குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, September 18, 2025

வீட்டுக்கு வந்த டிரம்ப் மற்றும் அஜித் தோவல்

இப்படியெல்லாம் நடக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் நடந்தது. 

விடியற்காலையில் எழும்போது பெட்ரூமில் இருக்கும் ஸ்லாப்பிலிருந்து பீரோ வழியாக இறங்கி மின்னல் போல மாடிக்கு சென்று விடுகிறது அந்த குட்டி எலி. 

மாடிச் சுவற்றில் ஓட்டை போடும்  முயற்சியில் ”கரக்,கரக்” சவுண்ட் உபத்திரவம்.

வீட்டுக்குள் அழையா விருந்தாளி. 

எலி மருந்து, எலி பொறி தகர டப்பாவிற்கு தேங்காய் வைத்தால், அதைச் சுற்றிலும் தின்று விட்டுச் சென்று விட்டது. 

பொறிக்கும் எலிக்கும் பிஜேபி - அதிமுக உடன்பாடு போல. 

ஒட்டும் பேஸ்ட் - ம்ஹூம்.

பல வித திட்டங்கள், உபாயங்களை யோசித்துச் செயல்படுத்திப் பார்த்தும் ம்ஹூம், எதுவும் எடுபடவில்லை. 

நண்பரிடம் ஆலோசனை - பூனை முடிகளை கொண்டு வந்து போடுங்க. எலி எட்டிப் பார்க்காது என்றார். அதையும் செய்து பார்த்து விட வேண்டியதுதான். 

முடியை விட குட்டிகளே மேல் என முடிவு செய்து, வீட்டுக்கு இரு பூனைக் குட்டிகளை ஓசி வாங்கிக் கொண்டு வந்தோம். கொஞ்சம் செம்பட்டையாய் இருந்தவன் டிரம்பு. கருப்பாய் இருந்தவன் அஜித் தோவல். 

கொஞ்சம் நம்பிக்கை வந்தது. வரிக்குடியில் ஒரு கொலபாதகம் மலையாளப்படம் நினைவுக்கு வந்தது. 

எப்படியும் குட்டி எலிக்கு கிலி பிடித்து விடும் என்று நினைத்தேன்.

பூனைக் குட்டிகள் இரண்டு. 

எலிக்கு வலை..

ஹாலில் இருக்கும் ஷோபாவில் படுத்துத் தூங்குவார்கள். அவ்வப்போது அஜித் தோவல் வீட்டுக்குள் ஒரு இடம் விடாமல் ஆராய்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். 

டிரம்ப் விளையாடுவான், சாப்பிடுவான், டூ ஒன் செல்வான். சொகுசு. ஷோபாவை அமெரிக்கா போல பாவித்தான். 

அவர்களுக்கு ஒரு சட்டியில் மண் போட்டு வீட்டுக்குள்ளே வெட்டவெளி ரெஸ்ட் ரூம். 

மனுசர்களுக்கு மூன்று, இவன்களுக்கு ஒன்று என நான்கு கணக்கு.

எலி எங்கே போச்சுன்னு தெரியவில்லை.

முதல் நாள் ஷோபாவில் படுத்து தூங்குவதும் விளையாடுவதுமாய் இருந்தார்கள்.

மறு நாள் நடுநிசி. 

யாரோ தலைமாட்டில் இருப்பது போல தெரிய விழித்தால் அஜித் தோவல்.

திக்கென்றது. 

டிரம்ப் கால் பக்கமாய். 

காலை எட்டு மணி போல இருவரையும் வந்த இடத்துக்கே திருப்பி அனுப்பி விட்டேன்.

இன்று காலையில் மீண்டும் அந்த எலி.. 

அடியேன் சுத்த சைவம். செயலிலும் கூட.

ஜீவகாருண்யத்தின் படி கொலை அனுமதிக்கப்படவில்லை.

வள்ளலார் வந்து தான் எலியைப் பிடித்து வீட்டுக்கு வெளியே விட வேண்டும்.

ஏன் சொல்கிறேன் என்றால்,

உச்ச நீதிமன்ற நீதிபதி ஒரு விஷ்ணு சிலைக்கு தலை இல்லா வழக்கை தள்ளுபடி செய்து விட்டு, அடிசனலாக கடவுளிடம் சென்று வேண்டிக் கொள் என்றுச் சொல்லி விட்டார். 

டெல்லியில் போராட்டம். மத உணர்வை புண்படுத்தி விட்டார் நீதிபதி என. அவர் சரியாகத்தான் சொன்னார். ஆனால் இவனுக்கு உண்மையைச் சொல்லி விட்டாரே எனக் கடுப்பு.

வழக்குப் போட்டவனுக்கு நீதிபதி மேல் தனிப்பட்ட காண்டு போல. 

நீதிபதி வாய் விட்டு விட்டார்.

மீடியாக்குஞ்சாமணிகள் ”ஆவ், ஒவ், அம், இம் ஹிம், ஆடுவென விஷ்ணுவை அவமதித்து விட்டாரென பொங்கு பொங்குன்னு பொங்கி பொங்கல் சாம்பார் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை என்னவென்றால் அந்த தலையில்லா விஷ்ணு சிலை இருப்பது கஜுராகோ சிற்பங்கள் உள்ள இடம். யுனெஸ்கோ பட்டியலில் உள்ளது. 

உள்ளது உள்ளபடி பராமரிக்க வேண்டும்.  

வழக்கு போட்டவன் கணக்கு போட்டிருக்கிறான். 

இல்லாத தலையை வைத்து சூடம் சாம்பிராணி ஏற்றினால் கல்லாப் பெட்டி கணக்கும் என. அதற்கு சப்பைக்கட்டாய் முகலாயர்கள் உடைத்து விட்டார்கள் என கடந்த காலத்திற்குச் சென்று விட்டான். டெல்லி தோசம் மட்டுமல்ல, ஏதாவது செங்கல் உடைந்திருந்தால் கூட அக்பரும் அவுரங்கசீப்பும் உடைத்து விட்டார்கள் என ஆரம்பித்து விடுகிறார்கள்.

ஆபரேட்டிங்க் சிஸ்டம் கோடு ஏற்கனவே இறைவன் எழுதி விட்டானாம். உபயம் டெல்லி முதல்வர் - அந்த மொழி சான்ஸ்கிரிட்டாம்.

கணிணி ராம். அதான் ராமனின் ராம் தான் கணிணி.  புரியவில்லையா? RAM MEMORY. 

படு ஸ்பீடாக போய்க்கொண்டிருக்கிறார்கள் கடவுளர்கள். காணும் இடமெல்லாம் கடவுள். இப்போது கணிக்குள் கடவுள். 

மைக்ரோசாப்ட் இனி ஓ.எஸ் எழுத வேண்டியதில்லை. இது எதுவும் தெரியாமல் குஞ்சாமணிகளும், சங்கிகளும் பொங்கிக் கொண்டிருக்கிறார்கள். 

சரி மேட்டருக்கு வருவோம்.

நீதிபதிக்கு தெரியாதா? தலையில்லா முண்டத்தின் ஆட்டம் எதுக்குன்னு.

ரத்துன்னுட்டார். சட்டம் இப்போது விஷ்ணுக்கு எதிராய். 

எலி வேறு விநாயகப் பெருமானின் வாகனம்.. பூனை யாரோட வாகனமோ தெரியவில்லை.

தலையில்லா சிலையில் விஷ்ணு இருக்கும் போது, நான் அழைத்தால் ஜீவகாருண்யத்தின் பிதாமகர் வள்ளலார் வராமலா இருப்பார்.

பார்ப்போம் என்ன செய்கிறார் என.

எலியா? வள்ளலாரா?


Saturday, August 30, 2025

பிள்ளையாரும் - ஜக்கி வாசுதேவும்

’கடுப்பேத்துறானுங்க மை லார்டு’ - வடிவேல் கோர்ட்டில் பேசும் வசனம் நினைவிலாடியது இதை எழுதும் போது.

நேத்தைக்கு, ஒரு வேலையாக கோவை டவுன் சென்று, வீடு திரும்பும் போது காளம்பாளையம் அருகில் டிராபிக் ஆகி விட்டது. இடது புற சாலையில் பல மினி லாரிகளில் பிள்ளையார் பல வடிவங்களில் தென்பட்டார். பல ரூபங்களில் காணுமிடமெல்லாம் தெரியும் முதற் கடவுளை கண்ணில் கண்ட மாத்திரத்தில் கன்னத்தில் போட்டுக் கொள்ளவில்லை.

லாரிகளைச் சுற்றிலும், பல சிறார்கள் ஆடிக் கொண்டிருந்தனர். அவர்கள் சட்டி போன்ற ஏதோ பல இசைக்கருவிகளை அடித்துக் கொண்டிருந்தனர். டம் டம் சத்தங்கள் எழும்பின. 

பல ரூபப்பிள்ளையார்களை தண்ணீருக்குள் தள்ளி அமுக்கப்போகும் இளவட்டங்கள் ஆடிக் கொண்டிருந்தனர். 

பிள்ளையாரைப் போல வேறு எந்தக் கடவுளும் இப்படி மனிதனிடம் சிக்கி அவமானப்படமாட்டார். 

கடவுள் வசிக்கும் கருவறைக்குள் கஜக்முஜக் கூட பரவாயில்லை. யாரும் பார்க்கவில்லை என்றால் பாதகமில்லை. ஆனால் இந்தப் பிள்ளையார் படும் பாடு. வருடம் ஒரு தடவை வச்சு செய்கிறார்கள் பிள்ளையாரை. 

நீண்ட தூரம் கார்களும், பேரூந்துகளும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. நான் வந்த காரும் வரிசையில் நின்று நகர்ந்து கொண்டிருந்தது. பத்து நிமிடம் ஆகியிருக்கும். டிராபிக் விலகுவதாக தெரியவில்லை. 

ஒரு காவல்துறை ஜீப் விரைந்து வந்தது. இரண்டு நிமிடங்களில் டிராபிக் இல்லை. டிராபிக் ஜாம் ஆகிடுச்சு பாருங்க மக்களே, பாருங்கன்னு காட்ட வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கின்றார்கள். 

அடங்கொப்பன் மவன்களா எனக் கேட்கத் தோன்றியது. 

எதிரில் கார்கள் தென்படவே இல்லை. காளம்பாளையத்தைக் கடந்து வந்தால் மாதம்பட்டி. மாதம்பட்டி நான்கு சாலை முக்கில் சாலையோரம் ஆண்களும் பெண்களும் இடது புறமாய் நின்று கொண்டிருந்தார்கள். அவர்கள் கையில் பேப்பர் தட்டு. அதில் உதிர்ந்த மஞ்சள் வண்ண பூக்களின் இதழ்கள்.

என்னடா இது என்று பார்த்தால் ஈஷா யோக(??) மைய சற்குரு ஜக்கி அவர்களுக்கு வரவேற்பாம். 

எதுக்கு?

அவர் இமயமலைக்குச் சென்று ஈசனுடன் உறவாடி மீண்டும் வருகிறாராம். அதற்கான வரவேற்பாம். நான்கு ஐந்து இடங்களில் பேனர் வைத்திருந்தார்கள். 

அது என்ன கலரோ தெரியவில்லை - காவியுமில்லாமல், அழுக்குமில்லாத இரு வண்ணங்களில் சட்டை, கால்சட்டை அணிந்து கொண்டு அங்குமிங்கும் திரிந்து கொண்டிருந்தார்கள் பலர். இவர்கள் ஈஷாவின் தொண்டர்கள் எனத் தெரிந்தது. அவ்வப்போது கண்ணில் தென்பட்டிருக்கிறார்கள் ஈஷா யோக மையத்தில். அடியேனும் அடிக்கடி ஈஷாவுக்குள் சென்று வருவதுண்டு. 

பலர் கைகளில் கரும் சிவப்பு வண்ணக் கொடி ஒன்றினையும் ஏந்தி இருந்தார்கள். அது என்ன என உற்றுப் பார்த்தால் - Own your day just 7 minutes - புரோகிராம் பற்றிய கொடிகள். ஏழு நிமிடங்களில் உங்களின் நாள் - விளக்கம் சரிதானே? 

தீத்திப்பாளையம் அருகிலும், ஆலந்துறையிலும் தோரணங்கள் வேறு கட்டியிருந்தார்கள்.

சற்குரு ஜக்கிக்கு வரவேற்பு களை கட்டியது. மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திழைத்துக் கொண்டிருந்தனர். எனக்கும் அந்த மகிழ்ச்சி ஒட்டிக் கொண்டது.

எல்லோரும் ஒரு ஆளை ஆடு ஆடுன்னு கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். நாமெல்லாம் யாரோன்னு கேட்கத் தோன்றினால், ஓடிப் போய் விடுங்கள். கேள்விகள் கேட்க கூடாது. அது ஆண்டி இந்தியன். மாமி இந்தியன் என்றும் சொல்லலாம். மொழி பெயர்ப்பு சரிதானே?

முன்பு எப்போதோ,  காரில் செல்லும் போது பார்த்தேன், சாலையோரமாய் ஒருவர் கையில் ஏதோ ஒரு பாத்திரம் போல ஒரு வஸ்துவை ஏந்திக் கொண்டு சென்றார். கோதையிடம் கேட்டேன்.

அது பிச்சாந்தி புரோகிராமாம். பயிற்சியில் ஒரு பகுதியாம். தினமும் யாரிடமும் யாசகமும் கேட்கக் கூடாதாம், பிச்சை எடுத்து - அதுவும் காசு - அதைக் கொண்டு போய் ஈஷா யோக மையத்தில் கொடுக்க வேண்டுமாம். இப்படி ஒரு பயிற்சி. அவசியம் தானே எல்லோருக்கும்.

இதை எழுதிக் கொண்டிருந்த போது, சிவவாக்கியர் நினைவுக்கு வந்து விட்டார். இந்த மூளை இருக்கிறதே மூளை. சரியான குரங்குப் பயல் புத்தி இதுக்கு. இப்போது எதுக்கு இவர் நினைவுக்கு வர வேண்டும். அதை எழுதி, நீங்கள் படிக்க வேண்டும்? இதெல்லாவற்றையும் யார் கேட்பது?

போனால் போகட்டுமென படித்து வையுங்கள். நாமெல்லாம் நம் மண்டைக்குள் குப்பையைத்தானே சேர்த்து வைக்கிறோம். அதில் இதுவும் ஒரு பக்கமாய் கிடக்கட்டும்.

சித்தமேது சிந்தையேது சீவனேது சித்தரே

சத்தியேது சம்புவேது சாதிபேத மற்றது

முத்தியேது மூலமேது மூலமந்தி ரங்களேது

வித்திலாத வித்திலே யின்னதென் றியம்புமே. 

சித்தர், அவதாரம் எனச் சொல்லுபவர்களே, சித்தம் எது? சிந்தனை எது?  உயிர் எங்குள்ளது? சத்தி இருப்பிடம் எது? ஈசன் உலாவும் இடம் எது? சாதி பேதம் இல்லாதது எது? முத்தி எது? மூலம் எது? மூல மந்திரங்கள் எது? வித்தே இல்லாமல் வித்தாக இருப்பது எதுவென்று சொல்லுங்களேன். 

உதார் விட்டுக்கிட்டு திரியும் மடச்சாம்பிராணிகளை நம்பி நாசமாய் போவார்கள் என்பதை என்றோ சொல்லி விட்டார் சிவவாக்கியர்.

மனுசனுக பதர்கள் என்பது நிரூபமானது நேற்றைய நிகழ்வில். முட்டாள்களாய் இருப்பதில் அவ்வளவு சுகம் போல மனுசப்பதர்களுக்கு.


30-08-2025

Tuesday, August 26, 2025

குருதியில் எழுதிய கடிதம் - ரபியா பால்கி

கை கால்களில் கத்தியின் சுவடுகளால் வழிந்தோடும் குருதி.  சுற்றிலும் பிணங்கள். வெட்டுண்டு குருதி கொப்பளிக்கும் உடல்களிலிருந்து வெளியேறும் வலி மிகுந்த குரல்கள் ஈன ஸ்வரத்தில். கொஞ்சம் கொஞ்சமாக உடலிருந்து பிரிந்து கொண்டிருக்கும் உயிர். 

இந்தப் போரில் வெற்றி பெற்றால் நீ கேட்பதைத் தருகிறேன் என்று சொல்லியிருந்தான் அரசன். ஆனால் அவனோ எதிரியின் கத்தியினால் வெட்டுண்டு கிடந்தான். அவனின் உடலிருந்து குருதி வெளியேறி சொட்டுச் சொட்டாய் உயிர் உதிர்ந்து கொண்டிருந்தது.

வலி மிகுந்த உடலை நகர்த்த முடியாத நிலையில், வேதனை தாளாமல் கண்களிலிருந்து வெளியேறும் கண்ணீர் நிறைந்த கண்களூடாக ஜல் ஜல் சத்தத்துடன் சுழலும் கத்தியினால் வெட்டுண்டு விழும் உடல்களைப் பார்த்தபடி கண்கள் மூடியவனின் நாசியினைத் தழுவியது அந்த வாசம். 

அந்த வாசத்தில் அவனது காதலி அவனுக்கு எழுதிய கடிதத்தில் வடித்திருந்த எழுத்துகள் உயிர்பெற்று மனதூடே உலாவியது.

On the absent and present one where are you

If you are not with me then where are you

My eyes are illuminated by you

My heart is acquainted by you

Come and invite my eyes and soul

Otherwise take a sword and end my life

அவனுக்கு கடிதம் எழுதிய அவளின் கைகள் கத்தியினை ஏந்தியிருந்தது. அவளின் முகத்தை துணி முகமூடியாய் மறைத்திருந்தது. அவள் கரங்களில் கத்தி சுழன்றது. அவள் ஒவ்வொரு எதிரியின் தலையைக் கொய்தாள். போர் முடிந்தது.

அவனை யாரோ நெஞ்சோடு தூக்கி அணைத்தபடி தலைமுடியை ஆதரவாய் கோதினார்கள். அவனுக்கு நினைவு கொஞ்சமே கொஞ்சமாய் திரும்பியது.

அவன் நெஞ்சிலிருந்து அக்கடிதத்திற்கு எழுதிய பதில் எழுத்துகள் தரையில் குருதியில் படிந்தன. 

I don't have the sight to see you

I don't have patience and rest without you

What am I going to do with you now

How can I carry this pain without you

Your hair has pierced my veil

With your face I have fallen in love

From your hair I have become under over

Because from your hair my life has been destroyed

அவனிடம் யாரோ சொன்னார்கள். அவளின் இன்னொரு கடிதத்தை உன்னிடத்தில் தர முடியாது. ஏனெனில் அது காகிதத்தில் எழுதப்படவில்லை. அதைப் படிக்க வேண்டும் எனில் நீதான் செல்ல வேண்டும் என்றார்கள். 

அது சிறை. அரசன் அவளை - அவளின் காதல் தெரிந்து சிறையிட்டான். 

எந்தக் காதலைச் சிறையிட முடியும்?

அவள் தன் காதலுக்காக எழுதிய அந்த மகத்தான கவிதை அவளின் குருதியைக் கோரியது.

அந்த வாசனையை - அவனின் நாசியருகில் கொண்டு வந்தவளின் கடைசிக் கவிதை. 

அந்தக் கவிதை குருதியினால் எழுதப்பட்டிருந்தது. அவளின் உடல் வடித்த குருதியை எழுத்தாக்கி காதலை சுவற்றில் எழுதி விட்டு, விஷத்தை அருந்தி தன் இன்னுயிரை உதிர்த்தாள்.

இதோ அந்தக் கல்லறைச் சுவரில் அவளின் உதிரத்திலிருந்து உதிர்ந்த காதல் கடிதத்தின் கடைசி வரிகள். 

I wish my body was aware of my heart

I wish my heart was aware of my body

I wish I could escape from you in peace

Where can I go regretfully

காதலனும் காதலியும் குருதியில் நனைந்த அந்தக் கவிதையின் வரிகளில்.

ஆஃப்கானிஸ்தான் கல்லறையில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கும் அவள் பெயர் ரபியா பால்கி (Rabia Balkie). அவளின் காதலன் துருக்கி நாட்டின் அடிமை பக்தாஷ் (Baktash)

காதலுக்காக உடலிருந்து குருதியெடுத்து கடைசிக் கடிதம் எழுதிய அந்த மகத்தான காதலியும், அவளின் காதலும் - அவளின் அந்தக் காதலின் வாசனையை இதோ இந்த நொடியில் என் மனம் நுகர்ந்து கொண்டிருக்கிறது.

அந்தக் காவியச் சுவரை எழுப்பியவன் எவனோ? 

வளமுடன் வாழ்க.!

26.08.2025

ஆவணம் சின்னையன் - நாற்பது வருடங்களுக்குப் பிறகான சந்திப்பு

தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், ஆவணம் கிராமத்தில் வசித்து வரும் ராமநாததேவரின் பேரனும், ராமமூர்த்தி அவர்களின் மகனுமான சின்னையன் அவர்களை சுமார் நாற்பது வருடங்கள் கழித்து நேரில் சந்தித்தேன்.

17 ஆகஸ்ட் 2025 விடிகாலையில் சின்னையனின் நினைவு வந்தது. ஏனென்று தெரியவில்லை. ஆவணம் பள்ளித் தோழர்களின் வாட்சப் குரூப்பில் சின்னையனின் தொடர்பு எண் வேண்டுமென கேட்டிருந்தேன். 

பள்ளித்தோழன் அருண் அழைத்திருந்தான். அவனின் முகம் எனக்குப் புலப்படவே இல்லை. அவனுடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். கோதைக்கு ஒரே சிரிப்பு. முகத்தினைப் பார்த்து அகத்தைக் கண்டுபிடித்து விடுவாள். அதெப்படி முகம் தெரியாத ஒருவரிடம் இவ்வளவு நேரம்? பேசமுடியும்? அவளுக்கு எங்கே தெரியப் போகிறது நானென்ல்லாம் ஐ.சி.க்யூ பயன்படுத்தியவன் என. (ICQ - தெரியும் தானே உங்களுக்கு)

மாரிமுத்துவுக்கு அழைத்து சின்னையன் நம்பர் வாங்கினேன். அவருக்கு அழைத்தேன். எடுக்கவில்லை. ஆனால் அடுத்த நொடி அவரிடமிருந்து அழைப்பு. 

”தங்கவேல் பேசுகிறேன். நல்லா இருக்கீங்களா?” ஆரம்பித்தேன்.

பேசும்போது படபடப்பு இருந்தது. பேசி முடித்ததும் அமைதியானது நெஞ்சம்.

ஆவணம் கைகாட்டிக்குச் செல்லும் வழியில் ஜோசப் வாத்தியார் டியூசன் செண்டரை தாண்டி - இந்தியன் ஓவர் சீஸ் வங்கியைக் கடந்து செல்லும் போது  வலது பக்கமாய் புல்வெளியுடன் ஒரு பங்களா இருக்கும். அதுதான் ராமநாததேவரின் வீடு. பெரிய பணக்காரர்.

அம்மா சொல்லிக் கேட்டிருக்கிறேன் - அவர் துப்பாக்கி வைத்திருந்தார் என. அவர் வீட்டுக்கு அருகில் நெல் அரவை மில்கள் இருந்தன என நினைவு. அந்த வீட்டுப் பக்கம் எவரும் எட்டிக் கூட பார்க்க மாட்டார்கள் என்பார் அம்மா. 

ஆவணம் கைகாட்டியில் தாத்தா மாணிக்கதேவரின் கொல்லை இருந்தது. அதற்கு சனி, ஞாயிறுகளில் வேலைக்காரர்கள் ஜெயராஜ், போஸ் இவர்களுடன் மாட்டு வண்டியில் செல்லும் போது, அந்தப் பங்களாவைப் பார்ப்பதுண்டு. அந்தப் பங்களாவைப் பார்க்கும் போதெல்லாம் திக்கென்று இருக்கும். 

காஞ்சனா - சின்னையனின் தங்கை. எனது வகுப்பில் படித்தார். ஆவணம் அரசு துவக்கப்பள்ளியில் படித்த போது, சின்னையனும், காஞ்சனாவும் தான் அலுமினியத்தில் செய்த சூட்கேஸ் போன்ற ஒரு பெட்டியில் புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். பணக்கார தாத்தா - அதுவும் துப்பாக்கி வைத்திருக்கும் தாத்தா.

காஞ்சனா யாரிடமும் பேசாது. ஆனால் சின்னையனும் நானும் அப்படி அல்ல. எனக்கு ஒரு வகுப்பு முன்னால் படித்தார். 

பள்ளியில் கொண்டு போய் விட்டு, என்னைத் தூக்கி வருவது அம்மா அல்லது தாத்தா. அருணாசலம் மாமா பள்ளியில் உதவியாளராக வேலை பார்த்த போது அவருடன் சைக்கிளில் செல்வதுண்டு. அவர் உதவி தொடக்கல்வித் துறைக்கு மாறுதல் பெற்றுச் சென்று விட்டார். 

அதன் பிறகு அம்மா, தாத்தா, ஜெயம், சின்னப்பொன்னு (இருவரும் இறந்து போன சிங்காரவேல் மாமாவின் பெண்கள்), பின்னர் எனது பள்ளித் தோழர்கள் உப்பு மூட்டைத் தூக்கி வருவார்கள். நாகராஜன் என்ற தோழன், என்னை முதுகில் தூக்கிக் கொண்டு தூண்டிக்கார கோவில், வயல்கள் என வலம் வருவான். அவன் என்ன ஆனானோ தெரியவில்லை.

தினமும் பிள்ளையார் கோவிலில் என்னுடன் படிக்கும் சக மாணவர்களுக்கு டியூசன் எடுப்பதுண்டு. ஏனென்றால் நான் நன்றாகப் படிப்பேன்.

ஒரு தடவை என்னை சின்னையன் முதுகில் உப்புமூட்டை தூக்கிக் கொண்டு வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவரின் தாத்தா வடக்கித் தெரு சுப்பையாதேவர் - மில் காரர் என நினைக்கிறேன், அவனை அடித்து, என்னை பிள்ளையார் கோவில் இறங்கச் சொல்லி விட்டார். அவருக்கு அழுகை தாளாமல் என் வீட்டுக்கு ஓடி அம்மாவிடம் சொல்லி அழுதிருக்கிறார். அம்மா அவரைத் தேற்றி வீட்டுக்கு அனுப்பி வைத்து விட்டு, என்னை வந்து தூக்கிச் சென்றார். அம்மா கோதையிடம் அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பான். அவன் நல்ல பையன் - இவன் மீது கொள்ளைப் பிரியம் அவனுக்கு என.

இந்த நிகழ்வு மட்டும் எனக்குள் அச்சாணி போல பதிந்து விட்டது. 

சின்னையனுக்கும், ஆவணம் திருநாவுக்கரசு மகளுக்கும் திருமணம் பேசினார்கள். அவரின் திருமணப் பத்திரிக்கையை கொண்டு வந்து கொடுத்தார். 

“நீ அவசியம் திருமணத்துக்கு வா தங்கவேலு” என்று அவர் கேட்டதும் எனக்கு நினைவில் பதிந்திருக்கிறது. 

அதன் பிறகு இப்போதுதான் போனில் பேசினேன்.

20 ஆகஸ்ட் - 2025 புதன் கிழமை அன்று அவரிடமிருந்து போன். 

“கோவைக்கு வருகிறேன் பார்க்கலாமா?”

“வருகிறேன்”

காலையில் சில பணிகளை முடித்து விட்டு, ஜோதி சுவாமியைப் பார்த்து விட்டு மாலை மூன்று மணி போல நானும், கோதையும் (கார் டிரைவர்) கிளம்பினோம்.

என்ன பேசுவார்? என்னைப் பார்த்ததும் என்ன சொல்வார்? என்றெல்லாம் சிந்தனை. நானென்ன பேசுவது? எப்படி ஆரம்பிக்கலாம்? என்று பல ஐடியாக்களை மூளை அவிழ்த்து விட்டுக் கொண்டிருந்தது.

வெற்று மேலுடன், கால்சட்டை போட்டுக் கொண்டு, மண் தரையில் உழன்று கொண்டிருந்த தங்கவேலைப் பார்த்தவர், இப்போது என்ன நினைப்பார் என்றெல்லாம் எனக்குள் பலவித எண்ணங்கள்.

கோவை டிராபிக் - பெங்களூரை மிஞ்சப் போகிறது. டவுனுக்குள் செல்வது என்பது கொடுமை. பைக் ஓட்டிகளின் சாலைச் சாகசங்கள் ஒரு பக்கம், பேரூந்துகளின் ஹார்ன் சாகசங்கள் ஒரு பக்கமென - சாலையில் சர்க்கஸ் நடத்துகிறார்கள். கோதையின் சாமர்த்தியமான டிரைவிங். 

ஒரு வழியாக அறை எண் 310 - கதவு திறந்தது.

“வா தங்கவேலு, நல்லா இருக்கியா? வாங்கம்மா” 

சிறுவாணி ஹோட்டல் - காஃபி அருமையாக இருந்தது. 

இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். என்ன செய்கிறேன், என்ன செய்கிறார் என்பதற்கான பொழிப்புரை, விரிவுரைகள் எனச் சென்றது. சுவாரசியமில்லாத சந்திப்பு என்பதாய்த் தோன்றியது.

அவ்வளவுதான். 

பிள்ளையார் கோவிலில் என்னை இறங்கி விட்டு வந்து, அம்மாவிடம் அழுத சின்னையனையும் காணவில்லை. அன்றிருந்த தங்கவேலையும் காணவில்லை.

அங்கிருந்தது நிறுவனத்தின் தலைவர் தங்கவேல், மற்றொரு நிறுவனத்தின் சின்னையன். குழந்தைகளின் தந்தைகள். கணவர்கள்.

இதுதான் வாழ்க்கையா? இதற்குத்தானா வாழ்கிறோம்?

குழந்தைப் பருவத்தின் அன்பினைக் கூட பகிர்ந்து கொள்ளவும், மகிழ்ச்சி அடையவும் கூட முடியாத நிலைக்கா வாழ்க்கை நம்மை தள்ளிச் செல்கிறது? 

அவர் என்னை தூக்கட்டுமா எனக் கேட்பார் என நினைத்தேன். ஆனால் அவர் கேட்கவில்லை.

என்னைத் தூக்குங்கள் என கேட்டிருக்க வேண்டும். நானும் கேட்கவில்லை.

வாழ்வியல் சிக்கல்கள் எல்லோருக்கும் ஒவ்வொரு விதமானவை. எல்லாவற்றையும் ஒரே தராசில் போட்டு எடை போட்டு அளவீடுகளை கணக்கிட முடியாது. 

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல். சூழலுக்கு ஏற்ற வாழ்வியல் முறைகள். அது தொடர்பான சிக்கல்கள். அதிலிருந்து நாம் கற்பவை, களைபவை, வெளியேறுபவைகள், தோல்விகள், வெற்றிகள் என அந்தப் பயணத்தில் - அந்தப் போராட்டமான வாழ்க்கையில் - இது போன்ற நிகழ்வுகள் - பாலைவனப் பயணிக்கு கிடைக்கும் ஒரு வாய் தண்ணீர் போல அல்லவா?

திருவள்ளுவர் எங்களது இந்த நட்பை பற்றி ஏதாவது எழுதி இருக்கிறாரா? என ஆராய்ந்த போது நட்பு, நட்பாராய்தல் ஆகிய இரு அதிகாரங்களையும் படித்தேன். பிள்ளைப்பிராயத்தின் நட்பு - வயதானவர்களின் நட்பு பற்றி எந்தக் குறிப்பும் இல்லை.

சமீபத்தில் மலேசியாவிலிருந்து வந்த எனது நண்பருடன் கோவிலுக்குச் சென்றிருந்தோம். கையில் கட்டுப் போட்டுக் கொண்டிருந்த ஒரு வயதானவரை மற்றொரு வயதானவர் கை பிடித்து அழைத்துச் சென்றார். அவர்களிடத்தில் ”நீங்கள் இருவரும் நண்பர்களா?” எனக் கேட்டேன்.

”ஆமாம்” என்றனர்.

சின்னையன் கார் நிறுத்தியிருந்த இடம் வரை வந்து வழியனுப்பி வைத்தார்.

அவருக்கு வியாபார அழைப்புகள் காத்திருந்தன. 

எனக்கோ ஒன்றரை மணி நேரப் பயணம் காத்திருந்தது. 

இது இரயில் சினேகமல்ல. அதையும் தாண்டியது என நினைக்கிறேன்.

வளமுடன் வாழ்க...!

26.08.2025

பெண்களே உங்களுக்கு இந்த அவமானம் தேவையா?

ஒரு கடவுள் மொழி, சாதி, மதம், பேதம் பார்பாரா? அப்படி அவர் இருந்தால் அவர் கடவுளா? 

கடவுள் எவரிடமும் வந்து எனக்கு இதைச் செய், அதைச் செய் என்று கேட்கவில்லை. மனித ரூபத்தில் இருக்கும் பலருக்கு மனப்பிராந்தி நோய் ஏற்பட்டதால், கடவுளின் பெயரால் வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிக் கொண்டு, அதைப் புனிதம் என பொய்யையும், புரட்டையும் திணிக்கிறார்கள்.

பெண்களின் உதிரத்தில் உதித்தவர்கள் பெண்களை இழிவு செய்வதை தொழிலாக வைத்திருக்கிறார்கள்.

இன்றைய தினகரனில் வெளியான இந்தச் செய்தியைப் படித்துப் பாருங்கள்.

பூமியைத் தாய் என்கிறோம். ஆனால் கோவில்களின் நிலையோ கொடூரங்களை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறது.

முலைக்கு வரிப் போட்ட கேரளாவில், அம்மன் வழிபாடு அதிகமிருக்கும் கேரளாவில், கடவுளின் இருப்பிடமென சொல்லப்படும் கேரளாவில், இப்படி ஒரு நிகழ்வு.

குருவாயூரில் கடவுள் இருந்தால் இந்த நிகழ்வுக்கான விளைவை அவரே செயல்படுத்தட்டும்.

பெண் இன்றி இந்த உலகம் ஒரு நொடியும் இயங்காது என்பதுதான் மாற்றவே முடியாத உண்மை. மதிகெட்ட கெடுமதியாளர்களுக்கு எப்படித்தான் இப்படியெல்லாம் யோசிக்க முடிகிறதோ தெரியவில்லை. 

இதோ அந்தச் செய்தி...!



நன்றி : தினகரன் 26.08.2025 செய்தி

Tuesday, July 29, 2025

கோவை புத்தக திருவிழா - தாத்தா - ஈகை பற்றிய புது விளக்கம்

வருடா வருடம் மகனுக்கும் மகளுக்கும் புத்தகத் திருவிழாவில் சுமார் 5000 ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இந்த வருடம் மகன் படிக்கச் சென்றிருப்பதால், மகள் கோவை கொடிசீயாவில் நடந்து கொண்டிருந்த புத்தகத் திருவிழா 2025க்கு போக வேண்டுமென்று சொல்லி இருந்தார்.  ஞாயிற்றுக் கிழமை ஹாஸ்டலுக்குச் சென்று, அவரை அழைத்துக் கொண்டு நேரடியாக புத்தகத் திருவிழாவுக்குச் சென்று விட்டோம்.

இந்த வருடம் புத்தக விற்பனை மந்தமாக இருக்கிறது எனச் சொன்னார்கள். அரங்குகளில் கூட்டம் இல்லை. பள்ளி மாணவர்களை அழைத்து வந்திருந்தார்கள். ஆளுக்கொரு தின்பண்டப் பையைக் கொடுத்து அதைக் கையில் வைத்துக் கொண்டு ஒவ்வொரு புத்தக கடைக்குள்ளும் சென்று வந்து கொண்டிருந்தார்கள்.

மகள் படிப்பதற்கு நல்ல நாவல் பரிந்துரைக்கவும் எனக் கேட்டார். கி.ராஜநாராயணனின் நாவல், சிறுகதை தொகுப்பு ஒன்றினைப் பார்த்தேன். வாங்கிக் கொடுத்தேன். 

முதலில் அகிலனின் சித்திரப்பாவையை எடுத்தேன். அதை விட மண்ணின் வாழ்வியல் தடத்தைப் பதித்த எழுத்துகள் மகளுக்கு தெரிய வேண்டுமென்ற ஆவலில், வாங்கிக் கொடுத்தேன்.

அடுத்து பெரியநாயக்கன்பாளையம் ராமகிருஷ்ண மடத்தின் புத்தக் கடைக்குச் சென்று நிவேதிதா பற்றிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். 

பின்னர் மகள் பல ஆங்கில புத்தகங்களை வாங்கினார்.  இறுதியில் முத்து காமிக்ஸ் சென்றோம். 

வழமை போல பல புத்தகங்களை வாங்கினார். நான் வீல்சேரில் அமர்ந்திருந்தேன். அப்போது அரசுப் பள்ளி மாணவன் ஒருவன் ஒரு சிறு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கினான். 20 ரூபாய் இருக்கும். அவனிடம் அது என்ன காமிக்ஸ் என்று காட்டச் சொன்னேன்.

”தாத்தா, அப்பாகிட்டே 200 ரூபாய் கேட்டேன். அவர் 100 ரூபாய் தான் கொடுத்தார். காமராஜர் வாழ்க்கை வரலாறு வாங்கலாம்னு வந்தேன். ஆனால் அது விலை அதிகமாக இருக்கு, அதனால இதை வாங்கினேன்” என்றான்.

மகளுக்கு அவன் என்னை தாத்தா என்று சொல்லுகிறானே என ஒரே சந்தோஷம். 

அவனிடம் இங்கே இருக்கும் காமிக்ஸ் புத்தகத்தில் உனக்குப் பிடித்ததை வாங்கிக் கொள் என்றேன். மறுத்தான். மகள் அவனை வற்புறுத்தி ஒரு காமிக்ஸ் புத்தகத்தை வாங்கிக் கொடுத்தாள். அவனை அழைத்துக் கொண்டு மீனாட்சி புத்தகக் கடைக்குச் சென்று, காமராஜரின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எடுத்து அவனிடம் கொடுத்த போது வாங்கவே மாட்டேன் என சொல்லி விட்டான். 

விலை அதிகமாம். அந்த புத்தகத்தின் விலை 400 ரூபாய்.

”ஏற்கனவே காமிக்ஸ் வாங்கிக் கொடுத்திட்டீங்க, இது வேணாம்” என்று மறுத்தான். 

அவனை சரி செய்து புத்தகத்தை வாங்கி அவன் கையில் கொடுத்து விட்டு, ”நல்லா படி” எனச் சொல்லி விட்டு வந்தேன். அவன் மீண்டும் ”நன்றி தாத்தா” என்றான். 

மகளுக்கும், மனைவிக்கும் ஒரே சிரிப்பு.

அப்படியே ஒவ்வொரு புத்தக கடையாக வலம் வந்து கொண்டிருந்த போது, சுப அறவாணனின் மனைவி, அவரின் புத்தகத்தைப் படித்துப் பாருங்கள் எனச் சொல்லி கேட்டார். அவர் கொடுத்த புத்தகத்தை வாங்கி புரட்டிக் கொண்டிருந்த போது, அருகில் ஒரு பெரியவரும், அவரின் பேத்தியும் கையில் நிறைய புத்தகங்களை வாங்கிக் கொண்டு பணம் கொடுத்தனர். 

அந்த அம்மா என்னிடம் ”அய்யா, இவரைப் பாருங்கள், இந்த புத்தகங்களை சிறைச்சாலை வாசிகளுக்கு படிக்க வாங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.

குள்ள உருவம், நரைத்த தலைமுடி, கனத்த கண்ணாடி, அருகில் அவரின் பேத்தி, அவர்கள் இருவரையும் பார்த்தேன். மனம் நெகிழ்ந்தது. 

நுழைவாயிலின் ஒரம் சிறைச்சாலை வாசிகளுக்கு புத்தகங்கள் தானம் செய்ய கேட்டு, ஒரு பாக்ஸ் இருந்ததைப் பார்த்தேன்.

நல்ல இதயங்களும், நான்கு பேருக்கு உதவ வேண்டுமென்ற நல்லவர்களும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

தனக்குத் தேவையான புத்தகங்கள் கிடைத்ததில் மகளுக்கு நிரம்பவும் சந்தோஷம்.

நான் கலீல் ஜிப்ரானின் புத்தகங்கள் சிலவும், ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் ஒரு புத்தகமும், தினவு இதழ் ஒன்றையும் வாங்கிக் கொண்டு வீடு வந்து விட்டேன்.

அந்த அரசுப் பள்ளி மாணவனைப் பற்றிய நினைவு வந்தது. பசங்க வேலைக்குச் சென்றதும், வருடம் தோறும் கொஞ்சம் பணத்துடன் புத்தக விழாவுக்குச் சென்று பசங்களுக்கு புத்தகங்கள் வாங்கித் தர வேண்டுமெனெ நினைத்துக் கொண்டிருந்த போது, கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் புத்தகத்தைப் பிரித்துப் படித்தேன்.

”உன்னைக் காட்டிலும் எனக்கு மிகவும் தேவையானதை எனக்கு கொடுப்பது அல்ல ஈகை, என்னைக் காட்டிலும் உனக்கு மிகவும் தேவையானதை எனக்குத் தருகிறாயே அது தான் ஈகை.”

மண்டையில் சுத்தியலால் தட்டியது போல வலித்தது. 

அடச்சே, இது என்ன இப்படி சொல்லி இருக்கிறாரே என்ற எண்ணமும், தொடர்ந்து பல நினைவுகளும் ஊடாடின.

தமிழர் வரலாற்றில் தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும் என்று சொல்லி இருக்கிறார்கள். பாத்திரம் அறிந்து தானம் செய் என்றும் சொல்லி இருக்கிறார்கள். இதை ஏன் சொன்னார்கள் என்பதற்கான காரணங்கள் இருக்கலாம். இவை எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விடும் வார்த்தைகள் கலீல் ஜிப்ரான் சொன்னது.

மகாபாரதத்திலே கர்ணன் தான் செய்த புண்ணியங்களை கூட தானம் செய்திருந்தாலும், அன்னதானம் செய்யாத காரணத்தினாலே, அவனுக்கு சிவலோகத்தில் அனுமதி கிடைக்காமல், வைகுண்டத்திலே அனுமதி கிடைத்தது என்றுச் சொல்வார்கள். தர்மத்தையே பெயராக கொண்ட தர்மத்தில் சிறந்தவன் தர்மன் என்றெல்லாம் படித்திருக்கிறோம்.

இப்படி ஈகையிலும் கூட வகைகள் உள்ளன.

ஆனால் தமிழர்கள் இவை எல்லாவற்றிலும் முன்னுதாரணமாக இருப்பதும், கலீல் ஜிப்ரான் என்ற மேலை நாட்டுக்கார எழுத்தாளரின் வார்த்தைகள் எழுதப்படும் முன்பே,  அவர்கள் செயல்படுத்தியதும் நினைவிலாடியது.

தனக்குத் தேவையான தேரை, படர வழியின்றி காற்றில் அலைந்து கொண்டிருந்த முல்லைக் கொடி படர்ந்து தழைக்கக் கொடுத்து விட்டு, நடந்து வந்தவர் பாரி வள்ளல் என்ற தமிழ் மன்னன்.
 
கர்ணன் என்ற புராண கதைப் பாத்திரம் கூட தமிழ் மன்னனிடம் தோற்று விட்டது அல்லவா?

பாரி வள்ளல் தன்மைக்கு முன்னால் நாமெல்லாம் செய்யும் ஈகை ஈகையா?  தனக்குத் தேவையானதை செடிக்கு தானமளித்து விட்டு வரும் அரசனின் அப்போதைய மனநிலை நமக்கு வராது. கணக்கு வழக்குகள் பார்த்துதான் ஈகை செய்வோம். அரசன் செய்வான், நம்மால் முடியுமா? என்று தோன்றும். அதுவல்ல இங்கே காரணம் - அந்த நொடியின் மனநிலை. அவ்வளவுதான். 

* * * 

உலகில் சொல்லப்பட்ட எல்லா நாகரீகத்தினையும் விட, உயர்ந்த நாகரீகத்தையும், பண்பாட்டையும் கொண்ட தமிழர்கள் கீழடி நாகரீகத்தை வெளியிட மறுத்து விட்டார்கள் இந்திய ஒன்றிய மோடி அரசு. அதிகாரங்கள் மாறும் போது, தடை செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்ற அறம் எப்போதும் விழித்திருக்கும்.

யாரும் இங்கே தப்பவே முடியாது. செய்யும் செயலின் பலன்கள் அவரவரைச் சார்ந்தது.

வளமுடன் வாழ்க.


29.07.2025












Wednesday, July 16, 2025

வேத பாடசாலை சம்பவம்

போன் இன்றி ஒரு அணுவும் அசையாத நிலைக்கு உலகம் வந்து விட்டது. ஆதார் கார்டு இன்றி இனி அஃபீஷியலாக எதுவும் செய்ய முடியாது என்று அரசு சொன்னாலும், கோர்ட்டில் ஆதார் அடையாள அட்டை ஒரு ஆவணமே இல்லை என சொல்கிறது ஒன்றிய அரசு. பீகார் ஓட்டு லிஸ்ட் பிரச்சினை தெரியும் தானே உங்களுக்கு. அதைத்தான் சொன்னேன்.

போலி ஆதார் கார்டு கொடுப்பதும், குற்றம் சொல்வதும் அரசாங்கம். சரி செய்ய வேண்டிய அரசாங்கம் வழங்கும் ஒரு முக்கியமான ஆவணத்தை ஏற்க முடியாது எனக் கோர்ட்டில் சொல்வது, என்ன விதமானது என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

போனைத் திறந்தால் பெண் வியாபாரம் கொடி கட்டிப் பறக்கிறது. சோஷியல் மீடியாக்களில் பெண்களின் அரை நிர்வாணமும், பச்சை பச்சையாக பேசும் வீடியோக்களும், ஷார்ட்சுகளும் உலா. 

விஜய் டிவியில் ஆஃபீஸ் என்றொரு தொடரில் ஒரு பெண் நடிக்கிறார். முகத்தில் கொஞ்சம் சிவப்பு தழும்புகளாய். அந்தம்மாவின் இன்ஸ்டாகிராம் ஷார்ட்ஸ் - ஆபாசம். 

விஜய் டிவி தமிழ் கலாச்சாரத்துக்கு பால் ஊற்றிக் கொண்டிருக்கிறது. தாவணி பாவாடை போடச் சொல்லும், ஆனால் கண்டவனை கட்டிப் பிடிக்கச் சொல்லி கலாரசனை நிகழ்ச்சிகளை நடத்தும். யார் இதையெல்லாம் கேட்பது? 

ஒரு நகைக்கடை அதிபரிடம் ஒருவர் எதற்காக விளம்பரங்களுக்கு நடிகைகளைப் பயன்படுத்துகிறீர்கள் எனக் கேட்டார். பணமகள் வேண்டுமென்றால் விலை மகளும் வேண்டும் என்றாராம். மாற்றி எழுதி இருக்கிறேன். விலை மகள் என்றால் விபச்சாரம் என எடுத்துக் கொள்ள கூடாது. பணம் கொடுத்தால் நடிக்க வருகிறார்கள் அல்லவா? அப்படி அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஒரு சம்பவம். இன்றைய மாணவர்களின் நிலை என்னவாகி இருக்கிறது என அறிந்து கொள்ளுங்கள்.

அது ஒரு வேத பாடசாலை. அங்கு பல ஊர்களிலும் இருந்தும் அப்கோர்ஸ் பார்ப்பனர்களின் பசங்க - வேதம் படித்துக் கொண்டிருக்கிறார்கள். 

அங்கு ஒரு மாணவன் - மிக நல்ல குணமும், நல்ல படிப்பும் கொண்டவன். வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அந்தப் பாடசாலைக்கு வேறொரு ஊரில் இருந்து, ஒரு பார்ப்பன சிறுவன் புதிதாக சேர்ந்திருக்கிறான். புதிதாக வந்தவனுக்கு வயது கொஞ்சம் அதிகம். அந்த சின்னப் பையன் நன்றாகப் படிக்கிறானே என உள்ளுக்குள் கொஞ்சம் பொறாமை. 

அவனை இவன் பாத்ரூமிக்குள் அழைத்துச் சென்று பெண்ணின் யோனி படத்தை சுவற்றில் வரைந்து காட்டி, இதைப் பார்த்திருக்கிறாயா? எனக் கேட்டிருக்கிறான். அது மட்டுமின்றி பல்வேறு காமம் தொடர்பான பல சில்மிஷ வேலைகளையும் செய்திருக்கிறான். அவனின் நோக்கம் அந்தச் சிறுவனின் படிப்பைக் கெடுப்பது. 

பையனும் வலையில் வீழ்ந்து அவன் சொன்னவாறு ஏதேதோ செய்திருக்கிறான். நாளடைவில் அந்தப் பையனின் அம்மாவுக்கு விஷயம் தெரிந்திருக்கிறது. பையன் மன உளைச்சலில் மனநிலை பிறழ்ந்து விட்டான். புதிதாக வந்தவன் இவனின் படிப்பையும், நன்னடைத்தையும் காலி செய்து விட்டான்.

இது போன்று வேத பாடசாலையில் மட்டும் நடக்கவில்லை. பல பள்ளிகளில், கல்விக் கூடங்களில் எல்லாக் காலங்களிலும் நடக்கும் கொடுமை. 

எனக்குப் பள்ளியில் எனது பள்ளி வாத்தியாரே செய்தார். அவருக்குப் பிடித்த மாணவனுக்கு அதிக மார்க் போட்டு விடுவார். அந்தக் காலத்தில் இன்றைக்கு இருப்பது போல செல்போன், இணையம் எதுவும் இல்லை. 

பி.இ படிக்க எனக்கு கட் ஆஃப் மார்க் இருந்தும், படிக்க முடியாது எனச் சொல்லி விட்டார். அவர் சொன்னது உண்மை என நம்பி பின்னர் பி.எஸ்.ஸி கணிப்பொறி டிகிரி படித்தேன். 

பின்னாளில் தான் தெரிந்தது, என் மீது எரிச்சலில் இருந்திருக்கிறார் என. ஏன் என எனக்குப் புரிந்தது. என் அப்பாவின் சொத்துக்கள்.

அவனின் அம்மா அந்தப் பையனை அழைத்துக் கொண்டு கோவில் கோவிலாக போய் இருக்கிறார். ஒன்றும் நடக்கவில்லை. மருத்துவமனையில் காட்டி மருந்துகள் கொடுத்திருக்கிறார்கள். ம்ஹூம்.

வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதி - ஜோதி சுவாமியைப் பார்க்க வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு குடும்பத்துடன் வாசியோகப் பயிற்சியைக் கற்றுக் கொடுத்து, ஒரு சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கிறார்.

இந்தப் பையன் வெகு சிரத்தையாகப் பயிற்சியைச் செய்திருக்கிறான். பாடசாலைக்குச் சென்றிருக்கிறான். அந்தப் பையனை எதிர்த்துப் பேசி மூடிட்டு போடானுட்டான். 

பாட சாலையின் குருக்களுக்கு பையனின் நடத்தைகளைப் பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறார். பையனின் அம்மாவுக்குப் போன் செய்து என்ன நடந்தது என விசாரித்திருக்கிறார்.  

இப்போது பையன் மிகச் சரியான வகையில் வேதம் படித்துக் கொண்டிருக்கிறான். அதைக் கேள்விப்பட்ட எனக்கு மிக்க மகிழ்ச்சி. அவன் நன்றாக இருக்க வேண்டும். 

புதிதாக வந்த பையனின் வாழ்க்கையும் சிறக்க வேண்டும். அவனுக்கும் நல்லன நடக்க வேண்டுமென நினைத்துக் கொண்டேன்.

இன்றைய மக்களுக்கு உடனுக்குடன் சினிமாவில் ஒரே பாட்டில் பணக்காரன் ஆவது போல எல்லாமும் நடந்து விட வேண்டுமென ஆவல். அத்தனைக்கும் ஆசைப்படுவதால் வரும் வினை. எதுவும் நடக்காது. திட்டமிடல், செயல்படுத்தல், வெற்றி அடைதல் என்பது வார்த்தைகளில் இருக்கும். ஆனால் உண்மையில் எதுவும் நடக்காது. இழப்பு தான் வரும். அனுபவமே கற்றுக் கொடுக்கும்.

ஒரு வங்கியில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர், தன் ஓய்விற்குப் பிறகு 800 கோடி சம்பாதித்திருக்கிறார். அது எப்படி? சாத்தியமா? எனக் கேட்பீர்கள். ஆம் அவர் சாத்தியப்படுத்தினார். நிறைய வங்கியாளர்கள் ஓய்வு பெறுகிறார்கள். ஆனால் அவர்களால் இந்தளவு சம்பாதிப்பது பற்றி யோசிக்கவே முடியாது.

அனுபவம் என்பது ரொம்பவும் முக்கியமானது வெற்றிக்கு.

உங்கள் குழந்தைகளின் நடத்தைகளை கொஞ்சமாவது கவனியுங்கள். அவர்களின் பாதையில் காமம் பற்றிய சேறு கொட்டிக் கிடக்கிறது. தெரிய கூடாத வயதில் தெரியக் கூடாதவைகளைத் தெரிந்து கொண்டு வழி மாறி விடுகிறார்கள்.

முதலில் சினிமாவை உங்கள் வீட்டில் இருந்து துரத்தி அடியுங்கள். சினிமா ஹீரோக்களும், ஹீரோயின்களும் போலிகள் என்பதை நினைவில் நீங்கள் வையுங்கள். அவர்களின் ஒவ்வொன்றும் போலியானவை - அதாவது நடிப்பு - அது உண்மையில்லை. அவர்கள் உங்களிடமிருந்து பெறுவது உங்கள் வாழ்க்கையை. போலியை நம்பி வாழ்க்கையை இழக்காதீர்கள்.

உங்கள் வாரிசுகளிடம் சொல்லி வளருங்கள். 

சினிமாவில் காட்டப்படுவது போல எவரும் வாழவே முடியாது அஃப்கோர்ஸ் நடிகர்களும் கூட அப்படித்தான் வாழ்கிறார்கள். திரை வாழ்க்கை திரையோடு போய் விடும் என்பதை குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுங்கள். காமத்தின் வழியாக ஒவ்வொருவரின் மனதுக்குள் ஊடுறுவும் போலிகள் - நம்மை ஆட்சி செய்ய - நம்மிடமிருக்கும் செல்வத்தை ஆஹோவென வாழ பயன்படுத்த சினிமா மூலம் தூண்டில் போடுகிறார்கள்.

கவனமாய் இருங்கள்.






Tuesday, June 17, 2025

நிலம் (121) - கட்டிடத்தின் ஒரு பகுதியை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியது என்ன?

சோஷியல் மீடியா மூலம் ஒருவர் என்னை அணுகினார். 

அவருக்கு கோவையில் ஒரு வீடும், நிலமும் இருப்பதாகவும், அந்த நிலத்தினை அவரது சொந்தக்காரர் ஆக்கிரமித்துக் கொண்டு, விற்க விடாமல் செய்கிறார் எனவும், ஆகவே நீங்கள் எனக்கு அந்தச் சொத்தை விற்பனை செய்து கொடுக்க முடியுமா? எனக் கேட்டார். 

ஆவணங்களை வாட்சப்பில் அனுப்பினார். ஒழுங்கற்றவைகளாக இருந்தன.  என்னால் படிக்க முடியவில்லை.

ஆகவே கொரியரில் அனுப்பச் சொன்னேன். 

கொரியரும் வந்தது. 

ஆவணங்களைப் படித்துப் பார்த்ததும் தலை சுற்றியது.

பத்து செண்ட் இடத்தில் கட்டப்பட்ட வீட்டின் மேல் மாடியில் ஒரு போர்சனை மட்டும் அவர் விலைக்கு வாங்கி இருந்தார். அந்த விற்பனைப் பத்திரத்தில் நிலத்தில் உரிமை இல்லை எனத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அதெப்படி நிலத்தில் உரிமை இல்லாமல் தொங்கும் வீட்டினை விற்க முடியும் என சந்தேகம் வந்து விட்டது. அது சட்டப்படி தவறு.

அதைப் பற்றி மேலுமொரு ஒப்பீனியனுக்காக, எனது வக்கீல் நண்பருக்கு ஆவணங்களை அனுப்பி வைத்தேன்.  

இந்த சொத்து முறையற்ற பதிவு அதாவது முழுமையில்லாத பதிவு செய்யப்பட்ட சொத்து. இப்படியெல்லாம் சார் பதிவாளர்கள் சொத்துக்களை பதிவு செய்து கொடுக்கிறார்களா என்பதே ஆச்சரியமாக இருக்கிறது.

இது விற்பனைக்கோ அல்லது வாங்கவோ தகுந்த சொத்து அல்ல என சொன்னார். 

அது தொடர்பான பல நீதிமன்ற வழக்கின் தீர்ப்புகளையும் சுட்டிக் காட்டினார்.

எனக்கு இது புது விதமான பிரச்சினையாக இருந்ததால், எனக்கும் எதற்கும் ஒரு மேல் ஒப்பீனியன் இருக்கட்டுமே என்பதற்காக அவரிடமிருந்து கருத்து பெற்றேன்.

இதில் கொடுமை என்னவென்றால் அந்தச் சொத்து வாங்க லோன் பெற்று, அந்த லோனும் திரும்ப கட்டப்பட்டிருக்கிறது. 

லோன் கொடுத்த மேனேஜர், அதை ஆராய்ந்த லீகல் டீம், வருடம் தோறும் ஆடிட்டிங்க் செய்த டீம் ஆகியோருக்கு இதெல்லாம் தெரியாதா? வங்கியை மோசடி ஆவணங்களை வைத்து, ஏமாற்றி கடன் பெற்று, கடன் கட்டப்பட்டிருக்கிறது.

அவரிடம் இதைச் சொன்ன போது, எப்படியாவது விற்றுக் கொடுங்கள் என  ஆரம்பித்தார். நான் முடியாது எனச் சொன்னேன்.

அடுத்த நிமிடம் எனக்கு ஆவணங்களைத் திரும்ப அனுப்பி வையுங்கள் என்றார். அனுப்பி வைத்து விட்டேன். 

பணம், நேர விரயம் என நினைக்கவில்லை.  அனுபவமாக எடுத்துக் கொண்டேன். 

கட்டப் பட்ட இடமாக இருக்கும் பட்சத்தில், அதில் ஒரு பகுதியை நீங்கள் வாங்க விரும்பினால், அந்த சொத்து அமைந்திருக்கும் இடத்தில் பிரிபடாத பாக நிலத்தினையும் குறிப்பிட்டு - வாங்கிக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வாங்க வில்லையெனில் அது சட்டப்படியான கிரைய ஆவணம் இல்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

அவ்வாறு வாங்கவும் கூடாது, வாங்கினால் வங்கிக் கடன் பெறவும் கூடாது. இரண்டும் சட்ட விரோதம்.

வளமுடன் வாழ்க.


Tuesday, June 3, 2025

நிலம் (120) - மனை அப்ரூவல் நீட்டிக்கப்பட்டுள்ளது

டிடிசிபி, எல்.பி.ஏ., சி.எம்.டி.ஏ. ஆகிய மனை அப்ரூவல் செய்யும் அமைப்புகள் இருந்த போது, ரியல் எஸ்டேட் செய்த பலர், பஞ்சாயத்து போர்டு அப்ரூவல் என ஒரு பொய்யை சொல்லி வீட்டு மனைகளை விற்பனை செய்து வந்தனர்.

இது பற்றி ஆளும் அரசுகளுக்கு நன்கு தெரிந்தும் கண்டும் காணாமலும் இருந்தனர். யானை ராஜேந்திரன் என்பவர் ஹை கோர்ட்டில் வழக்கு தொடுத்து, 2016ஆம் ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட அன் அப்ரூவ்ட் வீட்டு மனைகளை வரன்முறை செய்து கொள்ள அன்றைக்கு ஆண்ட அதிமுக அரசு வரன்முறை திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்த திட்டத்தில் ஏக போக பலன் அடைந்தவர்கள் யார், எத்தனை ஆயிரம் கோடி பணம் வசூலிக்கப்பட்டது என்பது பெரும்பாலான பொது மக்களுக்கு தெரிந்திருக்காது. ஆனால் வீட்டு மனைகளை வாங்கிய மக்களுக்குத் தெரியும்.  

சதுர அடிக்கு இவ்வளவு என பணம் புரண்டது. ஏமாந்தவர்களுக்கு தண்டனை. ஏமாற்றியவர்களுக்கு அரசு அனுமதி,

ஒரு சட்ட மீறல், அதற்கு ஒரு அங்கீகாரம் என சட்டத்தை கேவலப்படுத்தினார்கள். தேவையில்லாமல் மேலே குறிப்பிட்ட மூன்று அமைப்புகளும் எதற்கு? 

என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள், ஒரு புது அறிவிப்பைப் போட்டு, அதை சட்டமாக்கி விடுவோம் என்பதெல்லாம் எவ்வளவு அவலமானது. 

வரன்முறை படுத்தாத மனைகளை விற்றவர்கள் ஜாலியாக இருந்தனர். சட்டப்படி வீட்டு மனைகளை வரன்முறை செய்து விற்பனை செய்தவர்கள் ஏமாளிகள் அல்லவா?

சட்டத்தை மதித்தால் இதுதான் பலனா? 

ஏழைகளுக்கு மிக குறைந்த விலையில் வீட்டு மனை கிடைத்தது என்று பேசலாம். ஆனால் அது சட்டப்படி தவறு அல்லவா? இப்போது மீண்டும் செலவு செய்ய வேண்டிய நிலை. அதற்கு அப்ரூவல் மனைகளை வாங்கி இருக்கலாம் அல்லவா?

இது ஒரு பக்கம். நேற்று காளப்பட்டி வரை செல்ல வேண்டி இருந்தது. 

கோவையில் சாலை விதி மீறல்கள் வாடிக்கை. காவல்துறை எவ்வளவுதான் அபராதம் விதித்தாலும் எவரும் திருந்துவதாக இல்லை. இரு சக்கர வாகனங்கள் மட்டுமல்ல, பாதசாரிகளும் விதி மீறல்களை செய்கிறார்கள்.  நேற்று ஒரு பைக்கில் இரு வாலிபர்கள், அவிநாசி சாலையில் கட் அடித்து படு வேகமாக செல்கிறார்கள். அதைப் பார்க்கும் பலருக்கும் அதிர்ச்சி.  

என்ன செய்ய முடியும்?

சுய ஒழுக்கமும், சுய ஒழுங்கும் இல்லாத ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி இருக்கிறோம். 

சட்ட மீறலை ஹீரோயிசம் என நம்ப வைக்கப்படுகிறோம் பலரால். இந்த நிலை எல்லோருக்கும் பிரச்சினையை தரும். நன்மையை தராது.  மக்கள் தான் திருந்த வேண்டும். 

இனி செய்தி.

நேற்று திமுக அரசு அன் அப்ரூவ்டு வீட்டு மனைகளை அப்ரூவல் செய்யும் காலத்தை நீட்டித்து உள்ளது. கீழே இருக்கும் இணைப்பில் அப்ளை செய்து, செய்ய வேண்டியதை செய்து, பலன் பெறுக.

http://www.tnlayoutreg.in/

டிடிசிபி இணைய தளத்தில் முன்பு அப்ரூவ்ட் வீட்டு மனைகளின் வரை படங்கள் மற்றும் நிலத்தின் உபயோக தன்மையை அறிந்து கொள்ளும் வசதிகள் இருந்தன. இப்போது அவைகளை நீக்கி விட்டார்கள். அலுவலகம் சென்று விண்ணப்பித்து, வரைபடங்களை பெற வேண்டும். 

இது பற்றி முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பி வைத்தேன். டிடிசிபி அலுவலகத்திலிருந்து பதில் வந்தது, அந்த இணைய தள சுட்டி வேலை செய்கிறது என. ஆனால் வேலை செய்யவில்லை. மீண்டும் மேல் முறையீடு செய்தேன். பலன் இல்லை. இப்போதும் வேலை செய்யவில்லை. ஏற்கனவே இருந்த வசதியை நீக்கி விட்டார்கள். ஏன் என தெரியவில்லை. இரண்டாவது முறையீடு செய்தும் ஒரே பதில். 


மேலே இருப்பது எனக்கு வந்த பதில்.

ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட வீட்டு மனைகளின் வரைபடத்தையும், நில உபயோகம் ஆகிய விபரத்தையும் ஆன்லைனில் அரசு வெளியிட அதிகாரிகளுக்கு உத்தர விட வேண்டும். இது நிலமோ அல்லது வீட்டு மனையோ வாங்குபவரகளுக்கு நன்மை தரும். 

ஒருங்கிணைந்த அந்த இணைய தள சுட்டியை மீண்டும் உபயோகப்படுத்த அனுமதிக்கவும். அரசு ஆவண செய்யும் என நம்புவோம். நம்பிக்கை தானே வாழ்க்கை.

நான் முதலமைச்சர் தனிப்பிரிவுக்கு அனுப்பிய விண்ணப்பம் கீழே.



வளமுடன் வாழ்க.



Friday, May 9, 2025

வாழ்க்கையின் நிலையாமை - அபூர்வம் சித்தியின் மறைவு

பத்தாம் வகுப்பு வரை ஆவணம் மேல் நிலைப்பள்ளியில் படித்தேன். மூன்று சக்கர சைக்கிள் உதவியுடன் பள்ளித் தோழர்களின் உதவியால் வீட்டுக்கும் பள்ளிக்கும் சென்று வருவது பிரச்சினையாக இல்லை. பனிரெண்டாம் வகுப்புக்கு கீரமங்கலம் அரசு உயர் நிலைப்பள்ளியில் படிக்க வேண்டி இருந்தது.

மச்சான் ஆத்மநாதன் அங்கு தான் படித்தான். இருவரும் பள்ளிக்கு சென்று வருவோம். இடையில் என் அம்மாவுக்கும், அவனது அம்மாவுக்கும் கிராமத்து சண்டை வர, அவன் என்னை சைக்கிளில் அழைத்து செல்ல மறுத்து விட்டான். ஒரு வாரம் லீவு. 

ஒரு வழியாக நெடுவாசலில் இருந்து வரும் பாலநாதன் என்னை அழைத்துச் செல்வான். கிட்டத்தட்ட 7 கிலோ மீட்டர் தூரம். ஆவணம் கைகாட்டியில் இருந்து செல்லும் ஆனந்தனும் அழைத்துச் செல்வான். ஒரு கட்டத்தில் கீரமங்கலத்தில் தங்கும் அறையொன்றினை வாடகைக்குப் பிடித்து தங்கி விட்டேன். 

கீரமங்கலம் போலீஸ் ஸ்டேசன் பின்னால் தங்கும் அறை.  மண்பானை விற்ற பள்ளித் தோழன் இப்ராம்ஷா உதவி. தினமும் காலையில் ஹோட்டலில் இட்லி, மதியம் பட்டினி, இரவில் ஒரு தோசை என ஏற்பாடு. அரசு ஹாஸ்டலில் தங்க எனக்கு அனுமதி கிடைத்தது. அது ஒரு நரகம். சாப்பாடோ கொடுமை.

இப்படித்தான் எனது உயர்நிலை பள்ளிக் கல்வி கடந்தது. பெரிய கொடுமையை அனுபவித்தேன். சாப்பாடு கிடைக்காது. இப்ராம்ஷா வரவில்லை எனில் அல்லது மறந்து விட்டாலோ பட்டினி. பள்ளிக்கும் போக முடியாது. அன்றைக்கு லீவு. இந்த லட்சணத்தில் எங்கே படிப்பது? ஒரு வழியாக முட்டி மோதி படித்துக் கொண்டிருந்தேன்.

அபூர்வம் சின்னம்மா பைங்கால். கீரமங்கலத்துக்கு பக்கத்து ஊர். சித்தப்பா நாகப்பன். அவர்களுக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை பாக்கியம் இல்லை. என் அப்பாவின் தங்கையின் மகள். சித்தி கூட பிறந்தது வீரப்பன், குட்டியப்பன், வீரியம்மாள், சிவையாள், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என ஏழு பேர். 

அம்மா சித்தியிடம் பேசி, பைங்காலில் தங்கிக் கொண்டு, நாகப்பன் சித்தப்பாவின் அண்ணன் மகன் நடராஜனுடன் கீரமங்கலம் பள்ளிக்கு சென்று வர ஏற்பாடு செய்தார்கள்.

பைங்கால் வாசி ஆகி விட்டேன். ரெஸ்ட் ரூம் பெரிய பிரச்சினை. குளிக்க ஆத்துக்கு நடராஜன் அழைத்து செல்வான். நினைத்தவுடன் ஒன்றுக்கு போக முடியாது. கிராமங்களில் கழிவறையெல்லாம் இருக்காது. ஒப்பன் கழிவறை. என் நிலையெல்லாம் நினைத்துப் பாருங்கள். வாழும் போதே நரகத்தை அனுபவித்தேன்.

சித்தி வீடு எனக்கு சொர்க்கம். சித்தப்பா பாலனின் மகள் மாலதி எனது தங்கை, அங்கையற்கண்ணி இன்னொரு தங்கை, ராமசாமி தம்பி, பாட்டி மற்றும் நடராஜன் என உறவுகள். விடிகாலையில் மாலதி ஒரு குவளை காப்பி தரும். 

அடுத்த ஒரு மணி நேரத்தில் அபூர்வம் சித்தி எருமை பாலில் காப்பி தரும். தினமும் சூடான சாப்பாடு. மாலதி தினமும் வெண்ணெய் கொண்டு வந்து சோற்றுக்குள் வைக்கும். நெடுவாசலில் கட்டிக் கொடுத்த மாலதி, ஏதோ பிரச்சினையால் இறந்து போச்சு. இன்று வரை என்னால் மறக்கவே முடியாத தங்கை. மாலதி என யாரவது தெரிந்தால் போதும், கண்கள் கலங்கி விடும்.

பள்ளிக்கு பத்து பைசா வாங்கி செல்லும் அங்கையற்கண்ணி, ஒரு மிட்டாய் வாங்கி உள்ளங்கைக்குள் வைத்து கொண்டு, மாலையில் பள்ளியில் இருந்து வரும் எனக்கு ஈரத்தால் கசிந்து போனதை தரும். ராமசாமி இரவில் என்னுடன் படுத்துக் கொள்வான். கொல்லைப்பக்கம் போக எனக்கு உதவி செய்வான். 

மாலையில் பாட்டியின் படுக்கையில் தான் படுத்திருப்பேன். தூங்கி விடுவேன். பாட்டி தனது சேலையால் போர்த்தி விட்டு, சத்தம் காட்டாமல் இருப்பார்கள். அபூர்வம் சித்தி ஒன்பது மணிபோல எழுப்பி வேறு அறையில் தூங்க வைக்கும்.

நாகப்பன் சித்தப்பா கீரமங்கலம் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று திரும்பி வரும் போது, பலகாரம் வாங்கி வருவார். இரவில் எழுப்பி சாப்பிட சொல்வார். தூக்க கலக்கத்துடன் சாப்பிட்டு விட்டு, தூங்கி விடுவேன். பாப்பாத்தி சித்தி, அவ்வப்போது வீட்டில் ஏதாவது ஸ்பெஷல் செய்தால் கொண்டு வந்து தரும்.

அபூர்வம் சித்தியின் கைப்பக்குவம் போல யாருக்கும் வாய்க்காது. இறால் குழம்பும், வறுவலும், மீன் குழம்பும், மீன் வறுவலும், சாம்பாரும், வற்றல் குழம்பு, ரசம் - சொல்லால் எழுத முடியாது. வாரா வாரம் பேராவூரணிக்கு சென்று வரும் சித்தி, எனக்கு பலகாரகங்கள் வாங்கி தரும். ஒரு வாரம் பலகாரகங்கள் சாப்பிட வரும்.

கெச்சலான உடல். திருத்திய முகம் என தெய்வாம்சம் பொருந்திய சித்தி இன்றைக்கு இல்லை. அவர் இறைவனை நாடி சென்று விட்டார். பல்வேறு பணி சுமைகளால் என்னால் அவர் உடல் நிலை சரியில்லாத நிலையில் சென்று பார்க்க முடியவில்லை. நேற்றைக்கு முதல் நாள் இரவு 11 மணிக்கு காலமாகி விட்டார் என அண்ணன் கேசவன் சொன்னார். 

அபூர்வம் சித்தி - நாசூக்கானவர். அவரின் உடை உடுத்தும் விதம், மற்றவர்களுடன் உரையாடும் விதம், பேசும் விதம் எல்லாம் கெத்தாக இருக்கும். வீரப்பன் மாமா, குட்டியப்பன் மாமா - அபூர்வம் சித்தி மூவரும் ஒரே மாதிரி இருப்பார்கள். இறந்து போன எனது தாய்மாமா அருணாசலத்துக்கும், என் அம்மாவுக்கும் பிடித்தவர். 

விடிகாலையில் எழுந்து வாசல் பெருக்கி, மாடுகளுக்கு தீவனம் போட்டு, சாணக் கழிவுகளை எடுத்து, பால் கறந்து, உலை வைத்து சோறு பொங்க அடுப்பை தூண்டி விட்டு, எனக்கு காப்பி போட்டுக் கொடுத்து விட்டு, வயல்காட்டுக்கு சென்று, வேலையாட்களை பார்த்து விட்டு, சித்தப்பாவுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு என பம்பரம் தோற்றுப் போய் விடும். நினைத்துப் பார்க்க முடியாது. ஓயாது ஒழியாது வேலை வேலை என ஓடிக் கொண்டே இருப்பார்கள்.

மூன்று மாதங்கள் என நினைவு. சித்தி வீட்டில் இருந்து பள்ளி சென்று வந்து பனிரெண்டாம் வகுப்பு முடித்தேன். நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு கோவை வீட்டுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் கேட்டது எல்லாம் வாங்கிக் கொடுத்தேன். ஊருக்கு சென்று வரும் போதெல்லாம் சித்தப்பாவையும், சித்தியையும் பார்த்து விட்டு வருவேன். இனி?

சித்தப்பாவுடன் கல்யாணத்துக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது - டிவிஎஸ் பைக்கின் பின்புறம் அமர்ந்து இருந்தவர் பின்னால் விழுந்து விட்டார். தலையில் அடி. சித்தப்பா பெரிய செலவு செய்து சிகிச்சை கொடுத்தார். சித்திக்கு சரியாகவில்லை. 

எல்லோருக்கும் பிடித்த அவர் இன்று இல்லை. அவரை இழந்து வாடும் சித்தப்பாவுக்கு என்ன ஆறுதல் சொன்னாலும் தகாது. சித்தியின் மகன் நீதிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனவும் தெரியவில்லை.

என்னால் இந்த இழப்பில் இருந்து மீள முடியவில்லை. அம்மா, அப்புறம் சித்தி என இயற்கையின் செயலால் உண்டான இழப்புகள் என்னை வாட்டி வதைக்கிறது. 

சித்தியின் ஆத்மா சாந்தியடைய இறைவனிடம் பிராத்தனை செய்து கொள்கிறேன்

 09.05.2024 (5.25AM)