குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, June 8, 2022

நரலீலைகள் (13) - சொம்புத்தண்ணீரும் இணையதள சந்தாவும்


”அகலிகை கதை தெரியுமா சந்து உனக்கு?”

”நீ வேற மாயா, அதெல்லாம் யாருன்னே தெரியாது. பேரைப் பார்த்தா பொம்பளைன்னு தெரியுது? அதாரு?”

”பாற்கடலைக் கடையும் போது அமிர்தத்துடன் பிறந்தவள் அகலிகை. அகலிகைன்னா அழகு குறைவு இல்லாத உடலுடையவள் என்று அர்த்தம். இவளைப் பார்த்ததும் தேவர்கள் மோகித்து அவரவருக்கு பிரம்மனிடம் அகலிகையை எனக்கு கொடுங்கள் என்று கேட்க இதென்னடா வம்பா போச்சுன்னு நினைச்சுகிட்டு ஒரு போட்டி வச்சாரு பிரம்மன்”

”அட்ட...! என்னா போட்டி மாயா?”

அகலிகையை எப்படியாவது போட்டுத் தாக்கனும்னு இந்திரனுக்கு ஆசை. யார் இரண்டு தலையுடைய பசுவை வலம் வருகிறார்களோ அவர்களுக்குத்தான் அகலிகை என்று சொல்லி விட்டார் பிரம்மன். தேவர்கள் எல்லோரும் யோசித்து யோசித்துப் பார்த்தார்கள். எங்கே போய் இரண்டு தலை உடைய பசுவைக் கண்டுபிடிக்கிறது, அதற்கப்புறம் அகலிகையை மேட்டரு பன்னுவது என்ற சூட்டில் தவித்துப் போய் மீண்டும் பிரம்மனிடம் சென்றார்கள். இரண்டு தலை உள்ள பசுவைப் பார்த்ததே இல்லை, அதனாலே வேற போட்டி வையுங்கன்னு சொல்ல, அவரும் யாரு உலகை முதலில் சுற்றி வருகின்றீர்களோ அவர்களுக்கு தான் அகலிகை என்றுச் சொல்லி விட்டார்.

ஆளாளுக்கு உலகை வலம் வர அவரவர் வாகனங்களில் கிளம்பி விட்டார்கள். தமிழ்நாட்டுக்கு ஒரு நாறிப் போன நாதாரி நாரதர் வேலை பார்த்துச்சே ’சோ’மாறி போல தேவலோகத்தில இருக்கிற நாரதர் அகலிகையை கவுதம முனிவருக்கு கட்டி வச்சுடனும்னு திட்டம் போட்டு ஒரு கருப்பிடித்து குட்டி போடும் நிலையில் இருக்கும் காராம் பசுவை கொண்டு போய் கவுதம முனிவரின் ஆசிரமத்தின் முன்னாலே கட்டி விட்டு முனிவரை அழைத்தார். வெளியே வந்த கவுதம முனிவரை குட்டி ஈன்ற போது கன்றின் முகம் தோன்ற, அந்த நிலையில் பசுமாடு இரண்டு தலையுடையதாக இருப்பதைக் காட்டி, பசுமாட்டைச் சுற்றி வரச் சொன்னார் நாரத முனிவர். அதன்படியே முனிவரும் செய்ய பிரம்மன் விதித்த போட்டியை நிறைவேற்றிய கவுதம முனிவருக்கு அகலிகையை கட்டி வைத்து விட்டார் பிரம்மன்.

உலகம் சுற்றி வந்து பார்த்த இந்திரனுக்கு தலையே சுற்றியது. உலகத்தை வலம் வருவதற்குள் கவுதம முனிவருக்கு பிள்ளையே பெற்றுக் கொடுத்து விட்டாள் அகலிகை. 

வெறுத்துப் போன இந்திரனுக்கு அகலிகையை எப்படியாவது டீல் போட்டு விடனும்னு துடியா துடித்தான். 

ஒரு நாள் பின் இரவில் சேவல் போல கூவினான். கவுதம முனிவர் காலைக்கடன் கழிக்க ஆற்றுக்குச் சென்றிருந்தார். அப்போது முனிவராக மாறி அகலிகையை மேட்டர் போட அணுக, அவளும் புருஷன் தானே என தழுவிக் கொள்ள கசமுசா நடந்து கொண்டிருந்தது. 

ஆற்றுக்குப் போன முனிவருக்கு விடிகாலை நேரமில்லையே என்ற சந்தேகத்தில் வீட்டுக்கு வர, அகலிகையை உடன் மேட்டர் முடித்த இந்திரனைக் கண்டு கொண்டார் முனிவர். உடனே சாபம் விட்டார். 

அகலிகையை கற்பு தவறிய நீ கல்லாய் போக என்றுச் சொல்லி விட, சாபத்தை ஏற்றுக் கொண்டாள். பின்னர் அகலிகை முனிவரைப் பணிந்து சாப விமோசனம் கேட்க, தசரத முனிவரின் மகனான இராமன் பாதம் பட்டால் உன் சாபம் தீரும் என்றுச் சொல்லி விட்டார். 

இந்திரனுக்கு வேறு சாபம். அது இங்கின வேண்டாம். 

அகலிகை இராமன் பிறந்து அதான்பா மசூதியை இடித்து விட்டு ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டிருக்கிற இடத்தில் அருள் பாலிக்க இருக்கும் இராமன் பிறந்து வளர்ந்து இளைஞனாகி நடந்து வரும் போது சாப நிவர்த்தியாகி அகலிகை மீண்டும் உருக்கொண்டு தெய்வலோகம் சென்றாள்.

”ஏன் மாயா? ஒரு சொம்புத் தண்ணீரில் முடிய வேண்டிய மேட்டருக்கு இத்தனை வருடம் காத்திருக்கணுமா அகலி? பாவம் மாயா அந்தப் பொம்பள”

“என்னடா சொல்றே?”

“அதான்பா, மேட்டரு முடிஞ்ச உடனே கழுவி விட்டா போச்சு, அம்புட்டுதானே” என்றான் சட்டென்று சந்து. ஏதோ சொல்ல வந்த மாயாவைப் பார்த்து, ”மாயா, நிறுத்து நிறுத்து” என்று கத்தினான் தங்கவேல்.

மாயனுக்கு ஒன்றும் புரியவில்லை. இதென்ன தங்கவேல் இப்படிக் கத்துகிறானே என்று புரியாமல் மாயாவும், சந்துவும் திகைத்து நிற்க, கோபத்தில் பற்களை நற நறவெனக் கடித்தான் தங்கவேல்.

“என்ன ஆசிரியரே? என்ன ஆச்சு உங்களுக்கு?” என்று நயமாகக் கேட்டான் சந்து.

“அக்ரகாரத்துல இருந்து தெவசத்துக்கு வந்த பான், கையிலை தர்ப்பையை மாட்டி விட்டு, கோத்திரம் என்னன்னு கேட்டான். எனக்குத் தெரியலன்னு சொன்னேண்டா. அதுக்கு அவன் நீங்க கவுதம கோத்திரம்னான். அடங்கொய்யால பயலே, இப்பத்தாண்டா தெரியுது? உங்க லொள்ளு” என்று அருகில் இருந்த மேசை மீது ஓங்கிக் குத்தினான்.

குத்துன குத்துல மேசையில் இருந்தவை ரெண்டு இஞ்சு மேலே போய் மீண்டும் மேசை மீது விழ, எழுந்த சத்தத்தில் மாயனுக்கும் சந்துவுக்கு வெலவெலத்துப் போனது.

இப்படி ஒரு குட்டிக் கதையை தங்கவேல் இடையில் சொருகி விட்டானே என்று மாயா திகைத்துப் போனான்.

சந்துவோ சத்தம் காட்டாமல் உள்ளுக்குள் சிரித்துக் கொண்டிருந்தான். தங்கவேலுக்கோ உள்ளுக்குள் உலைக்கலன் போல கொதிக்க ஆரம்பித்தது.

* * *

விலை போகா சரக்கை எப்படி விற்பது?

இணையதளம் தொடங்கணும் முதலில். 

சரக்கு வைரம் போல, வைடூரியம் போல, மாணிக்கம் போல. யாருக்கும் சரக்கின் அருமை தெரியவில்லை. இதைப் போன்றதொரு சரக்கை யாரும் இலவசமாகத் தரமாட்டார்கள். ஆனாலும் தருகிறோம். அதற்காக வேண்டியாவது பேரன்பு கொண்ட மக்கள் சந்தா கொடுங்கள் என்று உருக்கமாக வேண்டுகோள் விடுக்க வேண்டும். 

கவனிக்க உருக்கமான வேண்டுகோள் விடுத்தல் அவசியம். 

சந்தாக்கள் 1000,2000,5000,10000,25000 என இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதுமட்டும் போதாது.

“யாரோ ஒருத்தன் பொண்டாட்டி, அவள் காலுக்கு கீழே பல குஞ்சு” என்ற புத்தகத்தை எவனாவது அல்லக்கையின் பேர் போட்டு எழுதி பதிப்பிக்க வேண்டும். 

விஜய் டிவி கோட்டு கோபிநாத்தை வைத்து டாக் ஷோவில் கருத்துச் சொல்ல அழைக்க வேண்டும். மேட்டர் ஓவர். விஜய் டிவி பார்க்கும் ரசிகர்கள் குஞ்சு புத்தகத்தை வாங்கிக் குவித்து விடுவார்கள். 

அடிப்பொடி அங்கன இந்த சரக்கு விபரத்தை ரசிகர்களிடம் பகிர்ந்து கொள்வது அவசியமான அவசியம்.

இம்புட்டுதான் தந்திரம். 

விற்பனை தந்திரத்தினை விரிவாக எடுத்துரைத்த மாயாவுக்கு நன்றியினைத் தெரிவித்து அமர்கிறேன் என்றான் சந்து மைக்கில்.

* * *

அசாசிலின் வேண்டுகோள்

தமிழ் உலக கலா ரசிகப் பெருமக்களே, ஊ சொல்றியா மாமா, ஊ...ப சொல்றியா மாமா என்ற பாடலை பெரும் புகழடைய வைத்தவர்களே, கலைக்கெனவே பிறப்பெடுத்து இதுவரையிலும் தெரியவே தெரியாத நடிப்பை, நடிகையின் கவட்டிக்குள் உற்றுப் பார்த்து தேடிக் கொண்டிருக்கும் ரசிக கண்மணிகளே, நாளை நடிகைக்கு நாட்டையே ஓட்டுப் போட்டுக் கொடுக்கவிருக்கும் மாபெரும் தியாகிகளே, தயவு செய்து சந்தாவைச் செலுத்தி விடுங்கள் என்று வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறேன். 

உலகில் எவனும் இதுவரை தயாரிக்காத பொருளை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கும் இணையதள உரிமையாளரை வாழ்வியுங்கள். நடிகைக்கே நாடு என்றால், இவருக்கு உலகத்தையே பரிசளிக்கலாம் அல்லவா?

இப்படிக்கு அஸாஸில்.

* * *

நம்பூதிரி பெட்ரூம் கதவைத் திறந்து பார்க்க அக்மார்க் வெள்ளைகாரன் போல படுத்திருந்தான் பாரிஸ்டர் மகன். தலைமுடி மட்டும் கருப்பு கலர். எல்லாம் பெருமாள் செயல். முடிமட்டும் கருப்பாக இல்லையென்றால் ஊரே சிரிக்குமே என்று மனதுக்குள் பெருமாளுக்கு தோத்திரத்தினைச் சொல்லிக் கொண்டே கைகூப்பினார்.

”என்னே பெருமாளின் கருணை?”

பெருமூச்சு விட்டுக் கொண்டு பாகீரதி ரூமுக்குள் நுழைந்தார். பாகீரதி பெட்ரூமில் ஒயிலாக படுத்திருந்தாள். அவளருகில் ஒரு சொம்பு இருந்தது. அதில் தண்ணீர் நிரப்பி மூடி போட்டிருந்தது.

கொசுவத்தி சுருளைப் பின்னாலே சுத்தினால், அலுவலகத்திலிருந்து நம்பூதிரி சோகத்துடன் வந்திருந்ததைப் பார்த்த பாகீரதி என்னவென்று விசாரிக்க, அகலிகை மேட்டரை சொன்னார். பாகீரதிக்கு பட்டென்று பற்றிக் கொண்டது விஷயம். 

”கவலைப்படாதேங்கோ, ஒரு சொம்புத் தண்ணீ போதுண்ணா, சடுதியில் வந்துட்றேன்னா” என்று பாகீரதி சொம்புடன் சென்றாள்.

கொசுவத்தி சுருள் சுற்றுவதை நிறுத்தினால், அந்தச் சொம்பையே பார்த்துக் கொண்டிருந்தார் நம்பூதிரி.

* * *

குறிப்பு : நரலீலைகள் ஒரு கட்டுகதை (ஃபிக்‌ஷன்). யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போது ஃபிக்‌ஷன் நாவல்கள் தான் பிரபலமாகுவதால் எனக்குத் தெரிந்த வகையில் எழுதிக் கொண்டிருக்கிறேன். படிக்கும் வாசகர்கள் தவறிருந்தால் மன்னித்தருள்க.


நிலம் (99) - கிராம வரைபடத்தில் இல்லாத நிலங்கள்

வருவாய்துறையில் நடைபெறும் வில்லங்க விவகாரங்களைச் சரி செய்து விட்டார் என்றால் ஸ்டாலின் தான் தமிழ் நாட்டின் நிரந்தர முதலமைச்சராக இருப்பார். அந்தளவுக்கு வில்லங்கங்களும், விவகாரங்களும், அதிகார துஷ்பிரயோகங்களும், அக்கிரமங்களும் நடைபெறும் துறையாக வருவாய் துறை தொடர்ந்து பீடு நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

ஒரு கிராமத்தில் இருக்கும் நிலங்களை வரைபடமிட்டு, அதற்கு சர்வே எண் குறித்து ஆங்கிலேயர்கள் காலத்தில் நிலங்கள் வரையறை செய்யப்பட்டு விட்டன. இல்லையென்றால் நினைத்துக் கூட பார்க்க முடியாது.

பைமாஷ் - சர்வே எண் என மாறிவிட்டது. இந்த பைமாஷ் கணக்கே இன்னும் சரியாகவில்லை. இதற்கிடையில் கொரலேஷன் அதாவது சர்வே எண்கள் இணைப்பு, நகர எல்லை விரிவாக்கம், வார்டுகள் மறுவரையறை ஆகியவற்றில் தமிழ் நாடு வருவாய்த்துறையினர் செய்யும் அழிச்சாட்டியம் கொஞ்சமல்ல. பைமாஷ் நம்பர், கிராமத்தின் பெயர், பழைய வார்டு, புது வார்டு, பிளாக், அதன் டி.எஸ் நெம்பர் என எதற்கும் அப்டேட் இருக்காது. எந்த பைமாஷ் நம்பருக்கு எந்த சர்வே நம்பர் அதன் பின்பு நகரமாக்கும் போது வழங்கப்பட்ட டி.எஸ். நம்பர் என்ன? பழைய சர்வே எண்ணில் உள்ள நிலம் அனைத்தும் ஒரே டி.எஸ். நம்பருக்குள் இருக்கிறதா? இல்லை பிரிபட்டிருக்கிறதா? என்ற விபரங்களைத் தேடினால் தலையில் இருக்கும் முடி ஒன்று கூட இருக்காது. அவ்வளவு குழப்பம். 

அத்தனை தகவல்களையும் பொதுமக்களுக்கு தராமல் தங்களிடம் வைத்துக் கொண்டு லஞ்சம் பெற்றுக் கொண்டு ஒரு சர்வே எண் விபரம் தருவார்கள். இதைப் போல எத்தனை கிராமங்கள்? எத்தனை சர்வே எண்கள்? நினைத்துப் பாருங்கள். எவ்வளவு லஞ்சம் என?

இதற்குள் சிக்கி என்னவென்று தெரியாமல் பலரும் பல இடங்களை வாங்கி அல்லல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இணையதளத்தில் ஓசியில் விபரம் கேட்கின்றார்கள். கோடிக்கணக்கில் பணம் முதலீடு செய்பவர்கள் நல்ல ஒரு லீகல் அட்வைசரிடம் கருத்துரு பெற்றால் என்ன கெட்டுப் போய் விடுகிறது? ஆனாலும் நப்பாசை விடுவதில்லை. அவரா நம்மை ஏமாற்றி விடப்போகிறார் என்று தனக்குள்ளே ஒரு சமாதானம்.

நகர எல்லைக்குள் ஒரு கிராமம் வந்து விட்டால் விலை ஏறும் என்ற ஆசையில் எவரும் வார்டு, பிளாக், டி.எஸ். நம்பர்கள், நிலங்கள் பற்றி கவனிப்பதில்லை. அதே போல கிராமபுறங்களில் கொரலேஷன் செய்த விபரங்களையும் ஒப்பிட்டு பார்ப்பதில்லை. கொரலேஷன் என்றால் பல சர்வே எண்களை ஒன்றாக இணைத்தும், பிரித்தும் புதிய சர்வே எண்களை உருவாக்குவது. இப்படியான கொரலேஷன்களில் பலரின் இடங்கள் காணாமல் போய் விடும். இது வருவாய் துறையினரால் செய்யும் செயலன்று. அங்கிருக்கும் ஒரு சில ஆடுகள் செய்யும் வேலையாக இருக்கும். கண்காணிப்பு இருந்தாலும் ஏமாற்றித் திருடும் கூட்டமும் இருக்கத்தானே செய்கிறது.

இதைப் போன்ற இடங்களை வாங்கும் போது வெகு கவனம் தேவை. பெரும்பாலும் எல்லா மாவட்டங்களிலும் இந்த கொரலேஷன் நடந்திருக்கிறது என்று தெரிய வந்துள்ளது. கவனமாக இருந்து கொள்ளுங்கள். என்னால் இவ்வளவு தான் சொல்ல முடியும். முழுவதையும் எழுத இயலாது.

நில அளவை துறையினிலோ பல கிராம புல வரைபடங்கள் காணவில்லை. அது குறித்து இமெயில் அனுப்பி, போனில் பேசியும் ஐந்தாறு மாதமாக ஒரு கிராமத்தின் புல வரைபடத்தை அப்டேட் செய்யவே மாட்டேன் என்கிறார்கள்.

கீழே இருக்கும் இணைப்பினைக் கிளிக் செய்து படியுங்கள்.

சென்னை வரைபடத்தில் இல்லாத சுமார் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை தனியார் நிறுவனத்திற்கு பட்டா வழங்க மறுத்ததால் சென்னை கலெக்டர் விஜயராணி IAS மாற்றம் !? திடுக்கிடும் தகவல் !! வருவாய்த்துறை நிர்வாக ஆணையர் மூலம் பழி வாங்கிய முதல்வர் தனிச் செயலாளர்!?

செய்தியின் உண்மைத்தன்மைக்கு நான் பொறுப்பாளி அல்ல. இப்படியெல்லாம் நடக்குமா என்றால் ஆம் நடக்கும். கவனமாக இருக்க வேண்டியது நாம் தான். 

சமீபத்தில் ஒரு கோர்ட் உத்தரவு படித்தேன். மேய்க்கால் புறம்போக்கு நிலங்களை வகை மாற்றம் செய்யவே கூடாது என்கிறது அந்த உத்தரவு. பெரும்பாலும் கிராமப்புறங்களில் மேய்கால் நிலங்கள் வகை மாற்றம் செய்யப்பட்டு பொது மக்களுக்கு பட்டா வழங்கி இருக்கிறார்கள். அவர்களின் கதி என்னவாகும்? என்று தெரியாது.

அதென்ன மேய்க்கால், மேய்ச்ச்சல் நிலம் என்ற கேள்வி எழும்பினால் இந்த பிளாக்கில் எழுதி இருக்கிறேன். படித்துக் கொள்ளுங்கள்.

* * *

Sunday, May 29, 2022

96 வருட பாரம்பரிய விகடனுக்கு முதல்வர் ஸ்டாலினால் தூக்கம் வரவில்லை

உச்சிக் குடுமியை விகடன் நினைத்தாலும் மறைக்க முடிவதில்லை. ஏனென்றால் வித்து அப்படி. தமிழர்களுக்கு விரோதமான செய்திகளை நாசூக்காக வெளியிட்டு வருவதில் விகடனுக்கு நிகர் விகடன் அன்றி வேறு எவருமில்லை. 

இவ்வளவுக்கும் விகடன் டெலிவிஸ்டாஸ் சன் டிவியில் கல்லா கட்டி வருகிறது. வயிறு வளர்ப்பது தமிழர்களின் காசில். செய்வது எல்லாம் தமிழர்களுக்கு துரோகம்.

அப்படி என்ன செய்கிறது விகடன்?

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு பொள்ளாச்சியில் நானும் எனது நண்பரும் ஒரு தென்னை தோப்பு விலைக்கு வாங்கச் சென்றிருந்தோம். சுற்றிப் பார்த்து விட்டு திரும்ப வரும் போது கனிமொழியின் சொத்து, ஏற்கனவே வாங்கி விட்டார் என்றார் எங்களை அழைத்துச் சென்றவர். 

தஞ்சைப் பகுதியில் ஒரு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் எனது உறவுக்கார பெண். அப்பெண் இந்தக் கல்லூரியையும் கனிமொழி வாங்கி விட்டாராம் என்றார்.

அந்த தோப்பு எனது மனைவியின் பெரியப்பாவின் உறவினருக்கு சொந்தம். இன்றும் அந்த தோப்பு அந்த உறவினரிடமே உள்ளது. அந்தக் கல்லூரியின் முதல்வரிடம் கேட்ட போது சிரித்தார். யார் கல்லூரிக்கு யாரய்யா ஓனர் என.

இப்படித்தான் திமுக ஆட்சிக்கு வந்த உடனே எல்லாச் சொத்துக்களையும் திமுகவும், முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் மருமகன் கம்பெனிகளுக்கு சொத்து வாங்கிக் கொடுத்து கமிஷன் வாங்குகிறார் என்றும், சென்னையில் ஐந்து கோடிக்கு மேல் சொத்து வாங்கினாலே விற்றாலோ கமிஷன் கொடுத்தே ஆக வேண்டுமென்றும் புரளிகளை கிளப்பி விட்டுக் கொண்டிருக்கிறார்கள் பல புரோக்கர்கள் மூலமாக அரசியல் கட்சிகள்.

எங்காவது கொலையோ, கொள்ளையோ, தவறோ நடந்தால் உடனடியாக வந்தேறிகளின் அடிமைகளும்,  முதுகெலும்பில்லா முட்டாள்களும் திமுக ஆட்சி வந்தால் இப்படித்தான் என்றும் விடியல் ஆட்சி என்றும் சோஷியல் மீடியாக்களில் கமெண்டுகளைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் சளைக்காமல். அவர்கள் எல்லோரும் ஃபேஸ்புக், டிவிட்டர் போலி ஹேண்டில்கள்.  ஒரே ஒரு ஆள் ஆயிரக் கணக்கில் போலி அக்கவுண்டுகளை உருவாக்கி போஸ்டுகளுக்கு பணம் வாங்கிக் கொண்டு இவ்வகையான போலிச் செய்திகளையும், வரன்முறை அற்ற வசவுகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறான். 

அதிமுக ஆட்சியில் இருந்த போதும் திமுகவை வசைபாடிக் கொண்டிருந்தார்கள். 

இவர்களுக்கும் விகடன் நிறுவனத்துக்கு வேறுபாடு இல்லை. இணையதளத்தில் வெளியான செய்தியைத்தான் இப்போதெல்லாம் விகடன் கட்டுரைகளாக எழுதிக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பிரிண்ட் பத்திரிக்கைகள் பலவற்றை மூடி ஆகி விட்டது. வேறு வழி இன்றி ஆங்கிலேயர்களின் மன்னிப்புக் கேட்டுக் கதறிய டேஞ்சர் குற்றவாளி (D - Dangerous Prisoner - Click the link here https://thewire.in/history/bhagat-singh-and-savarkar-a-tale-of-two-petitions) சாவர்கர் பரம்பரை என்பதால் திமுக ஆட்சிக்கு வந்ததும் வயிறு எரிந்து, செத்துப் போன சோவின் நரித்தந்திரம் போல, எங்கிருந்தோ பெறப்பட்ட கொழுத்த நன்மைக்கு மக்களிடம் விஷ விதையைத் தூவ ஆரம்பித்துள்ளது.

இதோ ஆதாரங்கள்:-

இந்த வார ஜூனியர் விகடனின் அட்டைப்படத்தில் (01.06.2022) - தலை நகரில் தொடர் கொலைகள் - கேள்விகுறியாகும் சட்டம் - ஒழுங்கு என வெளியிட்டு வன்மத்தைக் காட்டி இருக்கிறது. தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய் விட்டதாம். மக்களிடம் பயத்தை உருவாக்க வேண்டுமாம்.  

பிஜேபியில் முருகன் தலைவராக இருந்த போது ரவுடிகளை கட்சியில் சேர்த்து விட்டதாகவும், அவர்களுக்குள் கொலை செய்து கொள்வதால் நானா பார்க்க முடியும் என்று அடிமை ஆடு புலம்பியதாக இதே பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டு இருந்தாலும் அட்டைப்படத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகும் என்று தமிழகமெங்கும் எங்கு நோக்கினும் கொலைகள் நடப்பது போல எழுதி இருப்பது விகடனின் நரித்தந்திரம்.

இந்த வன்மம் போதாது என்று மிஸ்டர் கழுகு பகுதியில் ஒரு தலைப்பு - ’மோடியின் ரோடு ஷோ - காத்திருந்த ஸ்டாலின்’ என்று எழுதி தன் ஆத்திரத்தை தீர்த்துக் கொண்டிருக்கிறது. அதன் உள்ளே ’முதல்வர் ஸ்டாலினை முந்திக் கொண்டார்கள் பழனிசாமியும், ஆளுநரும்’ என்று ஏதோ வாராது வந்த மாமழை போல மோடி வருவதாகவும், அவரை வரவேற்க போவதில் முதல்வர் ஸ்டாலினுக்கு ஏதோ பின்னடைவு ஏற்பட்டதாகவும், மோடியின் ரோடு ஷோவினால் மோடிக்காக முதல்வர் காத்திருந்ததாகவும் செய்தி வெளியிட்டு உள்ளூர சந்தோஷப்பட்டுக் கொண்டிருக்கிறது.


நாடெங்கும் ராமர் கோவிலுக்கு செங்கல் வேண்டுமென்று கேட்டு ரதயாத்திரை செய்து பிஜேபியை வளர்த்த ஒரு தலைவர் துரோகத்தால் ஓரங்கட்டப்பட்டது  வரலாறு. காலையில் காலைப் பிடித்த துரோகி மாலையில் முதுகில் குத்தி விட்டு ஆட்சியில் அமர்ந்து தமிழ் நாட்டு மக்களின் வரிப்பணத்தை கொள்ளை அடித்து விட்டு ஐந்து லட்சம் கோடி கடனை தலையில் கட்டிச் சென்ற இனத் துரோகியின் ஆட்சியும் வரலாறு. துரோகம் துரோகத்தைச் சந்திப்பதில் ஆச்சரியம் எதுவுமில்லை. 

ஊழல், திருட்டு என்று முதலில் செய்தியை வெளியிட்டு மக்களிடம் பதிய வைப்பது. தவறான செய்தி என்றால் வாய் திறக்காமல் வேறு விஷயத்துக்குச் சென்று விடுவது. இந்த நச்சு வேலையை விகடன் தொடர்ந்து செய்து வருகிறது.

ஜி ஸ்கொயர் போல தமிழ் நாட்டில் பல நிறுவனங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்கின்றார்கள். வடநாட்டினர் பலர் லட்சக்கணக்கான கோடி ரூபாயில் முதலீடு போட்டு தமிழ்நாட்டில் ரியல் எஸ்டேட் செய்கிறார்கள். அவர்களில் பலர் பல அரசியல்வாதிகளுக்கு நெருக்கமானவர்கள். அவர்களைப் பற்றி எல்லாம் விகடன் செய்தி வெளியிடாது. ஆனால் திமுக என்றால் வாயும் வயிறும் விகடன் குழுமத்துக்கு பற்றி எரியும். 

ஆட்சிக்கு வந்ததும் டாலர் விலை 44 ரூபாய்க்கு மாற்றுவேன் என்று முழங்கியவரைப் பற்றி பேசாது. காணாமல் போய் கொண்டிருக்கும் 2000 ரூபாய் நோட்டைப் பற்றி எழுதாது. ஆர்.பி.ஐ ஒன்றிய அரசுக்கு பணவீக்கத்தைப் பற்றி எச்சரிக்கை செய்துள்ளதைப் பற்றி எழுதாது. உலகே வியந்த எல்.ஐ.சி பங்குகளை விற்கிறேன் பேர்வழி என சாதாரணப்பட்ட பல முதலீட்டாளர்களின் 80000 கோடி ரூபாயை காணாமல் அடித்ததைப் பற்றிப் பேசாது. 

(எல்.ஐ.சி பங்குகள் விற்பன் கிராப். டெய்லி டிரேடிங்க் செய்தவர்கள் பிழைப்பு என்ன ஆகி இருக்கும் என்று பாருங்கள். ஒரு அரசு செய்யும் வேலை இதுதானா என்று நினைத்துப் பாருங்கள்)

ஒன்றிய அரசு பணம் சம்பாதிக்க சாதாரண முதலீட்டாளர்களை  அழிக்கிறது பற்றி எழுதாது. இப்படி மக்களுக்கு கொடுமை நடப்பதைப் பற்றி எல்லாம் எழுதாமல் திமுக மீது சேற்றினை வாரி வீசுவது, பின்னர் பம்முவது போன்ற செயல்களைச் செய்து வரும் விகடன் குழுமத்தின் பத்திரிக்கைகளை  தமிழர்கள் புறக்கணித்து அறமற்ற அவர்களின் செயல்களுக்கு சரியான பாடம் புகட்டிட வேண்டும்.  

அறமற்ற எந்த ஒரு செயலுக்கும் பின் விளைவுகள் உண்டு என்பதை 96 வருட பத்திரிக்கைப் பாரம்பரியம் கொண்ட விகடன் குழுமம் உணரும் நாள் வந்தே தீரும்.

தமிழ் பூமி ஆன்மீக பூமி. அறத்தின் வழி நடக்கும் பூமி. அரசியலில் தைரியமிக்கவர் என்று சொல்லப்பட்ட ஜெவின் வாழ்க்கையை முடித்துக் கட்டியது அறம். அதிகாரமும், பணமும் ஒன்றும் செய்ய முடியவில்லை அறத்தின் முன்பு. 

விகடனின் நரித்தந்திரமும் அறத்தின் முன்னாலே தீர்க்கப்படும்.

* * *

நன்றி : விகடன், ஸ்கிரீனர் இணையதளம்

Wednesday, May 18, 2022

நிலம் (98) - நடிகர் சூரியை ஏமாற்றிய நில மோசடி வழக்கு

சவுக்கு ஆன்லைனிலும், ரெட்பிக்ஸ் யூடியூப் சானலிலும் சவுக்கு சங்கர் நடிகர் சூரியை சக நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் ஏமாற்றிய விதத்தை தெளிவாக எடுத்துரைத்திருக்கிறார்.

கட்டுரை இணைப்பு : நல்லா இருந்த நடிகரும் நாசமாக்கிய டிஜிபியும்


மேலே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். பேட்டியைப் பார்த்துக் கொள்ளுங்கள்.

இனி பிரச்சினைக்கு வருவோம்.

சூரி டிஜிபியை நம்பினார். அதனால் தான் இந்தப் பிரச்சினை உருவானது. நம்பியவரை ஏமாற்றி விட்டனர். நம்பிக்கை மோசடி செய்து விட்டனர். பாதை இல்லாத பூமியை விற்று விட்டனர் என்பதுதான் வழக்கு. சூரியின் கிரையப் பத்திரம் கீழே.

சின்ன விஷயத்தைச் செய்யாத காரணத்தால் சூரி ஏமாந்தார். 

ஒரு நல்ல லீகல் அட்வைசரிடம் கருத்துரு கேட்காமல், பெரிய தொகையினைக் கொடுத்து கிரையம் பெறுவது சூரியின் தவறு. 2015 பதிவு செய்து சொத்து, அதற்கு வட்டி, நிம்மதியற்ற நிலை, காவல்துறை வழக்கு, கோர்ட் வழக்கு, செலவு என தேவையற்ற செலவுகளைச் செய்து என்ன கிடைத்து விடப்போகிறது அவருக்கு?

முன்னாள் டிஜிபிக்குத் தெரியும் இந்த வழக்கினை எப்படி கையாள்வது என்று. காலம் தான் போய்க்கொண்டிருக்குமே தவிர வேறு ஒன்றும் நடக்காது. 

தன் ரிட்டயர்மெண்ட் காலம் வரை சூரியை ஏமாற்றி, சூது செய்தவருக்குத் தெரியாதா இந்த வழக்கை என்ன செய்ய வேண்டுமென்று?

இனி சூரி என்னதான் செய்வது?

எப்படி இந்தப் பிரச்சினையில் இருந்து வெளி வருவது? வழி இருக்கா?

இருக்கிறது. இந்த வழக்கு இப்படி நடத்தவே கூடாது. முதல் தவறு.

இரண்டாவது தவறு சூரி கோர்ட்டுக்குச் சென்றது.

அவர் கேட்டால் சொல்லலாம். பொதுவாகச் சொல்வது சரி வராது. இந்த வழக்கின் முடிவு என்ன தெரியுமா? 

ஒன்றும் நடக்காது. இழப்பு சூரிக்கு மட்டுமே நடக்கும்.

ஆகவே நிலம் வாங்கும் முன்பு நல்ல அட்வைசரிடம்  ஆலோசனை கேட்காமல் கிரையம் செய்யாதீர்கள்.

Monday, May 9, 2022

எமனோலையை மறுக்க முடியுமா? மரணத்தை வெல்ல முடியுமா? சாத்தியமா?

சனிக்கிழமையன்று அடிக்கடி நினைவில் வந்து கொண்டிருந்த சுவாமி ஆத்மானந்தர் அவர்களை போனில் அழைத்த போது என்னை யாரென்று தெரியவில்லை என்றுச் சொல்லியதும் பதட்டம் வந்து விட்டது.  கோவை மாவட்டம், பள்ளப்பாளையத்தில் இருக்கும் ராமகிருஷ்ணர் ஆசிரமத்தில் இருப்பதாக சொன்னார். அருகில் தானே பள்ளப்பாளையம் என்று நினைத்து மகன், மகளுடன் அவரைச் சந்திக்க சென்றேன். வயதான பழுத்த ஆன்மீகவாதியாகி தன்னை முழுவதுமாய் இறைவனிடம் ஒப்படைத்து விட்ட நிலையில் இருந்தார் சுவாமி.

என்னைப் பார்த்ததும் தங்கவேல் என்று அழைக்க அப்பாடா என்று இருந்தது. அவருடன் ஐந்து ஆறு வருடங்கள் வாழ்ந்தேன். ஞான தகப்பன் என்றால் எனக்கு சுவாமி ஆத்மானந்தர் அவர்கள் தான். அவரால் உருவாக்கப்பட்ட சொத்துகளுக்கு எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. எனக்கு வேண்டியதுமில்லை. விரும்பியதுமில்லை. ஒரு சிலருக்கு புரிய வேண்டும் என்பதால் இதைப் பதிவு செய்கிறேன்.

எனக்குள் ஒரு ஆசை இருந்தது. நன் மனையாள், நற்குழந்தைகள்,  அற நெறி வழுவா ஆன்மீக வாழ்க்கை என இப்போது வாழ்ந்து வரும் வாழ்க்கைக்கு அச்சாரமிட்டுக் கொடுத்தவர் அவரே.  

வீட்டில் ஒரு பொழுதேனும் தங்கி இருந்து, ஒரு வேளை உணவு எடுத்தால் என் மனம் மகிழ்வுறுமே என பலமுறை அவரிடம் வேண்டுகோள் விடுத்தும் வருகிறேன் என்றுச் சொல்லியே காலம் தாழ்த்தி விட்டார்.

இனி விடக்கூடாது என்ற முடிவு செய்து கொண்டேன். தன்னை முழுமையாக இறைவனின் பாதத்தில் ஒப்படைத்து விட்ட தன்மையில் இருக்கும் சுவாமிகள் இன்றிரவு நான் வசிக்கும் வீட்டில் உணவு உட்கொள்ள வேண்டுமென்று எம் குருவினை வேண்டிக் கொண்டேன்.

அவரிடம் வேண்டினேன். வருவதாகச் சொன்னார். 

எனது குருநாதர் சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஆசிரமம் அழைத்துச் சென்றேன். குருநாதரைப் பார்த்த போது ”என்னை விட நான்கு மாதம் மூத்தவர் சாமி” என்று என்னிடம் சொன்னார். மேடையை வலம் வந்தார்.

உள்ளே இருக்கையில் ”நான் உன்னுடன் காரில் வர வேண்டும்” என்று கேட்டார். அதன் படியே என்னுடன் மகன் ரித்திக் நந்தா கார் ஓட்ட பூண்டி கோவிலின் அடியில் காரை நிறுத்தினான் மகன். மேலே செல்ல இயலாத காரணத்தால் காரில் அமர்ந்த படியே பூண்டி ஆண்டவரை வணங்கி வீட்டுக்கு வந்து விட்டோம்.

அடியேன் படுக்கும் படுக்கையில் நன்கு உறங்கி விழித்தார். வழமை போல மூன்று இட்லிகள், சாம்பார், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, கொஞ்சம் மாம்பழம் எடுத்துக் கொண்டார். ஆசீர்வாதம் செய்து விட்டு பள்ளப்பாளையம் ஆசிரமம் சென்று விட்டார். 

எனக்குள் ஒரு நிம்மதி பரவியது.

அவரின் உழைப்பால் எத்தனையோ லட்சம் மக்கள் உணவு அருந்தினார்கள். எத்தனையோ பேர்களுக்கு கல்வி கொடுத்தார். இன்றும் கொடுத்து வருகிறார். அவரால் உருவாக்கப்பட்ட கல்வி நிலையங்களும், ஆசிரமங்களும் இன்றும் இயங்கி வருகின்றன. அப்பேர்பட்ட தொண்டு செய்தே பழுத்த சுவாமிகள் என் உழைப்பில் ஒரு வாய் உணவு எடுத்தால் அது எனக்கு மகிழ்ச்சியானது அல்லவா? அவர் தகுதிக்கு எனக்கு ஐந்து வருடம் உணவிட்டு எனக்கு தொண்டு செய்ய அனுமதி தந்தார். என் தகுதிக்கு ஒரு வேளை உணவு. சின்ன ஆசை தானே.

அவர் என்னிடம் கேட்டது மூன்று. ஒன்று வேதாரண்யத்தில் தாயுமானவர் சுவாமிகளின் பெயரில் கல்லூரி, கரூரில் பெரிய சுவாமி என்று அழைக்க கூடிய சித்பவானந்தர் சுவாமிகள் பெயரில் ஒரு பல்கலைக்கழகம், மற்றொன்று பள்ளப்பாளையத்தில் ஒரு கல்லூரி (சுவாமி ஆத்மானந்தர் கல்லூரி - என் நினைப்பு). 

என்னால் இத்தொண்டினைச் செய்ய முடியுமா? முடியாதா? என்பது எனக்குத் தெரியாது. ஆனாலும் கேட்டார். செய்யலாம் சுவாமி என்று சொல்லி இருக்கிறேன். இறைவனின் எண்ணமெதுவோ அதுவே நடக்கும்.

சேலத்தைச் சேர்ந்த தங்கவேல் என்ற சுவாமிகளின் அன்பர் எனக்கு இப்பிறப்பே இறுதி பிறப்பு என்று சொன்னதாகவும், ஆனால் எனக்கு அப்படி எல்லாம் வேண்டாம் நான் மீண்டும் மீண்டும் மனிதனாகவே பிறந்து தொண்டு செய்ய வேண்டுமென்று விரும்புவதாக அவரிடம் சொன்னதாகவும் என்னிடம் அடிக்கடிச் சொல்வார்.  இறைத்தொண்டாற்றிட மீண்டும் மீண்டும் மனிதபிறவி எடுத்தல் வேண்டுமென்ற ஆவல் அவரிடம் நிரம்பி இருந்தது. மேலோர் எப்போதும் மேன்மையாக சிந்திப்பர் அல்லவா?

எனது ஞானத்தந்தையார் எப்போதும் என்னைப் போன்ற லட்சோப லட்சம் அன்பர்களின் நினைவுகளில் வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டே இருப்பார். 

இறைதொண்டு என்றால் அவர் சுவாமி ஆத்மானந்தர் ஒருவரே.

என் ஞானத் தந்தையான சுவாமி ஆத்மானந்தர் பாதம் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். 

சரி விஷயத்துக்கு வருகிறேன்.

குருநாதரின் ஆசிரமத்தில் சுவாமி ஆத்மானந்தருக்கு ஜோதி சுவாமி சீரக நீர் ஆற்றிக் கொடுத்தார். அப்போது ஜோதி சுவாமி என்னிடம் சொன்னது இப்பாட்டு. 

தாயாரிருந்தென்ன தந்தையுமிருந்தென்ன

தன்பிறவியுறவு கோடி

தனமலை குவித்தென்ன கனபெயரெடுத்தென்ன

தாரணியையாண்டுமென்ன

சேயர்கள் இருந்தென்ன குருவாய் இருந்தென்ன

சீடர்கள் இருந்துமென்ன

சித்துபல கற்றென்ன நித்தமும் விரதங்கள்

செய்தென்ன நதிகளெல்லாம்

ஓயாது மூழ்கினும் என்ன பயன் எமனோலை

ஒன்றைக் கண்டு தடுக்க உதவுமோ!

இதுவெல்லாம் சந்தை உறவென்று தான்

உந்தனிருபாதம் பிடித்தேன்

யார்மீது உன்மனமிருந்தாலுமுன் கடைக்

கண்பார்வையது போதுமே

ஈசனே சிவகாமி நேசனே

எனையீன்ற தில்லைவாழ் நடராஜனே! 

இந்தப் பாடல் நடராஜர் பத்து என்ற தொகுப்பில் உள்ளது. சிறுமணவூர் முனுசாமி அவர்களால் பாடப்பெற்றது இப்பாடல்.

நீங்களும் பாடலைப் படித்துப் பாருங்கள்.

படித்து விட்டீர்களா?

எமனின் ஓலையைத் தடுப்பார் எவருண்டு இதுவெல்லாம் சந்தை உறவு என்பதால் தான் உன் பாதம் பிடித்தேன் ஈசனே என்கிறது பாடல்.

இன்றைக்கு எனக்குள் கேள்வி எழுந்தது. ஜோதி சுவாமியை அழைத்தேன்.

“சாமி, என்ன செய்தாலும் மரணத்தை ஜெயிக்க முடியாதே, பின்னே ஏன் நடராஜர் பாதத்தைப் பற்றிப் பிடிக்கணும், தேவையில்லை அல்லவா?” என்றொரு கேள்வியை வீசினேன்.

அதற்கு அவர்,” ஆண்டவனே, உள்ளே ஓடும் மூச்சு தான் சிவம், சிவம் போனால் சவம். முச்சினை வெளியே விடாமல் உட்புறமாகச் செலுத்தி பயிலும் கால், உடலின் கூறுகளைப் பிணைத்திருக்கும் கொக்கிகளை நீக்கினால் பட்டினத்தார் போல நவகண்ட சித்து தன்மையில் காற்றில் கரைத்து பிரபஞ்சத்தோடு கலந்து விடலாம். வள்ளலார் ஒரு படி மேலே சென்று ஒளிதேகமாய் மறைந்தார். அது போலவே மரணத்தை வெல்லலாம். அதுவே சர்மார்க்கி என்பதாகும். அதுவே சீவனறிவு. பிறவறிவெல்லாம் அறிவல்ல.” என்றார்.

எமனோலையை மறுக்கலாம் என்று புரிந்து கொண்டேன். ஆகவே மரணத்தை வெல்லலாம் என்று அறிக.

பட்டினபிரவேசம் - மீண்டும் ஏமாந்தாரா மன்னன் - உண்மை என்ன?

இது ஒரு கதை. யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.

அந்தக் காலத்தில் ஒரு மன்னனின் ஆட்சிக்கு உட்பட்ட ஆதீனங்களில் இறைப்பணி செய்து வந்த மடாதிபதிகள் (மடத்தின் அதிபதி) பல்லக்கில் மனிதர்கள் சுமக்க பட்டினப் பிரவேச வீதியுலா வருவதை வாடிக்கையாக வைத்திருந்தார்கள். 

இந்தப் பிரவேசத்தைப் பற்றிக் கேள்வியுற்ற மன்னன் அதற்கு தடை விதித்தான். இப்போது தமிழக அரசு தடை விதித்தது போல.

உடனே அந்த குரு மஹா சன்னிதானங்கள் அவர்களிடத்தே பொருள் மற்றும் இன்னபிற சுகானுபவங்களைப் பெற்ற ஆன்மீக அன்பர்கள் மன்னனிடம் சென்று தடையகற்ற கோரிக்கை விடுத்தனர். அது மரபு என்று குரு சீடர்கள் பரம்பரை என்றும் தர்மம் உரைத்தனர்.

அதனைக் கேட்ட மன்னனும் ஒரு நிபந்தனையுடன் அனுமதி தரலாமென்றான்.

அந்த நிபந்தனை என்னவென்றால் கடவுளர் திருவுருங்களைப் பல்லக்கில் சுமந்து செல்வது ஏற்பவையே. ஆனால் அதற்கு நிகராக இந்த மானிடர்களைச் சுமப்பது சரியல்லவே. இருப்பினும் ஆன்மீக அன்பர்களின் வேண்டுகோளுக்காக கடவுளருக்கு நிகரான குரு என்று சொல்லப்படும் இந்த மஹா சன்னிதானங்கள் நான் இரண்டாக வெட்டிப் போடும் மாட்டினை மீண்டும் உயிர்ப்பித்தால் அனுமதி வழங்கப்படும் என்றான்.

கடவுள் நிகர் குரு எனில் வெட்டி கொல்லப்பட்ட மாட்டின் இருபாகங்களை உயிரோடு எழுப்பினால் குருவும் கடவுளுக்கு நிகரானவர் என்று ஒப்புக் கொண்டு பல்லக்கில் பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி அளிப்போம் என்பதாகும் மன்னனின் நிபந்தனை.

ஆன்மீக அன்பர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

இதனை குரு மகா சன்னிதானங்களிடம் தெரிவிக்க, இதற்கு நாங்கள் ஏன், இதைச் செய்ய வேறொருவர் இருக்கிறார் என்று சொல்லி, சீடரே வெட்டப்பட்ட மாட்டினை உயிர்ப்பிப்பார் என்று சொல்லி அனுப்பினர்.

இந்த இடத்தில் ஒரு கேள்வி வரும். 

மன்னன் கேட்டதோ பல்லக்கில் பவனி வர துடித்துக் கொண்டிருக்கும் மகா சன்னிதானங்கள் மாட்டினை உயிர்ப்பிக்க வேண்டுமென்பதாம். ஆனால் மகா சன்னிதானங்கள் சொன்னதோ யாரோ ஒரு சீடர் அதைச் செய்வார் என்று என்பதால் நாங்கள் உயிர்ப்பிக்க வேண்டியதில்லை என்று.

என்ன காரணத்தினால் மன்னன் இந்த பதிலை ஏற்றுக் கொண்டான் என்பதறிய இயலவில்லை.

அதன்படி மகா சன்னிதாங்கள் வீர சைவ சீடர் ஒருவரிடம் செய்தி சொல்லி அனுப்புகின்றார்கள். மன்னனின் நிபந்தனையை நிறைவேற்றி பட்டினப் பிரவேசம் நடத்த ஏதுவாக மாட்டினை உயிர்ப்பிக்க வேண்டுமென்று கேட்க, அதற்கு அவர் எம் குருவின் அனுமதி கிடைத்தால் நிறைவேற்றி தரவியலும் என்று உரைத்தார்.

குரு அனுமதி தந்து விட்டதாக சீடரிடம் தகவல் சொல்ல அவர் திருவண்ணாமலை வரைக்கும் ஒரு காதம் தாண்டி கொதிக்கலன்கள் அமைக்கும்படியும் அதற்குள் ஆணியால் வேயப்பட்ட காலணிகள், தண்டம் இவைகளை வைக்கும்படியும் கேட்டுக் கொண்டார். 

அதன்படியே செய்ய, சீடரும் கொதிகலனுக்குள் இருந்த ஆணி செருப்பு அணிந்து கையில் தண்டம் கமண்டலமேந்தி ஒரு காதம் தூரம் நடந்து அங்கிருந்த மற்றொரு கொதிகலனில் மேற்படிகளை நீக்கி, புதியன அணிந்து மாடு வெட்டிக் கிடந்த இடத்தருகே வருகிறார். 

மன்னனும் வருகிறான்.

கையில் இருந்த ஒரு வெள்ளித் தண்டத்தினால் வெட்டுப்பட்ட மாட்டின் இருபாகங்களைத் தட்ட மாடு உயிர் பெறுகிறது. மன்னனுக்கோ அதிசயம். 

இருப்பினும் மாயா வித்தையாக இருக்குமோ என்று நினைத்து, கல் நந்தியை உயிர்பிக்கலாமே என்று கேட்க, சீடரும் அதன்படி வெள்ளித் தண்டத்தால் கல் நந்தியை தட்ட அதுவும் உயிர் பெற்று ஓடியது.

மன்னன் மிக மகிழ்ந்து பட்டினப் பிரவேசத்துக்கு அனுமதி கொடுத்ததாக ஒரு கதை ஒன்று உண்டு.

அதன் பிறகு கடவுளர் திரு உருவங்கள் முன்னே பல்லக்கில் வர, பின்னாலே மகா சன்னிதானங்கள் பல்லக்கில் உலா வந்தனர் என்றும் சொல்லப்படுவதுண்டு.

இந்தக் கதையை சித்தர் பீடம் 200 என்ற நூலில் படித்துக்கொள்ளுங்கள்.

அன்றைக்கு நடந்த நிகழ்வு இன்றைக்கு வேறு வழியில் நடைபெற உள்ளது. காலம் தான் மாறி இருக்கிறது. சம்பவங்கள் மாறவில்லை.

ஆகவே மரபினை மதித்து அனுமதி தரும் அரசாங்கம் #உடன்கட்டை ஏறுவதை தடை செய்த சட்டத்தை நீக்கி அனுமதிக்கும் காலம் வரும் என்று நம்பலாம்.

ஏனென்றால் இது மரபாகும். 

மரபினை மாற்ற எவருக்கும் இங்கு அனுமதி இல்லை. அங்கனம் செய்வது ஆன்மீக அன்பர்களின் மனத்தை வருத்தமுடையச் செய்யும் என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

மனிதனை மனிதன் சுமப்பது மரபு என்றால் இதுவும் மரபேயாம்.

அதாவது கணவன் இறப்பின் அவன் மனைவி உயிரோடு சிதையில் உடன் கட்டை ஏறி எரிந்து அவனோடு சாம்பலாக வேண்டுமென்பது மரபு.

அதுமட்டுமல்ல, சினிமா பாடல் புகழ் #சின்மயி அவர்களின் தாயார் கூறியதைப் போல, புகழ் பெற்ற கோவில்களில் #தேவதாசி மரபினை மீண்டும் கொண்டு வருதலும் மரபேயாம். அவ்வாறு தேவதாசி முறை கொண்டு வந்தால் அது கோவிலில் இறைவனுக்கு தொண்டாற்றும் ஆன்மீக அன்பர்களின் காம நோய் தீர தேவதாசிகள் பயனாயிருப்பர் என்பதும் மரபே. ஆகவே அரசுகள் மேற்கண்ட இரண்டு மரபுகளுக்கும் மனம் உவந்து தடை நீக்கி சட்டமியற்றி ஆன்மீக மரபுகளை காத்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

வாழ்க ஆன்மீகம், தழைக்கட்டும் மரபுகள்.

Friday, April 29, 2022

நிலம் (97) - நில உச்ச வரம்புச் சட்டம் தமிழ் நாட்டில் உள்ளதா?

எவரும் நம்ப மாட்டார்கள். சொன்னாலும் கேட்கமாட்டார்கள். ஜாக்கிரதையாக இருங்களேன் என்றால் கேட்கவே கேட்க மாட்டேன் என்கிறார்கள். 

தமிழகத்தில் நில உச்ச வரம்புச் சட்டமாவது ஒன்றாவது என்று என்னை நக்கலுடன் பார்ப்பார்கள்.

1962ம் ஆண்டு நிலச் சீர்திருத்த சட்டம் முன்பு (தமிழ் நாடு சட்டம் 58, 1861) அதாவது உச்ச வரம்புச் சட்டத்தின் 12 மற்றும் 14வது பிரிவின் கீழ் அரசு தானாகவே எவரிடமாவது உச்ச வரம்புக்கு மேல் நிலம் இருப்பின் அரசு நிலமாக மாற்றி விடும். 

சமீபத்தில் நடந்த ஒரு சம்பவம் பற்றிப் பார்க்கலாம்.

நிலத்தைக் கிரையம் செய்து விட்டு லீகல் பார்க்க வந்தவர் தந்த ஆவணத்தைப் பார்த்த போது எங்கேயோ பார்த்த அரசு உத்தரவு போல இருக்கிறதே என்று நினைவில் வர ஆய்வு செய்து சொல்கிறேன் என்றுச் சொல்லி அனுப்பி விட்டேன். 

அவரின் நிலம் உச்சவரம்புச் சட்டத்துக்கு உட்பட்டதா? இல்லையா? அந்த இடம் கோவையில் எங்கே உள்ளது என்பது பற்றி விரைவில் பார்க்கலாம்.


நிலம் (96) - கோவை சென்னையில் புதிய பதிவு மாவட்டங்கள் - சனிக்கிழமை சார்பதிவாளர் அலுவலகம் இயங்கும்

வருவாய்துறையில் மிக அதிகமான வருவாயைத் தரக்கூடிய சென்னை பதிவு மாவட்டம் இனி சென்னை வடக்கு, தெற்கு என இரண்டு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும். அதுமட்டுமின்றி தாம்பரம் பதிவு மாவட்டம் புதிதாக உருவாக்கப்படும்.

அதே போல கோவை பதிவு மாவட்டம் இனி கோவை தெற்கு மற்றும் வடக்கு பதிவு மாவட்டங்களாகப் பிரிக்கப்படும்.  மதுரையிலும் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படும்.

மேலும் 1998ம் ஆண்டுக்குப் பிறகு பத்திரப்பதிவு துறையில் எழுத்தர் பணிக்கு புதிய அனுமதிகள் வழங்கப்படவில்லை. ஆகவே புதிய அனுமதி வழங்கப்படும்.

கட்டிட கள ஆய்வுப்பணிக்கு புதிய ஆட்கள் தேவைப்படுதால் எழுத்தர் பணிக்கு அனுமதி வழங்குவது போல கள ஆய்வுக்கும் பட்டதாரிகளுக்கு அனுமதி வழங்கப்படும்.

தட்கல் முறையில் ஆவணப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்படும்.

சனிக்கிழமைகளில் சார்பதிவாளர் (ஏப்ரல் 30, 2022) அலுவலகங்கள் செயல்படும் என்றும் மா நில அரசு அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளது. இனி அவைகள் ஒவ்வொன்றாக செயல்முறைப்படுத்துவார்கள். 

ஆவண எழுத்தர் உரிமை, கள ஆய்வுப் பணி அனுமதி ஆகிய இரண்டு புதிய வேலை வாய்ப்புகள் வர இருக்கின்றன. தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்.




செய்தி உதவி : தினமணி 


Thursday, April 28, 2022

வாட் வரியைக் குறையுங்கள் - பிரதமர் மோடி - உண்மை என்ன?

இன்றைய செய்தி தாள்களில் மாநிலங்கள் வாட் வரியை குறைக்க வேண்டுமென்று பிரதமர் சொன்னதாக செய்திகள் வந்திருக்கின்றன. பெட்ரோல், டீசல் விலையை ஒன்றிய அரசு உயர்த்தியதால் தான் விலை உயர்வு உண்டாகிறது. விலை உயர்வினைச் செய்வது ஒன்றிய அரசு. ஆனால் பிரதமர் மா நில அரசுகளை வரியைக் குறையுங்கள் என்றுச் சொல்கிறார்.

இது என்ன விதமானது என்பது அவருக்கே வெளிச்சம். நாங்கள் வரியை உயர்த்துவோம், விலையை உயர்த்துவோம், ஆனால் மாநிலங்கள் விலையைக் குறைக்க வேண்டும் என்று சொல்வது சரிதானா என்பதை மக்கள் தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 

ஒன்றிய அரசின் கலால் வரியையும், பிரதமரின் செய்தியையும் கீழே பாருங்கள். எப்படியெல்லாம் மக்களை முட்டாளாக்குகின்றார்கள் என்று சிந்தியுங்கள். 

ஏற்கனவே தமிழக அரசு ஐந்து ரூபாய் அளவுக்கு பெட்ரோல் விலையை குறைத்து உள்ளது. இன்னும் குறைக்க வேண்டுமாம். 

ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு தர வேண்டிய ஜி.எஸ்.டி நிலுவைத் தொகையில் இன்னும் 78,000 கோடி பாக்கி இருக்கிறது. வாங்கிய வரியைக் கூட கொடுப்பதில்லை. 

மாநில அரசுகள் எப்படி நிர்வாகம் செய்வார்கள்? நிதிக்கு எங்கே போவார்கள். 

வரி தாக்குதலை இந்திய மக்களின் மீது தொடுக்கும் கொடுமையான செயலை அறமற்றுச் செய்கிறது ஒன்றிய அரசு என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். பிஜேபி ஆளாத மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் பிற கட்சியினரை அழிக்க வேண்டுமென்ற ஆவலில் ஒன்றிய அரசின் செயல்கள் இருக்கின்றன என்பதை மக்கள் மறந்து விட மாட்டார்கள்.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தி வரியைப் பிடுங்கிக் கொள்ளும். மாநில அரசுகள் தான் விலை உயர்வுக்கு காரணம் என்று எப்படியெல்லாம் திசைதிருப்புகிறார்கள் பாருங்கள். 

தினமணியில் முதல் பக்கத்தில் செய்தி. ஏதோ திமுக அரசு தான் விலை குறைக்காமல் இருக்கிறது என்று மக்கள் நினைக்க வேண்டுமாம். தினமணியின் ஆசையைப் பாருங்கள்.

மாநில அரசுகள் வரியை இழந்து மக்கள் நலத்திட்டங்களைச் செயல்படுத்தா வண்ணம் முடங்க வேண்டுமென்ற மறைமுக எண்ணம் தான் இந்த செய்தியின் பின்னால் இருக்கும் காரணம் என்று தெளிவாகத் தெரிகிறது.

ஒன்றிய அரசு வரியை எவ்வளவு அதிகரித்து இருக்கிறது என்று கீழே இருக்கும் செய்தியைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.



பிரதமர் மோடியின் இந்தக் குற்றச்சாட்டு உண்மையா? கூட்டாட்சிக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருப்பது ஒன்றிய அரசா இல்லை  மா நில அரசுகளா என்பதற்கு தமிழக ஆளும் திமுக அரசின் நிதியமைச்சரின் பதில் கீழே.




Thursday, April 21, 2022

நிலம் (95) - கோவில் நிலங்களை எப்படி ஆட்டையைப் போட்டு விற்கலாம்? விவரங்கள் அப்டேட்டட்

நண்பர் பழனியிலிருந்து ஒரு சொத்தினை விற்பனை செய்து தரும் பொருட்டு விபரங்கள் அனுப்பி இருந்தார். நேரில் சென்று இடத்தினைப் பார்வையிட்டு வந்தேன். மிக நல்ல இடம். 60 கோடி விலை சொன்னார்கள்.

நான் பரிந்துரைக்கும் நிலங்கள் வில்லங்க சுத்தியாய் இருக்க வேண்டும் என்பதில் கருத்தாய் இருப்பேன்.

வில்லங்கங்கள் இருக்கும் சொத்துக்கள் வேறு இருக்கின்றன. அதன் விற்பனை வேறு. அது இங்கே வேண்டாம்.

தங்கத்திடமிருந்து ஒரு சொத்து வருகிறது என்றால் கண்ணை மூடிக் கொண்டு வாங்குவார்கள். விலை பேச மட்டுமே வருவார்கள், பிற காரியங்கள் எல்லாம் நானே பார்த்துக் கொள்வேன். 

ஆகவே சொத்தின் மீதான வில்லங்கங்களை 120 ஆண்டுகளுக்கு ஆய்வு செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். நிலம் விற்பனை என்றால் சர்வே எண் பெற்று ஆரம்ப கட்ட ஆய்வினை முடித்து விட்டுத்தான் பார்வையிடச் செல்வது வாடிக்கை.

நண்பரின் அழுத்தப் பரிந்துரையினால் அந்த நிலத்திற்குச் சென்று விட்டு திரும்பினேன்.

அந்தச் சொத்தின் சர்வே நம்பர் வைத்து ஆராய்ந்தேன்.

சொத்துக்களை ஒரு குடும்பம் தன் பிள்ளைகளுக்கு எழுதி வைத்த போது ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் சுமார் இரண்டு ஏக்கர் சொத்தினை இனி வரக்கூடிய வாரிசுகள் விற்பனை செய்யாமல், அந்தச் சொத்தில் வரக்கூடிய வருமானத்தினை கோவையில் பிரபலமாக இருக்கும் ஒரு சிவன் கோவிலில் நடைபெறும் கட்டளைக்கு, நிலத்தின் வரி வகையறாக்கள் செலவுகள் போல மீதமுள்ள தொகையினை கொடுத்து வர வேண்டுமென்றும் பத்திரத்தினை பதிவு செய்து கொடுத்திருக்கிறார்கள். 

ஆக இந்தச் சொத்தினை விற்பனை செய்ய முடியாது, அந்தக் குடும்பத்தின் வாரிசுகள் மட்டுமே நிர்வாகம் செய்ய வேண்டும், வருமானத்தை சிவன் கோவிலில் நடக்கும் கட்டளைக்குக் கொடுத்து வர வேண்டும் என்பது தெளிவாக பத்திரத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேற்படி சொத்தின் பட்டாவும் கோவில் பெயரில் மாற்றப்பட்டு தர்மகர்த்தாக்களாக சொத்தினை எழுதி வைத்த நபர்களின் வாரிசுகள் நியமிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன.

ஆனால் நடப்பு பட்டாவோ வேறு பெயரில் இருந்தது. 

என்ன நடந்தது? 

எப்படி பட்டாவில் பெயர் மாற்றினார்கள்?

முன்னுரை படித்து விட்டீர்களா? 

இனி ஸ்டெப் பை ஸ்டெப்பாக கோவில் நிலத்தின் பட்டாவை எப்படி உங்கள் பெயருக்கு மாற்றுவது எனப் பார்க்கலாம்.

வாரிசுதாரர்கள் அந்தக் கோவிலுக்கு பாத்தியமான சொத்துக்களுடன் இதர சொத்துக்களையும் சேர்த்து பாகப் பிரிவினைப் பத்திரம் ஒன்றினைத் தயார் செய்ய வேண்டும். பாகப் பிரிவினை சொத்துக்களில் பொதுச் சொத்து (கவனிக்க) என்ற பகுதியில் வாரிசுகளில் ஒருவரை உரிமையாளர் என்ற பெயரில் பதிவு செய்தல் வேண்டும். பாகப் பிரிவினைப் பத்திரத்தில் கோவிலுக்கு கட்டளைக்கு கொடுத்த பத்திரத்தினை குறிப்பிடாமல் அதற்கு முன்பு உள்ள பத்திரத்தினையும், வாரிசு சான்றுகளையும் இணைத்தல் அவசியம்.

மேற்படிப் பாகப்பிரிவினை பத்திரத்தை ஈடுகாட்டி வட்டிக்கு பணம் வாங்க வேண்டும். வட்டியும் அசலும் கட்டத் தேவையில்லை. வட்டிக்கு பணம் கொடுத்தவர் வாரிசுகளில் யாரோ ஒருவரின் நெருங்கிய உறவினராக இருத்தல் அவசியம். 

வட்டியும் அசலும் திரும்ப வரவில்லை என்பதால் வட்டிக்குப் பணம் கொடுத்தவர் மணி சூட் போடுவார். வழக்குகளில் ஆஜராக கூடாது. எக்ஸ்பார்ட்டியாய் தீர்ப்பு வட்டிக்குப் பணம் கொடுத்தவருக்கு கிடைத்து விடும். கோர்ட் மூலமாக மேற்படிச் சொத்தினை கிரையம் செய்து கொள்ளல் வேண்டும்.

இப்போது வட்டிக்குப் பணம் கொடுத்தவர் கோர்ட் மூலம் மேற்படிச் சொத்தின் உரிமையாளர் ஆகி விட்டார்.

இனி பட்டா மாற்றம் செய்ய வேண்டும். தமிழக வருவாய் துறையில் நல்ல காசுள்ளங்கள் உண்டு. ஆகவே அவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை தலைமேற்கொண்டு பட்டாவை வழங்கி விடுவார்கள். 

பட்டா கோவில் பெயரில் அல்லவா இருக்கிறது? பிரச்சினையை எப்படி நீக்குவது? இனி பார்க்கலாம்.

நிலத்தினை பராமரித்து வந்தவர் விவசாயம் செய்யும் பொருட்டு வாங்கிய கடனைக் கட்ட இயலாததால் கடன் கொடுத்தவருக்கு கோர்ட்டு நிலத்தினைக் கிரையம் செய்து கொடுத்து விட்டது. இது சட்டப்படி சரியானது. ஆகவே பட்டாவை கடன் கொடுத்தவர் பெயருக்கு மாற்றி விடலாம். இருப்பினும் கோவில் இணை ஆணையர் இதை உற்று நோக்கி ஒரு தடையின்மை சான்றிதழ் வழங்கி விட்டால் சொத்தின் முழு உரிமை கடன் கொடுத்தவருக்கே வந்து விடும் அல்லவா?

ஆகவே கோவிலின் இணை ஆணையரை அணுகி தர்மப்படி அதாவது தர்மப்படி கொடுத்து மேற்கண்ட விஷயங்களைக் குறிப்பிட்டு கடன் கொடுத்தவர் ஒரு அப்பாவி என்றும், கடன் கொடுக்கும் போது மேற்படி சங்கதிகள் ஏதும் தெரியாது என்றும், அந்த நிலத்திற்காக ஏகப்பட்ட செலவுகளைச் செய்து விட்டார் என்றும், தற்போது கோவிலில் கார்த்திகை மாதம் நடத்தப்பட்ட கட்டளை நிறுத்தப்பட்டு விட்டதாகவும், ஆகவே கட்டளைக்கு நிதி கொடுக்க வேண்டுமென்ற ஷரத்து செல்லாததாகி விட்டது என்றும், ஒரு குறிப்பிட்ட தொகையினை இந்த விண்ணப்பதாரரிடம் சுமாராக ஐம்பது இலட்சம் பெற்றுக் கொண்டு அப்பாவியாய் ஏமாந்து போனவருக்கு நிலத்தினைக் கொடுத்து விடலாம் என்றும் ஒரு பரிந்துரைக் கடிதத்தைப் பெற்று தமிழக அற நிலையத்துறைக்கு அனுப்பி வைத்தால் அங்கும் கொஞ்சம் தர்மப்படி கொடுத்தால் சொத்து முழுமையாக கடன் கொடுத்தவரிடம் வந்து விடும்.  

நிலத்தின் விலை என்ன? அறுபது கோடி. 

கோவிலுக்கு கொடுக்க வேண்டியது என்ன? ஒரு அம்பது இலட்சம். 

கைப்படி, தர்மப்படி இவற்றுக்கு இருபது இலட்சம் என செலவானால் மொத்தம் ஒரு எழுபத்தைந்து இலட்சம் வரும். 

வருமானம் என்ன? 

கொஞ்சமே கொஞ்சம் தான் அதாவது ஒரு அம்பது கோடி. 

போதுமே? போதாதா? போதாது என்றால் அடுத்த நிலம் இருக்கிறதே?

ஒரு கோவில் பெயரில் இருக்கும் சொத்தினை உங்களது பெயருக்கு மாற்றம் செய்வது எப்படி என்றும் வரவு செலவு கணக்கினைத் தெளிவாக எழுதி இருக்கிறேன். 

அவ்ளோ தான்.

இப்படித்தான் நண்பர் பரிந்துரைத்த அந்தச் சொத்தின் பட்டா மாற்றப்பட்டது என்று விவரித்தேன் அவரிடம். அசந்து போனார். 

“அண்ணா...! என்ன கொடுமை இது?” என்று வருந்தினார். 

வருந்தி என்ன ஆகப் போகுது? எவன் போய் சிக்கப் போகின்றானோ அவனுக்குத்தான் வருத்தம் வர வேண்டும். நமக்கென்ன ஆகப் போகுது?

ஒரு விஏஓ, ஆர்.ஐ, தாசில்தார், ஆர்.டி.ஓ மற்றும் கோவில் இணை ஆணையர் இவர்கள் நினைத்தால் ஒரு கோவிலின் நிலத்தின் உரிமையை யாருக்கு வேண்டுமானாலும் மாற்றலாம் என்பதை நினைவில் கொள்க. 

பத்திரங்கள், பட்டாக்கள், சட்டங்கள் எதுவும் இவர்களை ஒன்றும் செய்யாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். 

இவர்களுக்கு எதிரான சட்டப் போராடத்தின் முடிவில் ஒன்றும் நடக்காது. அவரவர்கள் ரிட்டயர்ட் ஆகி விடுவார்கள். வழக்குப் போட்டவனுக்கும் வயதாகி செத்துப் போவான். நீதிமன்றங்கள் வழக்கு கட்டுகளை வைத்துக் கொண்டு வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கும். 

இதனை ஆய்வு செய்ய எனக்கு நேரமாகி விட்டதே என்று வருத்தமாக இருந்தாலும், உங்களுக்கு உபயோகமாக இருக்கட்டுமே என்று எழுதி இருக்கிறேன். 

இன்னும் ஒரு அற்புதமான வழி அதாவது கோவில் நிலங்களை தங்கள் பெயரில் பட்டா போட வழி இருக்கிறது. அதை இங்கு எழுத இயலாது. அந்த வழி சூப்பர் ஸ்டார் வழி. கில்லி மாதிரி தட்டித் தூக்கலாம். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு சொத்துக்கும் ஒவ்வொரு வழி முறை உள்ளது. ஆகவே ஆராய்ந்து தெளிந்து புரிந்து வேலையை ஆரம்பிக்க வேண்டும்.

அப்படி மாற்றிய சொத்துக்களை விற்பனைக்கு வைத்து, அதனை ஆய்வு செய்யும் வேலை என்னிடம் வந்தால் நான் உண்மையைக் கண்டுபிடித்து விடுவேன், என்னிடம் தர்மப்படி, கைப்படி எல்லாம் செல்லாது என்று வருத்தத்துடன் சொல்லிக் கொள்கிறேன். 

இதே போல அரசு புறம்போக்கு நிலங்களையும் பட்டா பெறலாம். ஏகப்பட்ட வழிகள் உண்டு. அதையும் போகப் போக எழுதுகிறேன். பயனடைந்து கொள்ளுங்கள்.

புத்திசாலிகள் புரிந்து கொள்ளுங்கள்.

தர்மம் நின்றும் கொல்லாது நிற்காமலும் கொல்லாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். 

தர்மம் நின்று கொல்லும் என்பது தத்துவப் பிழை.

வாழும் வழி என்ன தெரியுமா? பிறரை அழி என்பதுதான்.

நம் தலைவர்களும் அதைத்தானே செய்கிறார்கள் சட்டத்தின் வழியாக. தலைவன் எவ்வழியோ அவ்வழியே மக்களும் செல்வதே நல்லது.

முற்குறிப்பு பின்குறிப்பாய்:

கலிகாலமாம். நல்லவர்களைப் பார்ப்பது அரிதிலும் அரிதாயிருக்கிறது என்கிறார்கள்.  காலத்துக்கு ஏற்ப நாமும் மாறிட வேண்டும். இல்லையெனில் வாழ முடியாது.

திருடத் தெரிந்தவன் எவனோ அவனே சமூகத்தில் உயர்ந்தவனாய் மதிக்கப்படுகிறான். கொலைகாரன் எவனோ அவனே தலைவனாகிறான். மக்களை வதைப்பவன் எவனோ அவனே கொண்டாடப்படுகிறான். ஆகவே கலிகாலம் என்றுச் சொல்வது சரிதான்.

பணம் இருப்பவன் எவனோ அவனே வெற்றியாளன் என்கிறது உலகம். 

பணமில்லாதவனுக்கோ வாழ்க்கையே இல்லை. உயிரோடு ஏன் இருக்க வேண்டுமென்கிறது அரசுகள். 

1500 ரூபாய் உதவித் தொகையும், வருடம் 6000 ரூபாய் விவசாயி உதவித்தொகையும், நூறு நாட்களுக்கு மட்டும் நாளொன்றுக்கு 120 ரூபாய் கூலி தருவோம், இதை வைத்துப் பிழைத்துக் கொள், இல்லையெனில் செத்துப் போ என்று கூறாமல் வழிகாட்டுகின்றன அரசுகள்.  

தலைவர்கள் ஏழைகளை முன்னேற்றுவோம் என்று உரையாற்றுகிறார்கள். விலைகளை இவர்களே ஏற்றுவார்கள், ஆனால் வேறொருவர் விலைகளைக் குறைக்கவில்லை எனப் போராட்டம் செய்வார்கள். 

விலை ஏற்றியதால் தான் விலை உயர்கிறது, நீங்கள் குறைக்கலாமே என்று எவருக்கும் கேள்வி கேட்க இங்கு முதுகெலும்பு இல்லை. முதுகெலும்பில்லா மனிதர்கள் மண்புழுவுக்குச் சமானம்.  ஆகவே உயிரோடு இருப்பதன் பயன் என்னவோ என்று கேட்காமல் கேட்கிறார்கள் அரசாளுபவர்கள்.

உணவுப் பொருட்களின் விலைகள் 200 மடங்கு ஏறி விட்டன. ஆனால் கூலியோ ஏறவே இல்லை. எப்படி உண்பது? எப்படி வாழ்வது? 

இந்தியாவில் இனி ஏழைகள் வாழ அனுமதி இல்லை என்று விரைவில் சட்டம் வரும். 140 பணக்காரர்களும், அவர்களுக்கு வேலை செய்யும் பணியாளர்களின் கூட்டமும் இருந்தால் போதுமானது என்கிறார்கள். 

ஆகவே பணமே கலிகாலத்தில் பிரதானமாயிருப்பதால், அந்தப் பணத்தை எந்த வழியிலேனும் சம்பாதித்து விடுவது தான் வெற்றியான வாழ்க்கை.

நேர் பட வாழ்க்கை, அற வாழ்க்கை,  தர்ம வழி என்று இனிப் பேசுவதில் பயனில்லை என்பதால் இனி உங்களுக்கு எப்படி சட்டத்தின் வழியாக மாட்டிக் கொள்ளாமல் திருடுவது என்று ஒரு உண்மைச் சம்பவத்தின் வாயிலாக வழி காட்டப் போகிறேன்

படித்து, புரிந்து, தெளிந்து வேலையை ஆரம்பியுங்கள். வெற்றி நேர்மையாய் வாழ்பவனுக்கு கிடைப்பதை விட நேர்மையற்றவர்களுக்கு எளிதாய் கிடைக்கும். வாழ்த்துகிறேன்.

நல்லவனாய் வாழ்வதை விட திருடனாய், கொலைகாரனாய்,  மதக்கலவரக்காரனாய், ஏமாற்றுக்காரனாய், முடிச்சவிக்கியாய், மொள்ளமாறியாய் வாழ்வதே உயர்ந்த வாழ்க்கை என்று சமூகம் பாடம் சொல்கிறது. சமூகத்தின் வழி எவ்வழியோ அவ்வழியில் பீடு நடை போடுங்கள். 

பணமிருந்தால் இந்திய நாட்டின் ஆட்சியாளர்கள் எவராயிருந்தாலும் அவர்கள் உங்கள் வீட்டுக்கு வருவார்கள். எப்படி என்கின்றீர்களா ஒரு நூறு கோடி எஸ்.பி.ஐ தேர்தல் பாண்ட் கொடுங்கள். ஓடோடி வருவார்கள் உணவு அருந்த உங்கள் வீட்டுக்கு. 

ஆகவே பணமே குறிக்கோள். அதை எளிதில் அடைவது எப்படி?