைக்கு போன போது, ”லாரி சந்துக்குள்ளே இருந்து வந்த குடிகாரன் ஒருத்தன் கவுண்டர் அண்ணன் மருமகன் மீது வண்டிய ஒரே தாட்டா தாட்டிட்டானாம்.ஆளு ஸ்பாட்லே அவுட்டுங்கன்னாரு கவுண்டரு. அடப்பாவமேன்னு கேட்டுக்கிட்டு வந்தேன். இந்தவாரம் இப்படி ஒரு செய்தி.
'ஆக மொத்தம் ஒரு குடும்பமே காலி. யாரோ ஒரு குடிகாரப் பய குடிச்சிட்டு வந்து எதுக்க வந்தவன் மேல மோதி கொன்னுட்டான். ஊரு முழுக்க எங்கன பாத்தாலும் டாஸ்மாக் கடை. குடிச்சவன் செத்தான்னா அதை அவன் விதின்னு சொல்லலாம். குடிக்காதவன் குடிச்சவன்னால சாகுறானே அதை என்னன்னு சொல்லுறது? யாரைக் குத்தம் சொல்லுறது. இன்னிக்கு ஒரு குடும்பமே காணமா போச்சே அதுக்கு யாரைக் குத்தம் சொல்லுறது? என்ன உலகம்டா இதுன்னு என்னென்னவோ மனசுக்கு வந்து போச்சு.'
'இந்தப் புள்ளைக்கி அறிவு எங்க போச்சு, புருஷன் செத்தா என்ன இப்போ? புள்ளை இருக்குல்லே, நாளொன்னைக்கு லட்சம் லட்சமா டைவோர்ஸ் வாங்குற இந்தக் காலத்துல இப்படி ஒரு புள்ளையான்னு' மனசுக்குள்ளே தோணுச்சு.
வண்டியில மனையாள கூட்டிக்கிட்டு வரும் போது, பிள்ளையார் கோவிலைப் பார்த்தேன். கர்ப்பக் கிரகத்துக்குள்ளே உட்கார்ந்திருந்தார். வாசலில் யாருமில்லை. அய்யரு மட்டும் சோகமா உட்கார்ந்திருந்தார். ஏனோ முகம் தெரியாத அந்த ஆக்சிடெண்ட் ஆன மகராசன் மனசுக்குள் வந்து போனார்.
* * *
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.